பட்டியல்

எனது நூலகக் கதையை முன்னறே இங்கே சொல்லிவிட்டதால் இப்போது நூல்களின் பட்டியல் மட்டும். அழைப்பு விடுத்த சிவபாலன் அவர்களுக்கு நன்றி என் நினைவுக்கு எட்டியவரை ஊரில் இருக்கும் நூல்களின் பட்டியல். நிச்சயமாக இது முழுமையானது அல்ல நிறைய விடுபட்டிருக்கும் முழுமையான பட்டியல் இரண்டு மாதம் கழிந்து.

1.கள்ளிக்காட்டு இதிகாசம்-வைரமுத்து *
2.காவி நிறத்தில் ஒரு காதல் - வைரமுத்து
3.சிவப்பு விளக்கு- கண்ணதாசன்
4.கள்ளோ காவியமோ-தி.ஜானகிராமன்
5.பொன்னியின் செல்வன் - கல்கி *
6.சிவகாமியின் சபதம்- கல்கி *
7.நிலா நிழல் 1 & 2- சுஜாதா *
8.என் இனிய இயந்திரா& மீண்டும் ஜீனோ - சுஜாதா
9.ரத்தம் ஒரே நிறம்- சுஜாதா *
10.காந்தளூர் வசந்தகுமாரன் கதை- சுஜாதா
11.கனவுகள் கோடி- சுஜாதா
12.என்றாவது ஒரு நாள்- சுஜாதா *
13.மெர்குரிப்பூக்கள்-பாலகுமாரன்
14.கடலோரக் குருவிகள்-பாலகுமாரன்
15.கற்றுக்கொண்டால் குற்றமில்லை-பாலகுமாரன்
16.இரண்டாவது காதல்கதை- சுஜாதா *
17.தூண்டில் கதைகள்- சுஜாதா
18.திருக்குறள் புதிய உரை - சுஜாதா
19.திருக்குறள் - மு.வ. விளக்க உரை
20.ஏசு காவியம்- கண்ணதாசன்
21.தண்ணீர் தேசம்- வைரமுத்து
22.வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்- தபூ சங்கர்
23.பாயும் புலி பண்டாரக வன்னியன் - கருணாநிதி
24.குறளோவியம்- கருணாநிதி
25.நெஞ்சுக்கு நீதி- கருணாநிதி
26.பெரியபுராணக் கதைகள் -பாலகுமாரன்
27.ஆழ்வார்- பாலகுமாரன்
28.பிற்கால சோழர் சரித்திரம் பாகம் 1,2,3,4- சதாசிவ பண்டாரத்தார் *
29.மனுநீதி ஒரு குலத்துக்கு ஒரு நீதி- பெரியார் *
30.மலேசியாவில் பெரியார்-வீரமணி
31.பெரியாரியல்-வீரமணி
32.கண்சிவந்தால் -பெரியாரின் பெண்ணியம் பற்றி ஜெர்ரி
33.தந்தை பெரியார் காங்கிரஸை விட்டு வெளியேறியது ஏன் -காஞ்சீபுரம் மாநாடு *
34.பெரியாரின் அயல்நாட்டு பயணக்குறிப்புக்கள்- பெரியார்&வே.ஆனைமுத்து *
35.பெரியார் ஆகஸ்டு பதினைந்து- எஸ்.வி.ராஜதுரை
36.தமிழ் வானின் விடிவெள்ளி தந்தை பெரியார்-க.அன்பழகன்
37.தந்தை பெரியார் முழுமுதல் வாழ்க்கை வரலாறு- கருணானந்தம்
38.மரண சாசனம்- பெரியாரின் கடைசி உரை-பெரியார் *
39.விடுதலை - சிறப்பிதழ்

இன்னும் பெரியாரின்/பற்றிய நூல்கள் நிறைய உண்டு நிணைவில் இல்லை இதில் ஏதும் தகவல் பிழை இருப்பின் மன்னிக்கவும்

40. பெரியார்.ஈ.வே.ரா சிந்தனைகள்-வே.ஆனைமுத்து
41. வகுப்புரிமைப் போராட்டம் ஏன் - வே.ஆனைமுத்து *
42. இந்திய அரசு எங்கே போகிறது-வே.ஆனைமுத்து
43. தமிழ் நாட்டில் பண்பாட்டுப் புரட்சி- வே.ஆனைமுத்து
44. இந்திய அரசியல் சட்டம்.ஒரு மோசடி- வே.ஆனைமுத்து *
45. நெஞ்சில் ஒரு முள்- மு.வரதராசன்
46. மணல் வீடு-மு.வரதராசன்
47. தமிழ் இலக்கிய வரலாறு.-மு.வரதராசன்
48. பிரபஞ்சன் கதைகள்- பிரபஞ்சன்
49. வானம் வசப்படும்- பிரபஞ்சன் *
50. மகாநதி- பிரபஞ்சன்
51. நானும் நானும் நீயும் நீயும்- பிரபஞ்சன்
52. கனவு மெய்ப்பட வேண்டும்- பிரபஞ்சன்
53. ஐந்தாவது அத்தியாயம்- சுஜாதா
54. இரும்புக் குதிரை- பாலகுமாரன்
55. ஏன்?எதற்கு?எப்படி?- சுஜாதா 1,&2 *
56. வந்தார்கள் வென்றார்கள்- மதன் *
57.வருசநாட்டு ஜமீன் கதை- வடவீர பொன்னையா *
58.கற்றதும் பெற்றதும்- சுஜாதா
59. குடுவைத் தேன் - அந்தேன் சேகவ் *
60. அவன் விதி- அந்தேன் சேகவ் *
61. மூன்று காதல் கதைகள்- அலெக்ஸாந்தர் குப்ரின் *
62. செம்மணி வளையல்- அலெக்ஸாந்தர் குப்ரின் *
63. யாமா- அலெக்ஸாந்தர் குப்ரின்
64. தாய்- மக்ஸீம் கார்க்கி *
65. மூவர்- மக்ஸீம் கார்கி *
66. காரின் அழிவுக்கதிர்- அலெக்ஸோய் தல்ஸ்தோய் *
67. போரும் அமைதியும்- லியோ தல்ஸ்தோய்
68. சிறந்த ரஷ்யச் சிறுகதைகள் *
69. பீட்டர்ஸ் பர்கின் கதை- வரலாற்று தொகுப்பு
70. முன்னே ஒரு அடி பின்னே இரண்டடி- லெனின் *
71. முதலாளித்துவம்- கார்ல் மார்க்ஸ்
72. தம்மபதம்- ஓஷோ
73. வெற்றுப் படகு- ஓஷோ *
74. ஒரு கோப்பை தேனீர்- ஓஷோ
75. ஓம் சாந்தி சாந்தி சாந்தி- ஓஷோ
76. கீதையில் அர்ஜுனன் கேள்விகளுக்கு கண்ணன் பதில் சொல்வதாய் ஒரு புத்தகம் ( சரியான பெயர் நினைவில்லை யாரும் தெரிந்தால் சொல்லவும்) -ஓஷோ
77. பார்த்திபன் கனவு- கல்கி
78. ஜமீன் தார் மகள்- கல்கி
79. மீண்டும் நாளை வரும்- வாசந்தி *
80. 18வது அட்சய கோடு- அசோகமித்திரன்
81. யுத்தம் வேண்டாம் - கார்ல் மார்க்ஸ்
82. எது நாகரீகம்- கார்ல் மார்க்ஸ்
83. புளிய மரத்தின் கதை- சுந்தர ராமசாமி
84. ஜே.ஜே.சில குறிப்புக்கள்
85. சீரோ டிகிரி - சாரு நிவேதிதா
86. கோணல் பக்கங்கள்- சாரு நிவேதிதா
87. இந்தியாவில் சாதிகள்- அம்பேத்கார்
88. எனது போராட்டம்- ஹிட்லர் *
89. வெற்றி நமதே- சே குவேரா *
90. மோட்டார் சைக்கிள் நாட்குறிப்புக்கள்- சே குவேரா *
91. வாழ்வும் மரணமும்- ஜார்ஜ் ஜி காஸ்டனாடா சே குவேரா வாழ்க்கை வரலாறு *
92. தந்தையும் தனையர்களும்- இவான் துர்கேனவ் *
93. கெரில்லா- காங்கோ நாட்குறிப்புக்கள்- சே குவேரா*
94. ஊமைக் காதல் - இவான் துர்கேனவ் *
95. மாய சன்யாசி- அந்தோன் சேகவ்
96. ஆத்மாநாம் படைப்புக்கள் - பிரம்ம ராஜன்
97. ஜீவனாம்சம்- சி.சு.செல்லப்பா
98. வாடிவாசல்- சி.சு.செல்லப்பா *
99. அகத்தினை- கனிமொழி

