பாரதி நாத்திகனா சோ !?..

வாழ்க தமிழுடன்

பெறுநர்

சோ
ஆசிரியர்
துக்ளக்
சென்னை.

என்றென்றும் தமிழுக்கும் தமிழருக்கும் எதிரான சோவே தங்களின் 26.09.2007 தேதியிட்ட துக்ளக் தலையங்கம் கண்டேன். வெளிப்படையாகவே தமிழை, தமிழினத்தை தாங்கள் அவமானப்படுத்தியுள்ளீர்கள். இந்தத் தமிழர்களும் சூடு சொரணையற்றவர்களாக இதனையும் பார்த்துக் கொண்டு சும்மாத்தான் இருக்கப் போகின்றார்கள்.

00

இராமர் குறித்துத் தமிழக முதல்வர் கருத்துச் சொன்னால் தாங்கள் தமிழினத்தையே கேவலப்படுத்த முனைந்துள்ளீர்கள். உங்கள் உள்ளத்திற்குள்ளே நீண்ட நாட்களாக தொல்காப்பியத்தையும், திருக்குறளையும் குறித்து என்ன எண்ணம் கொண்டுள்ளீர்களோ அதனை மிகத்திறமையாக தங்கள் தலையங்கத்திலே எழுதித் தமிழினத்தைக் கொச்சைப் படுத்தியுள்ளீர்கள்.

இராமன் என்று ஒருவன் இல்லை என்றால் அதற்குத் தொல்காப்பியனையும் திருவள்ளுவரையும் இழுக்க வேண்டிய அவசியம் என்ன.

கடலினைத்தாவும் குரங்கும் வெங்
கனலிடைப் பிறந்த செவ்விதழ்ப் பெண்ணும்
வடமலை தாழ்ந்ததனாலே தெற்கே
வந்து சமன்செய் குட்டைமுனியும்
நதியினுள்ளே மூழ்கிப் போய் அந்த
நாகர் உலகில் ஒரு பாம்பின் மகளை
விதியுறவே மணம் செய்த திறல்
வீமனும் கற்பனை என்பது கண்டோம்
ஒன்று மற்றொன்றைப் பழிக்கும்
ஒன்று உன்மையொன்றோதி மற்
றொன்று பொய்யென்னும்
நன்று புராணங்கள் செய்தார் அதில்
நல்ல கவிதைகள் பலபல தந்தார்
கவிதை மிக நல்லதேனும் அக்
கதைகள் பொய்யெனத் தெளிவுறக் கண்டோம்

என்கின்றான் எங்கள் எட்டையபுரத்தான் பாரதி.

நண்பர் மாலன் குமுதம் இதழில் ஆசிரியராக இருந்த காலம் அதன் கடைசிப்பக்கத்தில் ஒருமுறை இந்தக்கவிதையினை வெளியிட்டிருந்தார். இந்தக் கவிதையைத் தாங்கள் படித்திருக்க வாய்ப்பில்லை. இது உண்மைக்கவிஞன் பாரதியின் வரிகள். வடமொழியை காசிச் சர்வகலாசாலையிலே கற்றவனின் கூற்று. இதற்கு என்ன பதில் சொல்வீர்கள்.

வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு என்கின்றான் பாரதி.

நேரு நாத்திகர் என்று சொல்லி உள்ளீர்கள். அது நாடறிந்த உண்மை. ஆனால் பாரதி நாத்திகனா சோ!?..

கண்ணகியைப் பற்றி நீங்கள் கூறியதை ஏற்றுக்கொள்கின்றேன். அது அதீத கற்பனை. ஆனால் வாழ்வாங்கு வாழ்ந்த வள்ளுவப்பேராசானையும், தொல்காப்பியனையும் நாங்கள் சொல்ல மாட்டோம் நாங்கள் சொல்லமாட்டோம் என்றே நரித்தனமாக கொச்சைப்ப்டுத்தியுள்ளீர்களே.

தமிழின் மீது இத்தனை வெறுப்போடு ஏன் தமிழில் வார இதழ் நடத்துகிறீர்கள். தங்களின் மொழியான வடமொழியில் நடத்த வேண்டியதுதானே.

வான்மீகத்தைத் தமிழில் மொழிமாற்றம் செய்தபோது தமிழர் பண்பாட்டிற்கேற்றபடி கம்பன் மொழிமாற்றம் செய்தான்.வான்மீகத்தை அப்படியே தமிழில் தாங்கள் தந்தால் அந்த நாகரிகத்தைத் தமிழர்கள் கேட்டுச் சிரிப்பார்கள்.

எல்லை தாண்டுகிறீகள் சோ.

தங்களைத் தாங்களே அறிவாளி என்றும் மேதை என்றும் மகுடம் சூட்டிக்கொள்கின்ற அறியாமையில் இருந்து விடுபடுங்கள்.

நல்ல தமிழர்கள் வீறுகொண்டு எழும் வரை தாங்கள் இந்த அறியாமையில் இருந்து விடுபட மாட்டீர்கள். தொல்காப்பியனையும், வள்ளுவனையும் தொட்ட உங்களை விடப் போவதில்லை தமிழர்கள்.

பார்ப்பீர்கள் விரைவில்..


-நெல்லை கண்ணன்
20/09/2007
நெல்லை நகரம்

4 comments:

Anonymous said...

அல்ப்ப முண்டம் நொள்ளைக் கண்ணன்,

சோ நாங்கள் அவ்வாறு(மஞ்ச துண்டு செய்தது மாறி) கேவலமா கூற மாட்டோம்னு தானே சொன்னார்?உனக்கேன் எரியுது?முண்டம்,முண்டம்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சோ சமஸ்கிருதத்தில் துக்ளக் வெளியிட்டால்; வாங்கிப் படிக்கவும் ஆள் தேவையே!!

