பேசிப் பேசி அலுத்துவிட்டது என்றாலும் இந்த சமூகத்தில் பெண்களின் நிலை என்பது அதிகம் மாறாத ஒன்றாகவே உள்ளது.
பெண் கல்வி, பெண்களின் முன்னேற்றம், விதவைத் திருமணம் போன்ற சில "புரட்சிகரமான" கருத்துகளை முன்வைப்பவர்கள் கூட ஆணும் பெண்ணும் சரி நிகர் என்பதை ஒப்புக்கொள்வதில்லை. சமூகக் கட்டுமானம், ஒழுக்கம், சமூகத்தின் சீரான இயக்கம் போன்றவற்றைக் காரணம் காட்டிப் பெண்ணை ஏதாவது ஒரு வகையில் அடக்கிவைப்பதிலேயே இவர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்.
இதற்கு விதிவிலக்கு என்று எந்த "முற்போக்கு" அமைப்பையும் நாம் சுட்டிக்காட்டிவிட முடியாது.இந்தச் சூழலில்தான் அண்மையில் நடந்த சில சம்பவங்கள் பெண் எதிர்ப்பின் புரையோடிப்போன தன்மையை நமக்குத் தெளிவாகப் புரியவைக்கிறது.
முதல் சம்பவம் சில ஊடகங்களில் கொஞ்சம் சலசலப்பை உண்டாக்கியது. மதுரை அருகே உள்ள அரசு மகளிர் விடுதி ஒன்றில், அங்கு தங்கியிருக்கும் பெண்கள் தங்கள் மாதவிடாய் அட்டவணையை வார்டனிடம் தந்துவிட வேண்டும். அதன் பிறகு மாதாமாதம் அது பற்றி அவரிடம் update செய்ய வேண்டும். இது படிக்கும் பெண்களின் கற்பையும் கன்னித் தன்மையையும் காப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்றார் பெண் ஒழுக்கத்தின் பாதுகாவலரான வார்டன்.
அடுத்த சம்பவம், சுனாமிக்குப் பிறகு தனது கல்யாண வயது வராத மகளை அரசு தரும் நஷ்ட ஈட்டுக்காகத் திருமணம் செய்து வைத்த தாயையும் அந்தக் குழந்தையைத் திருமணம் செய்துகொண்ட ஆணுக்கும் நீதிமன்றம் தண்டனை வழங்கியது.
தாய்க்கு இரண்டு நாளும் கணவனுக்கு 27 நாட்களும் சிறை என்று மிகக் கடுமையான தண்டனையை நீதிமன்றம் விதித்திருக்கிறது. இந்தியச் சட்டப்படி 18 வயதிற்கு உட்பட்ட பெண்ணுடனோ ஆணுடனோ உடலுறவு வைத்துக்கொண்டால் அது பாலியல் பலாத்காரமாக பாவிக்கப்பட்டு அதற்கு ஏற்ற தண்டனை வழங்கப்பட வேண்டும். அப்படி இருக்கையில், நீதிமன்றம் எப்படி அதிகபட்சத் தண்டனையாக 27 நாட்களை அவர்களுக்கு வழங்க முடியும்? திருமணம் என்ற புனித பந்தம் சட்டத்தின் தராசைத் தன் பக்கத்திற்கு வளைத்துவிட்டதா?
பெண்களை இழிவுபடுத்துவதை சமூக ஒழுக்கமாக மாற்றும் போக்கு, அடுத்து பெண்கள் என்று வரும்போது சட்டம் காட்டும் மெத்தனப் போக்கு. நீதி அரசர்களின் ஆணிய அதிகாரத்தை நிலைநிறுத்தும் தீர்ப்புகளும் அதற்கு அவர்கள் பயன்படுத்தியுள்ள வசனங்களும் உண்மையான நாகரீக உலகத்தை மிரட்டிவிடக் கூடிய வல்லமை பொருந்தியவை.
இப்போது ஊடகங்களைப் பரபரப்புக்கும் பரவசத்திற்கும் உள்ளாக்கிக்கொண்டிருக்கும் இன்னொரு நடிகை ஜெயமாலா. இவரை இப்போது செய்திகளில் அடிபட வைத்த பெருமை, அரசியல் மாற்றங்களால் சற்று தொழில் நலிவடைந்த ஒரு மலையாள ஆரூடக்காரரையே சேரும். அந்த நடிகை 20 ஆண்டுகளுக்கு முன்னால் தற்செயலாக சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் நுழைந்து ஆண்டவன் சிலையைத் தொட்டதாக இப்போது தெரிவித்திருக்கிறார். அதாவது ஜோசியர் தன் மூன்றாவது கண்ணால் பின்னோக்கிக் கணித்துக் கூறிய பிறகு.
கோவில் என்பது யாரும் இல்லாத வெறிச்சோடிய இடமா? அலுவலர்கள், காவல்காரர்கள், பூசாரிகள், இவர்களை மீறி அந்தப் பெண் எப்படிக் கோவிலுக்குள் நுழைய முடிந்தது? இந்தச் "சதியில்" அவர்களின் பங்கு என்ன என்ற கேள்விகள் ஏன் எழவே இல்லை?
அடுத்து இந்தப் பெண் தொட்டதால் ஏற்பட்ட தீட்டைக் கழிக்க இப்போது ஆலோசனை மும்முமாக நடக்கிறது. அவர் வந்தது தவறு என்று ஐயப்பன் எந்த வகையிலும் ஆட்சேபம் தெரிவித்ததாகத் தெரியவில்லையே.
இப்போது அந்தப் பெண்மீது கிரிமினல் வழக்கு தொடுக்கப்போவதாகக் கோவில் நிர்வாகம் யோசிப்பதாக தெரிகிறது.
கோவிலுக்குள் நுழைபவர்களை ஜாதி அடிப்படையில் தடுத்து நிறுத்தக் கூடாது என்று கூறும் சட்டம், தனது ஜனத் தொகையில் சரிபாதியாக இருக்கும் பெண்கள் தடுத்து நிறுத்தப்படுவதை எதிர்த்து என்ன செய்யப்போகிறது?
இதை மரபு, ஐதீகம் போன்ற வார்த்தைகளால் நியாயப்படுத்த முயலலாம். ஆனால் மதம் தோன்றிய நாள் முதல் தன்னை மாற்றிக்கொண்டும் பல மரபுகளையும் ஐதீகங்களையும் விட்டுக்கொடுத்துக்கொண்டும்தான் இருக்கிறது.
இதே ஐயப்பன் கோவிலுக்கு ஆண்கள் 45 நாள் கடுமையான விரதம் இருந்து சென்ற நாட்கள் எல்லாம் கழிந்துபோய், இப்போது மூன்று அல்லது போகும் வழி விரதம் என்று விதிகளைத் தளர்த்திக்கொள்ளத் தயாராக உள்ளது நிர்வாகம்.
இந்த நூற்றாண்டில் இப்படிப்பட்ட ஜனநாயகமற்ற பாரபட்சங்களை நாம் பொறுத்துக்கொண்டால் இது மிகவும் கீழ்த்தரமான முன்னுதாரணமாக மாறிவிடும்.
தமிழகத்தில் அனைத்துச் சாதியினரும் பூசாரி ஆகலாம் என்ற சட்டம் வந்திருக்கிறது. அரசு அதில் பெண்களையும் இணைத்துக்கொள்ள வேண்டும். இந்தச் சட்டம் இந்து மதத்தோடு நின்றுவிடக் கூடாது, எல்லா மதங்களுக்கும் பொருந்த வேண்டும். மதத் தலைவர்களாகவும் போதகர்களாகவும் பூசாரிகளாகவும் மத நிறுவனங்களை முன்னின்று நடத்துபவர்களாகவும் பெண்களை மதங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். அது வரை அவை உண்மையான அன்பையும் சமத்துவத்தையும் போதிக்க முடியாது.


நன்றி- கனிமொழி-தோழி.காம்

3 comments:

கோவி.கண்ணன் said...

//"ஆணியப் பழமைவாதிகளுக்குக் கூடுதல் ஆயுதம்: மாதவிடாய்" //

இது பற்றி ஒரு சுட்டி :

http://govikannan.blogspot.com/2006/07/blog-post_115250286185125422.html

Unknown said...

தங்களின் வருகைக்கும் வலி சொல்லும் அந்த சுட்டிக்கும் நன்றி
கோவி.கண்ணன்....

aathirai said...

//தமிழகத்தில் அனைத்துச் சாதியினரும் பூசாரி ஆகலாம் என்ற சட்டம் வந்திருக்கிறது. அரசு அதில் பெண்களையும் இணைத்துக்கொள்ள வேண்டும். //

கருணாநிதி இந்த விஷயத்தில் பாதி கிணறு தாண்டி நிறுத்திவிட்டது
அனியாயம்