100.தமிழ் நாட்டுப்புற இயல் -ஆய்வு

இன்னும் தமிழில் உண்டு மறந்து போயிற்று இப்போதே மண்டைக்குள் மணியடிக்கிறது

நண்பர்களே,,,, இனி ஆங்கிலம்

என்னிடம் இருப்பதில் சிறந்த நூல்கள் பார்ப்போம்: *

1. How did it Really Happened- Readers Digest
2. The Good health Fact Book- Readers Digest
3. Natural Wonders of the World -Readers Digest
4. Discovering the Wonders of our World- Readers Digest
5. Intelligence in Animals - Readers Digest
6.1000 Wonders of Nature- Readers Digest
7.Secrests Of Love and Sex- Readers Digest
8.Do It Yourself Manual- Readers Digest
9. 1000 computer Tips and Tricks- Readers Digest
10. The World at war- Readers Digest
11.The worlds last Mystrys- Readers Digest
12.Book of Facts- Readers Digest
13. Word power Dictionary- Readers Digest
14. God of Small Things- Arunthathy Roy
15.Concept Of the Corporation- Peter F Drucker
16. Management Challenges for the 21st Century- Peter F Drucker
17.Dravida: a History of the Tamils and Other Dravidian Peoples.
18.Indian Temple Architecture

19. The Nazi Assault on Humanity
20.Genocide Political Use in the Twentieth Century
21. Understanding the Dravidian movement

இதில் இருக்கும் சில புத்தகங்கள் அயற்ச்சி தரக்கூடியவை சில உங்களை ஆர்வமூட்டக் கூடியவை

*நட்சத்திரக் குறியுடன் இருப்பவை எனக்குப் பிடித்தமானவை
---------------------------------------------------------------------------------------------------------------------------------------
நானும் நாலுபேரை ஆட்டத்தில சேத்து விடனுமாம் கோவி அய்யா சொல்றாரு சரி நமக்கு தெரிஞ்ச நாலுபேரு யாருடான்னு பாத்தா எல்லா பயலும் ஊர்ல இருக்கானுவ. சரி வலையுலக நண்பர்களைத்தான் சொல்லியிருப்பார்ன்னு அப்பறமாத்தான் புறீது
1.புதுசா கல்யாணமான மாப்பிளை துபாய் ராசா (நேத்துதான் எனக்கு துபாய் சங்கத்துல சீட்டிருக்கறதா சொன்னாரு:)2.குவாட்டர் கோவிந்தனையே மயங்கி விழ வச்ச நம்ம குழலி

3.அப்பப்ப வந்து அஞ்சுவரி போட்டாலும் சும்மா காரமா கவிதை எழுதுற நம்ம முத்துகுமரன்

இன்னும் யாரு.................500 பின்னூட்டத்துக்கும் மேல வாங்கி சா(சோ)தனை படைச்ச இலவசக்கொத்தனார்
( இதுக்கு மட்டும் எழுதல அப்றமா எல்லா பின்னூட்டமும் நானே போடுவன் ஒவ்வொன்னும் ஒவ்வொரு கேள்வி எல்லாத்துக்கும் பதில்சொல்லியாகனும் நான் வேற உங்க சங்கத்த பத்தி ஆகா ஓகோன்னு புகழ்ந்து வச்சிருக்கேன்)












பேசிப் பேசி அலுத்துவிட்டது என்றாலும் இந்த சமூகத்தில் பெண்களின் நிலை என்பது அதிகம் மாறாத ஒன்றாகவே உள்ளது.
பெண் கல்வி, பெண்களின் முன்னேற்றம், விதவைத் திருமணம் போன்ற சில "புரட்சிகரமான" கருத்துகளை முன்வைப்பவர்கள் கூட ஆணும் பெண்ணும் சரி நிகர் என்பதை ஒப்புக்கொள்வதில்லை. சமூகக் கட்டுமானம், ஒழுக்கம், சமூகத்தின் சீரான இயக்கம் போன்றவற்றைக் காரணம் காட்டிப் பெண்ணை ஏதாவது ஒரு வகையில் அடக்கிவைப்பதிலேயே இவர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்.
இதற்கு விதிவிலக்கு என்று எந்த "முற்போக்கு" அமைப்பையும் நாம் சுட்டிக்காட்டிவிட முடியாது.இந்தச் சூழலில்தான் அண்மையில் நடந்த சில சம்பவங்கள் பெண் எதிர்ப்பின் புரையோடிப்போன தன்மையை நமக்குத் தெளிவாகப் புரியவைக்கிறது.
முதல் சம்பவம் சில ஊடகங்களில் கொஞ்சம் சலசலப்பை உண்டாக்கியது. மதுரை அருகே உள்ள அரசு மகளிர் விடுதி ஒன்றில், அங்கு தங்கியிருக்கும் பெண்கள் தங்கள் மாதவிடாய் அட்டவணையை வார்டனிடம் தந்துவிட வேண்டும். அதன் பிறகு மாதாமாதம் அது பற்றி அவரிடம் update செய்ய வேண்டும். இது படிக்கும் பெண்களின் கற்பையும் கன்னித் தன்மையையும் காப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்றார் பெண் ஒழுக்கத்தின் பாதுகாவலரான வார்டன்.
அடுத்த சம்பவம், சுனாமிக்குப் பிறகு தனது கல்யாண வயது வராத மகளை அரசு தரும் நஷ்ட ஈட்டுக்காகத் திருமணம் செய்து வைத்த தாயையும் அந்தக் குழந்தையைத் திருமணம் செய்துகொண்ட ஆணுக்கும் நீதிமன்றம் தண்டனை வழங்கியது.
தாய்க்கு இரண்டு நாளும் கணவனுக்கு 27 நாட்களும் சிறை என்று மிகக் கடுமையான தண்டனையை நீதிமன்றம் விதித்திருக்கிறது. இந்தியச் சட்டப்படி 18 வயதிற்கு உட்பட்ட பெண்ணுடனோ ஆணுடனோ உடலுறவு வைத்துக்கொண்டால் அது பாலியல் பலாத்காரமாக பாவிக்கப்பட்டு அதற்கு ஏற்ற தண்டனை வழங்கப்பட வேண்டும். அப்படி இருக்கையில், நீதிமன்றம் எப்படி அதிகபட்சத் தண்டனையாக 27 நாட்களை அவர்களுக்கு வழங்க முடியும்? திருமணம் என்ற புனித பந்தம் சட்டத்தின் தராசைத் தன் பக்கத்திற்கு வளைத்துவிட்டதா?
பெண்களை இழிவுபடுத்துவதை சமூக ஒழுக்கமாக மாற்றும் போக்கு, அடுத்து பெண்கள் என்று வரும்போது சட்டம் காட்டும் மெத்தனப் போக்கு. நீதி அரசர்களின் ஆணிய அதிகாரத்தை நிலைநிறுத்தும் தீர்ப்புகளும் அதற்கு அவர்கள் பயன்படுத்தியுள்ள வசனங்களும் உண்மையான நாகரீக உலகத்தை மிரட்டிவிடக் கூடிய வல்லமை பொருந்தியவை.
இப்போது ஊடகங்களைப் பரபரப்புக்கும் பரவசத்திற்கும் உள்ளாக்கிக்கொண்டிருக்கும் இன்னொரு நடிகை ஜெயமாலா. இவரை இப்போது செய்திகளில் அடிபட வைத்த பெருமை, அரசியல் மாற்றங்களால் சற்று தொழில் நலிவடைந்த ஒரு மலையாள ஆரூடக்காரரையே சேரும். அந்த நடிகை 20 ஆண்டுகளுக்கு முன்னால் தற்செயலாக சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் நுழைந்து ஆண்டவன் சிலையைத் தொட்டதாக இப்போது தெரிவித்திருக்கிறார். அதாவது ஜோசியர் தன் மூன்றாவது கண்ணால் பின்னோக்கிக் கணித்துக் கூறிய பிறகு.
கோவில் என்பது யாரும் இல்லாத வெறிச்சோடிய இடமா? அலுவலர்கள், காவல்காரர்கள், பூசாரிகள், இவர்களை மீறி அந்தப் பெண் எப்படிக் கோவிலுக்குள் நுழைய முடிந்தது? இந்தச் "சதியில்" அவர்களின் பங்கு என்ன என்ற கேள்விகள் ஏன் எழவே இல்லை?
அடுத்து இந்தப் பெண் தொட்டதால் ஏற்பட்ட தீட்டைக் கழிக்க இப்போது ஆலோசனை மும்முமாக நடக்கிறது. அவர் வந்தது தவறு என்று ஐயப்பன் எந்த வகையிலும் ஆட்சேபம் தெரிவித்ததாகத் தெரியவில்லையே.
இப்போது அந்தப் பெண்மீது கிரிமினல் வழக்கு தொடுக்கப்போவதாகக் கோவில் நிர்வாகம் யோசிப்பதாக தெரிகிறது.
கோவிலுக்குள் நுழைபவர்களை ஜாதி அடிப்படையில் தடுத்து நிறுத்தக் கூடாது என்று கூறும் சட்டம், தனது ஜனத் தொகையில் சரிபாதியாக இருக்கும் பெண்கள் தடுத்து நிறுத்தப்படுவதை எதிர்த்து என்ன செய்யப்போகிறது?
இதை மரபு, ஐதீகம் போன்ற வார்த்தைகளால் நியாயப்படுத்த முயலலாம். ஆனால் மதம் தோன்றிய நாள் முதல் தன்னை மாற்றிக்கொண்டும் பல மரபுகளையும் ஐதீகங்களையும் விட்டுக்கொடுத்துக்கொண்டும்தான் இருக்கிறது.
இதே ஐயப்பன் கோவிலுக்கு ஆண்கள் 45 நாள் கடுமையான விரதம் இருந்து சென்ற நாட்கள் எல்லாம் கழிந்துபோய், இப்போது மூன்று அல்லது போகும் வழி விரதம் என்று விதிகளைத் தளர்த்திக்கொள்ளத் தயாராக உள்ளது நிர்வாகம்.
இந்த நூற்றாண்டில் இப்படிப்பட்ட ஜனநாயகமற்ற பாரபட்சங்களை நாம் பொறுத்துக்கொண்டால் இது மிகவும் கீழ்த்தரமான முன்னுதாரணமாக மாறிவிடும்.
தமிழகத்தில் அனைத்துச் சாதியினரும் பூசாரி ஆகலாம் என்ற சட்டம் வந்திருக்கிறது. அரசு அதில் பெண்களையும் இணைத்துக்கொள்ள வேண்டும். இந்தச் சட்டம் இந்து மதத்தோடு நின்றுவிடக் கூடாது, எல்லா மதங்களுக்கும் பொருந்த வேண்டும். மதத் தலைவர்களாகவும் போதகர்களாகவும் பூசாரிகளாகவும் மத நிறுவனங்களை முன்னின்று நடத்துபவர்களாகவும் பெண்களை மதங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். அது வரை அவை உண்மையான அன்பையும் சமத்துவத்தையும் போதிக்க முடியாது.


