நீ சொல்வதை நான் ஏற்கவில்லை. ஆனால், அதைச் சொல்கிற உன் உரிமையைக் காக்க, நான் என் உயிரையும் தருவேன்’ என்கிற வால்டேரின் கருத்தே, கருத்துரிமைக்கான அடிப்படை!
பிறக்கிற ஒவ்வொரு மனிதனுக்கும் வெவ்வேறாக இருக்கும் ரேகைகளைப் போல, ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு வித-மான கருத்துக்கள் இருக்கும். தாயின் கருவறை-யில் ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகளாக இருந்தாலும்கூட ஒரே கருத்துடன் இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. கருத்-துரிமை என்பது மனிதனின் பிறப்புரிமை. அவனின் வாழ்-வுரிமையில் அது தவிர்க்க முடியாத ஓர் அங்கம்.
‘ஒரு காலத்தில் சர்வாதிகாரம் இருந்தது. சர்வாதிகாரிகள் இருந்தனர். அவர்கள் மக்களின் கருத்தை மதிக்கவில்லை. மக்களையும் மதிக்கவில்லை. ஹிட்லர் இருந்த காலமெல்லாம் முடிந்துவிட்டது. இப்போது நாம் ஜனநாயக யுகத்தில் இருக்கிறோம். நம் கருத்துரிமையைக் காக்க அரசியலமைப்புச் சட்டமே இருக்கிறது’ என்று நாம் ஒவ்வொருவரும் நம்பிக்-கொண்டு இருக்கிறோம். நம் நம்பிக்கைகள் கண்ணுக்கு முன்னால் கானல் நீராகிக்கொண்டே வருகின்றன.
குடியாட்சி பற்றி தெரியாத முடியாட்சிக் காலத்தில், ‘மன்ன-வனும் நீயோ? வள நாடும் உனதோ?’ என்று தன்னை ஆளும் அரசனைக் கேள்விக் கணைகளால் துளைத்தெடுத்-திருக்கிறார் ஒளவை. ‘நாமார்க்கும் குடியல்லோம், நமனை அஞ்சோம்’ என்று அரசனின் கருத்தை ஏற்காது தன் கருத்துரிமையை நிலைநாட்டியிருக்-கிறார் நாவுக்கரசர். முடி-யாட்சி காலத்-தில் இருந்த கருத்துச் சுதந்திரம்கூட நிகழ்காலத்தில் இல்லை என்பதுதான் கசப்பான உண்மை.
சட்டம் போட்டு நம் கருத்துரிமையைக் காக்க நினைத்தார்கள் நம் அரசிய-லமைப்பை உருவாக்கிய வல்லுநர்கள். ஆனால், அதே சட்டத்தின் பாதுகாப்புடன் நம் கருத்துரிமையைப் பறிக்கிறார்கள் அரசியல் சாணக்கி-யர்கள். சமீபத்திய உதாரணம், நர்மதா அணை விவகாரம். ஆயிரக்கணக்கான பழங்குடி மக்களை வேரோடும், வேரடி மண்ணோடும் பிடுங்கி எறிந்து-விட்டு, நாட்டின் வளர்ச்சித் திட்டத்தைத் தீட்டிக்கொண்டு இருக்கிறது அரசு. வன்முறை-யில் ஈடுபடாமல் அறவழியில் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து தங்கள் உரிமைகளை நிலைநாட்ட முயற்சிக்கிற அந்த மக்களை, போராடக் கூடாது என்று சட்டத்தின் மூலமே தடுக்கிறார்கள். நசுக்கப்படுகிற புழுவும் கூட சாகும்வரை தன் எதிர்ப்பைக் காட்டித் தன் உரிமையை நிலை நாட்டுகிறது. ஆனால், ஜனநாயக நாட்டில் வாழும் மக்கள் அமைதியான வழியிலும் எதிர்ப்பைக் காட்டக்கூடா தாம். என்ன கொடுமையடா இது?
மக்களின் கருத்துரிமை கேள்விக்குள் ளாக்கப்படும்-போது அதைக் கண்டிக்கிற பொறுப்புள்ள பத்திரிகை ஆசிரியரையே ‘தீவிரவாதி’ என்று முத்திரை குத்தி பொடா சட்டத்தின் கீழ் கைது செய்த ‘மக்களாட்சி மன்னர்கள்’ நம்மிடையே இருக்கின்றனர். இஸ்லாமியர்-கள் தொடர்ந்து தாக்கப்படு-வதை நிறுத்த வேண்டும் என்று போராடினால், உடனே ‘மதத் தீவிரவாதிகள்’ என்று சிறையில் அடைப்பார்கள். தமிழ்நாட்டில் தமிழ்தான் முதன்மை வகிக்க -வேண்டும் என்று குரல் கொடுத்-தால், உடனே ‘தமிழ்த் தீவிர வாதிகள்’ என்கிற முத்தி-ரையை முதுகில் குத்திவிடு-வார்கள். சிந்திப்பது, பேசுவது, அமைப்பு நடத்துவதெல்லாமே இப்போது தேச விரோத நடவடிக்கை-யாகவே பார்க்கப்படுகிறது. துப்பாக்கியும், லத்தியும் சட்டத்-தைப் பாதுகாக்கப் பயன்படு வதைவிட, சட்டத்தை மீறவே அதிகம் பயன்படு-கின்றன. அரசாங்கத்துக்கு எதிரான கருத்து உள்ள யாரும் வாழ்வ தற்குக்கூடத் தகுதியற்றவர்களாகி விடுகிறார்கள்.
உலக சிந்தனை வரலாற்றில் நீண்டதொரு பாரம்பரியம் தமிழ் மொழிக்கும், தமிழர் களுக்கும் இருக்கிறது. உலகின் மூத்த நாகரிகமுடைய வெகுசில மொழிக் கூட்டத்தில் தமிழர்கள் முதன்மையானவர்கள். நம் எல்லாப் பெருமையும் விழலுக்கு இறைத்த நீர்தான்.
சிறிய நாடுகளைத் துன்-புறுத்து-வதையே பழக்கமாக வைத்திருக்கும் அமெரிக்காவில் வாழ்கிற மக்கள்கூட கருத்துரிமையோடு வாழ்கிறார்கள். உலகின் மிக முக்கியமான ஜனநாயக நாட்டைச் சேர்ந்த நமக்குத்தான் வாய்ப்பூட்டும், கைப்பூட்டும் போடப்படுகிறது. யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்கள் முதலில் கைவைப்பது மக்களின் கருத்துரிமையின் மீதுதான்.

இந்திய விடுதலைப் போராட்டத்தை நசுக்குவதற்காக 1919&ம் ஆண்டு பிப்ரவரி 6&ம் தேதி, கருத்துரிமைக்கு எதிரான ‘ரௌலட் சட்டம்’ என்கிற கொடிய சட்டத்தைக் கொண்டு வந்தது பிரிட்டிஷ் அரசு. இச்சட்டத்தை எதிர்த்து ஜாலியன் வாலாபாக் என்கிற இடத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில், அரசே வன்முறையை ஏவிவிட்டது. துப்பாக்கிச் சூட்டில் நூற்றுக்கணக் கானவர்கள் இறந்துபோனார்கள். இந்திய வரலாற்றில் கருத்துரிமையை மறுக்கும் கறுப்புச் சட்டமாக ரௌலட் சட்டத்தை வர்ணித்தார்கள் வரலாற்றாசிரியர்கள். ஆனால், அடிமை இந்தியாவில் இருந்த கொடுமையான சட்டங் களைப் பின்னுக்குத் தள்ளி சுதந்திர இந்தியாவில் நிறைய சட்டங்களை இயற்றி நடைமுறைப்படுத்தி இருக்கிறார்கள் நம் தலைவர்கள்.
ஜனநாயகத்தைக் கொலை செய்யும் நோக்கத்துடன் ‘பொடா’ போன்ற சட்டங்களை அதிகாரவர்க்கம் பயன்படுத்தியிருக்கிறது. சுதந்திர வேட்கையைக் கோஷ-மாகக்கூட போடக் -கூடாது என்கிற ரௌலட் சட்டத்துக்கும், ஈழ மக்களின் உரிமைகளுக்கு ஆதரவு தெரிவிப்பதே தேசத் துரோகம் என்கிற பொடா சட்டத்துக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது?
மோதிலால் நேரு தலைமையில், ரௌலட் சட்ட எதிர்ப்புக் குழு அமைத்துப் போராடியது காங்கிரஸ் கட்சி. சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு எதிரான ‘ரௌலட்’ சட்டத்-தின் பெயரை மட்டும் மாற்றி, ‘மிசா’ சட்டத்-தைக் கொண்டுவந்தார் மோதி-லாலின் பேத்தியான இந்திரா காந்தி. பின், மோதிலாலின் கொள்ளுப் பேரன் ராஜீவ் காந்தியின் ஆட்சியில், மிசாவின் பெயர் ‘தடா’ என்று மாறியது. மனித உரிமைகளைத் துச்சமாகக் கருதும் இதுபோன்ற முறை-கேடான சட்டங்கள் முறைகேடாகத்தான் பயன்படுத்தப்படும். அதற்கு நானே வாழும் சாட்சி.
ஒரு கண்டனக் கூட்டம் நடத்த முயற்சிக்-கும்போது, முன்னெச்ச-ரிக்கை நடவடிக்கையாக ஒரு வார காலம் சிறையில் அடைக்கப்-பட்டேன். பின்னர் வெளியில் வந்தபோது, உளவுத் துறை என்னை தடா சட்டத்தில் கைது செய்தது. ஒரு குறிப்பிட்ட தேதியில் நான் ரகசியக் கூட்டம் நடத்தி இளைஞர்களை குண்டு வைக்கத் தூண்டியதாக, என் மீது போலீஸார் குற்றம் சுமத்தினர். அந்தத் தேதியில் நான் அதே போலீஸாரால் முன்னெச்ச-ரிக்கை எனும் பெயரில் கைது செய்யப்பட்டு ஏற்கெனவே சென்னைச் சிறையில் அடைக்கப்பட்டி-ருந்-தேன். இதை நீதிமன்றத்தில் நான் நிரூபித்த-போது, தடா சட்டமே தலைகுனிந்து நின்றது. தடாவுக்கு எதிர்ப்பு வந்தபோது பி.ஜே.பி. அரசு அதற்கு ‘பொடா’ என்று பெயர் மாற்றியது.
‘தேச விரோத சக்திகளை ஒடுக்கு-வதற்காகவே இச்-சட்டம் கொண்டு வரப்படு-கிறது. இதை எதிர்ப்பவர்கள் தேச பக்தர்கள் அல்லர். இந்தச் சட்டத்தை எதிர்ப்பவர்கள் பயங்கர-வாதிகளுக்கு மட்டுமல்ல, பாகிஸ்தானுக்-கும் உதவுகிறார்கள்’ என பொடா சட்டத்தை இயற்றும்-போது, நாடாளு-மன்றத்தில் தெரிவித்தது அரசு. மக்களால் தேர்ந்தெடுக்-கப்பட்ட ஓர் அரசு, தன் நட-வடிக்கை-களை மக்கள் விமர்-சிக்கவே கூடாது என்று நாடாளு-மன்றத்திலேயே அறிவித்தது சர்வாதி-கார நாடு-களில்கூட நடக்காத விஷயம்.
பொடா சட்டம் மனித உரி மைக்கு எதிரானது என்று சொன்னாலே, அப்படிச் சொன்ன வர்-கள் பயங்கரவாதிகளாக சித்திரிக்கப்-பட்டனர். ஒரே நேரத்தில் கருவில் இருக்கும் இரண்டு சிசுக்-களைக் கொல்-வதைப்போல இருந்தது அரசின் அறிவிப்பு. ‘மக்களுக்குக் கருத்து சுதந்திரம் அறவே கிடையாது. அதை ஒடுக்க நாங்கள் சட்டம் இயற்றினால் அந்தச் சட்டத்தை எதிர்க்கிற உரிமை-கூட இல்லை’ என்று பகிரங்கமாகவே சொன்னது அதிகார-வர்க்கம்.
கருத்து சுதந்திரத்துக்கு எதிராகவே பொதுவாக எல்லா அரசுகளும் இருக்கின்றன. இதில் காங்கிரஸ், பி.ஜே.பி, தி.மு.க, அ.தி.மு.க. என்கிற எந்த பேதமும் இல்லை. 1997&ம் ஆண்டு மதுரையில் நடை-பெற இருந்த தமிழர் எச்ச-ரிக்கை மாநாட்டுக்கு தி.மு.க. அரசு தடை- விதித்தது. அதை எதிர்த்-துத் தொடுத்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் கருத்-துரிமைக்கு ஆதர-வான வரலாற்று -முக்கியத்-துவம் வாய்ந்த தீர்ப்பைத் தந்தது. ‘அரசியல் சட்டத்-தில் 19&வது பிரிவு மக்க-ளுக்கு வழங்கியிருக்கிற உரிமைகள் மிக முக்கிய-மானவையாகும். இதை மீறவோ கட்டுப்படுத்-தவோ அரசுக்கோ, அதன் அதிகாரி-களுக்கோ உரிமை- இல்லை. சுதந்திரமாகக் கருத்துக்களை வெளியிடுவதும், விவாதிப்பதும் ஊக்கப்படுத்தப்பட -வேண்டும். அப்போதுதான் ஜன-நாயகம் வலிமையுடனும் உண்மை-யுடனும், உயிருடனும் இருக்கும்’ என்று நீதிமன்றம் கடுமையாக அரசைக் கண்டித்தது. நல்ல தீர்ப்பு-கள் நம் நாட்டில் எப்போது நடை-முறைக்கு வந்திருக்கின்றன?
அரசே இப்படி வன்முறையைச் சட்டத்-தின் பாதுகாப்போடு நிகழ்த்-தும்போது அரசின் அடிவருடிகள் எப்படி இருப்பார்-கள்? மாற்றுக் கருத்தை எதிர்கொள்ளாமல் கருத்து சொல்பவர்களை உருட்டுக் கட்டைகள் மூலம் எதிர்கொள்ளும் கலா-சாரம் நம்மிடம் வேகமாக பரவிக்கொண்டே இருக்கிறது. கண்ணியம் இன்று நம் தலைவர்-களிடம் அருகி வருகிறது. அது அப்படியே மக்களிடமும் தொற்று வியாதி-யைப் போலத் தொற்றிக்கொள்கிறது.
நீதிமன்றம் தன் தலைவருக்கு எதிரான ஒரு தீர்ப்பைத் தந்தால், அப்பாவி மாணவி-கள் மூன்று பேரை எரித்துக் கொல்-கிறார்கள் கட்சித் தொண்டர்கள். தங்கள் தலைவரை ஒரு பத்திரிகை விமர்சித்து விட்டால், அந்தப் பத்திரிகை அலுவலகத் துக்குள் குண்டாந்தடியோடு புகுந்து தங்கள் விசு-வாசத்தைக் காட்டுகிறார்கள் தொண்டர்கள். கருத்துரிமைக்கு எதிரான மனிதத்தன்மையற்ற செயலைக் கண்டிக்க வேண்டிய தகவல் தொடர்பு ஊடகங்கள் அணி சேர்ந்துகொண்டு மௌனம் காப்பது இன்னும் கொடுமை. உரிமைகளைக் காக்க வேண்டிய-வர்கள் மௌனம் காக்க நேர்ந்தால், கருத்-துரிமை மட்டுமல்ல, ஒட்டுமொத்த வாழ்-வுரிமையுமே கேள்விக்குள்ளாக்கப்படும்.
சிந்திப்பதும், அதை வெளிப்படுத்துவதும் நாமெல்லாம் மனிதர்கள் என்பதன் அடையாளம். சிந்திப்பதை வெளிப்படுத்தும் உரிமை மறுக்கப்பட்டால், கொஞ்ச காலத்தில் சிந்திப்பதே மறந்துவிடும். சிந்திப்பதையே மறந்துவரும் ஒரு தலைமுறை நம் கண் முன்னால் உருவாகிக்கொண்டு இருக்கிறது.
சிந்திக்கக்கூட அனுமதிக்கப்படாதவர்களை அடிமைகள் என்று வரையறுக்கிறது வரலாறு!

இந்த வார விருந்தினர் பழ.நெடுமாறன். ஆனந்த விகடனில்

0 comments: