அறிவும் ஆற்றலும் கொண்ட பெண் இச்சமூகத்தில் தனிமனிதராக மதிக்கப்படுகிறாரா என்ற கேள்விக்கு இன்னும் இல்லை என்றே சொல்லவேண்டிய இடத்தில்தான் நாமிருக்கிறோம். பெண்ணின் இருப்பு வெறும் உடலாகவே கணக்கிடப்படுகிறது. இந்திய குறிப்பாக தமிழ்ச் சமூகத்தின் கலாச்சார நடவடிக்கை என்பது பெண்ணுடல் மீதான கண்காணிப்பாகவும் விசாரணையாகவுமே குறுகிக்கிடக்கிறது. சமூகம், முதலில் தனது அதிகார இயந்திரங்களான மதத்தையும் சாதியையும் கொண்டு பெண்ணின் விருப்பங்களையும் தேர்வுகளையும் கட்டுப்படுத்துகிறது. அடுத்ததாக கற்பு/ தாளிணிமை போன்ற கற்பிதங்களால் பெண்ணின் காதல்/ காமம் ஆகிய உணர்வுகளைக் கட்டமைக்கிறது. தொடர்ச்சியாக குடும்பம், உழைக்குமிடம் தவிர்த்த பெண்ணின் வெளியையும் மறுதலிக்கிறது. இந்த வரையறையிலிருந்து விலகி தனித்த அடையாளத்துடன் ஒரு பெண் தனக்கென பாதையை வகுத்துக்கொள்ள முற்படும்போது அது குருட்டுச்சந்தாகவே முடிகிறது என்பதே கசப்பான உண்மை.

சென்னை லயோலோ கல்லூரியில் கடந்த டிசம்பர் 15 சனிக்கிழமையன்று காட்சி ஊடகவியல் துறையினர், கனாக்களம்-2007 கருத்தரங்கின் கலந்துரையாடலில் ‘சினிமாவும் சமூகமும்’ என்னும் தலைப்பில் என்னைப் பேச அழைத்திருந்தனர். காலை பத்து மணி மணியளவில் கல்லூரி வாசலை அடைந்த என்னை நிறுத்திய கல்லூரியின் காவலர்கள், அடையாள அட்டையைக் காண்பிக்குமாறு கேட்டனர். நான் அழைப்பிதழைக் காட்டினேன். ‘உங்களை உள்ளே அனுமதிக்க முடியாது, ஏனென்றால் நீங்கள் ஜீன்சும் குர்தாவும் அணிந்திருக்கிறீர்கள்- துப்பட்டா அணியவில்லை’ என்றார்கள். ஒரு நிமிடம் எனக்குத் தலைசுற்றியது; நான் தமிழ்நாட்டில்தான் இருக்கிறேனா அல்லது தாலிபான்களின் ஆப்கானிஸ்தானில் இருக்கிறேனா என்ற இடக்குழப்பம் ஏற்பட்டது.

கிணுகிணுத்த கைபேசியைத் தட்டினால் அமைப்பாளர்கள், ‘சிறிது நேரம் பொறுங்கள் நாங்கள் வந்துபேசி அழைத்துச் செல்கிறோம்’ என்றார்கள். நிமிடங்களில், ஒரு மாணவி ஓடிவந்து கறுப்புத் துப்பட்டாவைத் தந்து ‘இதை அணிந்துகொண்டு உள்ளே வாருங்கள்’ எனக் கெஞ்சும் தொனியில் கேட்டபோது எனக்குச் சிரிப்பதா அழுவதா எனத் தெரியவில்லை. “சுதந்திரமாக ஆடையணிந்துகூட வரமுடியாத இடத்தில். சுதந்திரமான சினிமாவை நேசித்து பணியாற்றிக் கொண்டிருக்கும் எனக்கு எந்தப் பணியும் இல்லை” என்று மட்டும் குறிப்பிட்டுவிட்டுத் திரும்பிவிட்டேன். அழைப்பிதழில் இடம்பெற்றிருந்த மற்ற பேச்சாளர்களான பாலுமகேந்திரா, பாமரன், ஞாநி, வசந்தபாலன், எஸ். ராமகிருஷ்ணன், லெனின், அஜயன்பாலா ஆகியோர் ஆண்களாக இருந்ததால், அவர்களுக்குத் துப்பட்டா பிரச்சினை இருந்திருக்காது என்று சிந்தனை ஓடியது.

கல்வி நிலையங்கள் தமிழ்க் கலாச்சாரத்தை துப்பட்டாவில் கட்டிக்காக்கும் அளவுக்குத் தரம் தாழ்ந்துவிட்டனவா என்று கடுங்கோபம் வந்தது. பதினெட்டு வயதில் தங்கள் நாட்டை யார் ஆள வேண்டும் என்று முடிவு செய்யும் ஓட்டுரிமை பெற்ற கல்லூரி மாணவ மாணவியருக்குத் தங்களுக்கான உடையைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை மறுப்பதையே பல தளங்களில் நான் எதிர்த்துப் பேசியும் எழுதியும் வந்திருக்கிறேன். எழுத்தும் சினிமாவுமாக விடுதலையைப் பற்றிய சிந்தனையையும் படைப்புகளையும் மட்டுமே சுவாசித்துக்கொண்டிருக்கும் என்னை, நிகழ்ச்சிக்கு விருந்தினராக அழைத்து, துப்பட்டாவைக் கொடுத்து, என் இருப்பையே கேள்விக்குறியாக்கிவிட்ட லயோலா கல்லூரி எனக்கு என்ன பதில் வைத்திருக்கிறது. ஒவ்வொரு வருடமும் தரத்தின் அடிப்படையிலான சர்வேக்களில், இந்தியாவின் சிறந்த கல்லூரிகளின் தரவரிசையில் ஐந்து முதல் பத்தாம் இடத்திற்குள் ஸ்டார் தகுதியில் இடம்பிடிக்கும் லயோலா கல்லூரி, தனி மனித உரிமைக்குத் தரும் மரியாதையில் எந்த இடத்தில் தன்னை நிறுத்திக்கொள்கிறது?

லயோலா கல்லூரியில் நடைமுறையிலிருக்கும் பெண்களுக்கான உடை பற்றிய கோட்பாடுகளின் வரலாறு மிக சுவாரஸ்யமானது. கல்லூரி மாணவர்களின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள், மாணவிகளின் உடை விசயத்தால் மிகவும் மனஉளைச்சலுக்கு ஆளாகிறார்கள். படிப்பிலும் கவனம் செலுத்தமுடிவதில்லை. அதனால் கல்லூரி மேலாண்மை மாணவிகளின் உடைகளில் கட்டுப்பாடுகளைக் கொண்டுவர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்களாம். உடனே கல்லூரி நிர்வாகம் மாணவிகளுக்குத் துப்பட்டா கட்டளைகளைப் பிறப்பித்திருக்கிறது; ஜீன்ஸிற்குத் தடா போட்டிருக்கிறது. இதை விசாரித்துக்கொண்டிருக்கும்போது எனது தோழரும், பெண்ணிய சிந்தனையாளரும், எழுத்தாளருமான ஓவியா ஒரு வரலாற்று நிகழ்ச்சியை நினைவுபடுத்தினார்.

சுதந்திரத்திற்கு முன் நமது நாட்டின் முதல் பெண் மருத்துவர் முத்துலெட்சுமி கல்லூரியில் அனுமதி கேட்டபோது மற்ற மாணவர்களின் பெற்றோர்கள் ‘ஒரு பெண் கல்லூரிக்கு வருவதா, எங்கள் பிள்ளைகள் கெட்டுப்போவார்கள்-நாங்கள் விண்ணப்பங்களைத் திரும்பப் பெறுவோம்’ என்று சொன்னார்களாம். அதைக் கேள்விப்பட்டு கலக்கமுற்ற தாளாளர், அன்றைய அரசுப் பிரதிநிதி கவர்னர்- ஒரு வெள்ளை துரையிடம் முறையிட்டாராம். வெள்ளைத்துரை அதற்கு, ‘பரவாயில்லை, அந்தப் பெண் மட்டும் படித்தால் போதும், மாணவர்களை வீட்டுக்கு அனுப்புங்கள்’ என்றாராம். அந்த வெள்ளைத்துரைக்குப் பாவம் நமது கலாச்சாரம் தெரியவில்லை. தவறு செய்துவிட்டார். லயோலா கல்லூரி போன்ற சுதந்திர இந்தியாவின் கல்லூரி நிறுவனர்கள் அந்தத் தவறைச் செய்வார்களா என்ன? அப்புறம் தமிழ்க் கலாச்சாரம், பண்பாடெல்லாம் என்னாவது?

பெற்றோர்களைத் தங்கள் பிள்ளைகளுக்குப் புலனடக்கம் கற்றுத்தரச் சொல்லியனுப்பாமல், மாணவிகளுக்கு உடைக் கோட்பாடுகளைப் பிறப்பித்திருக்கிறது. நிச்சயம் மாணவர்கள் அணியும் உடையில் நமது மாணவிகள் மனக்கிலேசம் அடைய மாட்டார்கள். அப்படியேயிருந்தாலும் சிரிப்பையும் சிறுநீரையும்கூட சிறுவயதிலிருந்து அடக்கப் பழகியிருக்கும் நமது பெண்களுக்கு இதெல்லாம் எம்மாத்திரம்? எது எப்படியோ, துப்பட்டாவை எடுத்துவந்து என்னை அணிந்துகொள்ளச் சொன்ன மாணவியின் முகம் என்னைத் தூங்கவிடாமல் துரத்திக்கொண்டிருக்கிறது. எப்படிப்பட்ட கோழைப் பூச்சிகளாக மாணவ சமுதாயத்தை நாம் உருவாக்கிக்கொண்டிருக்கிறோம்? ‘உனக்குச் சுதந்திரம் வழங்க மறுக்கும் சமூகத்திடம் எந்தச் சமரசமும் செய்துகொள்ளாதே’ என்று ஊக்குவிக்காத கல்வியால் பெண்ணுக்கு என்ன பயன் இருக்க முடியும். குடும்பம், கல்வி நிறுவனம், சமூகம் என எல்லா அமைப்புகளும் பெண்ணின் உடலை, மனதைக் கண்காணிக்கும் காவல் நிலையங்களாக செயல்படுவதால் நட்டமடைவது பெண் மட்டுமல்ல மொத்த சமூகமும்தான்.

அரசோ ஆணையோ நிறுவனமோ ஏன் தனிமனிதனோ உறவோ வாழ்க்கைத்துணையோ சினேகிதனோகூட எதன் பெயராலோ அதிகாரத்தைச் செலுத்தும்போது அதை ஏன் என்று கேள்வி கேட்க முடியாத பூஞ்சைக்காளான்களாக நம்மை உருவாக்கிக்கொள்வதற்கு கல்வி அவசியமே இல்லை. பேசாமல் மாடு மேய்க்கப் போகலாம். யேசு சபை, புரட்சி, கலக இறையியல் என்றெல்லாம் ஊரை ஏமாற்றாமல் லயோலா போன்ற கல்விக்கூடங்களும் தங்கள் வகுப்பறைகளை மூடிவிட்டு துப்பட்டா கடைகள் நடத்தலாம். கலாச்சாரத்தையும் காத்துக்கொள்ளலாம். வருமானத்தையும் பெருக்கிக்கொள்ளலாம்.

- லீனா மணிமேகலை,
கவிஞர், திரைப்பட இயக்குநர்