ஊர் பெரிய தனம் பூராவும் என் கைக்கு வந்துவிட்டது; முதலாவது நான் ஒரு ஆடம்பர மைனர். இரண்டாவது சில காலிகளும் என் கூடவே இருப்பார்கள். மூன்றாவது, நான் ஒரு பெரிய மனிதன் மகன். நான்காவது, அதிகாரிகள் ஸ்நேகம், அய்ந்தாவது, ஊர் காரியங்கள், தகராறுகள், விவகாரங்களை நானே மேலே எடுத்துப் போட்டுக் கொண்டு பைசல் செய்வது; இவ்வளவும் இருந்தாலே ஒருவனுக்கு ஊரில் செல்வாக்கு இருக்கும்.
இவற்றை விட மற்றொரு குறிப்பிடத் தகுந்த விஷயம் என்னவென்றால், அப்போது இன்கம்டாக்ஸ் டிபார்ட்மெண்ட் இல்லை. தாசில்தார். டிப்டி கலெக்டர் தான் இன்கம்டாக்ஸ் போட வேண்டும். அவர்கள் உள்ளூர் கணக்குப்பிள்ளை, மணியக்காரர் ரிவின்யூ இன்ஸ்பெக்டர் சொன்னபடி தான் போடுவார்கள்.
ஆனால், தாசில்தாரும், டிப்டிகலெக்டரும் ஊரில் ஒரு பெரிய யோக்கியமான வியாபாரியைக் கூப்பிட்டு அல்லது சென்று இரகசியமாய் விசாரித்துக் கொண்டு, இரண்டையும் சரிபார்த்துத்தான் போடுவார்கள். இந்த காரியத்துக்கு ஏற்றபடி பெரிய யோக்கியமான வியாபாரி யாய்' இருந்தவர் என் தகப் பனார். அவர் இருக்கும் போதே, சில சமயங்களில் நான் போய், அவர்களுக்கு வேண்டிய தகவல்கள் இது விஷயமாய் சொல்லுவேன். அவர்களுக்கு, நானே `பெரிய யோக்கியமான வியாபாரி' யாகிவிட்டேன். அந்த இடத்திற்கு யார் வந்தாலும், முன்னவர் செய்தபடி என்னைத் தான் கேட்பார்கள். இந்த சங்கதி எங்கள் ஊர் கணக்கு மணியக்காரருக்குத் தெரியும். ஏன் என்றால் அவர்களும் அப்போது என் வயசுக்காரர்கள்.
எனது 2-ந்தர கூட்டங் ளில் இவர்கள் கலந்தே இருப்பார்கள். ஆதலால், இவர்களுக்கும் என்னைக் கேட்டுத்தான் வியாபாரிகள் வரும்படி தெரிந்தாக வேண்டும். என்னைக் கேட்காவிட்டால், அதிகாரிகளிடம் நான் வேறு மாதிரியாய்ச் சொல்லி விட்டால், இவர் சிபாரிசு கெட்டுப்போகும். வியாபாரி களிடம் இதற்கு ஆக இவர் கள் வாங்கிய மாமூல் பணம் திரும்பக் கொடுக்கவேண்டி வரும். ஆதலால் இவர்களும் என்னைக் கேட்டே இன்கம்டாக்ஸ் லிஸ்ட் தயார் செய்வார்கள். பிறகு, மெள்ள மெள்ள வர்த்தகர்களுக்கும் தெரியும்.
ஆதலால் கணக்கப் பிள்ளை (கர்ணம்) பட்டா மணியக்காரர், ரிவின்யூ இன்ஸ்பெக்டர் முதல் எல்லா அதிகாரிகளும் எனக்கு தெரிந்தவர்கள், என்கின்ற காரணத்தினால், எல்லா வர்த்தகர்களும் கணக்கு மணியக் காரர்களும் கூட என்னிடம் வந்தே குறைந்த அளவுக்கு' சிபார்சு செய்து கொள்ள வேண்டியதாகி விட்டதால், வருவார்கள்.
அடுத்தாற்போல் ஊரில் என்கரோச்மெண்ட் என்னும் நில ஆக்கிரமிப்பு என்கின்ற தொல்லை அதிகம். அப்போது இந்த சர்வேக்கல் வேலை முனிசிபாலிட்டிக்கு இல்லை; அதற்கும் கணக்கு மணியக்காரர்கள்தான் அதிகாரிகள். ஆதலால், அது சம்மந்தமான, இல்லாவிட்டால் கட்டடம் இடிபடும் சிபாரிசுக்கும் என்னிடம் வருவார்கள்.
ஆஸ்பத்திரி டாக்டர்; எனக்கு வேண்டியவர்; குடும்ப சிநேகிதர் போல் இருப்பார். அந்த சிபாரிசுக்கும் என்னிடம் தான் வருவார்கள். ஏனெனில் - ஆஸ்பத்திரி டாக்டர் ஆங்கிலோ இந்தியர்கள். நான் ஹானரெரி மாஜிஸ்ட் ரேட்டாகவும் இருந்தேன். டிப்டி கலெக்டர் எனக்கு சிநேகமானதால் மாஜிஸ்ட்ரேட் எந்த பெஞ்சி கேசுக்கும் என் அபிப்பிராயம்தான் கேட்பார். இதனால், பெஞ்சு கேசில் பட்டுக் கொண்டவர்களும் என்னிடம் வருவார்கள்.
நான் பெஞ்சில் முக்கிய வாயாடி; பெஞ்சு மாஜிஸ்ட்ரேட் ஆனதால், புண்ணுக் கழுத்து பிடிக்கிற எஸ்.பி.சி.ஏ. இன்ஸ்பெக்டர் என் கடையில் வந்து காத்திருப்பார். இதனால், செக்கு ஆட்டும் வாணியச் செட்டியார்கள் (ஈரோட்டில், அப்போது 150 செக்குபோல் ஓடும்) எனக்கு ரொம்பவும் வேண்டியவர்கள். ஒத்தவண்டி, குதிரை வண்டிக்காரர்கள் சிலர், இறங்கிக் கும்பிடுவார்கள். இப்போதைய இம்பிரியல் பாங்கிக்கு அப்போது `மதறாஸ் பாங்கி' என்று பெயர். அந்த பாங்கி ஏஜண்ட் ஒரு துரை, அவருடைய காஷ்கீப் பர் போட்ட, மதிப்பு, அதா வது எந்தெந்த வியாபாரிக்கு எவ்வளவு கடன் கொடுக்கலாம், 3 மாதத்துக்கு ஒரு முறை அவர்கள் அந்தஸ்து எப்படி இருக்கிறது என்பதைப் பற்றிக் கேட்க என்னைக் கூப்பிடுவார்.
ஆதலால், கேஷ்கீப்பர் எனக்கு வேண்டியவரானதால் வியாபாரிகளும் சிலர் எழுந்து வணங்குபவர்களாக இருப்பார்கள்; நான் ரீடிங்ரூம் செக்ரடரி, மகாஜன ஸ்கூல் செக்ரடரி, டென்னீஸ் கோர்ட் செக்ரடரி, தேவஸ்தான கமிட்டி பிரசிடென்ட் முதலிய பல உத்தியோகங்கள் எனக்கு உண்டு; இந்த நிலையில் முனிசிபல் தேர்தலுக்கு நிற்பவர்கள் என்னைக் கேட்காமல் எப்படி நிற்க முடியும்? நான் நினைத்தபடிதான் தேர்தல். அப்புறம் நானே `நாய்க்கர்' (என் தகப்பனார்) ஆகி விட்டேன். நான் போகாமல் எந்த வீட்டிலும் கல்யாணம் நிச்சயதார்த்தம் நடக்காது; நான் போகாமல் அநேக வீட்டில் ப்ரேதம் எடுக்கப்பட மாட்டாது; எந்த கல்யாணத்தில் எந்த மேளத்தானை வைப்பது. எந்த தாசியை சதுருக்கு, பாட்டுக்கு வைப் பது என்பதும் என்னைக் கொண்டே செய்யும்படி ஆகி விட்டதால், இந்த கூட்டமும் எனக்கு ரொம்பவும் வேண்டியவர்களாகவும் மிகவும் கீழ்ப்படிபவர்கள் ஆகவும் ஆகிவிட்டார்கள். கடைசியில் நானே முனிசிபல் சேர்மனும் ஆகிவிட்டேன்.
இதுவரை என் வியாபாரம் சிறிதாவது, அதாவது அக்காலத்தில் ஒரு வருஷத்துக்கு ஒரு 500 ரூபா இன்கம்டாக்ஸ் வரி சுட்டுகிற அளவுக்கு நடந்தது; சேர்மென் ஆனதும், என் வியாபாரம் குறைந்தது. அப்போது எனது தானிய மண்டியில் வேலை பார்த்த ஆள் பணம் கையாடிவிட்டார். எனக்குச் சொந்தமான பஞ்சாலை ஜின்னிங் பேக்டரி எண்ணை செக்கு (ரோட்டரி) ஆகிய எந்திரசாலையில் வேலை செய்த ஏஜெண்ட் நான் சரியாய் வேலைகளை கவனித்து அவருக்கு தக்கது செய்வதில்லை என்று சொல்லி விலகி விட்டார். நான் சிபாரிசு செய்து ஜாமீன் போட்டு கடன் வாங்கிக் கொடுத்த வியாபாரிகள் பணம் கட்டமுடியாமல் என் மீது குறை கூறும்படியான அளவுக்கு வாய்தாவில் டியூ கட்டாமல் தவறவிட்டு விடுவார்கள் போல் தோன்றிற்று.
உடனே வியாபாரத்தைக் கூட கவனியாமல் விழுந்து போன வியாபாரிகள் பொறுப்பை நான் ஏற்றுக் கொண்டு அவர்கள் சொத்துக்களை விற்று அவர்களை மீட்டுவிட்டு என் பஞ்சாலையை விற்றுவிட்டு, வியாபாரம், மாத்திரம் நன்றாய் ஏற்பாடு செய்து கொண்டு' சேர்மன் வேலையையும் ஊர் வேலையையும் செய்து கொண்டு நல்ல பிரபலமாய் இருந்து வருகிறேன்.
இந்த சந்தர்ப்பத்தில் சி.ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் சேலம் சேர்மேன்; டாக்டர், வரதராஜலுநாயுடு அவர்கள் ஜஸ்டிஸ் கட்சிக்கு எதிர்ப்பாகவும் பெசண்ட் அம்மைக்கு எதிர்ப்பாகவும் (பெயர் ஞாபகமில்லை ஏதோ ஒரு பெயருடன் திருப்பூரில்) ஒரு வாரப் பேப்பர் நடத்திக் கொண்டு, சந்தா சேர்க்க ஈரோட்டுக்கு, வந்தார். அவருக்கு ஈரோடு கடைவீதிகளில் பல சந்தா சேர்த்துக் கொடுத்து, வீட்டில் விருந்து செய்து, பெருமைப்படுத்தினேன்; என்றாலும் அப்போது நான் பெசண்ட் அம்மைக்கு வேண்டியவனாகவும் ஈரோடு பிரம்மஞான சபைக் கூட்டத்திற்கு மெம்பராகவும் இல்லாமல் இருந்தாலும் வக்கீல் எல்லாம் மெம்பரான தால் அவர் நட்புக்கு அடிக்கடி போய் வருபவனாகவும் இருந்தேன்;
பெசண்ட் அம்மையை இண்டென்ட் செய்த காலத்தில் சர்க்காருக்கு விரோதமாக, அந்தம்மைக்கு அனுகூலமாக, பல காரியங்கள் கூட செய்து கொண்டு இருந்த சமயம்; ஏனெனில், எனக்கு அரசியலிலும் ஆசை இருந்தது. இண்டியன் பேட்ரியட் பத்திரிக்கை அடிக்கடி என்னைப்பற்றி புகழ்ந்து எழுதும்; ஆசிரியர் கருணாகர மேனனுக்கு என்மீது அன்பு உண்டு; அதில், அப்போது உதவி ஆசிரியராய் இருந்த ரங்கைய்யர் எனக்கு நல்ல பழக்கமுடையவர். இந்தக் கூட்டத்தில் இருந்த என்னை டாக்டர். வரதராஜீலு நாயுடுவின் சினேகமானது பெசண்ட் அம்மைக் கூட்டத்திலிருந்து பிரித்துவிட்டது.
டாக்டர் வரதராஜீலுநாயுடு மீது மதுரையில் கேசு நடந்த போது, சி.ராஜகோபாலாச் சாரியாரும், டாக்டர், நாயுடுவும் ஈரோடுக்கு வந்துதான், கேஸ் விசாரணைக்கு மதுரைக்குப் போவார்கள்; இதற்கு முன்பே எனக்கும், சி.ராஜகோபாலாச்சாரியாருக்கும் அவர் வக்கீல் என்கிற முறை யில் பழக்கம் இருந்தது. சில ஆண்டு விழாக்களில் பேசியிருக்கிறோம். ஆச்சாரியார் முனிசிபல் சேர்மேனானதால், நானும் சேர்மனாயிருந்ததால் ஈரோட்டு சேனி டேஷன், ரோட்டு நன்றாக இருப்பதாக ஈரோடுக்கு கேசுக்கு வரும்பொழுதெல்லாம் சொல்லி என்னைப் புகழுவார். ``ஈரோடு, இயற்கையில் நல்ல சாக்கடை வசதியும், ரொம்பவும் குறைந்த மயில் நீளமுள்ள ரோட்டமைப்பாகவும் அதிக பண வரும்படி உள்ள முனிசீபாலிடி ஆனதாலும், ஈரோடு உங்கள் கண்ணுக்கு அப்படித் தோன்றுகிறது'' என்று நான் சொன்னேன்.
இதைக் கேட்டு அவர் மகிழ்ச்சி யடைந்து ``நாய்க்கர் உண்மையிலேயே பெருமையை வெறுப்பவர். என்பதாக நன்றாய்த் தெரிகிறது'' என்று, மேலும் புகழ்ந்தார். ``இவ்வளவு சாமார்த்தியம் இருப்பதால்தான், தாங்கள் கெட்டிக்கார வக்கீலாக இருக்கிறீர்கள்'' என்றேன்; கூட இருந்தவர்கள் சிரித்தார்கள்; எங்களுக்குள் அன்பு ஏற்பட்டது; இந்த அன்பு இருக்கும்போது, ஆச்சாரியார் டாக்டர் நாயுடு கேசு விஷயமாக செல்லுகையில் நம்ம வீட்டிற்கு நாயுடு உடன் வந்தபோது, `நாயுடு கேசுக்கு வக்கீலாக வருகிறார்; பீசு இல்லாமல் பேசுகிறார்', என்ற காரணத்தால் ஆச்சாரியாரிடம் எனக்கு அதிக அன்பு, நெருங்கிய தொடர்பு கொண்டு பெசண்டம்மைக்கு விரோதமாக வேலை செய்தார்கள். நாயுடு ஸ்நேகம் காரணமாக நான் அந்த தொண்டில் இழுக்கப்பட்டேன்.
அவர்கள் கூப்பிடும் கூட்டங்கட்கெல்லாம் செல்ல ஆரம்பித்தேன். இந்த மத்தியில், ஜஸ்டிஸ் கட்சிக்கு விரோதமாக, `சென்னை மாகாண சங்கம்' என்ற பெயரால் பார்ப்பன ரல்லாதாருக் கென்றே ஒரு சங்கம் துவங்கி வேலை செய்து வந்தது. அந்த ``மெட்ராஸ் பிரசிடென்ஸி அஸோஸியேஷன்'' என்ற சங்கத்துக்கு கேசவபிள்ளை தலைவர், லாட். கோவிந்த தாஸ், சல்லா குருசாமி செட்டியார், நாகை வி.பக்கிரிசாமி பிள்ளை, (காயாரோகணம் அவர்கள் தகப்பனார்) நான், ஆகியவர்கள் உபதலைவர்கள். டாக்டர் நாயுடு, திரு.வி. கல்யாணசுந்தர முதலியார் அவர்களும் கார்யதரிசிகள், என்பது எனது ஞாபகம், அதில், நான் அதிக பங்கெடுத்துக் கொண்டேன். பத்திரிக்கைக்கு ``1000 ரூபா கொடுத்தேன்.
1000 ரூபாய்க்கு மேல் செலவு செய்து ஈரோட்டில் நான் வரவேற்புக் கழக தலைவனாக இருந்து லாட் கோவிந்ததாஸ் தலைமையில் ஒரு மகாநாடு நடத்தினேன். அதில் தமிழ்நாடு பிரபலஸ்தர்களும், தொண்டர்களும் முக்கியமான காங்கிரஸ் தலைவர்களும் அறிமுகமானார்கள். விஜயராகவாச்சாரியார். சி.இராஜகோபாலச் சாரியார். டாக்டர். ராஜன். சீரங்கம் கொடியாலம் வாசுதேவ அய்யங்கார் பிள்ளை கே.வி. ரங்கசாமி அய்யங்கார் முதலிய பார்ப்பன பிரமுகர்களும் மற்றும் எனக்கு முன்பு சாதாரண வியாபாரி என்கின்ற முறையில் அறிமுக மாகியிருந்தார்கள். பலரும் அரசியலிலும் சினேகமானார்கள். ஆனதால் பல வெளியூர் வியாபாரிகளும் சிதம்பரம்பிள்ளை, கல்யாணசுந்தர முதலியார், ஆதி நாராயண செட்டியார் முதலியவர்களும் அப்பொழுது முதல் அதிக சினேகிதர்கள் ஆனார்கள்.
அந்த மகாநாட்டில் 100க்கு 50க்கு குறையாமல் பார்ப்பனரல்லதாருக்கு உத்தியோகப் பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்று தீர்மானம் செய்யப்பட்டது. இதன் பயனாய் அரசியல் சம்பந்தமான எல்லாக் கூட்டங்களுக்கும் மகாநாடுகளுக்கும் நான் அழைக்கப்பட்டேன். நானும் ஈரோட்டிலிருந்து பெரும் கூட்டத்தோடு ஒவ்வொரு மாநாட்டுக்கும் சென்று வந்தேன். எனக்கு, என்தொழிலை விட இதில் அதிக பற்று உணர்ச்சி ஏற்பட்டு விட்டது. இந்த சந்தர்ப்பத்தில் ராஜகோபாலச்சாரியார் சேலம் விட்டு, சென்னைக்கு போய்விட நினைத்தார். தன்னுடன் இருந்து, வேலை செய்ய என்னையும் அழைத்தார். தான் சேலம் சேர்மன் வேலையை விட்டு விடுவதாகச் சொன்னார். டாக்டர். நாயுடு என்னையும் சேர்மன் வேலையை விட்டு விட்டு தங்களோடு கலந்து அரசியல் காரியமே செய்யலாம் என்றார்.
மூவரும் கலந்து பேசியதில் எனக்கு துணிவு ஏற்பட்டு நானும் சம்மதித்து விட்டேன். சர்க்கார் நடத்தையைக் கண்டித்து சேர்மன், தாலுகா போர்ட் பிரசிடெண்ட், ஜில்லாபோர்ட் மெம்பர், யுத்தக் கமிட்டி கார்யதரிசி, ஹானரரி ரிக்ரூடிங் ஆபீசர் முதலிய பல கௌரவ வேலைகளை ஒரே காகிதத்தில் ராஜினாமா கொடுத்தேன். இது நடந்து பத்திரிக்கையில் வெளி வந்தவுடன் ``சுதேச மித்திரன்'' ``ஹிந்து'' இரண்டும் தலையங்கம் எழுதி என்னைப் புகழ்ந்து பிரமாதப் படுத்திவிட்டன. இதைப் பார்த்து அப்பொழுது சென்னை சர்க்கார் லோகல் முனிசிபல் டிபார்ட்மெண்ட் இலாகா நிர்வாகச் சபை மெம்பரான சர்.பி. ராஜ கோபாலாச்சாரியார் தன்னை ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் வந்து, அடுத்த நாள் காலையில் சந்திக்கும் படி சென்னையிலிருந்து தந்தியனுப்பினார். அப்போது, அவரை ரயிலில் போய் பார்த்தேன். பக்கத்தில் அவரது மலையாள மனைவி இருந்தார்; அந்த அம்மையாரிடம், அடிக்கடி என்னைப் பற்றி அவர் பேசுவது வழக்கம். அந்த அம்மையாரும், என்னிடம் அன்பாய்ப் பேசுவார்கள்.
அப்போதைக்கு, சுமார் இரண்டு மாதத்திற்கு முன், ஈரோட்டில் நான் சேர்மனாக இருந்து `தண்ணீர்க்குழாய் துவக்க விழா' நடந்தபோது, அதை நடத்த பி.ராஜகோபாலாச்சாரியாரை அழைத்ததற்கு, அவர் மனைவியுடன் வந்து துவக்கவிழா நடத்தினபோது, என்னைப் பற்றி மிகமிகப் புகழ்ந்து பேசியதை அந்தம்மையும் கேட்டுக் கொண்டிருந்தார். ஆதலால், அந்தம்மையிடம் நான் சேர்மன் பதவியை ராஜீனாமா கொடுத்துவிட்டதாக இவர் சொன்னஉடன், அந்தம்மையார் வருத்தப்பட்டு என்னை, ராஜினாமாவை வாபஸ் வாங்கிக் கொள்ளும்படி செய்வதாக இந்தம்மையார் கணவனுக்கு சொல்லியிருக்கிறார். இதை அனுசரித்து, அந்தம்மையார் என்னைக் கண்டதும் அன்பாய் வரவேற்று, தனக்குப் பக்கத்தில் உட்காரச் சொன்னார்; நான் உட்கார்ந்தேன். உடனே கணவர் வண்டியை விட்டுக் கீழே இறங்கி, பிளாட்பாரத்தில் நின்று கொண்டார்.
அம்மையார் ``நாய்க்கரே, நீங்கள் ராஜினாமா கொடுத்துவிட்டீர்களாம். நிஜமா?'' என்றார். நான் ``ஆம்'' என்றேன். ``அது சரியல்ல; எங்கள் அய்யர் உங்களுக்கு ராவ் சாகீப் பட்டம் சிபார்சு பண்ணியிருக்கிறார்; அய்யருக்கு அவமானமாய் விடும். அய்யர் ரொம்பவும் வருத்தப்படுகிறார். உங்களுக்கு, மேலும் ஏதோ உத்தியோகம் கொடுக்கவேணும் என்று யோசித்துக் கொண்டிருக்கிறார். நீங்கள் கண்டவங்க பேச்சைக் கேட்டு அப்படிச் செய்யாதீர்கள். அதை வாப்பஸ் வாங்கிக் கொள்ளுங்கள் என்றார்’’ என்றார். ``செய்து போட்டேனே அம்மா. இனி, வாபஸ் வாங்கினால் எனக்கு அவமானம். ஆபிஸுலும் நான் எல்லோரிடமும் சொல்லி விட்டேன்; ஊரிலும் கலெக்டர் முதல் கேட்டும், `மாட்டேன்' என்று சொல்லிவிட்டேன். இனி, எப்படி வாபஸ் வாங்குவது? மன்னிக்க வேண்டும்'', என்று கெஞ்சினேன்.
அய்யர் (சர்.பி.ராஜகோபாலச்சாரியார்) இதை ஜாடையாகப் பார்த்துக் கொண்டிருந்தார். `முடியவில்லை' என்று அறிந்து, வந்து, வண்டிக்குள் ஏறினார். நான் எழுந்து நின்றேன். என் கையைப் பிடித்து ``சிட் டவுன்மை பாய் (உட்காரு என் மகனே)'' என்று உட்கார வைத்து ``நீ அப்படிச் செய்யாதே. உனக்கு பாலிடிக்ச் தெரியாது. உனக்கு அது தகுதியல்ல. நீ நல்ல வியாபாரி; உனக்கு வேண்டிய பெருமை ஏராளமாக இருக்கிறது... அதற்கு ஏன் போகிறாய்?... கவர்ன்மெண்டில், உன்மீது நல்ல அபிப்ராயம், கலெக்டரும் உன்னை பற்றி, நிறையச் சிபாரிசு செய்திருக்கிறார். என் பேச்சைக்கேள். நான் உன் தகப்பனார் உங்கய்யா, எனக்குத் தெரிந்தவர். நான் உங்கள் ஊரில் சப்-கலெக்டராக இருந்தேன். என்ன சொல்கிறாய்? என்னிடமே ஒரு கடிதம் எழுதிக்கொடு... `நான் ராஜீனாமாவை வாபசு வாங்கிக் கொண்டேன்'' என்று சொல்லி, ஒரு கடிதத்தைக் கொடுத்தார்.
நான் ``மன்னிக்க வேண்டும். ஊரிலேயே குடி - இருக்க முடியாது. யார்யாரோ சொல்லி முடியாது என்று சொல்லி விட்டேன்'' என்றேன் ``என்ன மகாப்பிரமாதமாய் பேசுகிறாய். பண்டித மதன் மோகன் மாளவியாவே தான் கொடுத்த ராஜீனாமாவை வாபஸ் வாங்கிக் கொண்டார். போன வாரத்தில், நீ என்ன பிடிவாதம் செய்கிறாய்?’’ என்றார். நான் மறுபடியும் ``மன்னிக்க வேண்டும்'' என்று கைகூப்பி கும்பிட்டேன்; ``நீ தவறு செய்கிறாய்; பொது ஜனங்களுக்கும் துரோகம் செய்கிறாய். உனக்கும் விரோதம் செய்து கொள்ளுகிறாய். உன் இஷ்டம் போ'' என்று சொல்லி என்னை அனுப்பி விட்டார். ரயில் புறப்பட்டுவிட்டது, இதற்குப் பிறகு ஊரில் எனக்கு இன்னமும் அதிக பெருமை ஏற்பட்டுவிட்டது. இரண்டு மூன்று நாளில் ஈரோட்டுக்கு வந்த சி.ஆர். - இடமும் டாக்டர். நாயுடுவிடமும் இதைச் சொன்னேன். அவர்களுக்கு என்னைப் பற்றி, மிகப் பெரிய எண்ணம் ஏற்பட்டு விட்டது. ஒரு நல்ல ஆள் அவர்களுக்கு கிடைத்ததாகக் கருதிக் கொண்டு என்னிடம் அதிக மரியாதை காட்டினார்கள்.
சி.ஆர். அவர்கள் என்னை சென்னைக்கு வந்துவிடும் படி அழைத்தார். நான் வாடகைக்கு வாங்கி குடியிருக்கும் பங்களாவில், ஒருபாகம் இடம் காலியாய் இருப்பதாகவும், மனைவியுடன் வரும்படியும் அழைத்தார். டாக்டர். நாயுடு என்னை சென்னைக்குப் போக வேண்டாமென்றும், இஷ்டப்பட்டால் சேலத்துக்கு வந்து தன்னுடன் ஒன்றாக குடும்பத்துடனே இருக்கலாம், என்றும், அழைத்தார், எனக்கு எங்காவது போய் விடலாம்; ஈரோட்டில் இருக்க வேண்டாம்; என்றே தோன்றிற்று. ஆனால், ஈரோட்டு வியாபாரிகள்'' நீங்கள் எங்கும் போகக் கூடாது. ஈரோட்டில் இருந்து கொண்டே எங்கு வேண்டுமானாலும் போங்கள்; நீங்கள் போய்விட்டால் ஊருக்கு மதிப்பு கெட்டுப் போகும்'' என்றார்கள். என் மனைவிக்கு இவர்கள் வருவதும், போவதும் நான் வேலை ராஜினாமா கொடுத்ததும், சர்க்கார் `மெம்பர் டைடில்' கொடுப்பதாகச் சொல்லியும் நான் ஒப்புக் கொள்ளாததும், ஊரையும், வீடுவாசலையும், மாடுகளையும் விட்டுவிட்டு வெளியூருக்கு ஒண்டுக்குடியாய்ப் போவதும்'' சிறிதும் பிடிக்க வில்லை.
``உனக்கு என்ன பயித்தியமா. நம்ம நிலை என்ன? சங்கதி என்ன? ஆளு அம்பு வாழ்க்கை என்ன? இவைகளை, திடீரென்று விட்டு விட்டு யாரிடம் ஒப்புவித்து விட்டுப் போவது? நீ வேண்டுமானால் போ; நான் வெளியூருக்குப் போய் ஒண்டுக்குடியாய் இருக்க முடியாது'' என்று சொன்னார்கள். நான் `சரி, எங்கும் போகவில்லை இங்கேயே இருக்கிறேன். நீ மாத்திரம், நான் சொல்லுகிறபடி நடக்க வேண்டும்'' என்றேன் ``சரி'' என்று ஒப்புக் கொண்டார்கள். மகா நாடுகளுக்கும், காங்கிரஸ் மகாநாட்டுக்கும் நான் ஈரோட்டிலிருந்தே பெருங்கூட்டத்துடன் செல்வேன் மகாநாடுகளில் எனக்குத் தனி மரியாதை இருக்கும். இந்த நிலையில், சென்னையில் இருப்பவர்கள் இடமிருந்து அரசியல் ஆதிக்கத்தைக் கைப்பற்ற வேண்டும்; என்பதாகக் கருத்து கொண்டு ஒரு இரகசிய கூட்டத்தை சீரங்கத்தில் சி.ஆர்.கூட்டினார்.
அதில் சேலம் விஜயராகவாச்சாரி யார், சி.ராஜகோபாலாச்சாரி யார், டாக்டர். டி.எஸ்.எஸ். ராஜன், ஆதி நாராயண செட்டியார், ஜார்ஜ் ஜோஸப், டாக்டர் நாயுடு, நான் ஆகியவர்களே முக்கியமாய்க் கூடிப் பேசினோம். அதில் முக்கியமாகப் பேசினது ``பெசண்டம்மையார் ஆதிக்கத்தை ஒழிப்பதுதான்'' இதற்கு ஒரு கமிட்டி நியமித்து, பணவசூல் செய்வது; ஒரு பத்திரிக்கை துவக்குவது; ஊர் ஊராய் சென்று பிரச்சாரம் செய்வது ஆகியவை நோக்கம். பிரச்சாரத் திட்டம் என்னவென்றால் `பெசன்ட் அம்மை எங்கள் பிரதிநிதி அல்ல. அந்த அம்மாள் அபிப்பிராயம், இந்த நாட்டு மக்கள் அபிப்ராயமல்ல' என்று உலகறியச் செய்ய வேண்டும், என்பவையாகும். இதைச் செய்ய சென்னை கஸ்தூரி ரங்க அய்யங்கார் கூட்டம் ஒட்டிக் கொள்ள தைரியம் இல்லை.
அது மாத்திரமல்லாமல் சி.ஆர். முன்னுக்கு வருவதும் அப்போது அவர்களுக்கு பொறாமையாய் இருந்தது. இதை அறிந்து சி.ஆர். ஒரு தனிக்கட்சி மாகாணத்துக்கே ஏற்படுத்த முயற்சித்தார்; அதற்கும் நாங்கள் சம்மதித்தோம்; திரு.வி.க. அவர்களும் இதில் முக்கிய பங்கு கொண்டார். உடனே சென்னை சௌந்தர்ய மகாலில் அது நடக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்குப் பெயர் ``மெட்ராஸ் நேஷனலிஸ்ட் அஸோஸியேஷன்'' அது கஸ்தூரி ரங்கய்யங்கார் கூட்டம் இதில் கலந்து கொண்டதற்கு காரணம் நான், டாக்டர். நாயுடு, திரு.வி.க. மூவரும் இதில் கலந்ததால் பார்ப்பனரல்லாதாரிடம் உள்ள செல்வாக்கு, தங்களுக்குப் போய்விடுமே என்ற பயம்தான். மற்றும் ஆந்திரா, மலையாளம், தமிழ் ஆகிய எல்லா நாடுகளில் இருந்தும் பிரதிநிதிகள் வந்தார்கள்.
இது பெரிய பிரபல மகாநாடாக ஆகிவிட்டது. வி.ஓ. சிதம்பரம் பிள்ளை, தண்டபாணிப் பிள்ளை ஆகியவர்களும் கலந்து கொண்டார்கள். அது பல தீர்மானங்கள் செய்தது. அதில் 100க்கு 30 ஸ்தானங்களுக்கு குறைவில்லாமல் பார்ப்பனரல்லாதார்களுக்கு உத்தியோகம், பிரதி நிதித்துவம் எல்லாம் கொடுப்பது என்பதாக ஒரு தீர்மானம் செய்தது. இதற்கு முக்கிய காரணம் நானேயாகும். டாக்டர். நாயுடுவும் திரு.வி.க.வும் உத்யோக விகிதாச்சாரத்துக்கும் வகுப்பு உணர்ச்சிக்கும் அப்போது எதிர்ப்பானவார்கள். நான் ஒவ்வொன்றுக்கும் வகுப்பு வீதம் கேட்பவன். அதனால், எனக்காக அதைச் செய்தார்கள். அந்த மாநாட்டுக்கு நான்கு காரியதரிதிகள், சி.ஆர்.பிரதம காரியதரிசி, நான் டி.பிரகாசம், கே.பி. கேசவமேனன் மூவர், முறையே தமிழ், ஆந்திரம், கேரளம் ஆகிய மூன்று நாட்டுக்கு காரியதரிசிகள் விஜயராகவாச்சாரியார் தலைவர், கஸ்தூரி ரங்க அய்யங்கார் பி.சிதம்பரம் பிள்ளை உபதலைவர்கள்.
இந்த இடத்தில் ஒரு முக்கிய சங்கதி; என் ஞாபகத்துக்கு வருகிறது. அதாவது ``மதராஸ் நேஷனலிஸ்ட் அசோசியேஷனுக்கு சி.விஜயராகவாச்சாரியாரை தலைவராக பிரேரபித்து மக்கள் ஒப்புக்கொண்ட உடன், சி. கஸ்தூரிரங்க அய்யங்கார் அவர்களை உபதலைவராக சி.ராஜ கோபா லச்சாரியார் பிரேரபித்தார். உடனே வி.ஒ. சிதம்பரம் பிள்ளை அவர்கள் பெயரையும் நான் பிரேரபித்து, இரண்டு உபதலைவர் இருக்க வேண்டும் என்று சொன்னேன். என். தண்ட பாணிபிள்ளை இதை ஆமோதித்தார். கஸ்தூரிரங் கய்யங்காருக்கு இது பிடிக்க வில்லை சி.ஆர். அவர்கள் ஒரே உபதலைவர். போதும்' என்றார்.
இது வாதத்துக்கு இடமாய் விட்டதுடன் வி.ஒ.சிதம்பரம் பிள்ளைக்கு இந்த மரியாதை கொடுப்பது கஸ்தூரிரங்கய்யங்கார் கூட்டத்திற்கும் மற்றும் சில பாப்பனர்களுக்கும் பிடிக்கவில்லை, என்று அக்கூட்டத்தில் உள்ள பல பார்ப்பனரல்லாத மக்கள் உள்ளத்தில் பட்டுவிட்டது; சி.ஆர். ஆச்சாரியார் இதை சமாளிக்க என்னமோ செய்து பார்த்தார். அவர் சாமார்த்தியம் கூட்டத்தில் பலமான பிளவு ஏற்படும்படி செய்துவிட்டது. உடனே, கூட்டத்தை ஒத்திவைத்து மாலைக் கூட்டத்தில் முடிவு செய்து கொள்ளலாம் என்று தள்ளி வைக்கப் பட்டுவிட்டது. நானும் டாக்டர். வரத ராஜுலு நாயுடுவும் திரு.வி.க. அவர்களும் ராஜ கோபாலாச்சாரியாரும் ஒரே காரில் ஏறி ஜாகைக்கு வரும் போது வழியில் ஆச்சாரியார் உப தலைவர் நியமன சம்பவத்துக்கு சமாதானம் சொல்லும் முறையில் எங்களைப் பார்த்து ``இன்றைய நடவடிக்கை, ஜஸ்டிஸ் கட்சியாரே மேலானவர்கள் என்று கருதும் படியாக ஆகிவிட்டதே'' என்று சொன்னார்.
அதற்கு நாங்கள் ஒரு வரை ஒருவர் பார்த்து'' ஜாடை செய்து கொண்டதோடு நான் ஆச்சாரியாரைப் பார்த்து ``தலைவர் விஜயராகவாச்சாரியார். உபதலைவர் கஸ்தூரி ரங்கய்யங்கார். தாங்கள் தலைமை காரியதரிசி இப்படி இருக்கும்போது, ஒரு தமிழர் உப தலைவர்களில் ஒருவராக கூட இருக்க தங்களுக்கு இஷ்டமில்லை என்பதாக மக்கள் நினைக்கும்படியாக ஏற்பட்டுவிட்டதால்தான் சிலர் அந்தப்படி கிளர்ச்சி செய்தார்களே ஒழிய, மற்றபடி வேறு காரணம் ஒன்றும் இல்லை'' என்று நான் சமாதானம் சொன்னேன்; ஆச்சாரியார் பேசவில்லை; மாலைக் கூட்டத்தில் ஒரே உபதலைவர் போதும் என்கின்ற பிரேரபனைக்கு கஸ்தூரி ரங்கய்யங்கார் கட்சி ஓட்டு சேகரிப்பதாக சேதி தண்டபாணி பிள்ளையால் தெரிந்தது. ஆந்திரா, மலையாள பிரதிநிதிகள் எனது பிரேரபனைக்கு எதிராக ஒட்டு செய்வார்கள் என்பதாகவும் தெரியவந்தது.
உடனே நான் 50ரூ. எடுத்து தண்டபாணி பிள்ளை அவர்களிடம் கொடுத்து 100 டெலிகேட் டிக்கெட் வாங்கி 100 தொழிலாளர் தோழர்களை அழைத்து வரும்படி செய்துவிட்டோம் மாலைக் கூட்டம் சௌந்தர்ய மகாலில் கூடிற்று; தொழிலாளர்கள் 100 பேர் வந்து உட்கார்ந்து விட்டார்கள்; என் பிரேரபனை ஜெயித்துவிடும் என்று அய்யங்கார் கோஷ்டி தெரிந்து கொண்டது. இந்த சமயத்தில் ஆச்சாரியார் ஒரு தந்திரம் செய்து ஒரு சமாதான தீர்மானம் கொண்டு வந்தார். அது என்னவென்றால் 4 உபதலைவர்கள்-அதில் வி.ஓ.சி. உள்பட சத்தியமூர்த்தி அய்யரும் ஒருவர்-என்பதாக பிரேரேபித்தார்; நான் ஒப்புக் கொண்டேன்; மற்ற தோழர்கள் அதாவது டாக்டர் நாயுடு திரு.வி.க. தண்ட பாணிப்பிள்ளை ஆகியவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை.
இவர்கள், ஒப்புக் கொள்ளாததால் 4 உபதலைவர்கள் தீர்மானம் தோல்வியுறும் போலாகிவிட்டது; பிறகு, ஒட்டுக்கு விடாமலேயே எனது பிரேரனை ஒப்புக் கொள்ளப்பட்டு கஸ்தூரி ரங்கய்யாங்காரும் வி.ஒ. சிதம்பரம் பிள்ளையும் உபதலைவர்களானார்கள். சத்தியமூர்த்தி அய்யருக்கும் எ.ரெங்கசாமி அய்யங்காருக் கும் அந்த கமிட்டியில் மெம்பர் பதவி கூட கிடைக்கவில்லை. டாக்டர் நாயுடு, டி.எஸ்.எஸ். ராஜன், திரு.வி.க. ஆகியோர்களும் மற்றும் பலரும் முக்கிய மெம்பர்கள், இதன் பயனாய் சென்னையில் மாகாணத்துக்கே தலைவர்களாக இருந்து வந்த ரங்கசாமி அய்யங்கார் கோஷ்டிக்கும், பெசண்ட் கோஷ்டிக்கும் ராஜ கோபாலாச்சாரியார் கோஷ்டியாக இருந்த எங்கள் மீது பொறாமை ஏற்பட்டது. நாங்கள் மூவரும் அதாவது நான் ஆச்சாரியார், நாயுடு ஆகிய மூவரும் அதிக நண்பர்களாகிவிட்டோம்.
எங்களுக்கு விரோதமாய் கஸ்தூரி ரங்க அய்யங்காரும் ரெங்கசாமி அய்யங்காரும் தங்கள் பத்திரிக்கைகளில் ஜாடையாகவும் சத்திய மூர்த்தி அய்யரைக் கொண்டு வெளியிடங்களில் வெளிப்படையாகவும் எதிர்ப்பிரச்சாரம் செய்யச் செய்தார்கள். நாங்கள் ஆச்சாரியாரை கண்ணை மூடிக்கொண்டு ஆதரித்ததால் அவர்கள் செல்வாக்கு குறைய ஆரம் பித்தது. அநேக பார்ப்பனர்களும் எங்களை ஆதரிக்க முன்வந்து விட்டார்கள். இந்தக் காலத்தில்தான் காந்தியார் அரசியலில் விளம்பரமாகினார். இவருக்கு சி.ஆர். மிக்க உதவி: பஞ்சாப் படுகொலை நடந்த சமயம் அதன் பயனாய் நாடெங்கும் ஆத்திரம் பொங்கி எழுந்த காலம். பஞ்சாப் படுகொலையைக் கண்டித்து எங்கும் கண்டனக் கூட்டம். இந்த வருஷம் 1919 என்பது ஞாபகம். இந்த டிசம்பரில் மோதிலால்நேரு தலைமையில் அமிர்தசரசில் காங்கிரஸ் ஏற்பாடாகியிருந்தது. இந்த காங்கிரஸ் பிரபல காங்கிரசாகிவிட்டது. நானும் ஆச்சாரியாரும் இந்துமித்திரன் கூட்டமும் ஏராளமான மக்கள் சென்றிருந்தோம். அங்கு சென்று நேரில் அந்த படுகொலை சம்பவங்களைப் பார்த்த பிறகு எனக்கு மிகுந்த ஆத்திரம் வந்தது. நான் தீவிர தேசிய வாதியாகிவிட்டேன்.
Subscribe to:
Posts (Atom)