திராவிடத்தால் வீழ்ந்தோமா ?

பெரியாருடைய தத்துவம் என்பது தமிழர்களை - திராவிடர்களை எல்லா ஆழிவுகளிலிருந்தும் மீட்க வேண்டும் என்பதுதான். உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி என்று இல்லை, அணுக்குப் பெண் அடிமையில்லை, அனைவருக்கும் கல்வி கற்கும் உரிமை வேண்டும், படிப்பு - வேலை வாய்ப்பும் - பதவியும் எல்லா வகுப்பினருக்கும் விகிதாசாரப்படி கிடைக்க வேண்டும்... போன்றவைதான் பெரியாரின் கொள்கைகள். இது எதுவுமே இன்னும் சீராகாத நிலையில் அவருடைய தத்துவங்கள் இன்றைய சூழ்நிலைக்குப் பொருந்தாது, இத்தகைய கொள்கைகளால் வீழ்ந்தோம் என்பது பொருத்தமற்றது. பெரியாருடைய கொள்கைகள் என்னவென்று தெரியாதவர்கள்தான் அவருடைய கொள்கைகள் தேவையில்லை என்று சொல்கிறார்கள். ஒரு சம்பவத்தைச் சொல்கிறேன்.1970-ல் இந்திராகாந்தி அம்மையாரின் அமைச்சரவையில் மாகாண மந்திரியாக இருந்தவர் டாக்டர். சந்திரசேகர். மத்திய அரசின் மக்கள் தொகை கட்டுப்பாடு சம்பந்தமான அராய்ச்சியாளர் அவர். வேலூரைச் சேர்ந்த அவர் பெரியாருக்கு நெருக்கமானவர். அவர், பெரியாரைச் சந்தித்து, ""மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. ஆண் குழந்தை வேண்டும் என்பதற்காக தொடர்ந்து பிள்ளை பெற்றுக்கொண்டே இருக்கிறார்கள். இதற்கு என்ன செய்யலாம்?'' என்றார்.""பெண்களுக்கு சொத்தில் சம அந்தஸ்து இருக்கிறது என்று அறிவித்து விடுங்கள், சரியாகிவிடும்'' என்றார். கேட்டவருக்கும் புரியவில்லை.""உன் மனைவிக்கும் வேலை, உன் மகளுக்கும் வேலை. அவர்களுக்கு சொத்தில் சம பங்கு என்ற நிலை வந்தால் பெண்களை யாரும் குறைச்சு மதிப்பிட மாட்டார்கள். ஆண் வாரிசுதான் வேண்டும் என்ற கருத்தும் போய்விடும்'' என்றார் பெரியார். ஆச்சர்யப்பட்டுப் போனார் அந்த அறிஞர்.""உலகத்தில் வேறு யாரும் சொல்லாத ஈங்களின் ஒரிஜினல் ஆலோசனை ஆது'' என்று கூறினார். அவரைப் பிற்போக்குவாதி என்பதும், அவருடைய கருத்துகளினால்தான் வீழ்ச்சியடைந்தோம் என்பதும் நேர்மையான குற்றச்சாட்டாகத் தெரியவில்லை. இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு நாங்களும் ஒரு காரணம். பெரியாரின் சிந்தனைகள், கருத்துகள் என்ன என்பதை - அவருடைய வரலாற்றை - முழுமையாக மக்களிடம் கொண்டு செல்லவில்லை. சமுதாயம், தாழ்த்தப்பட்டவர்கள் பற்றி என்ன சொல்லியிருக்கிறார் என்பதை முழுமையாகக் கொண்டு வரவில்லை. நான் கொண்டுவந்த "பெரியார் சிந்தனைகள்' தொகுதி என்பது ஒரு பகுதி... கொஞ்சம்தான். முழுமையாக வெளிவரவில்லை. இப்போது அவருடைய கருத்துக்களை விமர்சனம் பண்ணுகிறார்கள். அவருடைய எதோ ஒரு வாக்கியத்தைப் பிடித்துக்கொண்டு விமர்சனம் செய்கிறார்கள். "பறைச்சி எல்லாம் ஜாக்கெட் போட்டுகிட்டாப்பா' அப்படீனு பெரியார் பேசியதாக ஒரு கட்டுரையைப் படித்துவிட்டு பேசுகிறார்கள். நடந்தது என்ன தெரியுமா? அப்போது காமராஜரை ஆதரித்துப் பெரியார் பேசுகிறார். "காமராஜர் ஆட்சியில் தாழ்த்தப்பட்டவர்கள் முன்னேறியிருக்கிறார்கள். ரவிக்கை போடக்கூடாத நிலையில் ருந்த அந்த சமுதாயப் பெண்கள் ரவிக்கை போட ஆரம்பித்திருக்கிறார்கள். இது காமராஜர் ஆட்சியின் சாதனை' என்றுதான் பெரியார் பேசினார். அந்தக் கூட்டத்தில் நான் இருந்ததால் சொல்கிறேன்.1950 வரை நாடார்கள் தீண்டப்படாதவர்கள். அவர்கள் வீட்டில் யாரும் தண்ணீர் குடிக்க மாட்டார்கள். 1920ம் செங்கல்பட்டு மாநாட்டில் நாடார்களை அழைத்து சோறாக்கச் சொன்னவர் பெரியார். அவர் எப்படி தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரானவராக இருக்க முடியும். ஆகவே, பெரியார் சொன்னதின் மையக்கருத்தைத் தெரிந்து கொள்ளாமல் பேசும் விமர்சனங்கள் பிழையானவை.

-வே.ஆனைமுத்து

0 comments: