சோலையின் சிந்திக்க!

சட்டமன்றத் தேர்தலுக்கு ஓர் ஆண்டிற்கு முன்பே அ.தி.மு.கழகம் தமது கதவுகளை அகலத் திறந்து வைத்திருந்தது. கூட்டணிக்குத் தயார் என்று குரல் கொடுத்தது. டெல்லி சென்றார்கள். அங்கேயும் கூட்டணிக்குத் தயார் என்று அறிவித்தார்கள்.
அந்த அறிவிப்பு காங்கிரஸ் தலைமைக்கு விடுத்த அழைப்புத்தான். ஆனால், அதன் கதவுகள் திறக்கப்படவில்லை. சோர்ந்து போகாது சோனியாவைச் சந்திக்க, தொடர்ந்து முட்டி மோதிப் பார்த்தனர். கம்யூனிஸ்ட் கட்சிகளின் கதவோரம் நின்று பார்த்தனர். பலன் இல்லை.
காரணம், அதற்கு முன்னர் ஐந்து ஆண்டுகள் அந்தக் கட்சிகள் கசப்பான அனுபவங்களை அனுபவித்துவிட்டன. குறிப்பாக, காங்கிரஸ் தலைமையை _ சோனியா காந்தியை அ.தி.மு.க., வாய்ப்பு வரும்போதெல்லாம் அவமானப்படுத்தியது. எந்தக் காரணம் கொண்டும் பிரதமராக, சோனியா அரியணை ஏறிவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தது. அதற்கு ஏற்ப பிரதமர் பீடக் கனவு நாயகர்களுடன் உறவு கொண்டது. இன்றைக்கும் அந்தக் கனதனவான்களுடன் சேர்ந்து, சோனியாவிற்கு எதிராக மூன்றாவது அணி அமைக்க முயற்சிக்கிறது.
சோனியாவின் இத்தாலியப் பெயரைக் கண்டுபிடித்து அதனை மூச்சடக்கி உச்சரித்து, ‘இவருக்கு காங்கிரஸ்
தலைவி பதவியா?’ என்ற ஆவேசக் குரல், அ.தி.மு.க. பணிமனையில்தான் எழுந்தது.
ஒரே மேடையில் பேச வந்த சோனியா காந்தியை, விழுப்புரத்தில் ஒரு மணி நேரம் காக்க வைத்தனர். அவரோடு பிரியங்காவும் காத்திருந்தார். கடைசிவரை அந்த மேடைக்கு அ.தி.மு.க. தலைமை வரவில்லை. இது எவ்வளவு பெரிய அவமானம்?
சோனியாவின் பதிபக்தி பற்றியெல்லாம் கச்சேரி நடத்தினர்.
2001_ம் ஆண்டுத் தேர்தலில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கூட்டணி கண்டு வெற்றி பெற்ற பின்னர், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் டெல்லி சென்றார். சோனியாவைச் சந்தித்தார். வாசலுக்கு வந்தார். அத்தோடு கூட்டணி முடிந்தது என்று அறிவித்தார்.
சட்டமன்ற காங்கிரஸ் கட்சியை ஒவ்வொரு முறையும் உடைத்தார்கள். துதிபாடிகளை உருவாக்கினார்கள்.
கடந்த சட்டமன்றத்தில், காங்கிரஸ் உறுப்பினர்கள் பலர் மவுன விரதம் இருந்தனர். அதற்கான பரிசுகளையும் பெற்றுக்கொண்டார்கள். அ.தி.மு.க. அரசை எத்தனை பேர் விமர்சித்தார்கள்?
அமரர் எம்.ஜி.ஆர். காலத்து அ.தி.மு.க. தலைமை, இன்று இல்லை. அந்தக் கட்சி மாநிலக் கட்சியாக இருக்கலாம். ஆனால், காங்கிரஸ் தலைமைக்கே அந்தக் கட்சி சவால் விட்டுக் கொண்டிருக்கிறது.
எனவேதான், தமிழகத்தில் அந்தக் கட்சிக்குக் கடிவாளம் போடுவதை முதல் பணியாக காங்கிரஸ் தலைமை கருதியது. அடிப்படை அரசியல் நாகரிகத்தைக்கூட எட்டி உதைப்பவர்களுடனும் இனி, எந்த வகையிலும் உறவோ, உடன்பாடோ இல்லை என்று தீர்க்கமாக முடிவெடுத்தது.
ஆனால், அந்த முடிவைச் செயல்படுத்தும் ஆற்றலோ, திறமையோ தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு இல்லை. நெஞ்சுருக்கி நோய் வந்தவனின் நிலையில், மூச்சு விடுவதற்கே போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறது. கோஷ்டி அரசியல் அதன் இதயத்தை அரித்துக்கொண்டிருக்கிறது.
காங்கிரஸ் தலைமை தொடர்ந்து சந்திக்கின்ற அவமானங்கள், சவால்களைப் பற்றிக் கவலையில்லை. தேர்தலா? என் கோஷ்டிக்கு எத்தனை சீட்டு என்று அலிபாபா குகையில் பங்கு போடுவதுபோல் பங்கு போட்டுக் கொள்கிறார்கள்.
அ.தி.மு.க.வின் சவாலைச் சந்திக்கும் ஆற்றல், யாருக்கு உண்டு? சோனியா சிந்தித்தார். கலைஞருக்குத்தான் உண்டு என்று சரித்திரம் சொன்னது. எனவேதான், நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. தலைமையில் கூட்டணி. சட்டமன்றத் தேர்தலில் அதே தி.மு.க. தலைமையில் கூட்டணி என்று முடிவுக்கு வந்தார்.
வடமாநிலங்களில் காங்கிரஸ் தலைமைக்கு சவால் பி.ஜே.பி. இங்கே காங்கிரஸ் தலைமைக்கு சவால் அ.தி.மு.க. இந்துத்வா கொள்கையிலும் இரண்டு கட்சிகளுக்கும் பரிபூரண உடன்பாடு உண்டு. சோனியாவைக் கொச்சைப்படுத்துவதிலும், இரண்டு கட்சிகளுக்கும் அமோக உடன்பாடு உண்டு.
அ.தி.மு.க.வை வெல்வதில், சோனியா _ கலைஞர் கூட்டணி முதல் வெற்றி பெற்றிருக்கிறது. தோல்வி கண்டவர்கள் சும்மா இருப்பார்களா? தி.மு.க. அரசின் ஆயுளைக் கணித்துக்கொண்டிருக்கிறார்கள். அந்த அரசுக்கு அச்சாணி இல்லை என்கிறார்கள். கவலைப்படாதீர்கள். கவிழ்ந்துபோகும் என்று தொண்டர்களுக்கு ஆறுதல் கூறுகிறார்கள்.
களத்தைத்தான் இழந்திருக்கிறோம். போரை இழக்கவில்லை என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் அறிவிக்கிறார்.
அவருடைய ஒரே லட்சியம் தி.மு.க.வை ஒழிப்பதுதான். கலைஞர் குடும்பம், சன் டி.வி. ஆதிக்கம் என்பதனைத் தாண்டி அவர்களால் சிந்திக்கவே முடியாது.
ஆனால், தமது போரின் முன்னணிப் படையாக தி.மு.கழகத்தை சோனியா நிறுத்தியிருக்கிறார். அந்தப் படைக்குச் சேதாரம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில், அவர் தெளிவாக இருக்கிறார்.
எனவே, இந்த நிலையில் அவர் எடுக்கின்ற முடிவிற்குப் பின்னே காங்கிரஸ் கட்சி ஒரே அணியாய்த் திரண்டு நிற்கவேண்டும். ஆனால், தி.மு.க. அரசில் தங்களுக்கும் பங்கு வேண்டும் என்று இங்கே தீர்மானம் போட்டுக்கொண்டிருக்கிறார்கள். அந்தக் குரலுக்கு அம்மா டி.வி. ஓஹோவென்று விளம்பரம் தருகிறது.
எந்தக் காரணம் கொண்டும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றுவிடக்கூடாது என்று விரதமிருந்த ஏடுகள், அத்தகைய செய்திகளை அலங்கரித்து, பட்டுக்குஞ்சம் கட்டி வெளியிடுகின்றன.
அரசில் அங்கம் பெறுவதில்லை என்று தேர்தலுக்கு முன்னரே பா.ம.க., கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவித்துவிட்டன. ஆனால், இப்போது அந்தக் கட்சிகளுக்கும் சேர்த்து கூட்டணியில் பங்கு என்று கடல் கொள்ளைக்காரர்கள் போல் சிலர், கணக்குப் போட்டுக்கொடுக்கிறார்கள்.
வெற்றி பெற்ற எல்லாக் கட்சிகளும் சட்டமன்றக் கட்சி நிர்வாகிகளைத் தேர்ந்தெடுத்துவிட்டன. அதற்காக சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. வழக்கம்போல கோஷ்டி கானம் ஆரம்பமானது.
சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் சுதர்சனம்தான் மேலிட முடிவு என்று வீரப்ப மொய்லி நெருப்பை அணைத்தார். ஆனால், அந்தத் தீ முழுமையாக அணையவில்லை. சட்டமன்ற காங்கிரஸ் செயலாளரையும் தேர்ந்தெடுக்க முடியவில்லை. கொறடாவையும் தேர்ந்தெடுக்க முடியவில்லை. மங்களகரமாகக் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.
இதில் வேடிக்கை என்னவென்றால், 34 பேர் கூடி நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க முடியவில்லை. இந்த லட்சணத்தில் தங்களுக்குள் எப்படி மந்திரிகளைத் தேர்ந்தெடுப்பார்கள்? அங்கேயும் கோஷ்டி கானம் ஆரம்பமாகும்.
தன் கோஷ்டிக்கு 23 சீட்டுக்களைப் பெற்றார் வாசன். கபிஸ்தலம் கைத்தடிகள் பாபநாசத்திலும் பேராவூரணியிலும் தோற்றன. அவர் பரிந்துரைத்தவர்களில் பத்துப் பேர் தோற்றிருக்கிறார்கள்.
மந்திரி பதவி என்றால், விகிதாச்சார அடிப்படையில் தனக்கு நாலு மந்திரி என்பார்கள். இதர கோஷ்டிகளுக்கு இரண்டு இரண்டு மந்திரிகள் என்பார்கள். இந்தக் கூத்தெல்லாம் வேண்டாம் என்றுதான், கலைஞரே அமைச்சரவை அமைக்கட்டும் என்று சோனியா முடிவு செய்தார்.
அவருடைய லட்சியம் பெரிது. அவமானப்படுத்திய சக்தி களை வைக்கவேண்டிய இடத்தில் வைக்கவேண்டும் என்கிறார். அந்த லட்சியமெல்லாம், இங்கே இருக்கின்ற காங்கிரஸ்காரர்களுக்குத் தெரியாது. எப்படியோ மந்திரி பதவி கிடைத்தால், சொர்க்கவாசல் திறந்த மாதிரி என்று கருதுகிறார்கள்.
உள்ளம் உள்ளவர்களுக்கு ஊசியின் துவாரத்தில்கூட இடம் கிடைக்கும். பரந்த உள்ளம் இல்லாதவர்களுக்கு, உலகம் முழுமையும் தேடினாலும் இடம் கிடைக்காது.
மந்திரி பதவி வேண்டும் என்று பிரச்னை கிளப்பியவர்களைச் சற்று உற்றுப் பாருங்கள். கடந்த சட்டமன்றத்திலும் அமர்ந்திருந்தார்கள். ஆம். அம்மாவின் ஆசீர்வாதத்தோடு அமர்ந்திருந்தார்கள். நல்லவருக்கு அழகு வாய் திறக்காது இருத்தல் என்று இலக்கணம் வகுத்துக் கொண்டார்கள்.
அவர்கள் தலைமைக்கு ஏற்பட்ட அவமானங்களைத் துடைப்பதைவிட, தங்கள் தலைகளுக்குக் கிரீடம் தேடுகிறார்கள்.
தி.மு.க. அரசிற்கு வெளியிலிருந்து ஆதரவு என்று ஏற்கெனவே காங்கிரஸ் தலைமை அறிவித்துவிட்டது. அதுமட்டுமல்ல; நிபந்தனையற்ற ஆதரவு என்றும் அறிவித்திருக்கிறது. அதன் பின்னரும் தங்களுக்கு மந்திரி பதவி வேண்டும் என்று கொடி தூக்குபவர்கள் யாருக்காகச் செயல்படுகிறார்கள்? ஆமாம். யாருக்காகவோதான் செயல்படுகிறார்கள்!

3 comments:

siva gnanamji(#18100882083107547329) said...

சோலை யாருக்காக எழுதுகின்றார்?

Unknown said...

அவர் எல்லோருக்காகவும் எழுதுவார் இந்த பதிவு காங்கிரஸ்காரர்கள் சிந்திக்கவேண்டும் என்பதற்க்காக

Unknown said...

நம்ம ஜெயக்குமாரண்ணன் அட்ரஸ் மாறி வந்துட்டாருன்னு நினைக்கிறேன்