ஜடாயு said...

கண்ணன்,

மெய்ஞானியும், யோகியும், கவிஞனும் ஆன பாரதியின் கவிதைகளைக் கற்கும் போது அவற்றின் ஆழ்ந்த உட்பொருளைக் கருத வேண்டுமே அல்லாது, மேம்போக்காகப் படித்தால் அர்த்தத்திற்குப் பதில் அனர்த்தம் தான் கிடைக்கும்.

இந்தப் பாடலையே எடுத்துக் கொள்வோம் -

// கனலிடைப் பிறந்த செவ்விதழ்ப் பெண்ணும் //

இது யாகத்தீயிலிருந்து தோன்றிய பாஞ்சாலி என்ற திரௌபதியைக் குறிக்கிறது. பாரதக் கதையும் பாஞ்சாலியும் முழுப் பொய் என்று பாரதி உண்மையிலேயே கருதியிருந்தால், ஏன் நூற்றுக் கணக்கான பாடல்களில் பாஞ்சாலி சபதம் என்ற காவியத்தை எழுத வேண்டும்? அதன் கடவுள் வாழ்த்திலேயே "ஐவர் பூவை திரௌபதி புகழ்க் கதையை" என்று கூற வேண்டும்? பராசக்தியையும், தேச விடுதலையையும் தரிசிக்க ஏன் இந்த அற்புதவான சரிதத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்?

// விதியுறவே மணம் செய்த திறல்
வீமனும் கற்பனை என்பது கண்டோம் //

இந்த வீமனையும்,அவன் அண்ணன் பார்த்தனையும் தான் எழுச்சி பெற்ற பாரதத்தின் லட்சிய நாயகர்களாகவே பாரதி காண்கிறார்

"விளையும் மாண்பு யாவையும் பார்த்தன் போல்
விழியினால் விளக்குவாய் வா வா வா"
(பாடல் - ஒளி படைத்த கண்ணினாய்)

"முன்னைப் பார்த்தன் கண்ணன் இவன் நேரா - என்னை
உய்யக் கொண்டருளல் வேண்டும்"
(பாடல் - தேடிச் சோறு நிதம்)

"பன்னரும் புகழுடைப் பார்த்தனும் கண்ணனும்
வீமனும் துரோணனும் வீட்டுமன் தானும்
இராமனும் வேறுள இருந்திறல் வீரரும்
நற்றுணை புரிவர் வானக நாடுறும்"

(பாடல் - சிவாஜி தன் சைனியத்திற்குக் கூறியது)

"முன்னை இலங்கை அரக்கர் அழிய முடித்த வில் யாருடை வில்? - எங்கள்
அன்னை பயங்கரி பாரத தேவி நல்
ஆரிய ராணியின் வில்"

என்று ராமனை பாரத தேவியின் வடிவமாகவே கண்ட பாரதியா ஸ்ரீராமனை இழித்துரைத்தவன்? என்ன கொடுமை இது!

இங்கு குறிப்பிட்டிருக்கும் பாடல் ஒருவிதமான நிராகரிப்பு மனப்பான்மையில் பாரதி பாடியது, அவ்வளவே. (இதை யோக மொழியில் "நிவ்ருத்தி" என்பர்)

சைவம், வைணவம் முதலான அறுசமயங்களையும் தழைக்கச் செய்து, இவற்றின் இறுதிப் பொருளாக இருங்கும் அருவமான, குணங்களைக் கடந்த அத்வைதப் பரம்பொருளையும் உணர்த்தியவர் ஆதிசங்கரர் - இது தெரிந்த விஷயம். அவரது "ஆன்ம ஷட்கம்" என்ற பிரசித்தமான பாடலில், சில வரிகள் -

"நான் சைவமும் அல்ல, சாக்தமும் அல்ல,
ஐந்து இரவுகள் திருமாலை வழிபடும் வைணமும் அல்ல,
எனக்கு வேதமும் இல்லை, வேள்வியும் இல்லை, ஆசாரமும் இல்லை, தவமும் இல்லை
சிதானந்த ரூபம் சிவம் நான் சிவம் நான்"!

இந்த வரிகளை மட்டும் தனியாகப் காட்டி சங்கரர் சைவத்திற்கும், வைணவத்திற்கும் எதிரி என்று பிதற்றுவது சரியா? அது போன்றது நீங்கள் இங்கு சொல்லியிருப்பது.

பாரதியின் ஆன்மிக, தேசிய, சமய தரிசனங்களை முழுமையான கருத்தாக்கங்களாக நாம் பார்க்க வேண்டுமே அல்லாது ஏதோ ஒரு கவிதையில் இருந்து ஒன்றிரண்டு வரிகளை மேற்கோள் காட்டி அவர் "நாத்திகர்" என்றெல்லாம் பேசுவது பகுத்தறிவின்மையையே காட்டுகிறது. குறிப்பாக எதையுமே உருப்படியாகவும், ஆழமாகவும் ஆராயாமல் பிதற்றும் திராவிட இயக்க அறியாமையை.

மாசிலா said...

சோ கம்மனாட்டி இன்னும் கொஞ்ச காலத்துல செத்து போயிடுவான்யா, இயற்கையாவே! உட்டு தள்ளுங்க அவன் பினாத்தல!!!

பாரதி நாத்திகனா இருந்திருந்தா என்ன?
இல்ல ஆத்திகனா இருதிருந்தா என்ன?

சாதிகள் இல்லையடி பாப்பா
குலம் தாழ்த்தி உயர்த்தி சொல்லல் பாவம்னு சொன்னாரில்லையோ?
அதுவே போதும் அவரை போற்றதுக்கு!

மத்தது எல்லாம் சும்மா வெத்து பேச்சு!