திராவிடத்தால் வீழ்ந்தோமா ?

பெரியாருடைய தத்துவம் என்பது தமிழர்களை - திராவிடர்களை எல்லா ஆழிவுகளிலிருந்தும் மீட்க வேண்டும் என்பதுதான். உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி என்று இல்லை, அணுக்குப் பெண் அடிமையில்லை, அனைவருக்கும் கல்வி கற்கும் உரிமை வேண்டும், படிப்பு - வேலை வாய்ப்பும் - பதவியும் எல்லா வகுப்பினருக்கும் விகிதாசாரப்படி கிடைக்க வேண்டும்... போன்றவைதான் பெரியாரின் கொள்கைகள். இது எதுவுமே இன்னும் சீராகாத நிலையில் அவருடைய தத்துவங்கள் இன்றைய சூழ்நிலைக்குப் பொருந்தாது, இத்தகைய கொள்கைகளால் வீழ்ந்தோம் என்பது பொருத்தமற்றது. பெரியாருடைய கொள்கைகள் என்னவென்று தெரியாதவர்கள்தான் அவருடைய கொள்கைகள் தேவையில்லை என்று சொல்கிறார்கள். ஒரு சம்பவத்தைச் சொல்கிறேன்.1970-ல் இந்திராகாந்தி அம்மையாரின் அமைச்சரவையில் மாகாண மந்திரியாக இருந்தவர் டாக்டர். சந்திரசேகர். மத்திய அரசின் மக்கள் தொகை கட்டுப்பாடு சம்பந்தமான அராய்ச்சியாளர் அவர். வேலூரைச் சேர்ந்த அவர் பெரியாருக்கு நெருக்கமானவர். அவர், பெரியாரைச் சந்தித்து, ""மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. ஆண் குழந்தை வேண்டும் என்பதற்காக தொடர்ந்து பிள்ளை பெற்றுக்கொண்டே இருக்கிறார்கள். இதற்கு என்ன செய்யலாம்?'' என்றார்.""பெண்களுக்கு சொத்தில் சம அந்தஸ்து இருக்கிறது என்று அறிவித்து விடுங்கள், சரியாகிவிடும்'' என்றார். கேட்டவருக்கும் புரியவில்லை.""உன் மனைவிக்கும் வேலை, உன் மகளுக்கும் வேலை. அவர்களுக்கு சொத்தில் சம பங்கு என்ற நிலை வந்தால் பெண்களை யாரும் குறைச்சு மதிப்பிட மாட்டார்கள். ஆண் வாரிசுதான் வேண்டும் என்ற கருத்தும் போய்விடும்'' என்றார் பெரியார். ஆச்சர்யப்பட்டுப் போனார் அந்த அறிஞர்.""உலகத்தில் வேறு யாரும் சொல்லாத ஈங்களின் ஒரிஜினல் ஆலோசனை ஆது'' என்று கூறினார். அவரைப் பிற்போக்குவாதி என்பதும், அவருடைய கருத்துகளினால்தான் வீழ்ச்சியடைந்தோம் என்பதும் நேர்மையான குற்றச்சாட்டாகத் தெரியவில்லை. இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு நாங்களும் ஒரு காரணம். பெரியாரின் சிந்தனைகள், கருத்துகள் என்ன என்பதை - அவருடைய வரலாற்றை - முழுமையாக மக்களிடம் கொண்டு செல்லவில்லை. சமுதாயம், தாழ்த்தப்பட்டவர்கள் பற்றி என்ன சொல்லியிருக்கிறார் என்பதை முழுமையாகக் கொண்டு வரவில்லை. நான் கொண்டுவந்த "பெரியார் சிந்தனைகள்' தொகுதி என்பது ஒரு பகுதி... கொஞ்சம்தான். முழுமையாக வெளிவரவில்லை. இப்போது அவருடைய கருத்துக்களை விமர்சனம் பண்ணுகிறார்கள். அவருடைய எதோ ஒரு வாக்கியத்தைப் பிடித்துக்கொண்டு விமர்சனம் செய்கிறார்கள். "பறைச்சி எல்லாம் ஜாக்கெட் போட்டுகிட்டாப்பா' அப்படீனு பெரியார் பேசியதாக ஒரு கட்டுரையைப் படித்துவிட்டு பேசுகிறார்கள். நடந்தது என்ன தெரியுமா? அப்போது காமராஜரை ஆதரித்துப் பெரியார் பேசுகிறார். "காமராஜர் ஆட்சியில் தாழ்த்தப்பட்டவர்கள் முன்னேறியிருக்கிறார்கள். ரவிக்கை போடக்கூடாத நிலையில் ருந்த அந்த சமுதாயப் பெண்கள் ரவிக்கை போட ஆரம்பித்திருக்கிறார்கள். இது காமராஜர் ஆட்சியின் சாதனை' என்றுதான் பெரியார் பேசினார். அந்தக் கூட்டத்தில் நான் இருந்ததால் சொல்கிறேன்.1950 வரை நாடார்கள் தீண்டப்படாதவர்கள். அவர்கள் வீட்டில் யாரும் தண்ணீர் குடிக்க மாட்டார்கள். 1920ம் செங்கல்பட்டு மாநாட்டில் நாடார்களை அழைத்து சோறாக்கச் சொன்னவர் பெரியார். அவர் எப்படி தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரானவராக இருக்க முடியும். ஆகவே, பெரியார் சொன்னதின் மையக்கருத்தைத் தெரிந்து கொள்ளாமல் பேசும் விமர்சனங்கள் பிழையானவை.

-வே.ஆனைமுத்து

பாரதி நாத்திகனா சோ !?..

வாழ்க தமிழுடன்

பெறுநர்

சோ
ஆசிரியர்
துக்ளக்
சென்னை.

என்றென்றும் தமிழுக்கும் தமிழருக்கும் எதிரான சோவே தங்களின் 26.09.2007 தேதியிட்ட துக்ளக் தலையங்கம் கண்டேன். வெளிப்படையாகவே தமிழை, தமிழினத்தை தாங்கள் அவமானப்படுத்தியுள்ளீர்கள். இந்தத் தமிழர்களும் சூடு சொரணையற்றவர்களாக இதனையும் பார்த்துக் கொண்டு சும்மாத்தான் இருக்கப் போகின்றார்கள்.

00

இராமர் குறித்துத் தமிழக முதல்வர் கருத்துச் சொன்னால் தாங்கள் தமிழினத்தையே கேவலப்படுத்த முனைந்துள்ளீர்கள். உங்கள் உள்ளத்திற்குள்ளே நீண்ட நாட்களாக தொல்காப்பியத்தையும், திருக்குறளையும் குறித்து என்ன எண்ணம் கொண்டுள்ளீர்களோ அதனை மிகத்திறமையாக தங்கள் தலையங்கத்திலே எழுதித் தமிழினத்தைக் கொச்சைப் படுத்தியுள்ளீர்கள்.

இராமன் என்று ஒருவன் இல்லை என்றால் அதற்குத் தொல்காப்பியனையும் திருவள்ளுவரையும் இழுக்க வேண்டிய அவசியம் என்ன.

கடலினைத்தாவும் குரங்கும் வெங்
கனலிடைப் பிறந்த செவ்விதழ்ப் பெண்ணும்
வடமலை தாழ்ந்ததனாலே தெற்கே
வந்து சமன்செய் குட்டைமுனியும்
நதியினுள்ளே மூழ்கிப் போய் அந்த
நாகர் உலகில் ஒரு பாம்பின் மகளை
விதியுறவே மணம் செய்த திறல்
வீமனும் கற்பனை என்பது கண்டோம்
ஒன்று மற்றொன்றைப் பழிக்கும்
ஒன்று உன்மையொன்றோதி மற்
றொன்று பொய்யென்னும்
நன்று புராணங்கள் செய்தார் அதில்
நல்ல கவிதைகள் பலபல தந்தார்
கவிதை மிக நல்லதேனும் அக்
கதைகள் பொய்யெனத் தெளிவுறக் கண்டோம்

என்கின்றான் எங்கள் எட்டையபுரத்தான் பாரதி.

நண்பர் மாலன் குமுதம் இதழில் ஆசிரியராக இருந்த காலம் அதன் கடைசிப்பக்கத்தில் ஒருமுறை இந்தக்கவிதையினை வெளியிட்டிருந்தார். இந்தக் கவிதையைத் தாங்கள் படித்திருக்க வாய்ப்பில்லை. இது உண்மைக்கவிஞன் பாரதியின் வரிகள். வடமொழியை காசிச் சர்வகலாசாலையிலே கற்றவனின் கூற்று. இதற்கு என்ன பதில் சொல்வீர்கள்.

வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு என்கின்றான் பாரதி.

நேரு நாத்திகர் என்று சொல்லி உள்ளீர்கள். அது நாடறிந்த உண்மை. ஆனால் பாரதி நாத்திகனா சோ!?..

கண்ணகியைப் பற்றி நீங்கள் கூறியதை ஏற்றுக்கொள்கின்றேன். அது அதீத கற்பனை. ஆனால் வாழ்வாங்கு வாழ்ந்த வள்ளுவப்பேராசானையும், தொல்காப்பியனையும் நாங்கள் சொல்ல மாட்டோம் நாங்கள் சொல்லமாட்டோம் என்றே நரித்தனமாக கொச்சைப்ப்டுத்தியுள்ளீர்களே.

தமிழின் மீது இத்தனை வெறுப்போடு ஏன் தமிழில் வார இதழ் நடத்துகிறீர்கள். தங்களின் மொழியான வடமொழியில் நடத்த வேண்டியதுதானே.

வான்மீகத்தைத் தமிழில் மொழிமாற்றம் செய்தபோது தமிழர் பண்பாட்டிற்கேற்றபடி கம்பன் மொழிமாற்றம் செய்தான்.வான்மீகத்தை அப்படியே தமிழில் தாங்கள் தந்தால் அந்த நாகரிகத்தைத் தமிழர்கள் கேட்டுச் சிரிப்பார்கள்.

எல்லை தாண்டுகிறீகள் சோ.

தங்களைத் தாங்களே அறிவாளி என்றும் மேதை என்றும் மகுடம் சூட்டிக்கொள்கின்ற அறியாமையில் இருந்து விடுபடுங்கள்.

நல்ல தமிழர்கள் வீறுகொண்டு எழும் வரை தாங்கள் இந்த அறியாமையில் இருந்து விடுபட மாட்டீர்கள். தொல்காப்பியனையும், வள்ளுவனையும் தொட்ட உங்களை விடப் போவதில்லை தமிழர்கள்.

பார்ப்பீர்கள் விரைவில்..


-நெல்லை கண்ணன்
20/09/2007
நெல்லை நகரம்
சேது சமுத்திரத் திட்டம் 150 ஆண்டுகால கனவு. தமிழன் விழித்துக் கொண்டிருந்தாலே திட்டங்களை நிறைவேற்றப்படாத பாடு பட வேண்டும். கனவு கண்டு கொண்டிருந்தால் நிறைவேறுமா? அதுவும் 150 ஆண்டு கால கனவு. (சேது சமுத்திர திட்டம் சுற்றுச்சூழலில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் அது தொடர்பான விளக்கங்களையும் பிரிதொரு சந்தர்ப்பத்தில் காண்போம்.)

