நாத்திகனாவதற்குக் கடவுள் இல்லை என்று கூடச் சொல்ல வேண்டியதில்லை. மதக் கொள்கையைப் பற்றி ஆராய்ச்சி செய்து பேசினாலே போதுமானதாக இருக்கிறது. ஜாதிகள் கடவுளால் உண்டாக்கப்பட்டதாக கடவுளே சொன்னார் என்று மத சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. அந்த மத சாஸ்திரங்கள் வேதமாகவும், வேதம் போன்றதாகவும் கருதப்படுகின்றன.

உதாரணமாக, பகவத் கீதை என்பது, இந்துக்கள் என்பவர்களுக்கு மிகப் புனிதமானதும், மேலானதுமான புத்தகம் என்று பெயர். முகம்மதியர்கள் குரானை மதிப்பதைவிட, கிறித்துவர்கள் பைபிளை மதிப்பதைவிட, கீதையை அதிக பக்தியாய் அநேக இந்துக்கள் மதிக்கிறார்கள். நான்கு ஜாதிகளும், நான்கு பிரிவான ஜாதி பெயர்களும், அதற்குத் தனித்தனி வேலைக் கிரமங்களும் சொல்லப்பட்டிருக்கிறது. கீதை என்றாலே ‘பகவான் வாக்கு' என்று அர்த்தம். ஜாதி ஒழிய வேண்டும் என்று பேசுகிறவர்களில்கூட, 100க்கு 99 பேர்கள் கீதையை பகவான் வாக்கு என்று நம்பிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

ஜாதி வித்தியாசம், உயர்வு - தாழ்வு ஆகியவற்றைப் பற்றிக் கண்ணீர் விட்ட காந்தியார்கூட, கீதைக்குத் தன்னை ஆட்படுத்திக் கொண்டிருப்பதாகச் சொல்லியிருக்கிறார்!இந்நிலையில் இப்படிப்பட்ட மக்களால் ஜாதிப் பிரிவுகளுக்கு உள்ள மேல், கீழ் நிலைகளை எப்படி ஒழிக்க முடியும்? கீதை முறை தவறு என்றோ, கீதை கடவுள் சொன்னது அல்ல என்றோ, அப்படித்தான் கடவுளே சொல்லி இருந்தாலும் அவற்றைப் பற்றி கவலை இல்லை என்றோ சொல்லத் துணியாவிட்டால் சொல்ல தைரியமில்லாத மக்கள் யாவரையும் அந்தப்படி சொல்லத் தயார் செய்யாவிட்டால், ஜாதிப் பிரிவு, ஜாதி வித்தியாசம் ஆகியவை எப்படி ஒழியும்?

ஆகவே, இந்தப்படி சொல்லும்படியான ஒருவன் - கீதையையும், கிருஷ்ணனையும் நம்பும் மக்களால் நாத்திகன் என்று சொல்லப்படாமல் இருக்க முடியாது.ஆதலால், நாத்திகனாகவோ, நாத்திகனாவதற்குத் தயாராகவோ, நாத்திகன் என்று அழைக்கப்படுவதற்குக் கலங்காதவனாகவோ இருந்தால் ஒழிய, ஒருவன் சமதர்மம் பேச முடியவே முடியாது. இதுமாத்திரமல்லாமல், சர்வமும் கடவுள் செயல் என்றும், மனித சமூகத்தில் பிறவி மூலமாகவும், வாழ்வு மூலமாகவும் இன்று இருந்து வரும் பிரிவுக்கும், பேதத்துக்கும், உயர்வு - தாழ்வுக்கும் கடவுளே பொறுப்பாளி என்றும், கடவுள் சித்தத்தினால்தான் அவற்றில் ஒரு சிறு மாற்றமும் செய்ய முடியும் என்றும் சொல்லப்படுமானால் - அதை நம்பாமல் இருப்பது நாத்திகமானாலும் கண்டிப்பாக ஒவ்வொரு மனிதனும் நாத்திகனாகத்தான் வேண்டும்.

ஏனெனில், செல்வவான்களிடம் இருக்கும் செல்வமும், பார்ப்பான் பாராட்டிக் கொள்ளும் உயர்ந்த ஜாதித் தத்துவமும், கடவுள் கொடுத்தது என்றும், கடவுள் சித்தத்தால் ஏற்பட்டது என்றும் சொல்லப்படுமானால், அந்தக் கடவுளை யார் தான் ஏற்றுக் கொள்ள முடியும்? அதை யார் தான் நிலைத்திருக்க விட்டுக் கொண்டிருக்க முடியும்? எந்த மாதிரியான மூடக் கடவுளும், எந்த மாதிரியான அயோக்கியக் கடவுளும் மனிதரில் ஒருவரை மேல் ஜாதியாக்கிப் பாடுபடாத ஊரார் உழைப்பில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் படிக்கும், மற்றொருவனைக் கீழ் ஜாதியாக்கிப் பாடுபட்டுச் சோம்பேறிகளுக்கு அழுதுவிட்டு, பட்டினியாய், நோயாய், கட்டக் கந்தை அற்று இருக்கவும் இடமற்றுத் திரியும்படியும் சொல்லி இருக்கவே இருக்காது.

ஊரார் உழைப்பைக் கொள்ளை கொள்ளாமல் எவனும் பணக்காரனாக முடியாது. நாட்டுக் கோட்டையார்களில் 10 லட்சம், 20 லட்சம், கோடிக்கணக்கான ரூபாய் சொத்துள்ளவர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கு இந்தப் பணம் ஏது? இவர்கள் படும்பாட்டிற்கும் இவர்கள் அனுசரிக்கும் முறைக்கும், இவர்கள் நடந்து கொள்ளும் மாதிரிக்கும் எந்தக் கடவுளாவது இவ்வளவு பணம் கொடுத்திருக்க முடியுமா? ஏதோ இதெல்லாம் அவரவர் பிரயத்தனத் தினால், தொழில் முறையினால், மனவலிமையினால், சம்பவங்களால் ஏற்பட்டது என்று சொல்லாமல் வேறு என்ன பொருள் சொல்ல முடியும்?இவ்வளவு பணம் இவர்களுக்குச் சேருவதற்கு ஆதாரமாய் இருந்த முறையை யார் தான் சரியான முறை என்று சொல்லிக் கொள்ள முடியும்? இவ்வளவு பணம் இவர்களுக்குக் கொடுத்தவர்களில் பெரும்பான்மை மக்கள் இன்று இருக்கும் நிலையை யார் தான் நல்ல நிலை என்று சொல்ல முடியும்? இதை எல்லாம் மாற்ற வேண்டும் என்று சொல்லும்போது கடவுளையும், மதக் கொள்கைகளையும் கொண்டு வந்து குறுக்கே போட்டால் - அக்கடவுளையும், மதத்தையும் ஒழிக்காமல் எப்படி இருக்க முடியும்?

மற்றும் கடன்பட்டு வட்டிக் கொடுத்த மக்களுடையவும், பாடுபட்டுப் பயனைக் கொடுத்த மக்களுடையவும், மனமும், வயிறும், வாயும் பற்றி எரிய எரிய, அந்தப் பணங்களைக் கோவில் கட்ட, வாகனம் செய்ய, சாமிக்குக் கிரீடம் செய்ய, கல்யாணம் செய்ய, தாசி வீட்டுக்குப் போக, தாசிகளை வைத்து உற்சவம், வாண வேடிக்கை செய்யப் பாழ்பண்ணப்படுமானால் யார் தான் சகித்துக் கொண்டிருக்க முடியும்? இந்த அக்கிரமங்களைப் பார்த்துக் கொண்டு எந்தக் கடவுள்தான் இருக்க முடியும்?
-பெரியார்

3 comments:

கோவி.கண்ணன் said...

//நாத்திகன் என்று அழைக்கப்படுவதற்குக் கலங்காதவனாகவோ இருந்தால் ஒழிய, ஒருவன் சமதர்மம் பேச முடியவே முடியாது.//

தூள் !

கார்மேகராஜா said...

///ஏனெனில், செல்வவான்களிடம் இருக்கும் செல்வமும், பார்ப்பான் பாராட்டிக் கொள்ளும் உயர்ந்த ஜாதித் தத்துவமும், கடவுள் கொடுத்தது என்றும், கடவுள் சித்தத்தால் ஏற்பட்டது என்றும் சொல்லப்படுமானால், அந்தக் கடவுளை யார் தான் ஏற்றுக் கொள்ள முடியும்? ///

இது போன்ற கேள்விகள் கேட்டால், அவரவர் முற்பிறவியின் பயன் என்று ஒரு பதில் சொல்கிறார்கள்!

Anonymous said...

அய்யா மகேந்திரன்: ஒரு சிறு விளக்கம். ஆஸ்திகன் - என்பதன் அர்த்தம் இது தான். அஸ்தி என்றால் 'உண்டு' என்று நம்புகிறவன். ந+அஸ்தி என்றால் 'உண்டு' என்பதை நம்பாதவன். ஏதோ ஒன்று உண்டு என்று நம்புகிறவன் 'ஆஸ்திகன்'. நம்பாதவன் நாஸ்திகன். நீங்கள் பெரியார் கொள்கைகள் பால் ஈர்க்கப்பட்டு அதை நம்புகிறீர்கள். ஆகவே நீங்களும் ஆஸ்திகன் தான். கீதை சொல்லியிருக்கும் கடவுளையும், மதத்தையும் ஒழிக்க நினைக்கும் நீங்கள், பெரியார் எனும் கடவுளையும், அவர் சொன்ன கருத்துக்களை கீதை என்றும் நம்புகிறீர்கள். அவ்வளவே. உங்களிடமுள்ள ஆக்க சக்தியை ஆக்குவதற்கு பயன்படுத்துங்கள். அழிய வேண்டியவை தாங்களாகவே அழியும். 'ஒழிக' கலாசாரத்தால் ஒழியப் போவது நம்மை சுற்றியுள்ள எஞ்சியுள்ள நல்ல உள்ளங்கள் தான். உடம்பில் உள்ள அழுக்கை ஒழிக்கவே ஆயிரம் சோப்புக்கள் தேவைப்படும் நமக்கு, எல்லாம் வல்ல இறைவனை ஒழிக்க ஏதையா சக்தி? சற்றேனும் சிந்தியுங்கள் அய்யா!