உங்களைப் பாக்க எக்கச்சக்கமா மனுஷங்க வர்றாங்க.. நிச்சயமா மக்கள் மனம் கவர்ந்த தலைவராத்தான் இருக்கணும்...."

-தன் அருகிலுள்ள படுக்கையில் சிகிச்சை பெற்று வந்த பிரமுகரிடம் கரகரத்த குரலில் கேட்டார் அந்த நடிகர்.

தாம் ஒரு தொழிற்சங்கத் தலைவர் என்றும், தம்மைக் கொல்ல நடந்த தாக்குதலில் தப்பித்து கத்திக்குத்துக்காக சிகிச்சைக்கு வந்த விஷயத்தையும் தமது மாறாத புன்னகையுடன் பதிலாகக் கூறினார் பக்கத்துப் படுக்கையில் இருந்தவர்.

தன்னலமற்ற அவரின் சேவையைக் கேள்விப்பட்டிருந்த நடிகர்,
"நீங்க அப்படியே செத்துருக்கணும்.. அப்பந்தான் தமிழ் நாட்டில் நல்ல பெயர் எடுக்கமுடியும்.. தியாகத்துக்கு இங்க மதிப்பில்லே..."

-உரத்து கரகரத்த குரலில் உணர்ச்சிவசப்பட்டுக் கூறினார்.

சென்னை ஜி.எச். மருத்துவமனையில் எழுபதுகளின் தொடக்கத்தில் நடைபெற்ற சம்பவம் இது.

அந்த நடிகர் நடிகவேள் எம்.ஆர்.இராதா! பதிலளித்தது CITU தொழிற்சங்கத்தலைவர், மார்க்சிஸ்டு கட்சியின் முன்னணித் தலைவர் வி.பி. சிந்தன்!!

-இப்படி ஒளிவு மறைவின்றி சமூகவிமரிசனம் செய்ய நடிகவேளால்தான் முடியும்!

இராதாகிருஷ்ணனுடைய பெற்றோர்களின் பூர்வீகம் ஆந்திராவானாலும், சென்னை சிந்தாதிரிப்பேட்டையில்தான் பிறந்து வளர்ந்ததெல்லாம்.

தந்தையிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறித் தஞ்சமடைந்து ஜெகன்னாதையரின் நாடகக் கம்பெனியில்தான்.

சிறிய வயதிலேயே ‘பாயசம்' என்ற பாத்திரத்தில் பிரபலமாகி ராஜாஜியால் பாராட்டப்பட்டவர்.

சேலம் மாடர்ன் தியேட்டர்ஸின் ‘சந்தனத்தேவன்' படத்தில் கதாநாயகன் வேடம். அதன் அதிபரான டி.ஆர் சுந்தரத்திற்கு - மெட்ராஸ் ராஜகோபால ராதாகிருஷ்ணன் என்கிற நீளமான பெயர் பிடிக்கவில்லை. முன்னும் பின்னும் வெட்டி - எம்.ஆர்.
ராதாவாக்கினார். ராதா கதாநாயகனாக நடித்த முதல் படம். வெளிவந்தது 1939இல்.

திரைப்படத்தில் 1939-ல் நுழைந்தாலும் நாடகத்தை மறக்காது வளர்த்த கலைஞர் இராதா. "உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்" என்ற வாசகங்கள் அவரது நாடகக் கம்பெனியின் திரைச்சீலையில் இடம் பெற்றிருந்தது, அவரது தொடக்க காலத் தொடர்புகளால்தான். கம்யூனிஸ்டு தலைவர் ஜீவானந்தத்தின் நண்பர் எம்.ஆர்.இராதா.
தனது ஒரு பெண்ணுக்கு ரஷ்யா ராணி என்று பெயர் சூட்டியிருந்தார். எம்.ஜி.ஆர். மீது சுட்ட வழக்கில் அவருக்காக வாதாடியவர் கம்யூனிஸ்டு கட்சியின் என்.டி.

வானமாமலை! பெரியாரின் திராவிடர் கழகச் சித்தாந்தத்தில் பிடிப்பு ஏற்பட்டதை இறுதிவரை இராதா விடவில்லை. பெரியாருக்கு ஏற்பட்ட கண்டன விமரிசனங்கள் இராதாவுக்கும் தொடர்ந்தது. அதைப்பற்றிக் கவலைப்படாமல் நாடகங்களை அரங்கேற்றினார். பிரிட்டிஷ் ஆட்சியில் சுதந்திரப் போராட்டம் பற்றிச் சித்தரிக்கத் தணிக்கை முறை இருந்தது. காங்கிரஸ் ஆட்சியில் நாத்திகக் கருத்துக்களைச் சொல்லத் தடை இருந்தது. இராதா நாடகத்தின் பெயரை மாற்றித் திரையிட்டுக் கைதாவார். காங்கிரஸ் ஆட்சியில் 59 முறை கைதானாவர் இராதா!.

கட்டணம் செலுத்தாமல் தனது நாடகங்களைப் பார்க்க வரும் உள்ளூர் பிரமுகர்களுக்கு "ஓசியில் பார்ப்போர்களுக்காக" என்று போர்டு மாட்டி ‘ஒதுக்கிய' பெருமை இராதாவையே சாரும்.

வில்லன்-தந்தை-சமூக விமரிசகர்- நகைச்சுவைப் பாத்திரம் என எல்லாவற்றையும் அவர் ஒருவரே ஏற்று நடித்தது தனிச்சிறப்பு. அவரது ஏற்ற இறக்கமுள்ள, கரகரத்து கீச்சுக்குரலாக மாறும் உச்சரிப்பு அவரது சமூக எள்ளலுக்கு பலம் சேர்த்தது. விளம்பரமின்றி உதவி செய்யும் சுபாவம் அவருக்கு உண்டு. அவர் இப்போது இருந்திருந்தால் ‘ராமர் சேது' விவகாரத்தில் ஊர் ஊராகப் போய் அவரது பாணியில் நாடகம் போட்டிருப்பார்!

0 comments: