எங்கள் யாழ்ப்பாணம்

"என்ன பறுவதம் ஆச்சி நீங்களும் வந்து கியூவிலை நிக்கிறியள்".
"ஓமடா மேனை கந்தசஷ்டி விரதத்திற்கு ஒரு நேரம் இரவிலை சாப்பிடுகிறது".
"பாணே சாப்பிடப் போறியள்"
" வேறு என்ன இருக்கு இஞ்சை சாப்பிட"
"ஆச்சி இப்ப காலை எட்டுமணி. மூண்டு மணி செல்லும் பாண் தர"
"அறுவாங்கள் பாதையை மூடிப்போட்டு சாமான்கள் அனுப்பாமல் விட்டால் சனம் என்ன சாகிறதே?"
"இல்லையாச்சி கப்பலிலை சாமான்கள் வருகுதெண்டு சொல்லுகினம்"
"உது எங்களை ஏமாத்த இப்படிச் சொல்லுறான்கள்".
"இல்லை ஆச்சி சாமான்கள் வருகுது தான். ஆனால், வியாபாரியள் பதுக்கி வைச்சு கொள்ளை இலாபம் அடிக்கிறாங்கள்;" மோசக் காரர்கள்.
"அநியாயமாய் போவார் ஏன் இப்படிச் செய்யினம்".
"வேறு என்ன பண ஆசைதான்; பெரிய முதலாளிகளாகத் தான் பாக்கினம்"
"இஞ்சை எங்கடை சனம் சாப்பாடு இல்லாமல் சாகக்கிடக்குதுகள். நாசமாய் போவார் சாமான்களின்ரை விலையைக் கூட்டிவித்து சொர்க்கத்திற்கே போகப் போயினம்".
"ஏலாத நேரத்தில ஆச்சி கந்தசஷ்டி விரதம் பிடிக்க வேணுமோ?"
"எட மேனை எப்ப பாதையை மூடினாங்களோ அண்டைக்குத் தொடக்கம் கந்தசஷ்டி விரதம் தானே? ஒரு நேரம் தான் சாப்பிட வழி இருந்தது. இப்ப எல்லாம் முடிஞ்சு போச்சு. அது தான் ஒரு இறாத்தல் பாண் வாங்கினால் இரண்டு நாளைக்குக் காலந்தள்ளலாம் எண்டு வந்தனான்".
சூரியனும் புதினம் பார்க்கப் புறப்பட்டு மேலெழுந்து கொண்டிருந்தான். நேரம் ஏற ஏறச் சூடு நிரம்பிய செங்கதிர்களை பரப்பிக் கொண்டிருந்தான்.
நேரம் பன்னிரண்டைத் தாண்டிவிட்டது. வெப்பம் தாங்க முடியாமல் பாண் கியூவில் நின்றவர்கள் நன்றாகச் சோர்ந்து போனார்கள்.
பறுவதம் ஆச்சி தலையிலை சீலைத் தலைப்பைப் போட்டுக் கொண்டு வெய்யிலில் வெதும்பிக் கொண்டு நிற்பதைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது.
"ஆச்சி நீங்கள் கியூவிலை நிற்க வேண்டாம். போய் அந்த குந்திலை இருங்கோ. கொடுக்கத் தொடங்கேக்கை வந்து வாங்குங்கோ நாங்கள் விட்டுத் தாறம்".
"பிள்ளையள் கவனமாய் நில்லுங்கோ. வெள்ளை வான் திரியுது எண்டு கேள்வி."
"சரி ஆச்சி"
பறுவதம் ஆச்சி நிண்டு நிண்டு சரியாகக் களைச்சுப் போனா. மற்றப் பக்கத்திலுள்ள கடைக்குந்தில் போய் இருந்தவ படுத்துத் தூங்கிவிட்டா.
****
பறுவதம் ஆச்சி கோண்டாவிலில் தான் இருக்கின்றா. புருசன் கந்தப்பு பத்து வருடங்களுக்கு முன்பு ஷெல் விழுந்து செத்துப்போனார். இரண்டு ஆம்பிளைப் பிள்ளைகள் இத்தாலிக்குக் களவாய் போகப் போனவங்கள் போனவங்கள் தான். இற்றைவரை எதுவிதமான தகவலும் இல்லை.
கணவன் இறந்த வேதனையாலும் பிள்ளைகளைக் காணாமலும் பறுவதம் ஆச்சி நல்லாய் நொந்துபோனர்.
ஊரில் உள்ள சில வீடுகளுக்குச் சென்று அரிசி இடித்து மாவாக்கி வறுத்துக் கொடுப்பதன் மூலம் கிடைக்கும் சொற்ப பணத்தில் வயிற்றைக் கழுவி வந்தார். அதனாலை `மா இடிக்கும் பறுவதம் ஆச்சி' என்று எல்லோரும் அழைப்பார்கள். வேலைச் சுத்தம், மனச் சுத்தம் அதனால் எல்லோருடைய மரியாதைக்கும் உரியவராக வாழ்ந்து வந்தா.
கல்யாண வீடு, சாமத்திய வீடு என்று வந்தால் பலகாரம் சுடுவதற்கு பறுவதம் ஆச்சி கட்டாயமாகக் கூப்பிடப்படுவா. அரியதரம், முறுக்கு, பால்றொட்டி, சிப்பி, பயித்தம் பலகாரம் என்று எல்லாவற்றிலும் தேர்ச்சி பெற்றிருந்தா.
****
"எடி வள்ளியம்மை வெறுந்தேத்தண்ணி குடிக்கேலாமல் கிடக்கு கொஞ்சச் சீனி தாறியே!
"உண்ணாணை அக்கா ஒரு சொட்டு சீனியும் இல்ல. அறுவான்கள் ஏழை எளியதுகள் வாங்க முடியாமல் நானூறு ரூபாயல்லே விக்கினம். அதுக்கும் கியூவாம்".
"பொன்னம்பலத்தாற்றை பெண்சாதி சொன்னா பேரப்பிள்ளைக்குக் கொடுக்க பால்மா இல்லையாம். அரிசி, மா, சீனி காசிருந்தாலும் வாங்கேலாமல் கிடக்காம். உள்ளிப்பூடு மூவாயிரம் ரூபாவுக்கு விக்கினமாம்."
"ஓமக்கா அவ சொல்லுகிறது உண்மை தான். எங்கடை இவரும் போய் கியூவிலை நிண்டு விட்டுத் திரும்பி வந்தவர். "
"இப்ப வேலைவெட்டி தொழில் துறையள் ஒண்டும் இல்லை. கியூவிலை நிற்கிற வேலை ஒண்டு மட்டும் தான் நடக்குது."
"நல்லாச் சொன்னியள் அக்கா".
"சாப்பாட்டுக்கு வழியில்லாமல் சனம் பட்டினியாலை சாகப் போகுதுகள்."
"அது ஒண்டுதான் இஞ்சை மலிவாய் கிடைக்கும் போலை தெரியுது".
"ஓமடி பிள்ளை தலையைச் சுத்துது நான் வாறன்" நாட்டு நிலைமை காரணமாக பெருந்தொகையான மக்கள் சொல்லொணாத் துயரங்களைச் சுமந்து கொண்டிருக்கின்றார்கள். அவர்களில் ஒருவராகப் பறுவதம் ஆச்சியும் இருக்கின்றார்.
****
"ஆச்சி ஒழும்பெணே பாண் கொடுக்கத் தொடங்கி விட்டாங்கள்" என்று அவரின் கையில் மெல்லமாகத் தட்டுகிறன்.
அவ எழும்பவே இல்லை. நானும் என்னுடன் பாண் கியூவில் நின்ற வேறு சிலரும் சேர்ந்து முகத்திற்குத் தண்ணீர் தெளித்துப் பார்த்தோம். அவ அசைவதாய்த் தெரியவில்லை.
அவ போய்ச் சேர்ந்துவிட்டா. நாங்கள் பதறிப்போனோம். ஒரு ஏழைக்கிழ பரிதாபமாக மரணத்தைத் தழுவிக் கொண்டார்.
யாழ். பெரியாஸ்பத்திரி சவச்சாலையில் பறுவதம் ஆச்சியின் உடல் வைக்கப்பட்டுள்ளது.
அநாதைப் பிணம்.
அரசாங்க செலவில் அவரின் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. ஊருக்கு உழைத்த பறுவதம் ஆச்சியை ஊரே மறந்துவிட்டது.
பட்டினிச் சாவை எதிர்நோக்கும் மக்களிடையே மனிதாபிமானத்தை எப்படிக் காண முடியும். யாழ்ப்பாணப் பட்டினத்தில் இருந்து சயிக்கிளில் வீடு நோக்கி வந்து கொண்டிருந்தேன். வழியில் ஒருவர் வழி மறித்து "கொக்குவில் சம்பியன் ஒழுங்கையடியிலை இரண்டு பெடியங்களைச் சுட்டுப்போட்டாங்களாம்" என்றார்.
நான் கே.கே.எஸ். வீதி வழியால் போகாமல் நாச்சிமார் கோயிலடியாலை திருப்பி தின்னவேலிச் சந்திக்கு வந்து பலாலி றோட்டாலை போய் உரும்பிராய் சந்தியாலை திரும்பி மருதனார்மடத்தடிக்கு வந்து கே.கே.எஸ். வீதி வழியாக வீட்டை வந்து சேர்ந்தேன்.
வீட்டில ஒரே கூக்குரல் சத்தம். என்ன என்று வாசலில் நின்றவரிடம் கேட்டேன்.
"உன்ரை அப்பாவை வெள்ளை வானில் வந்தவர்கள் கடத்திச் சென்று விட்டார்களாம். அதுதான் கொம்மா குளறி அழுகிறா" என்று சொன்னார். அம்மா என்னைக் கண்டதும் கட்டிப்பிடித்து அழத் தொடங்கிவிட்டா.
"அம்மா அழாதேங்கோ நான் பொலிஸிலும் போய் என்றி போட்டுவிட்டு வாறன்"
"தம்பி நீர் பொலிஸுக்குப் போக வேண்டாம். பணம் கறக்க ஆட்கடத்தல் வேலையில சிலர் ஈடுபட்டுள்ளார்கள். அவையின்ரை வேலையாகத்தான் இருக்கும்" என்று மாமா கூறினார்.
வடபுலத்து நிலைமை படுமோசமாகப் போய்க்கொண்டிருக்கிறது என்று என் மனத்தில் தோன்றியது.
"அருந்தவன் அப்பான்ரை பாடு என்னவாம்"
"ஒண்டுமாய்த் தெரியேல்லை குஞ்சி"
"சனம் இஞ்சை சாப்பாடு இல்லாமல் சாகக்கிடக்குதுகள் அதுக்குள்ளை கப்பம் பெறுகிறதற்கு கடத்தலும் நடக்குது"
"யார் கடத்தினதெண்டு தெரிஞ்சால் போய்ப் பேசிப்பார்கலாமெண்டால் ஒண்டுமாய் தெரியேல்ல குஞ்சி."
"மனித உரிமைகளுக்கான கந்தோரிலை போய் அறிவிச்சனிங்களே?"
"ஓம் குஞ்சி, எல்லா வழியாலும் போய்ப்பார்த்தம் ஒண்டும் சரிவரேல்ல."
"தம்பி எங்களுக்கு ஏன் இந்தக் கஷ்டம் வரவேணும். விளக்கெரிக்க மண்ணெண்ணெய் இல்லை. அதுக்கிள்ளை மின்சாரத்தை நிப்பாட்டி ஆறு மணித்தியாலம் தான் தாறாங்கள். வெளிச்சம் இல்லாத நேரத்தில களவுகளல்லே நடக்குது. மூண்டு சங்கக்கடை உடைச்சு சாமான் எல்லாம் களவெடுத்துப் போட்டாங்களாம். வேறுகடையளும் உடைச்சிருக்காம் எண்டு சொல்லுகினம்."
"வருத்தக்காறரை அவசரமாய் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகவும் வாகன வசதி இல்லை. பெற்றோல், டீசல் இல்லாதபடியால் கார், ஓட்டோ ஒண்டும் ஓடுறேல்ல. எரிபொருள் தட்டுப்பாட்டால் பஸ் போக்குவரத்தும் ஒழுங்கில்லை. பொதுசனம்தான் நல்லாய் கஷ்டப்படுதுகள். யாரை நொந்து என்ன பயன். காசு உள்ளவங்கள் எல்லாம் வெளிநாடெண்டு ஓடிவிட்டாங்கள். நாங்கள் ஏழையள்தான் இஞ்சையிருந்து கஷ்டப்படுகிறம். எங்களுக்கும் யமதர்மராஜன் தேதி குறிச்சிருப்பான் எண்டு நினைக்கிறன்."
என்று குஞ்சி தனது ஆதங்கத்தை பொரிந்து கொட்டினார்.
சற்று நேரத்தில சயிக்கிளில் வேகமாக ஓடிவந்த அருந்தவத்தின் நண்பன் தியாகு....
"இஞ்ச மச்சான் உன்ரை அப்பாவை உடுவில் மல்வம் றோட்டிலை சுட்டுப் போட்டிருக்கு. நான் போய்ப் பார்த்துவிட்டுத்தான் வாறன்."
"ஐயோ அப்பா உங்களுக்கு ஏன் இந்த நிலை வர வேண்டும். எங்களை அநாதையாக்கிவிட்டுப் போய்விட்டீங்களே" என்று அழுதேன்.
"வா மச்சான் சயிக்கிள்ளை ஏறு போவம்."
நாங்கள் இருவரும் அங்கு போய்ச் சேர்ந்தபோது பொலிஸார் அங்கு காவலுக்கு நிற்கின்றார்கள். அவர்களிடம் போய் "இறந்திருப்பவர் எனது தந்தை என்று சொன்னேன்."
நீதிவான் வந்து விசாரணை முடிந்ததும் பிரேதத்தை யாழ். ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லுகின்றார்கள். நானும் தியாகுவும் வீட்டுக்கு வந்து விபரங்களைச் சொல்லிவிட்டு சின்னத்துரையற்றை காரிலை யாழ். ஆஸ்பத்திரியை நோக்கிச் செல்கின்றோம்.
இக்கொடுமைகளைப் பார்த்து சகிக்க முடியாமல் சூரியனும் மேற்கில் போய் மறைந்து கொண்டான்.

சிறுகதை- இணுவை வசந்தன்

0 comments: