வணக்கம் அய்யா !

அது ஒரு வித்தியாசமான பள்ளிக்கூடம்... இருபது வயதிலிருந்து எழுபது வயது வரையுள்ள அரசியல்வாதிகள்தான் மாணவர்கள்... வாத்தியார் மருத்துவர் ராமதாஸ்!

பாட்டாளி மக்கள் கட்சியின் அரசியல் பயிலரங்கில்தான் இந்தக் காட்சி! ‘‘மணி, எல்லோரும் வந்துட்டாங்களா?” & கைக் கடிகாரத்தைப் பார்த்தபடியே வகுப்பறைக்குள் ராமதாஸ் நுழைய, அனைவரும் எழுந்து, ‘‘வணக்கம் அய்யா’’ என்கிறார்கள் மரியாதையாக.
வாசலில் ‘‘அய்யா’’ என்ற குரல். அது, பண்ருட்டி தொகுதி எம்.எல்.ஏ. வேல்முருகன். ‘‘ஒரு அலுவலா வெளியில போனேன்... தாமதமாயிடுச்சுங்கய்யா!’’ என்று தயங்கிச் சொல்ல, ‘‘உங்க தேர்வுத் தாளைக் காட்டுங்க’’ என்று கேட்டு வாங்கிப் பார்த்துவிட்டு, ‘‘மதிப்பெண்கள் நல்லாதான் வாங்கியிருக்கீங்க. ஆனா, வகுப்புக்கு ஒழுங்கா நேரத்துக்கு வர்றதுதானே முக்கியம்!’’ என்கிறார் ராமதாஸ், கண்டிப்பான குரலில்!

பின்னர், பல்வேறு சமூக அறிஞர்களும் அரசியல் வகுப்புகளை நடத்துகிறார்கள். ஒவ்வொரு வகுப்பு முடிந்த பிறகும் நடந்த வகுப்பிலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டு, தேர்வுகள் நடைபெறுகின்றன. கண்டிப்பான ராணுவப் பள்ளி போல ராமதாஸின் நேரடிப் பார்வையில் நடைபெறுகிறது பாட்டாளி மக்கள் கட்சியின் இந்தப் பள்ளி.
‘‘உழுபவனுக்கு காணி நிலம் இருந்தால் மட்டும் போதாது. விதை நெல்லைப் பக்குவப்படுத்தவும் மண்ணை வளமாக்கவும் தெரிந்திருக்க வேண்டும். அதற்கு அவன் பயிற்சி பெற வேண்டும். அதுபோலதான் எல்லாத் தொழிலுக்கும். அரசுப் பணி, தனியார் பணியாக இருந்தாலும் சிறிய பொறுப்புகளில் இருந்து பெரிய பதவிகள் வரை ஒரு பயிற்சி தேவைப்படுகிறது. ஆனால், அரசியல்வாதிக்கு மட்டும் எந்தவிதமான பயிற்சியும் தேவையில்லை; அப்படியே கிளம்பி வந்து கட்சியில் சேர்ந்துவிடலாம். கையில் பணமும் செல்வாக்கும் இருந்தால் பதவிகளிலும் அமர்ந்துவிட முடியும். கொஞ்ச நாள் இருந்துவிட்டு சரிவரவில்லை என்றால், வேறு கட்சிகளுக்கு மாறிவிடலாம். அப்படியே அனைத்துக் கட்சிகளுக்கும் ஒரு சுற்று போய்விட்டு, மீண்டும் தாய்க் கழகத்துக்கே வந்துவிடலாம். அப்போது, தாயுள்ளத்தோடு ஏற்றுக்கொள்ள தாய்க் கழகமும் தயாராக இருக்கிறது. இப்படியான சீரழிவுகள் பாட்டாளி மக்கள் கட்சியில் இருக்கக் கூடாது. இது வித்தியாசமான ஒரு இயக்கம் என்பதைக் காண்பிக்கவே இந்த அரசியல் பயிலரங்கை நடத்துகிறோம்.
அரசியலில் சீரழிவுகள் என்று 20 விஷயங்களைப் பட்டியலிட்டு, அதைப் பற்றிய விழிப்பு உணர்வை எங்களது உறுப்பினர்களுக்குக் கொடுக்கிறோம். அடிப்படை உறுப்பினர்கள் மட்டும் இல்லாமல் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப் பினர்களும் கட்டாயம் இந்தப் பயிற்சியில் பங்கு பெற வேண்டும். மற்றவர்களுக்கு முன் மாதிரியாக இருப்ப வர்கள் இவர்கள்தான். இவர்களி லிருந்துதான் அடுத்தடுத்து தலைவர்கள் உருவாகப் போகிறார்கள். சாதாரணத் தொண்டர்கள் தவறு செய்தால் கொடுக்கப்படும் தண்டனையைவிட சட்டமன்ற, நாடாளு மன்ற உறுப்பினர்கள் தவறு செய்யும் போது தண்டனை அதிகம்’’ என்கிறார் ராமதாஸ், கடுமையான வாத்தியாராக!

‘‘சமூக நீதிப் போராட்ட வரலாறு, இடஒதுக்கீடு, அதனுடைய பலன்கள் மற்றும் இட ஒதுக்கீட்டின் மீதான உரிமையை எதிர்காலத்தில் எப்படிப் பாதுகாப்பது என்பதெல் லாம் பற்றி வகுப்புகள் நடத்து கிறோம். இன்றைய தலைமுறை அனுபவிக்கிற சில உரிமைகளும் சலுகைகளும் சும்மா கிடைத்த தில்லை. அதற்காகப் பெரியார், அம்பேத்கர் போன்றோர் எவ்வளவு போராடியிருக்கிறார்கள் என்பதை எதிர்கால சந்ததிக்கு நினைவுபடுத்த வேண்டிய வரலாற்றுக் கடமை நமக்கு இருக்கிறது. அது போல சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப் பினர்களுக்கு நிதிநிலை அறிக்கை பற்றிய பயிற்சிகளும் உண்டு. யோகா, தியானம் என்று உடற் பயிற்சிகளும் கொடுக்கப்படுகின்றன. இந்தியா வில் வேறு எந்தக் கட்சியும் இம்மாதிரி அரசியல் பயிலரங்கை நடத்தியதில்லை.
20 வயதில் என்னிடம் வந்து சேருகிற இளைஞனை

50ஆண்டுகளுக்கு மக்கள் பணி செய்யத் தயார்படுத்துகிறேன். அதற்கான அறிவை அவர்களுக் குப் புகட்டும் வேலையில்தான் இப்போது இறங்கியிருக்கிறேன். நானும் பல நேரங்களில் ஒரு மாணவனாகக் கலந்துகொண்டு பல விஷயங்களைக் கற்றுக்கொள் கிறேன். அவ்வளவு உபயோகமான வகுப்புகள்’’ என்கிறார் ராமதாஸ்.
மதியம் உணவு இடைவேளை முடிந்ததும், முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி மணி யடிக்க, ‘‘வகுப்புக்கு நேரமாச்சு, புறப்படுகிறேன்’’ என்றபடி கிளம்பிப் போகிறார் மருத்துவர் ராமதாஸ்!


நன்றி. விகடன்.காம்

2 comments:

bala said...

மகேந்திரன் அய்யா,

//கண்டிப்பான ராணுவப் பள்ளி போல ராமதாஸின் நேரடிப் பார்வையில் நடைபெறுகிறது பாட்டாளி மக்கள் கட்சியின் இந்தப் பள்ளி//

பா. ம. க, எம்.எல்.ஏ க்கள் பங்க் குமார் போன்ற ஒழுக்க சீலர்கள். அய்யா சொல்லிக்கொடுக்கிற மாதிரி நடந்து அய்யாவுக்கு பெருமை தேடி தருகிறார்கள்.நல்ல வாத்தியார். நல்ல மாணவர்கள்.குமாரய்யா நமது எம்.எல்.ஏ ஆகாமல் போனது நமது துரதிர்ஷ்டமே.பங்க் குமார் போனதுக்கப்புறம், மருத்துவர் அய்யாவுக்கு மிகவும் பிரியமான மாணவர் யார் என்பதை அறிய ஆவாலாக இருக்கிறது.

பாலா

குழலி / Kuzhali said...

இதைப்பற்றி லபக்குதாசுவும் ராமதாஸ் வாத்தியார் என்று ஒரு பதிவு போட்டிருந்தார், ஏதேனும் மருத்துவரை திட்டிப்போட்டிருந்தார் என்றால் குவிந்திருப்பார்கள் ஆனால் என்ன செய்ய ஒரு பின்னூட்டம் கூட இல்லை... அப்புறம் நீங்கள் வன்னியர் என்பதால் தான் இந்த பதிவை போட்டீர்கள் என்பார்கள், எதற்கும் விகடனின் சாதிச்சான்றிதழும் லபக்கு தாசின் சாதிச்சான்றிதழையும் சரிபார்த்துக்கொள்ளவும்