நன்றி- கனிமொழி-தோழி.காம்
எனக்கு இந்த நூல்படிக்கும் ஆவல் எப்படி வந்தது எனக்கு ஆச்சர்யமே வருவதில்லை. ஏனென்றால் எனது தந்தை திரு கி.செ.பெரியசாமி அவர்கள் நூல் களை தேடிப் படிப்பதிலும் அதை வாங்குவதிலும் ஆர்வம் கொண்டவர், எனது அம்மா செல்லம்மாள் ஐந்தாம் வகுப்பு வரையே படித்திருப்பினும் குமுதம், ஆனந்த விகடன் மற்றும் நாவல்கள் படிக்கிற பழக்கம் உடையவர்.

நான் ஐந்தாம் வகுப்பு எறையூர் நேரு மேல்னிலைப் பள்ளியில் படித்த வேளையில் எனக்கு உணவு சமைத்துப் போடுவதற்க்காக என்னோடே வந்திருந்தார். அப்போது ஆரம்பித்தது. குமுதத்தில் 1987.

பின்னர் நான் தனியாக இருக்கும் சந்தர்பம் கிடைத்தபோது எனது செலவுகளுக்கு என்று தரப்படும் பணத்தில் முதலில் வாங்கியது பூந்தளிர் சிறுவர் இதழ். அதில் வரும் சில காமிக்ஸ் கதைகளுக்கு இன்றும் நான் ரசிகன்.

பின் கோகுலம் என வளர்ந்து மீண்டும் குமுதம் ஆனந்த விகடன் என ஒரு சனரஞ்சக வாசகனாகவே இருந்த என்னை கொஞ்சம் திருப்பியது தராசு வார இதழ்.

எறையூரில் 7ம் வகுப்பு படிக்கும் போது எனது வீட்டுக்கு அடுத்த வீட்டில் தங்கியிருந்த ஒரு ஹோமியோபதி மருத்துவர் (கோவிந்தசாமி என நினைக்கிறேன்) தராசு, வாங்குவார். அதில் வரும் சில அரசியல் செய்திகளும் அதன் பின் அதே சமயத்தில்1989 இல் வி.பி.சிங் ஆட்சியின் போது நடைபெற்ற மண்டல் குழப்பங்களும் அத்வானி கைது சந்திரசேகரின் கலைஞர் ஆட்சி கவிழ்ப்பும் அப்போது நடைபெற்று வந்த ராமர் கோயில் கட்ட கரசேவகர்கள் சேகரித்த செங்கல்லும் எனது பார்வைகளை விரிவாக்கத் தொடங்கின.

பின் 9ம் வகுப்பின் கடைசியில் இருந்து ஜூனியர் விகடனும் ஆரம்பித்தது. பத்தாம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு விடுமுறையில் எனது நல்ல நண்பர்களில் ஒருவரும் சிவப்பு சிந்தனைவாதியும் ஆசிரியருமான மறைந்த கிழுமத்தூர் ராஜேந்திரன் அவர்கள் அறிமுகத்தில் இந்தியா டுடே.

அவரின் மூலமே ரஷ்ய விஞ்ஞான நூல்கள் நன்றாக படம் வரைந்து பாகமிடப்பட்ட விளக்கமான நூல்கள். சிறிய புத்தகங்களில் இருந்து கொஞ்சம் அளவில் தடித்த புத்தகங்கள் படிக்க வேண்டும் என எல்லோறையும் போல் நானும் ஆசைப்பட்டபோது நல்ல தீனி போட்டவை ரஷ்ய நாவல்கள். காரின் அழிவுக்கதிர் முதல்.

பின் 10ம் வகுப்பில் பள்ளியின் இரண்டாவது மாணவனாய் தேர்ச்சி பெற்றதற்கு பரிசாய் எனது அப்பா வாங்கித்தந்த டி.வி.எஸ் எக்ஸ் எல் லில் திட்டக்குடி சுற்றப் போகையில் முதல் அறிமுகம் நூலகத்துடன். (கவனத்தில் கொள்க அதுவரை நான் எனது தந்தையின் நூல்கள் எதையும் படிக்கவில்லை) பின் 11 மற்றும் 12ம் வகுப்புகள் லப்பைக்குடிக்காடு அரசு மேல்னிலைப் பள்ளி.

அவ் வேளைகளில் எனக்கு ராஜேஷ்குமாரும், பாலகுமாரனும் பிடித்தவர்கள் ஆனார்கள். பாலகுமாரனை துரத்தி துரத்தி படித்ததில் நான் தனியே ஒரு பெண்ணிடம் காதல் கடிதமும் அவள் பதிலுக்கு காதலை யும் தந்தது நடந்தது. சுபாவும் அவ்வப்போது துப்பறிய ஆரம்பித்தார். லப்பைக்குடிக்காடு பேருந்து நிலையத்தில் வாங்கிய குமுதம் ஸ்பெஷலில் சுஜாதா கிடைத்தார் பின் நிலா நிழல், ரத்தம் ஒரே நிறம் எனத் தொடர்ந்து இன்று கற்றதும் பெற்றதும் வரை வந்தாயிற்று.

12ம் வகுப்புக்கு பிறகு மீண்டும் 12ம் வகுப்பு .(ஆச்சரியப் படாதீர்கள் பள்ளிக்கு சரியாக செல்லாத காரணத்தால் எனக்கு தேவையான வருகைப் பதிவு இல்லை எனச் சொல்லி தேர் வெழுத விடவில்லை.)

பின் மீண்டும் 12ம் வகுப்பு படிக்கையில் சிவப்புச் சிந்தனை கொண்ட நண்பரும் முன்னாள் இந்திய மக்கள் முன்னனி யின் மாநில செயலாளருமான திரு.கிழுமத்தூர் பி.தயாளன் அவர்களின் அறிமுகத்தில் தனிப் பிரதிகளாக மட்டும் கிடைக்கும் சுட்டும் விழிச்சுடர்.(தற்போது அவர் அரசு அலுவலர்)அதன் பின் அவரின் மிகச்சிறந்த நூலகத்தில் தினசரி எடுத்துப் படித்த பல்வேறுபட்ட இதழ்கள்.

காப்கா முதல் காமசூத்திரம் வரை. என்று விரிகிற வேளையில் சே குவேரா அறிமுகம். . அதன் பின் சில காலம் சிவப்பு சிந்தனை கொண்ட புத்தகக் காதல் தொடர்ந்தது. 12ம் வகுப்பு முடிந்த பின் மெக்கானிக்கல் எஞ்சினியரிங் படிக்க சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள எம்.ஐ.இ.டி யில் சேர்ந்தபின் நுங்கம் பாக்கம் லேண்ட்மார்க் புத்தக கடை அறிமுகம். ஹிக்கின் பாதம் அண்ணா சாலையும்.

நிறைய நூல்களை பார்த்ததும் வாங்க வேண்டும் என்ற என் ஆவலுக்கு எந்த எழுத்தாளரும் தப்பவில்லை. பின் பாரத் பில்டிங்க் அருகிலேயே இருக்கும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ். தேடிய எல்லா ரஷ்யர்களும் உறங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களின் மிக மலிவான விலைகளில் என்னையும் அறியாமல் எடுத்து வைத்த புத்தகங்கள் எண்ணிக்கையில் அடங்கா. சில முத்துக்களும் நிறைய குப்பைகளும்.

திருவல்லிக்கேணி, அண்ணாசாலை பழைய புத்தக கடைகளில் இந்தியன் வங்கி(ஸ்பென்ஸர் அருகே) அருகே இருக்கும் ஒரு கடையில் ஹிட்லர் இருந்தார். பின் எனது காதல் பிரிவின் காரணமாக (பிரிவென்றால் கிழுமத்தூர் - சென்னை) சில காதல் புத்தகங்கள். அப்படித்தான் அறிமுகமானது.

பின் புத்தகம் வாங்க பனம் நிறைய வேண்டுமே என்று எனது கல்லூரி முடிந்து கணிப் பயிற்சி முடிந்து மாலை வேளை நடிகர் செந்திலின் சந்த்ரு என்டர் பிரைஸில் பகுதி நேர ஊழியம் மாதம் 1500 சம்பளத்துக்கு. அப்போது ஆரம்பித்த சில சினிமா நட்பில் எனது திரைப்பட ஆர்வம் அதிகமானது முதலில் இசை.

தமிழில் இத்தனை ஆர்வம் இருக்கிறதோ அதே அளவு ஆங்கில இசையிலும் ஆர்வம் ஏற்பட எம் டிவியும் வி சேனலும் பெருங் காரணங்கள். அதுவே ஒரு நூலகம் அளவுக்கு குவிய ஆரம்பித்தது.

அவ்வேளையில் ரீடர்ஸ் டைஜஸ்ட் அறிமுகம் அதன் நிரந்தர வாசகனானேன். அவர்கள் மூலம் களஞ்சியங்கள் எனப்படும் என்சைக்க்ளே பிடியாக்கள் மீது ஆர்வம் ஏற்பட்டு பின் அது 1000 விலைகொண்ட புத்தகங்களை அனாயசமாக வாங்கும் அளவுக்கு ஆபத்தில் முடிந்தது.

கல்லூரி வாசம் முடிந்து மீண்டும் மூன்றாண்டுகள் கிழுமத்தூர். விவசாயம் . காதலும் தனியாக தண்ணீர் இல்லாமலே வளர ஆரம்பித்தது 1998. நஞ்சை வயல் களை உழப் பயன்படும் ஒரு சிறிய டிராக்டருண்டு அதை வாடகைக்கும் விட்டதில்(நானே ஓட்டுனர்) நல்ல வருமாணம் வந்தது.

ரீடர்ஸ் டைஜஸ்டின் மிகச் சிறந்த புத்தகங்கள் வாங்கிய அற்புத தருணம் அது. பின்ன்ர் விடியல் பதிப்பகம் வந்து புத்தக அச்சுக்கலையின் மிக நவீன முகத்தை தமிழுக்கும் அறிமுகப் படுத்தியது ஆனந்த விகடனும் இந்தியா டுடேவும் வனிக நோக்கில் என்றாலும் தரமான புத்தகங்கள் போட ஆரம்பித்தனர்,

இந்தியா டுடேவில் படித்த சி.சு.செல்லப்பாவின் வாடிவாசல் அப் புத்தகத்தை முழுதாய் படிக்கும் ஆவலை உண்டாக்கியது. சொல் புதிது, இனி, போன்ற சிற்றிதழ்கள் மூலம் நவீன இலக்கியமும், சுந்தர ராமசாமியும் ,புதுமைப் பித்தனும் ,ஜெயகாந்தனும் உள்ளே வந்தார்கள். சாரு நிவேதிதா பின்வாசல் வழியே உள்ளே வந்தார். இன்றும் அவர் அழையா விருந்தாளி.

உலக அரசியல் தமிழக அரசியல் என்று சில காலம் புத்தகம் படித்தது போய் எனது கவணம் மலைக்கோட்டை முன்னால் மாறியது. சில வரலாற்று நூல்கள் அறிமுகம் அப்போதுதான் எனது தந்தையின் பிற்கால சோழர் சரித்திரமும், பெரியாரும் புறிய ஆரம்பித்தார்கள்

பின்னர் 2002இல் சங்கீதாவுடன் திருமணம். தண்ணீர் இன்றி வளர்ந்த காதல் அறுவடைக்கு தயாரானது. திருமணப் பரிசாக அய்யா வே.ஆனைமுத்து அவர்களின் மண்டல் கமிஷன் பரிந்துரைகள் படித்ததில் சமூக ஏற்றத்தாழ்வுகள் புறிய ஆரம்பித்தன ,

ஆரியம், திராவிடம் அரசியல் எல்லாம் சேர்த்து பெரியாரும் விளங்கினார். கலைஞரை பிடிக்க ஆரம்பித்தது.(முற்றாக அல்ல) ஜெயலலிதாவை வெறுக்க ஆரம்பித்தது.(முற்றாக அல்ல) அம்மாவோடு போன அய்யாவையும் பிடிக்காமல் போனது பின் அவர்களின் சில சரியான முடிவின் காரணமாக உரக்க ஒலிக்க ஆரம்பித்த குரல் அய்யாவையும் எனக்குள் கொண்டு வந்தது.

திருமணத்தின் பின் இரண்டாண்டு பின் பிறந்த பாரிக்காக படிக்க ஆரம்பித்த மருத்துவ நூல்களும் சில காலம் நோயாய் பீடித்திருந்தது.

செந்துறை நண்பர்கள் . பாலு, செந்தில், பிரபு இவர்கள் உதவியுடன் ஓஷோவும் வாழ்க்கையும் புறிந்தது. அதன் பின் சம்பாதிக்கவும் எதாவது தொழில் தொடங்கவும் என்பணம் என்று வேணும் என்ற சுயமுயற்சி காரணமாக பீட்டர் எப் டிரக்கரும், பங்கு வணிகமும் தெரிந்துகொண்டேன்.

அமீரகம் வந்தபின் இணையத்தில் கழிக்கும் நேரம் அதிகமானதில் புத்தகம் வாங்கும்/ படிக்கும் ஆர்வம் குறைந்து போனது. இதுதான் எனது (நூலகத்தின் )கதை.

நூல்களை இன்னொரு முறை அனேகமாக இரண்டு மாதம் சென்று ஊரில் (கிழுமத்தூரில் இருந்து) பட்டியல் இடுகிறேன்.

வே.ஆனைமுத்து பற்றிய முழு தகவல்களும் பின்னர் என் தந்தையிடம் முழுதாக கேட்டு பதிவிடுகிறேன்.

இப்பதிவெழுத ஆர்வமூட்டிய சிவபாலன் அவர்களுக்கு மிக்க நன்றி

நல்ல மரங்கள் நல்ல கனிகளைத் தரும் மரங்களை அதன் கனிகளில் இருந்து பிரித்தறியக் கற்றுக்கொள்- ஒரு ஜென் பழமொழி


தினமலரின் முதல் பக்க செய்தி
விபரமான செய்தி




இந்த மாதிரி பத்திரிக்கை நடத்துவதை விட எங்காவது போய் போலி பத்திரம் அச்சடிக்கலாம்
(பாரதியார் தமது சந்திரிகை என்ற நாவலிலே, கோபால அய்யங்காருக்கும், வீரேசலிங்கம் பந்துலு வீட்டுப் பணிப் பெண்ணாகிய மீனாட்சிக்கும் பிரம்ம சமாஜத்தில் நடந்த கலப்பு மணத்தை வருணித்திருக்கிறார். கதையின் போக்கு 'கண்டதும் காதல்' என்ற கோபால அய்யங்காரின் இலட்சியத்துடன் - ஏன் பிரமை என்றும் கூறலாம் - முடிவடைகிறது. முடிவு பெறாத இரண்டாவது பாகத்தில் வருணிப்பாரோ, என்னவோ? மனிதன், 'காதல் பெண்ணின் கடைக்கண் பணியிலே' அனலை விழுங்கலாம், புளித்த குழம்பையும் குழைந்த சோற்றையும் உண்ணச் சம்மதிப்பானோ என்னவோ? பின் கதையை என் போக்கில் எழுதுகிறேன். பாரதியின் போக்கு இப்படித்தான் இருந்திருக்க வேண்டும் என்பதில்லை)

டெப்டி கலெக்டர் கோபாலய்யங்கார் தமது மனைவி மீனாட்சியை யழைத்துக் கொண்டு தஞ்சைக்கு வந்து ஒரு மாத காலமாகிறது. ஊரில் எல்லாம் பரபரப்பு, ஒரே பேச்சு, கோபாலய்யங்கார் இடைச்சியைக் கலியாணம் செய்து கொண்டார் என்பதுதான். எல்லாம் கிசுகிசு என்ற பேச்சு. எதிரில் பேச முடியுமா? அதுவும் அந்தக் காலத்தில்; அதுவும் தஞ்சாவூரில். சிலர் போயும் போயும் இடைச்சிதானா அகப்பட்டாள் என்று பேசிக் கொண்டார்கள். படியாதவர்கள், யாரோ இடைச்சியை இழுத்து வந்து வைப்பாக வைத்திருக்கிறார் என்று அபிப்பிராயப்பட்டார்கள். ஆனால் பத்திரிகைகளில் பிரசுரமான் செய்தி என்பதால் வேறு வழியின்றி நம்பிக் கொண்டார்கள். பியூன்களுக்கு அய்யங்கார் என்றால் சிறிது இளக்காரம்; அவர் முதுகுப்புறம் சிரிப்பார்கள்.இவ்வளவும் கோபாலய்யங்காருக்குத் தெரியாது. அதாவது தெரிய சந்தர்ப்பம் வைத்துக் கொள்ளவில்லை.

வீட்டிலே மீனாட்சிக்குப் படிப்புச் சொல்லிக்கொடுக்க ஒரு கிறிஸ்துவ உபாத்தினி. முன்பிருந்த பிராமணப் பரிசாரகன் சொல்லிக் கொள்ளாமல் ஓடிவிட்டான். ஒரு நாள் மீனாட்சி சமைத்தாள். அதாவது அவள் குலாசாரப்படி சமைத்தாள். லவங்கப்பட்டை, பெருஞ்சீரகம் இத்தியாதி பொருள்களுடன் தன் கைப்பாகமாக மிகுந்த ஜாக்கிரதையுடன் வைத்திருந்தாள்.கோபாலய்யங்கார் குடிகாரர் தான்; ஆனால் மாமிச பட்சணியல்ல.

மீனாளின் கண்களைப் பார்த்துக் கொண்டு இரண்டு கவளம் வாயில் போட்டார். அவ்வளவுதான். குடலைப் பிடுங்கியது போல் ஓங்கரித்து வாந்தி எடுத்தார். மாமிச உணவின் பாகம் என்ற நினைப்பில் ஏற்பட்டது. மீனாள் பதறித் தன் கணவன் தலையைத் தாங்கினாள். கோபாலய்யங்கார் போஜனப் பிரியர். பசி காதலை வென்றது. அவளை உதறித் தள்ளிவிட்டு வெளியே சென்று சேவகனைக் கூப்பிட்டு, பிராமண குமாஸ்தாவசம் ஹோட்டலில் இருந்து சாப்பாடு தருவித்தார்.

போஜனமான பிறகுதான் கோபாலய்யங்காருக்குத் தமது காதல் திரும்பியும் வந்தது."மீனா" என்று கூப்பிட்டுக்கொண்டு உள்ளே வந்தார்."சாமீ" என்று எழுந்தாள் மூலையில் உட்கார்ந்திருந்த காதலி. அவள் கண்களில் இரண்டு துளிகள் அவர்கள் இருவருக்கும் இடையே இருக்கும் அகழியை எடுத்துக் காண்பித்தது.மீனாட்சி பணிப்பெண்; அதிலும் பயந்த பெண். மருண்ட பார்வை. கணவன் என்ற ஸ்தானத்தில் அவரை வைக்கவில்லை.

தனது தெய்வம் என்ற ஸ்தானத்தில், அதாவது தனக்கு எட்டாத ஒரு ஸ்தானத்தில் இருக்கும் ஒரு இலட்சியம் என்று கருதியவள். எட்டாதது என்ற நினைப்பில் பிறந்த பயம் கணவன் இஷ்டப்படி நடக்கத் தூண்டியதேயல்லாது அவரிடம் தன்னை மறந்த பாசம், லயம் பிறப்பித்ததே கிடையாது."என்ன மீனா! உனக்கு எத்தனை தரம் அப்படிக் கூப்பிடக் கூடாது என்று சொல்லியிருக்கிறேன்.

கண்ணா! இப்படி வா! என்ன இப்படி கறிக்குழம்பு வைத்தாய்?" என்றார்.

"இல்லிங்களே, இப்படித்தான் எங்க வீட்டிலே பருப்புக் கொளம்பு வைப்பாங்க" என்றாள்.

"அதை அப்பொழுதே சொல்லி இருக்கக் கூடாதா? ஹோட்டலில் சாப்பாடு எடுத்து வரச் சொன்னால் போகிறது. அது கிடக்கட்டும். இப்படி வா!" அவளை ஆரத்தழுவி தமது மடிமீதிருத்தி முத்தங்களைச் சொரிந்தார். மீனாள் செயலற்ற பாவைபோல் இடங்கொடுத்தாள். கணவன், கலெக்டர் என்ற பயம். அவர் இஷ்டம் போல் இருக்க வேண்டும் என்பதில் ஏற்பட்ட பயம்.

"என்ன மீனா! நீ ஒரு முத்தமிடு."மீனாள் தயங்கினாள். ஒரு பயந்த முத்தம் கோபாலய்யங்காரின் கன்னத்தை ஸ்பரிசித்தது."என்ன மீனா, இன்னும் பயமா? உன் பயத்தைப் போக்குகிறேன் பார், உனக்கு இரத்தமே இல்லையே. இந்த மருந்தை குடி" என்று ஒரு கிளாசில் ஒயினை ஊற்றிக் கொடுத்தார். குடித்தாள். சிறிது இனிப்பும் காரமும் தான் தெரிந்தது. மறு நிமிஷம் உடல் பூராவாகவும் ஏதோ ஒன்று பரவுவது போல் பட்டது.

"என்னமாக இருக்கிறது?"

"கொஞ்சம் இனிச்சுக்கிட்டு காரமா இருந்துச்சு. என்னமோ மாதிரியா இருக்குதே?"

"என்னமாக இருக்கிறது?"

"நல்லாத்தான் இருக்குது" என்றாள்.அவளும் வாலிபப் பெண்தானே. அதுவும் ஒயின் உதவியும் கூட இருக்கும்பொழுது அன்று சிறிது பயத்தை மறந்தாள்.

அன்று அவளுக்குக் கோபாலய்யங்காரின் மீது ஏற்பட்ட பாசம், வாலிபத்தின் கூறு. கோபாலய்யங்கார் மீனா தன்னைக் காதலிப்பதாக எண்ணி மகிழ்ந்தார்.
கோபாலய்யங்கார் சிறிது கஷ்டப்பட்டு ஒரு பிராமணப் பரிசாரகனை நியமித்தார். சம்பளம் இருபத்தைந்து ரூபாய் என்ற ஆசையும், கலெக்டர் அய்யங்கார் என்ற பயமும் இருந்தால் ஒரு ஏழைப் பிராமணன் அகப்படாமலா போகிறான்?ஆனால் கலெக்டருக்கும் பரிசாரகனுக்கும் ஒரு சமரச ஒப்பந்தம். கோபாலய்யங்கார் தஞ்சை ஜில்லாவிற்குப் பூராவாகவும் எதேச்சாதிகாரியாக இருப்பது என்றும், சமயலறையைப் பொறுத்தமட்டில் பரிசாரகன் சுப்புவய்யர் தான் எதேச்சாதிகாரி என்றும், சமயலறைப் பக்கம் கலெக்டர் அய்யங்காரோ கலெக்டர் அம்மாளோ வரக்கூடாது, பாத்திரங்களைத் தொடக்கூடாது, இருவருக்கும் பரிமாறுவதும் சமையல் செய்வதும் சுப்புவைய்யரின் வேலை என்றும் திட்டமாயிற்று.சாப்பாட்டுப் பிரச்சனை ஒருவாறு முடிந்ததும், கோபாலய்யங்கார் தமது கலெக்டர் தொழிலையும் காதல் கனவையும் அனுபவிக்க முயன்றார்.


கலெக்டர் வேலை பரிச்சயமானது. ஆனால் காதல்...மீனாளுக்குப் பயமும், கோபாலய்யங்காரின் மீது மோகமும் தான் இருந்து வந்தன. அதிலும், அவர் பயிற்சி செய்வித்த மருந்தில் கொஞ்சம் பிரேமையும் விழுந்திருந்தது.ஒருநாள் சாயங்காலம்.கோபாலய்யங்கார் ஆபீஸிலிருந்து வந்து, தமது ஆங்கில வேஷத்தைக் களைந்து கொண்டிருந்தார்.அப்பொழுது மீனாள் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.

அய்யங்கார் 'டிரஸ்' செய்வதைப் பார்ப்பதில் அவளுக்கு ஒரு பிரேமை. ஆச்சரியம்.கோபாலய்யங்கார் ஒரு முத்தத்தை எதிர்பார்த்தார். ஆசை இருந்தாலல்லவோ, பாசம் இருந்தால் அல்லவோ?கோபாலய்யங்காருக்குச் சிறிது ஏமாற்றமாகவிருந்தது.

"மீனா! என் பேரில் உனக்குக் காதல் இருக்கிறதா?" என்றார்.மீனாவுக்கு அர்த்தமாகவில்லை. சிறிது தயங்கினாள்.

"அப்படிண்ணா?"

கோபாலய்யங்காருடைய ஏமாற்றம் சிறிது கோபமாக மாறியது.

"என் பேரில் பிரியமில்லை போலிருக்கிறது!" என்றார்.

"என்ன சா... என்னாங்க அப்புடிச் சொல்லுறிய? உங்க மேலே புரியமில்லாமலா?" என்று சிரித்தாள் மீனாள்.

"வந்து இவ்வளவு நேரமாக ஒரு முத்தமாவது நீயாகத் தரவில்லையே?"

"எங்க ஜாதியிலே அது ஒண்ணும் கெடையாது இப்போ?" என்றாள்.கோபாலய்யங்காருக்குச் சுறுக்கென்று தைத்தது. நல்ல காலமாக சுப்புவைய்யர் காப்பியைக் கொண்டு வந்து கொடுக்க உள்ளே நுழைந்தார். கோபம் அவர் மேல் பாய்ந்தது.

"தடியா! காப்பியை வைத்துவிட்டுப் போ!" என்று இரைந்தார்.

அய்யங்காருக்கு கொஞ்சம் 'டோஸ்' ஜாஸ்தி போலிருக்கிறது என்று நினைத்துக் கொண்டு போய்விட்டார் பரிசாரகர்.நாட்களும் வெகுவாக ஓடின. கோபாலய்யங்கார் ஒரு பொம்மைக்குக் காதலுயிர் எழுப்ப பகீரதப் பிரயத்தனம் செய்துகொண்டிருக்கிறார். இதில் தோல்வி இயற்கையாகையால் மது என்ற மோகனாங்கியின் காதல் அதிகமாக வளர ஆரம்பித்தது.

மீனாளுக்கு இந்தச் சாப்பாட்டுத் திட்டம் வெகு நாட்களாகப் பிடிக்கவில்லை. தான் பணிப்பெண்ணாக இருக்கும்பொழுது வேளா வேளைகளில் கிடைக்கும் பிராமண உணவு இப்போது வெறுப்பைத் தருவது அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.

தகப்பனார் வீட்டில் நடக்கும் சமையலைப் பற்றி ஏங்கவாரம்பித்தாள். தனக்குத் தானே சமைத்துக் கொள்ள அனுமதி கேட்கப் பயம். ஆபீஸ் பியூன் கோபாலக்கோனார் கலெக்டர் வீட்டு வேலைகளைக் கவனிக்க நியமிக்கப்பட்ட கிழவன். அவன் வேளாவேளைகளில் சாப்பாடு எடுத்துக் கொண்டு வந்து வீட்டுத் திண்ணையில் சாப்பிடும்பொழுது அவளுக்கு நாவில் ஜலம் ஊறும்.வீட்டினுள் இருந்து கண்ணீர் விடுவாள். அவளுக்குக் குழந்தையுள்ளம்; கேட்கவும் பயம்.கோபாலக் கோனார் அனுபவம் உள்ள கிழவன். இதை எப்படியோ குறிப்பால் உணர்ந்து கொண்டான்.

ஒருநாள் ரகஸியமாக மாமிச உணவு தயாரித்து வந்து, அவளுக்குக் கொடுத்தான். அவளுக்கு அவன் மீது ஒரு மகளின் அன்பு ஏற்பட்டது. கோபாலக் கோனாருக்கு ஒரு குழந்தையின் மீது ஏற்படும் வாத்ஸல்யம் ஏற்பட்டது.ரகஸியமாகக் கொஞ்ச நாள் கொடுத்து வந்தான்.

ரகஸியம் பரமகேட்டை விளைவிக்கும் என்று உணர்ந்து மீனாளுக்கு ஒரு தந்திரம் கற்பித்தான். அய்யங்கார் போதையிலிருக்கும் பொழுது மாமிச உணவைப் பழக்கப்படுத்த வழி சொல்லிக் கொடுத்தான்.மீனாள் பிராமணப் பெண் ஆவது போய், கோபாலய்யங்கார் இடையனானார்.


கோபாலய்யங்கார் மாமிசப்பட்சணியான பிறகு சுப்புவைய்யரின் எதேச்சாதிகாரம் தொலைந்தது. மீனாள் உண்மையில் கிரகலட்சுமியானாள்.இரண்டு வருஷ காலம் அவர்களுக்கு சிட்டாகப் பறந்தது. மீனாளின் துணைக்கருவியாக கோபாலய்யங்காரின் மேல்நாட்டுச் சரக்குகள் உபயோகிக்கப்பட்டன.

தம்பதிகள் இருவரும் அதில் ஈடுபட்டதினால் மூப்பு என்பது வயதைக் கவனியாமலே வந்தது. மீனாளின் அழகு மறைந்து அவள் ஸ்தூல சரீரியானாள். கோபாலய்யங்கார் தலை நரைத்து வழுக்கை விழுந்து கிழப்பருவம் எய்தினார்.இதை மறப்பதற்குக் குடி.ஆபீஸிற்கு போகுமுன் தைரியம் கொடுக்கக் குடி.வந்ததும் மீனாளின் சௌந்தரியத்தை மறக்கக் குடி.

இப்பொழுது அவர்கள் தென்னாற்காட்டு ஜில்லாவில் இருக்கிறார்கள். இருவருக்கும் பங்களா ஊருக்கு வெளியிலே.இரவு பத்து மணிக்கு அப்பக்கம் யாராவது போனால் கலெக்டர் தம்பதிகளின் சல்லாப வார்த்தைகளைக் கேட்கலாம்.

"ஏ! பாப்பான்!" என்று மீனாள் கொஞ்சுவாள்.

"என்னடி எடச்சிறுக்கி!" என்று கோபாலய்யங்கார் காதலுரை பகருவார்.இருவரும் சேர்ந்து தெம்மாங்கு பாடுவார்கள்.மீனாளின் 'டிரியோ, டிரியோ' பாட்டில் கோபாலய்யங்காருக்கு - அந்த ஸ்தாயிகளில் - பிரியமதிகம்.
.கடந்த சில நாட்களாகவே இணையம் அதிலும் வலைப்பூ எழுத்தாளர்கள் கொஞ்சம் கொஞ்சமாக சிந்திக்கும் திறனையோ அல்லது வேறு எதையோ இழந்து கொண்டு வருகிறோம். அல்லது மிக அதிக அளவில் உணர்ச்சி வசப் படுகிறோம். இது இரண்டில் எதுவோ ஒன்று உண்மை. அதில் நானும் அடங்குவேன். எனது ரஜினி ரசிகர்களுக்கு மூளை இருக்கிறதாம் எனும் பதிவுக்கு வந்த பின்னூட்டங்களே அதற்கு சாட்சி. அதிலும் சிலர் என்னவோ நான் மட்டும் பின்னூட்டம் பெறுவதற்க்காக எழுதுவது போலவும் பிறவலைப் பதிவர் எல்லோரும் பின்னூட்டம் வந்தால் தூக்கி குப்பைதொட்டியில் போட்டுவிட்டு அடுத்த பதிவை பார்க்கப் போய்விடுவது போலவும் ஒரு வெற்று தோற்றத்தை உருவாக்க முயன்றுள்ளனர் அதற்கு நான் முன்னறே எழுதிய பின்னூட்டங்களை முன்வைத்து எனும் பதிவுக்கு சுட்டி வேறு . . வலைப் பதிவர்களின் புரிந்துகொள்ளும் தன்மை இதன் மூலம் தெள்ளத் தெளிவாக தெரிகிறது. எனது வலையில் பின்னூட்ட நுட்பம் சரியாக வேலை செய்கிறதா என சோதிக்க பின்னூட்டம் கோரி பதியப்படும் ஒரு பதிவுக்கும் தவறான வார்த்தைப் பிரயோகம் என கடைசியில் சொல்லப்பட்ட கோபம் கொண்ட ஒரு பதிவுக்கும் வேறுபாடுகளை தெரிந்துகொள்ளாமல் தான் இன்னும் இருக்கிறோம். இதில் ஒரு வேதனைக்குரிய விஷயம் பின்னூட்டம் இட்டு கேள்விகளை எழுப்பும் நண்பர்கள் அவர்கள் எதிர்பார்க்கும் பதில் வராத போது கருத்துரிமை பரிக்கப் படுவதாக தனியே புலம்புகின்றனர். அதாவது ஒரு சில தரங்கெட்ட கேள்விகள், எழுதுபவரை நோக்கி சக வலைப்பதிவர் பின்னூட்டம் இட்டால் அதை வெளியிடுவதன் மூலம் யாருக்கு அவமானம் அசிங்கம் அதை எழுதியவருக்கா அல்லது அத்தகைய கருத்தை தனது பின்னூட்ட பக்கத்தில் வெளியிட்டவருக்கா?. தனிமனித தாக்குதல் நடத்துவதாக என்னிடம் புலம்பும் அவர்களே தங்களது வலைப்பூவில் தனிமனித தாக்குதல் நடத்தலாம் அது கருத்துரிமை ஆனால் அதை நான் எனது வலையில் பயன்படுத்தக் கூடாது . மேலும் நான் இதுவரை எழுதிய எந்த பதிவிலும் எனது சாதி இன்னது என்றோ அல்லது நான் இந்த சாதியை வெறுக்கிறோன் என்றோ எழுதுவதில்லை. எழுதப் போவதும் இல்லை. ஆனால் சில விடாகண்டர்கள் "புதுப் பட பெட்டியை "என்று சொன்னதன் மூலம் என் சாதியை தெரிந்து கொண்டார்களாம். அதில் ஒரு நக்கல் வேறு. என் சாதியை சொல்லும் உனக்கு இருக்கும் ஆணவம் அகம்பாவம் எதிலும் எனக்கு நாட்டமில்லை என்பதாக மீண்டும் ஒரு கவிதை எழுதப்பட்டது . நான் எழுதிய பதிவில் எனது கருத்து என்ன என்பதை மிகச் சரியாக உணர்ந்தவர் திரு வசந்தன் அவர்கள் மட்டுமே. மற்ற அனைவரின் கருத்தும் வெருமனே அந்த நடிகரையும் அவரின் புகழ்களையும் எனக்கு சொல்வதாகவும். அல்லது கலைஞர் , ஜெயலலிதா, ராமதாஸ், வைகோ, திருமாவளவன் ஆகியோர் என்ன செய்துவிட்டார்கள் என்பதாகவும் அமைந்திருந்தது. எனது கேள்வி அது அல்ல. இப்படி கருத்து சொன்ன ஒருவரை மன்னிப்பு கேட்க வலியுருத்தும் ரசிகர்களுக்கு மூளை இருக்கிறதா எனக் கேட்டிருந்தேன் ஆனால் இந்த அமீரகப் பொடியனுக்கு எதுவுமே தெரியாது என்பது போல் பத்மனாபா முதல் திருச்சி ஓட்டல் வரை வரித்துக் கட்டி பதிவு போடுவதில் சிந்திக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்க ஆரம்பிக்கின்றனர். இது போல் பதிவுகள் எழுதினால் பின்னூட்டம் வரும் என்பதற்க்காக நான் எழுதுவதாக குற்றச்சாட்டு வேறு. சமூகப் பொறுப்புள்ள நான் எழுதிய பதிவுகளுக்கு எத்தனை பேர் பின்னூட்டம் இட்டீர்கள் என்று என்னால் விரல் விட்டே சொல்லமுடியும் ஆனால் உங்களால் ஒதுக்கப் பட வேண்டும் என நான் கருதி எழுதும் பதிவுகளுக்கு பின்னூட்டம் இடுவதில் இருந்து ஒன்று மட்டும் தெரிகிறது நமக்கு கருத்துக்களை விட பரபரப்பு எழுத்துக்களை படிப்பதில்தான் விருப்பம் என்று. ஆனால் முந்தைய பதிவின் என் வார்த்தைகளின் தொனி வேண்டுமானால் அது உங்களுக்கு கடினமாகவும் ஏற்றுக் கொள்ள முடியாமலும் போகலாம் அக் கருத்தில் இருக்கும் நேர்மையை இல்லை எனக் கூற இயலாது. தங்கர்பச்சானின் கருத்தும் அப்படியெ. ஒஷோ சொன்னது போல வார்த்தைகளில் தொங்கிக்கொண்டிருக்கிறது உலகம். எனது பதிவில் எனது கருத்துக்களுக்கு ஆதரவாக பின்னூட்டம் இட்டிருப்பவர்களை தங்களது பதிவில் தரக் குறைவான விமர்சனங்களை வைப்பது. இது எல்லாம் சில எடுத்துக் காட்டுகளே. இப்படியே போனால் ஆரோக்கியமான ஒரு வலைப்பூ சூழல் ஏற்படும் என்பதாக எனக்குத் தெரியவில்லை இங்கே யாரும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை. என்னையும் சேர்த்து . இப்படியே போனால் இதுவெல்லாம் நடக்கும்.....

1.தி.மு.க. அதிமுக, பா.ம.க, மதிமுக, பா.ஜ.க, விடுதலை சிறுத்தைகள், தே.மு.தி.க, கருணாநிதி , ஜெயலலிதா, வைகோ, திருமா, ராமதாஸ், ரஜினி, கமல், விஜய், திராவிடம், ஈழம், தமிழ், பார்ப்பனீயம், இஸ்லாம், கிருஸ்த்துவம், இன்னும் கவுண்டமணி செந்தில் விவேக், மகேந்திரன் என யாரைப் பற்றியும் எதைப் பற்றியும் யாராலும் எழுத முடியாமல் போகும்.

நீ சொல்வதை நான் ஏற்கவில்லை. ஆனால், அதைச் சொல்கிற உன் உரிமையைக் காக்க, நான் என் உயிரையும் தருவேன்’ என்கிற வால்டேரின் கருத்தே, கருத்துரிமைக்கான அடிப்படை!
பிறக்கிற ஒவ்வொரு மனிதனுக்கும் வெவ்வேறாக இருக்கும் ரேகைகளைப் போல, ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு வித-மான கருத்துக்கள் இருக்கும். தாயின் கருவறை-யில் ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகளாக இருந்தாலும்கூட ஒரே கருத்துடன் இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. கருத்-துரிமை என்பது மனிதனின் பிறப்புரிமை. அவனின் வாழ்-வுரிமையில் அது தவிர்க்க முடியாத ஓர் அங்கம்.
‘ஒரு காலத்தில் சர்வாதிகாரம் இருந்தது. சர்வாதிகாரிகள் இருந்தனர். அவர்கள் மக்களின் கருத்தை மதிக்கவில்லை. மக்களையும் மதிக்கவில்லை. ஹிட்லர் இருந்த காலமெல்லாம் முடிந்துவிட்டது. இப்போது நாம் ஜனநாயக யுகத்தில் இருக்கிறோம். நம் கருத்துரிமையைக் காக்க அரசியலமைப்புச் சட்டமே இருக்கிறது’ என்று நாம் ஒவ்வொருவரும் நம்பிக்-கொண்டு இருக்கிறோம். நம் நம்பிக்கைகள் கண்ணுக்கு முன்னால் கானல் நீராகிக்கொண்டே வருகின்றன.
குடியாட்சி பற்றி தெரியாத முடியாட்சிக் காலத்தில், ‘மன்ன-வனும் நீயோ? வள நாடும் உனதோ?’ என்று தன்னை ஆளும் அரசனைக் கேள்விக் கணைகளால் துளைத்தெடுத்-திருக்கிறார் ஒளவை. ‘நாமார்க்கும் குடியல்லோம், நமனை அஞ்சோம்’ என்று அரசனின் கருத்தை ஏற்காது தன் கருத்துரிமையை நிலைநாட்டியிருக்-கிறார் நாவுக்கரசர். முடி-யாட்சி காலத்-தில் இருந்த கருத்துச் சுதந்திரம்கூட நிகழ்காலத்தில் இல்லை என்பதுதான் கசப்பான உண்மை.
சட்டம் போட்டு நம் கருத்துரிமையைக் காக்க நினைத்தார்கள் நம் அரசிய-லமைப்பை உருவாக்கிய வல்லுநர்கள். ஆனால், அதே சட்டத்தின் பாதுகாப்புடன் நம் கருத்துரிமையைப் பறிக்கிறார்கள் அரசியல் சாணக்கி-யர்கள். சமீபத்திய உதாரணம், நர்மதா அணை விவகாரம். ஆயிரக்கணக்கான பழங்குடி மக்களை வேரோடும், வேரடி மண்ணோடும் பிடுங்கி எறிந்து-விட்டு, நாட்டின் வளர்ச்சித் திட்டத்தைத் தீட்டிக்கொண்டு இருக்கிறது அரசு. வன்முறை-யில் ஈடுபடாமல் அறவழியில் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து தங்கள் உரிமைகளை நிலைநாட்ட முயற்சிக்கிற அந்த மக்களை, போராடக் கூடாது என்று சட்டத்தின் மூலமே தடுக்கிறார்கள். நசுக்கப்படுகிற புழுவும் கூட சாகும்வரை தன் எதிர்ப்பைக் காட்டித் தன் உரிமையை நிலை நாட்டுகிறது. ஆனால், ஜனநாயக நாட்டில் வாழும் மக்கள் அமைதியான வழியிலும் எதிர்ப்பைக் காட்டக்கூடா தாம். என்ன கொடுமையடா இது?
மக்களின் கருத்துரிமை கேள்விக்குள் ளாக்கப்படும்-போது அதைக் கண்டிக்கிற பொறுப்புள்ள பத்திரிகை ஆசிரியரையே ‘தீவிரவாதி’ என்று முத்திரை குத்தி பொடா சட்டத்தின் கீழ் கைது செய்த ‘மக்களாட்சி மன்னர்கள்’ நம்மிடையே இருக்கின்றனர். இஸ்லாமியர்-கள் தொடர்ந்து தாக்கப்படு-வதை நிறுத்த வேண்டும் என்று போராடினால், உடனே ‘மதத் தீவிரவாதிகள்’ என்று சிறையில் அடைப்பார்கள். தமிழ்நாட்டில் தமிழ்தான் முதன்மை வகிக்க -வேண்டும் என்று குரல் கொடுத்-தால், உடனே ‘தமிழ்த் தீவிர வாதிகள்’ என்கிற முத்தி-ரையை முதுகில் குத்திவிடு-வார்கள். சிந்திப்பது, பேசுவது, அமைப்பு நடத்துவதெல்லாமே இப்போது தேச விரோத நடவடிக்கை-யாகவே பார்க்கப்படுகிறது. துப்பாக்கியும், லத்தியும் சட்டத்-தைப் பாதுகாக்கப் பயன்படு வதைவிட, சட்டத்தை மீறவே அதிகம் பயன்படு-கின்றன. அரசாங்கத்துக்கு எதிரான கருத்து உள்ள யாரும் வாழ்வ தற்குக்கூடத் தகுதியற்றவர்களாகி விடுகிறார்கள்.
உலக சிந்தனை வரலாற்றில் நீண்டதொரு பாரம்பரியம் தமிழ் மொழிக்கும், தமிழர் களுக்கும் இருக்கிறது. உலகின் மூத்த நாகரிகமுடைய வெகுசில மொழிக் கூட்டத்தில் தமிழர்கள் முதன்மையானவர்கள். நம் எல்லாப் பெருமையும் விழலுக்கு இறைத்த நீர்தான்.
சிறிய நாடுகளைத் துன்-புறுத்து-வதையே பழக்கமாக வைத்திருக்கும் அமெரிக்காவில் வாழ்கிற மக்கள்கூட கருத்துரிமையோடு வாழ்கிறார்கள். உலகின் மிக முக்கியமான ஜனநாயக நாட்டைச் சேர்ந்த நமக்குத்தான் வாய்ப்பூட்டும், கைப்பூட்டும் போடப்படுகிறது. யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்கள் முதலில் கைவைப்பது மக்களின் கருத்துரிமையின் மீதுதான்.

இந்திய விடுதலைப் போராட்டத்தை நசுக்குவதற்காக 1919&ம் ஆண்டு பிப்ரவரி 6&ம் தேதி, கருத்துரிமைக்கு எதிரான ‘ரௌலட் சட்டம்’ என்கிற கொடிய சட்டத்தைக் கொண்டு வந்தது பிரிட்டிஷ் அரசு. இச்சட்டத்தை எதிர்த்து ஜாலியன் வாலாபாக் என்கிற இடத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில், அரசே வன்முறையை ஏவிவிட்டது. துப்பாக்கிச் சூட்டில் நூற்றுக்கணக் கானவர்கள் இறந்துபோனார்கள். இந்திய வரலாற்றில் கருத்துரிமையை மறுக்கும் கறுப்புச் சட்டமாக ரௌலட் சட்டத்தை வர்ணித்தார்கள் வரலாற்றாசிரியர்கள். ஆனால், அடிமை இந்தியாவில் இருந்த கொடுமையான சட்டங் களைப் பின்னுக்குத் தள்ளி சுதந்திர இந்தியாவில் நிறைய சட்டங்களை இயற்றி நடைமுறைப்படுத்தி இருக்கிறார்கள் நம் தலைவர்கள்.
ஜனநாயகத்தைக் கொலை செய்யும் நோக்கத்துடன் ‘பொடா’ போன்ற சட்டங்களை அதிகாரவர்க்கம் பயன்படுத்தியிருக்கிறது. சுதந்திர வேட்கையைக் கோஷ-மாகக்கூட போடக் -கூடாது என்கிற ரௌலட் சட்டத்துக்கும், ஈழ மக்களின் உரிமைகளுக்கு ஆதரவு தெரிவிப்பதே தேசத் துரோகம் என்கிற பொடா சட்டத்துக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது?
மோதிலால் நேரு தலைமையில், ரௌலட் சட்ட எதிர்ப்புக் குழு அமைத்துப் போராடியது காங்கிரஸ் கட்சி. சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு எதிரான ‘ரௌலட்’ சட்டத்-தின் பெயரை மட்டும் மாற்றி, ‘மிசா’ சட்டத்-தைக் கொண்டுவந்தார் மோதி-லாலின் பேத்தியான இந்திரா காந்தி. பின், மோதிலாலின் கொள்ளுப் பேரன் ராஜீவ் காந்தியின் ஆட்சியில், மிசாவின் பெயர் ‘தடா’ என்று மாறியது. மனித உரிமைகளைத் துச்சமாகக் கருதும் இதுபோன்ற முறை-கேடான சட்டங்கள் முறைகேடாகத்தான் பயன்படுத்தப்படும். அதற்கு நானே வாழும் சாட்சி.
ஒரு கண்டனக் கூட்டம் நடத்த முயற்சிக்-கும்போது, முன்னெச்ச-ரிக்கை நடவடிக்கையாக ஒரு வார காலம் சிறையில் அடைக்கப்-பட்டேன். பின்னர் வெளியில் வந்தபோது, உளவுத் துறை என்னை தடா சட்டத்தில் கைது செய்தது. ஒரு குறிப்பிட்ட தேதியில் நான் ரகசியக் கூட்டம் நடத்தி இளைஞர்களை குண்டு வைக்கத் தூண்டியதாக, என் மீது போலீஸார் குற்றம் சுமத்தினர். அந்தத் தேதியில் நான் அதே போலீஸாரால் முன்னெச்ச-ரிக்கை எனும் பெயரில் கைது செய்யப்பட்டு ஏற்கெனவே சென்னைச் சிறையில் அடைக்கப்பட்டி-ருந்-தேன். இதை நீதிமன்றத்தில் நான் நிரூபித்த-போது, தடா சட்டமே தலைகுனிந்து நின்றது. தடாவுக்கு எதிர்ப்பு வந்தபோது பி.ஜே.பி. அரசு அதற்கு ‘பொடா’ என்று பெயர் மாற்றியது.
‘தேச விரோத சக்திகளை ஒடுக்கு-வதற்காகவே இச்-சட்டம் கொண்டு வரப்படு-கிறது. இதை எதிர்ப்பவர்கள் தேச பக்தர்கள் அல்லர். இந்தச் சட்டத்தை எதிர்ப்பவர்கள் பயங்கர-வாதிகளுக்கு மட்டுமல்ல, பாகிஸ்தானுக்-கும் உதவுகிறார்கள்’ என பொடா சட்டத்தை இயற்றும்-போது, நாடாளு-மன்றத்தில் தெரிவித்தது அரசு. மக்களால் தேர்ந்தெடுக்-கப்பட்ட ஓர் அரசு, தன் நட-வடிக்கை-களை மக்கள் விமர்-சிக்கவே கூடாது என்று நாடாளு-மன்றத்திலேயே அறிவித்தது சர்வாதி-கார நாடு-களில்கூட நடக்காத விஷயம்.
பொடா சட்டம் மனித உரி மைக்கு எதிரானது என்று சொன்னாலே, அப்படிச் சொன்ன வர்-கள் பயங்கரவாதிகளாக சித்திரிக்கப்-பட்டனர். ஒரே நேரத்தில் கருவில் இருக்கும் இரண்டு சிசுக்-களைக் கொல்-வதைப்போல இருந்தது அரசின் அறிவிப்பு. ‘மக்களுக்குக் கருத்து சுதந்திரம் அறவே கிடையாது. அதை ஒடுக்க நாங்கள் சட்டம் இயற்றினால் அந்தச் சட்டத்தை எதிர்க்கிற உரிமை-கூட இல்லை’ என்று பகிரங்கமாகவே சொன்னது அதிகார-வர்க்கம்.
கருத்து சுதந்திரத்துக்கு எதிராகவே பொதுவாக எல்லா அரசுகளும் இருக்கின்றன. இதில் காங்கிரஸ், பி.ஜே.பி, தி.மு.க, அ.தி.மு.க. என்கிற எந்த பேதமும் இல்லை. 1997&ம் ஆண்டு மதுரையில் நடை-பெற இருந்த தமிழர் எச்ச-ரிக்கை மாநாட்டுக்கு தி.மு.க. அரசு தடை- விதித்தது. அதை எதிர்த்-துத் தொடுத்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் கருத்-துரிமைக்கு ஆதர-வான வரலாற்று -முக்கியத்-துவம் வாய்ந்த தீர்ப்பைத் தந்தது. ‘அரசியல் சட்டத்-தில் 19&வது பிரிவு மக்க-ளுக்கு வழங்கியிருக்கிற உரிமைகள் மிக முக்கிய-மானவையாகும். இதை மீறவோ கட்டுப்படுத்-தவோ அரசுக்கோ, அதன் அதிகாரி-களுக்கோ உரிமை- இல்லை. சுதந்திரமாகக் கருத்துக்களை வெளியிடுவதும், விவாதிப்பதும் ஊக்கப்படுத்தப்பட -வேண்டும். அப்போதுதான் ஜன-நாயகம் வலிமையுடனும் உண்மை-யுடனும், உயிருடனும் இருக்கும்’ என்று நீதிமன்றம் கடுமையாக அரசைக் கண்டித்தது. நல்ல தீர்ப்பு-கள் நம் நாட்டில் எப்போது நடை-முறைக்கு வந்திருக்கின்றன?
அரசே இப்படி வன்முறையைச் சட்டத்-தின் பாதுகாப்போடு நிகழ்த்-தும்போது அரசின் அடிவருடிகள் எப்படி இருப்பார்-கள்? மாற்றுக் கருத்தை எதிர்கொள்ளாமல் கருத்து சொல்பவர்களை உருட்டுக் கட்டைகள் மூலம் எதிர்கொள்ளும் கலா-சாரம் நம்மிடம் வேகமாக பரவிக்கொண்டே இருக்கிறது. கண்ணியம் இன்று நம் தலைவர்-களிடம் அருகி வருகிறது. அது அப்படியே மக்களிடமும் தொற்று வியாதி-யைப் போலத் தொற்றிக்கொள்கிறது.
நீதிமன்றம் தன் தலைவருக்கு எதிரான ஒரு தீர்ப்பைத் தந்தால், அப்பாவி மாணவி-கள் மூன்று பேரை எரித்துக் கொல்-கிறார்கள் கட்சித் தொண்டர்கள். தங்கள் தலைவரை ஒரு பத்திரிகை விமர்சித்து விட்டால், அந்தப் பத்திரிகை அலுவலகத் துக்குள் குண்டாந்தடியோடு புகுந்து தங்கள் விசு-வாசத்தைக் காட்டுகிறார்கள் தொண்டர்கள். கருத்துரிமைக்கு எதிரான மனிதத்தன்மையற்ற செயலைக் கண்டிக்க வேண்டிய தகவல் தொடர்பு ஊடகங்கள் அணி சேர்ந்துகொண்டு மௌனம் காப்பது இன்னும் கொடுமை. உரிமைகளைக் காக்க வேண்டிய-வர்கள் மௌனம் காக்க நேர்ந்தால், கருத்-துரிமை மட்டுமல்ல, ஒட்டுமொத்த வாழ்-வுரிமையுமே கேள்விக்குள்ளாக்கப்படும்.
சிந்திப்பதும், அதை வெளிப்படுத்துவதும் நாமெல்லாம் மனிதர்கள் என்பதன் அடையாளம். சிந்திப்பதை வெளிப்படுத்தும் உரிமை மறுக்கப்பட்டால், கொஞ்ச காலத்தில் சிந்திப்பதே மறந்துவிடும். சிந்திப்பதையே மறந்துவரும் ஒரு தலைமுறை நம் கண் முன்னால் உருவாகிக்கொண்டு இருக்கிறது.
சிந்திக்கக்கூட அனுமதிக்கப்படாதவர்களை அடிமைகள் என்று வரையறுக்கிறது வரலாறு!

இந்த வார விருந்தினர் பழ.நெடுமாறன். ஆனந்த விகடனில்


இதில் எதுவும் உள்குத்தில்லை