சேது சமுத்திரத் திட்டம் 150 ஆண்டுகால கனவு. தமிழன் விழித்துக் கொண்டிருந்தாலே திட்டங்களை நிறைவேற்றப்படாத பாடு பட வேண்டும். கனவு கண்டு கொண்டிருந்தால் நிறைவேறுமா? அதுவும் 150 ஆண்டு கால கனவு. (சேது சமுத்திர திட்டம் சுற்றுச்சூழலில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் அது தொடர்பான விளக்கங்களையும் பிரிதொரு சந்தர்ப்பத்தில் காண்போம்.)

சேது சமுத்திரத் திட்டப் பணிகள் நடந்து கொண்டிருக்கிற நிலையில், ராமர் பாலத்தை இடிக்கக் கூடாது என வானர சேனைகளாக மாறியிருக்கிறார்கள் இந்துத்துவா அமைப்பினர். அந்த மணல் திட்டுகள் சாதாரணமானவையல்லவாம். ராமரால் பாதுகாக்க முடியாமல் போன சீதையை இலங்கைக்கு ராவணன் தூக்கிக் கொண்டு போனபோது, அவளை மீட்க வழி தெரியாமல் தவித்த ராமனுக்கு இன்ஜினியர் அனுமாரும் அவரது இனத்தைச் சேர்ந்த வானர சேனைகளும், அணில்குஞ்சும் சேர்ந்து கட்டிக் கொடுத்த பாலம் தான் அந்த மணல் திட்டுகளாம். அதனால், சேது சமுத்திரத் திட்டத்திற்காக ராமர் பாலத்தை அகற்றக் கூடாது என்பது தான் இந்துத்துவா அமைப்பினரின் வாதம்.

வடக்கிலேயே மார்க்கெட் போய்விட்ட ராமர் லேபிளை தெற்கில் வந்து வியாபாரம் செய்யலாம் என இந்துத்துவா அமைப்பினரும் அவர்களது அரசியல் கட்சியான பா.ஜ.கவும், சாதுக்கள் என்ற பெயர்கொண்ட ஆன்மீக அடவாடி (ஆ)சாமிகளும் கௌபீனத்தை (அட கோவணம் தாங்க) வரிந்து கட்டிக் கொண்டு களமிறங்கியிருக்கிறார்கள். இந்த ராமர் மார்க் இந்துத்துவாவிற்கு அமெரிக்காவின் நாசா அமைப்பிடமிருந்து ‘ஐஏஎஸ்ஓ 9001’ சான்றிதழ் வாங்கப் பார்த்தார்கள். நாசா எடுத்த செயற்கைக் கோள் படத்திலேயே அது பல லட்சம் வருடங்களுக்கு முன்பு ராமர் கட்டிய பாலம் தான் என்பது உறுதியாகிவிட்டது என இணையதளத்தில் புளுகு மூட்டைகளை அவிழ்த்து விட்டார்கள்.

நாசமாய்ப் போக... நாசா அப்படியா சொல்லியிருக்கிறது? என அதன் அறிக்கைகளை கடலுக்கடியில் தொடர்ச்சியான மணல் திட்டு இருக்கிறது என்று தான் சொல்லியிருந்தது. இந்துத்துவாவின் இணையதள விற்பன்னர்கள் தான் அதற்கு ராமர் லேபிளை ஒட்டி விற்பனைக்கு விட்டிருக்கிறார்கள் என்பது தெரிய வந்தது. கடைசியில் நாசாவே ஒரு விளக்கமான அறிக்கையும் கொடுத்து விட்டது. அந்த மணல் திட்டு என்பது மனித முயற்சியில் உருவானதில்லை. (அதாவது நாசா விஞ்ஞானிகளுக்கும் ராமர் அவதாரம் என்றோ, லட்சுமணன் அவரது தம்பி என்றோ, அனுமான் அவர்களது பக்தர் என்றோ தெரியாது. எல்லோருமே அவர்களுக்கு மனிதர்கள் தான். அந்த மனிதர்களால் உருவாகவில்லை) இயற்கையாக உருவான மணல் திட்டுகள் என அறிவித்து விட்டனர்.

நாசாவின் ஐ.எஸ்.ஓ சான்றிதழை வைத்து ராமர் மார்க் இந்துத்துவாவை வியாபாரம் செய்து விடலாம் என எதிர்பார்த்தவர்கள் ஏமாந்து போனார்கள். அதன் பிறகு தான், ராமர் பாலத்தை மீட்போம் என மகாயாகம், உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் என கோவணத்தை வரிந்து கட்டத் தொடங்கிவிட்டனர். ராமர் பாலத்தைக் காப்பதற்காக பல 100 பேர் உயிர்த்தியாகம் செய்ய முன் வந்திருக்கிறார்கள் என்றார் இந்து முன்னணி ராம கோபாலன். பா.ஜ.கவிலிருந்து பிரிந்து சென்ற உமாபாரதியோ திடுமென தமிழகத்திற்கு வந்து, ‘பாலத்தைக் காப்பாற்றியே தீருவேன். முடிந்தால் கைது செய்து பார் என்றார்.

விஸ்வ இந்து பரிஷத்தின் தொகாகடியா, பாலத்தை காக்கச் சொல்லி ஒரு கோடி பேர் கடிதம் எழுதுவோம். நாடு முழுவதும் சாலை மறியல் செய்வோம் என ஆவேசத்தைக் கிளப்பினார். 1 கோடி 3 கோடி 100 கோடி என அவர்கள் பேசினார்களே தவிர, அதனைத் தமிழகத்தில் தெருக் கோடிகளில் நின்று உலக அரசியலை அலசுபவர்கள் கூட கண்டுகொள்ளவில்லை. இதனால் ராமர் பாணியிலேயே விதவிதமான பானங்கள் ஏவத் தொடங்கி விட்டார்கள். ராமர் பாலம் அமைந்துள்ள மணல் திட்டுகளில் உலகிலேயே எங்கேயும் கிடைக்காத தோரியம் கனிமம் இருக்கிறது. ஒரு கிலோ ஒரு கோடி ரூபாய் வரை விலை போகிறது. 25 கிலோ மணல் எடுத்தால் ஒரு கிலோ தோரியம் கிடைக்கும் என்று சொல்லியிருக்கிறார் ராமர் சேது பாலம் பாதுகாப்பு குழுவின் தலைவர் டாக்டர் கல்யாணராமன்.

ரொம்ப நல்லதாகப் போய் விட்டது. சேதுக் கால்வாயைத் தோண்டும் கருவிகளைக் கொண்டு அந்த மணலை எடுத்து, கரைக்கு கொண்டு வந்து தோரியத்தைப் பிரித்தெடுக்கத் தொடங்கினால், கடலும், ஆழமாகும், தோரியமும் கிடைக்கும். அரசுக்கு வருமானமும் பெருகும். சேதுக் கால்வாய்த் திட்டச் செலவுகளைத் தோரியத்தால் ஈடு கட்டிவிடலாம். எனவே, சீதையை மீட்கப் போன ராமர், அந்த மணல் திட்டுகளில் தோரியத்தைப் புதைத்து விட்டுப் போயிருந்தால் அது நாட்டுக்கு இலாபம் தான்.

இந்துத்வா அமைப்பினரின் அடுத்த பானம், ராமர் பாலத்தை இடித்தால் ராமேஸ்வரத்தை சுனாமி தாக்கும் என்பது தான். விஞ்ஞானிகள் சொல்கிறார்கள் என துணை பானங்களையும் ஏவுகிறார்கள். 2004ல் தமிழகக் கடற்கரையை சுனாமி தாக்கிய போது ராமேஸ்வரம், திருச்செந்தூர் கடற்கரைகள் தப்பின. அதற்குக் காரணம், அவற்றிற்கு முன்உள்ள இலங்கைக் தீவு சுனாமியின் கோரத் தாக்குதலை எதிர் கொள்ள நேர்ந்ததால் ராமேஸ்வரம் தப்பியது. சேதுக் கால்வாய் பணிகள் நடைபெற்றாலும் இலங்கையை யாரும் எதுவும் செய்யப் போவதில்லை. அது அப்படியே தான் இருக்கும் என்பதால் ராமேஸ்வரத்திற்கு பெரிய ஆபத்து எதுவுமில்லை. ராமேஸ்வரம் அருகேயுள்ள மணல் திட்டுகள் கடலுக்குள் புதைந்திருக்கின்றன. இலங்கை என்கிற பெரிதான மணல் திட்டு, கடலுக்கு மேலே தீவாகக் காட்சியளிக்கின்றது. இது இயற்கையான அமைப்பேயன்றி பாலம், பைபாஸ் என்று எதுவும் கிடையாது.

இல்லாத பாலத்தைக் காப்பதற்காகத்தான் யாகம், ஆர்ப்பாட்டம் என வெற்று பானங்களை விட்டுக் கொண்டிருக்கிறார்கள் ராமர் மார்க் இந்துத்துவா அமைப்பினர். ஆகஸ்ட் 26ம் தேதி ராமேஸ்வரத்தில் நடந்த மகாயாகம், மகாநாடு இவற்றிற்காக பல மாநிலங்களிலிருந்தும் ராமர் பக்தர்களைக் கொண்டு வந்து குவித்தன இந்த அமைப்புகள் ஆந்திராவிலிருந்து வந்த இந்துத்துவா அமைப்பினர், டிக்கெட்டே வாங்காமல் வைகை எக்ஸ்பிரஸிலும், குருவாயூர் எக்ஸ்பிரஸிலும் உள்ள ரிசர்வ் பெட்டிகளில் ஏறி இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டனர். முறையாக முன் பதிவு செய்திருந்த பணிகளுக்கு இடமில்லை. இது குறித்து ரயில்வே போலீசாரிடம் புகார் தெரிவிக்கப்பட, அவர்கள் வந்து விசாரித்திருக்கிறார்கள். மறுத்திருக்கிறார்கள் அந்த ‘வித்அவுட்’ ராமர்கள். அப்புறம் போலீஸ் ‘கவனிக்க’த் தொடங்க ராமர் பாலத்தை அப்புறம் காப்போம். இப்போது நம்மைக் காப்பாற்றிக் கொள்வோம் என ஓடியிருக்கிறார்கள் இந்த ‘வித்அவுட்’ பேர்வழிகள்.

பல நூற்றாண்டுகளாக இருந்து வந்த பாபர் மசூதியை இடித்தவர்கள் தான், எந்த நூற்றாண்டிலும் கட்டப்படாத ராமர் பாலத்தை இடிக்க விடமாட்டோம் என்று குரல் கொடுக்கிற அதிசயக் காட்சியை காண முடிகிறது. ராமர், அணிலுடன் தனுஷ்கோடிக்கும், தலைமன்னாருக்கும் பாலம் கட்டிய ராமர், மண்டபத்திற்கும் ராமேஸ்வரத்திற்கும் ஒரு நல்ல பாலத்தைக் கட்டியிருக்கலாமே? வெள்ளைக் காரன் வந்து தானே இரண்டு ஊர்களுக்கும் நடுவே தண்டவாளத்தையும், திறந்து மூடும் வசதியுள்ள பாம்பன் பாலத்தையும் போட்டுவிட்டுப் போனான். ராமர் பாலம் கட்டாமல் விட்டதால், தான் பாம்பன் பஸ் பாலம் கட்டப்பட்டது.

தனுஷ் கோடியிலிருந்து தலைமன்னாருக்கு பாலம் போட்ட ராமர் அண்ட் கோ, மண்டபத்திலிருந்து ராமேஸ்வரத்திற்கு பாலம் போடாமல் எப்படிக் கடலை கடந்து சென்றது? அடுத்த மாநாட்டில் இந்துத்துவா அமைப்பினர் விளக்கட்டும். அதற்கு முன் மாநாட்டிற்கு வருபவர்கள் முறைப்படி ரயில்களில் டிக்கெட் வாங்கி வரட்டும்.

கோ.வி. லெனின்

4 comments:

aathirai said...

புஷ்பக நீர்மூழ்கியில் போயிருப்பார்கள்.

PPattian said...

//மறுத்திருக்கிறார்கள் அந்த ‘வித்அவுட்’ ராமர்கள். அப்புறம் போலீஸ் ‘கவனிக்க’த் தொடங்க ராமர் பாலத்தை அப்புறம் காப்போம். இப்போது நம்மைக் காப்பாற்றிக் கொள்வோம் என ஓடியிருக்கிறார்கள் இந்த ‘வித்அவுட்’ பேர்வழிகள்.//

:))))))))

கர்சேவா என்ற பெயரில் ரயிலில் எல்லாம் செங்கல் எடுத்துச் சென்ற காட்சிகள் ஞாபகம் வந்தது..

முகவைத்தமிழன் said...

பாம்பன் பாலத்த யார் கட்டியதா? ஆஹா..என்ன இப்படி கேட்டுட்டிய?

இங்கிலிஸ் காரன் எப்பய்யா கட்டுனான்? ராமர் கட்டியத மராமத்து செஞ்சு கப்பல் போறதுக்கு கேட்டு தானய்யா போட்டான்!! ராமர் ஏற்கனவே ரதத்த அதுல தானய்யா ஓட்டுனாரு!!

பக்கத்துல குரங்குகளான திராவிடர்கள் நடப்பதற்கு இருந்த நடைபாலத்த இந்திராகாந்தி பி.ஜே.பி கேட்டுக்கொண்டதற்கினங்க புதுப்பிச்சு ராஜிவ் காந்தி தறந்து வச்சாரு!!

"பொய் விஞ்ஞானிகளும் சங்பரிவாரத்தின் ராமர் பால கூச்சலும்"

http://tmpolitics.blogspot.com/2007/09/rss.html

என்ற கட்டுரையையும் கொஞ்சம் படிங்க மக்களா!!

Manuneedhi - தமிழன் said...

சேது சமுத்திரத் திட்டத்தை வரவேற்பது ஒவ்வொருவருடைய தமிழனும் ஏன் இந்தியனும் வரவேற்கத்தக்க ஒரு விசயம். நாமெல்லாம் அந்த இராமர் பாலத்திற்கு வரிந்து கட்டிக்கொண்டு விளக்கம் கொடுப்பதும், விதண்டாவதாம் பேசுவதையும் நிறுத்தினால் நலமாக இருக்கும் என்பது எனது வேண்டுகோள். அதில் செலவழிக்கும் நேரத்தை, சேது சமுத்திரத்திட்டத்தின் மூலம் நாம் அடையப்போகும் பலன் என்ன? நன்மைகள் என்னென்ன? என்பதை விளக்கினால் உபயோகமாகவும், என்னைப்போன்ற பாமரர்களுக்குப் புரியாத விசயங்களைப் புரியவைத்த பாக்கியமும் உங்களைப்போன்ற, இன்னும் இந்த இராமர் பால ஆராய்ச்சியில் இறங்கி நோண்டிக் களைபறிக்கும் அதிமேதாவிகளுக்கும் புண்ணியமாகும். எனவே மேற்கொண்டு மண்டபத்திலிருந்து எப்படிப்போனார்கள், தனுஷ்கோடி இருந்தது உண்மையா? போன்றைவகளுக்கு விளக்கம் கேட்கப்படும் கேள்விகளும், அம்மாவுடன் கூடப்பிறந்த ஆண்களை ஏன் சின்னம்மா, பெரியம்மா என்று அழைக்காமல் மாமா என்று அழைக்கிறோம் என்பதற்கு கொடுக்கப்படும் விளக்கமும் கிட்டத்தட்ட ஒன்றுதான். முடிந்தால் புரியாதவர்களுக்குப் புரியாத விசயங்களைப் புரியவைக்க நாமெல்லாம் சேர்நது முயற்சிப்போம். நன்றி
- மனுநீதி