சேது சமுத்திரத் திட்டப் பணிகள் நடந்து கொண்டிருக்கிற நிலையில், ராமர் பாலத்தை இடிக்கக் கூடாது என வானர சேனைகளாக மாறியிருக்கிறார்கள் இந்துத்துவா அமைப்பினர். அந்த மணல் திட்டுகள் சாதாரணமானவையல்லவாம். ராமரால் பாதுகாக்க முடியாமல் போன சீதையை இலங்கைக்கு ராவணன் தூக்கிக் கொண்டு போனபோது, அவளை மீட்க வழி தெரியாமல் தவித்த ராமனுக்கு இன்ஜினியர் அனுமாரும் அவரது இனத்தைச் சேர்ந்த வானர சேனைகளும், அணில்குஞ்சும் சேர்ந்து கட்டிக் கொடுத்த பாலம் தான் அந்த மணல் திட்டுகளாம். அதனால், சேது சமுத்திரத் திட்டத்திற்காக ராமர் பாலத்தை அகற்றக் கூடாது என்பது தான் இந்துத்துவா அமைப்பினரின் வாதம்.

வடக்கிலேயே மார்க்கெட் போய்விட்ட ராமர் லேபிளை தெற்கில் வந்து வியாபாரம் செய்யலாம் என இந்துத்துவா அமைப்பினரும் அவர்களது அரசியல் கட்சியான பா.ஜ.கவும், சாதுக்கள் என்ற பெயர்கொண்ட ஆன்மீக அடவாடி (ஆ)சாமிகளும் கௌபீனத்தை (அட கோவணம் தாங்க) வரிந்து கட்டிக் கொண்டு களமிறங்கியிருக்கிறார்கள். இந்த ராமர் மார்க் இந்துத்துவாவிற்கு அமெரிக்காவின் நாசா அமைப்பிடமிருந்து ‘ஐஏஎஸ்ஓ 9001’ சான்றிதழ் வாங்கப் பார்த்தார்கள். நாசா எடுத்த செயற்கைக் கோள் படத்திலேயே அது பல லட்சம் வருடங்களுக்கு முன்பு ராமர் கட்டிய பாலம் தான் என்பது உறுதியாகிவிட்டது என இணையதளத்தில் புளுகு மூட்டைகளை அவிழ்த்து விட்டார்கள்.

நாசமாய்ப் போக... நாசா அப்படியா சொல்லியிருக்கிறது? என அதன் அறிக்கைகளை கடலுக்கடியில் தொடர்ச்சியான மணல் திட்டு இருக்கிறது என்று தான் சொல்லியிருந்தது. இந்துத்துவாவின் இணையதள விற்பன்னர்கள் தான் அதற்கு ராமர் லேபிளை ஒட்டி விற்பனைக்கு விட்டிருக்கிறார்கள் என்பது தெரிய வந்தது. கடைசியில் நாசாவே ஒரு விளக்கமான அறிக்கையும் கொடுத்து விட்டது. அந்த மணல் திட்டு என்பது மனித முயற்சியில் உருவானதில்லை. (அதாவது நாசா விஞ்ஞானிகளுக்கும் ராமர் அவதாரம் என்றோ, லட்சுமணன் அவரது தம்பி என்றோ, அனுமான் அவர்களது பக்தர் என்றோ தெரியாது. எல்லோருமே அவர்களுக்கு மனிதர்கள் தான். அந்த மனிதர்களால் உருவாகவில்லை) இயற்கையாக உருவான மணல் திட்டுகள் என அறிவித்து விட்டனர்.

நாசாவின் ஐ.எஸ்.ஓ சான்றிதழை வைத்து ராமர் மார்க் இந்துத்துவாவை வியாபாரம் செய்து விடலாம் என எதிர்பார்த்தவர்கள் ஏமாந்து போனார்கள். அதன் பிறகு தான், ராமர் பாலத்தை மீட்போம் என மகாயாகம், உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் என கோவணத்தை வரிந்து கட்டத் தொடங்கிவிட்டனர். ராமர் பாலத்தைக் காப்பதற்காக பல 100 பேர் உயிர்த்தியாகம் செய்ய முன் வந்திருக்கிறார்கள் என்றார் இந்து முன்னணி ராம கோபாலன். பா.ஜ.கவிலிருந்து பிரிந்து சென்ற உமாபாரதியோ திடுமென தமிழகத்திற்கு வந்து, ‘பாலத்தைக் காப்பாற்றியே தீருவேன். முடிந்தால் கைது செய்து பார் என்றார்.

விஸ்வ இந்து பரிஷத்தின் தொகாகடியா, பாலத்தை காக்கச் சொல்லி ஒரு கோடி பேர் கடிதம் எழுதுவோம். நாடு முழுவதும் சாலை மறியல் செய்வோம் என ஆவேசத்தைக் கிளப்பினார். 1 கோடி 3 கோடி 100 கோடி என அவர்கள் பேசினார்களே தவிர, அதனைத் தமிழகத்தில் தெருக் கோடிகளில் நின்று உலக அரசியலை அலசுபவர்கள் கூட கண்டுகொள்ளவில்லை. இதனால் ராமர் பாணியிலேயே விதவிதமான பானங்கள் ஏவத் தொடங்கி விட்டார்கள். ராமர் பாலம் அமைந்துள்ள மணல் திட்டுகளில் உலகிலேயே எங்கேயும் கிடைக்காத தோரியம் கனிமம் இருக்கிறது. ஒரு கிலோ ஒரு கோடி ரூபாய் வரை விலை போகிறது. 25 கிலோ மணல் எடுத்தால் ஒரு கிலோ தோரியம் கிடைக்கும் என்று சொல்லியிருக்கிறார் ராமர் சேது பாலம் பாதுகாப்பு குழுவின் தலைவர் டாக்டர் கல்யாணராமன்.

ரொம்ப நல்லதாகப் போய் விட்டது. சேதுக் கால்வாயைத் தோண்டும் கருவிகளைக் கொண்டு அந்த மணலை எடுத்து, கரைக்கு கொண்டு வந்து தோரியத்தைப் பிரித்தெடுக்கத் தொடங்கினால், கடலும், ஆழமாகும், தோரியமும் கிடைக்கும். அரசுக்கு வருமானமும் பெருகும். சேதுக் கால்வாய்த் திட்டச் செலவுகளைத் தோரியத்தால் ஈடு கட்டிவிடலாம். எனவே, சீதையை மீட்கப் போன ராமர், அந்த மணல் திட்டுகளில் தோரியத்தைப் புதைத்து விட்டுப் போயிருந்தால் அது நாட்டுக்கு இலாபம் தான்.

இந்துத்வா அமைப்பினரின் அடுத்த பானம், ராமர் பாலத்தை இடித்தால் ராமேஸ்வரத்தை சுனாமி தாக்கும் என்பது தான். விஞ்ஞானிகள் சொல்கிறார்கள் என துணை பானங்களையும் ஏவுகிறார்கள். 2004ல் தமிழகக் கடற்கரையை சுனாமி தாக்கிய போது ராமேஸ்வரம், திருச்செந்தூர் கடற்கரைகள் தப்பின. அதற்குக் காரணம், அவற்றிற்கு முன்உள்ள இலங்கைக் தீவு சுனாமியின் கோரத் தாக்குதலை எதிர் கொள்ள நேர்ந்ததால் ராமேஸ்வரம் தப்பியது. சேதுக் கால்வாய் பணிகள் நடைபெற்றாலும் இலங்கையை யாரும் எதுவும் செய்யப் போவதில்லை. அது அப்படியே தான் இருக்கும் என்பதால் ராமேஸ்வரத்திற்கு பெரிய ஆபத்து எதுவுமில்லை. ராமேஸ்வரம் அருகேயுள்ள மணல் திட்டுகள் கடலுக்குள் புதைந்திருக்கின்றன. இலங்கை என்கிற பெரிதான மணல் திட்டு, கடலுக்கு மேலே தீவாகக் காட்சியளிக்கின்றது. இது இயற்கையான அமைப்பேயன்றி பாலம், பைபாஸ் என்று எதுவும் கிடையாது.

இல்லாத பாலத்தைக் காப்பதற்காகத்தான் யாகம், ஆர்ப்பாட்டம் என வெற்று பானங்களை விட்டுக் கொண்டிருக்கிறார்கள் ராமர் மார்க் இந்துத்துவா அமைப்பினர். ஆகஸ்ட் 26ம் தேதி ராமேஸ்வரத்தில் நடந்த மகாயாகம், மகாநாடு இவற்றிற்காக பல மாநிலங்களிலிருந்தும் ராமர் பக்தர்களைக் கொண்டு வந்து குவித்தன இந்த அமைப்புகள் ஆந்திராவிலிருந்து வந்த இந்துத்துவா அமைப்பினர், டிக்கெட்டே வாங்காமல் வைகை எக்ஸ்பிரஸிலும், குருவாயூர் எக்ஸ்பிரஸிலும் உள்ள ரிசர்வ் பெட்டிகளில் ஏறி இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டனர். முறையாக முன் பதிவு செய்திருந்த பணிகளுக்கு இடமில்லை. இது குறித்து ரயில்வே போலீசாரிடம் புகார் தெரிவிக்கப்பட, அவர்கள் வந்து விசாரித்திருக்கிறார்கள். மறுத்திருக்கிறார்கள் அந்த ‘வித்அவுட்’ ராமர்கள். அப்புறம் போலீஸ் ‘கவனிக்க’த் தொடங்க ராமர் பாலத்தை அப்புறம் காப்போம். இப்போது நம்மைக் காப்பாற்றிக் கொள்வோம் என ஓடியிருக்கிறார்கள் இந்த ‘வித்அவுட்’ பேர்வழிகள்.

பல நூற்றாண்டுகளாக இருந்து வந்த பாபர் மசூதியை இடித்தவர்கள் தான், எந்த நூற்றாண்டிலும் கட்டப்படாத ராமர் பாலத்தை இடிக்க விடமாட்டோம் என்று குரல் கொடுக்கிற அதிசயக் காட்சியை காண முடிகிறது. ராமர், அணிலுடன் தனுஷ்கோடிக்கும், தலைமன்னாருக்கும் பாலம் கட்டிய ராமர், மண்டபத்திற்கும் ராமேஸ்வரத்திற்கும் ஒரு நல்ல பாலத்தைக் கட்டியிருக்கலாமே? வெள்ளைக் காரன் வந்து தானே இரண்டு ஊர்களுக்கும் நடுவே தண்டவாளத்தையும், திறந்து மூடும் வசதியுள்ள பாம்பன் பாலத்தையும் போட்டுவிட்டுப் போனான். ராமர் பாலம் கட்டாமல் விட்டதால், தான் பாம்பன் பஸ் பாலம் கட்டப்பட்டது.

தனுஷ் கோடியிலிருந்து தலைமன்னாருக்கு பாலம் போட்ட ராமர் அண்ட் கோ, மண்டபத்திலிருந்து ராமேஸ்வரத்திற்கு பாலம் போடாமல் எப்படிக் கடலை கடந்து சென்றது? அடுத்த மாநாட்டில் இந்துத்துவா அமைப்பினர் விளக்கட்டும். அதற்கு முன் மாநாட்டிற்கு வருபவர்கள் முறைப்படி ரயில்களில் டிக்கெட் வாங்கி வரட்டும்.

கோ.வி. லெனின்
திடீர்னு நம்ம யாகூ குரூப்புக்கு ஒரு இமெயில். ராமன் கட்டின பாலத்துக்கு ஆபத்து காப்பாத்த குரல் கொடுங்கன்னு. அடப்பாவிங்களா இப்ப எல்லாம் பாலத்துக்கு நேரமே சரி இல்லையோன்னு அந்த தளத்துக்கு போனேன். http://ramsethu.org/

ராமன் என்னைக்கு செங்கல் சுமந்து சூத்திர வேலை எல்லாம் செஞ்சாருனு யோசிச்சிகிட்டே அந்த சைட்ட போய் பார்த்தேனுங்க. சைட்ட உருவாக்கினவா யாருனு பார்த்தா, நம்ம என். ஆர். ஐ பசங்க. அவங்க எல்லாம் மெத்த படிச்ச பசங்க.. என்னோட அறியாமய கண்டு பாவப்பட்டு என் 'டவுட்'ஐ கிளியர் பண்ணுவாங்கனு நினைக்கிறேன்.

ராமன் கட்டின பாலத்த சேதப்படுத்த கூடாதுன்னு சொல்லுறது சரிதானுங்க. அதே மாதிரி கங்கை ஆத்துல இருக்குற அம்புட்டு பாலத்தையும் இடிக்க சொல்லணுமுங்க. கங்கை சிவபெருமானோட தலைல இருந்து வந்தது இல்லையாங்க? அத எப்படி அணை கட்டி தடுக்கலாமுங்க ?

நீங்க அதுக்கு ஒரு வெப்சைட் போடணுமுங்க. அட்லீஸ்ட் அந்த புண்ணிய ஆத்துல பொணத்த போடக்கூடாதுனாவது நீங்க சொல்லணுமுங்க.

"remains of an ancient bridge built by Lord Rama, as described in the holy epic, Ramayana."

எங்க அனுமாரு பசங்களை ஏவிவிட்டு ராமரு கட்டினதா தான் கேள்விப்பட்டிருக்கேனுங்க. இப்ப தான் தெரியுது ஏன் இந்த பாலம் முங்கி போச்சுனு. என்ன கேவலமான 'கன்ஸ்ட்ரக்சனுங்க' இது. கடவுள் ராமனாலயே ஒரு பாலத்த உருப்படியா - காலாகாலத்துக்கு யூஸ் பண்ற மாதிரி - முங்காமா இருக்குறமாதிரி கட்ட முடியல! ஒரு பாலத்தக் கூட ஒழுங்கா கட்ட முடியாதாவரெல்லாம் ஒரு கடவுளானு ISIட்ட காசு வாங்குன பசங்க கேக்கமாட்டானுங்க?

பொண்டாட்டிய பத்திரமா பார்த்துக்க தெரியல, தம்பிய சமாதானபடுத்த முடியல, ஒரு குரங்கு கூட்ட தலைவன நேர்மையா எதிர்க்க முடியல, இப்ப ஒரு பாலத்த உருப்படியா கட்டமுடியலைன்ற கெட்ட பேரு வேற....

"environmental impact" சரிதானுங்க. இதனால கொஞ்ச பாறை, மீன், பவளம் எல்லம் அழியப்போகுதுங்க. ஆனா பாருங்க, நர்மதைல அணை கட்டுற ப்ராஜெக்ட்ல எல்லாம் லெட்சம் பேரு ஊரை விட்டு கிளப்பணும், ஆயிரக்கணக்கான மரத்தை வெட்டணும்... இன்னும் எம்புட்டோ பெரிய பிரச்சினை எல்லாம் அதுல இருக்குங்க. அதுக்கு எல்லாம் ஏனுங்க நீங்க அடக்கி வாசிக்கிறீங்க?

"Ram Sethu is as holy to Hindus as the Western Wall is to the Jews, the Vatican to Catholics, Bodh Gaya to the Buddhists and Mecca to Muslims,"

இதுவரை நீங்க சீரியசா சைட் போட்டிருக்கீங்கனு நெனச்சு டைம் வேஸ்ட் பண்ணிட்டேனுன்க. உலகத்துல ரெம்ப ரெம்ப பழமையான மதத்துக்கு இப்பதான் அதோட புண்ணியதலமே தெரியுதாங்க?

சரி நம்ம எதாவது செய்யலாம்னு 'கான்ட்ரிப்யூட்'னு கிளிக் பண்ணினா, தட்சணை தான் கேக்குறாங்க. அதுவும் மெயில்ல அனுப்பலாமாம், போன்ல அனுப்பலாமாம், ஆன்லைன்ல அனுப்பலாமாம்.... காசக் குடுக்காம 'கான்ட்ரிப்யூட்' பண்ண முடியாதாங்க?

- பிரகாஷ் (jaya.v.prakash@gmail.com)ராவணன் கருணாநிதி

ராமன்..... இந்திய அரசியலின் ஓட்டு வங்கியாக பார"தீய" சனதா கட்சியால் கண்டுபிடிக்கப் பட்ட வாக்கு எந்திரம். மக்களை பிரித்து அதில் மதத் துவேசம் வளர்த்து குடுமிகளை குண்டுபோட வைக்கும் கொடூர முகத்துக்கு சொந்தக்கார கட்சிகளின் அனாமதேய அரசியல் தலைவன்.

விஎச்பி எனப்படும் வெகுஜன விரோத கட்சியின் முன்னாள் எம்பி ஒன்று கருணாநிதியின் தலைக்கு எடைக்கு எடை தங்கம் தரத் தயாராக இருக்கிறதாக அறிவித்துள்ளது. ஜந்துக்கள் காலம் கூட மலையேறிவிட வேண்டும்.

முதலில் கலைஞரின் தலைக்கு விலைவைக்கும் மடையர்களுக்கு ஒரு கேள்வி அது கலைஞருக்கு மட்டும் சொந்தமானதில்லை மூடர்களே. தமிழ் பேசும் எல்லா மக்களுக்கும் சொந்தமானது, அப்படி இருக்க கலைஞரின் தலைக்கு எந்த முகாந்திரத்தில் விலை வைத்தீர்கள். கதாசிரியர், அரசியல் தலைவர், ஆளுங்கட்சி தலைவர், சினிமா பாடல் ஆசிரியர், இலக்கியவாதி என பல தலைகளுக்கு சொந்தக் காரர்தான் கலைஞர். அவரின் மொழிகேட்டு வளர்ந்த கோடிக் கணக்கான உலகத் தமிழர்களுக்கும் ஒரு விலை வைக்கவேண்டும் அதுதான் கருணாநிதியின் உண்மையான விலையாக இருக்க முடியும் அதை விடுத்து வெறும் கருணாநிதியின் தலையை வைத்து என்ன செய்ய போகிறீர்கள்.

நீங்களே சொல்வது போல பத்து தலை கொண்ட ராவணன் கருணாநிதி என்றால் கூட அதன் ஒற்றைத் தலைகூட அவருக்கு சொந்தமில்லை..மக்களுக்காய், தமிழுக்காய், தமிழனுக்காய் அயராது உழைக்கும் அந்த தலை தமிழினத்தின் தலையாய சொத்து. அதை விடுக்க கலைஞருக்கே உரிமை இல்லை என்பது உங்களுக்கு தெரியுமா மூடர்களே?

ராமன் இல்லை என்பது இந்துக்கள் மனசை புண்படுத்துவதாக இருப்பின் எந்த பொதுஜன இந்துவும் "உங்கள் ராமனை அடிவருடும் கட்சி தலைவர்களை தவிர" வெளியில் வந்து போராட வில்லையே ஏன்? உண்மை சுடும் என்பது உங்களுக்கு ஏன் இன்னும் தெரியாமல் இருக்கிறது?. தமிழனுக்கு ஒரு விலைவைத்தால் அதுதான் கருணாநிதியின் விலை என்பதைக் கூட தெரிந்து கொள்ள முடியாத மூடர்களே மக்களுக்கான போராட்டமாக எதையாவது என்றைக்கு செய்து தொலைக்கப் போகிறீர்கள்? ராமன் இல்லாத அரசியல் பூச்சாண்டிகள் என்றைக்கு உங்கள் கூட்டத்தில் உண்டாகும்?. அனுசக்தி ஒப்பந்த விசயத்தில் கூட உங்கள் எதிர்ப்பு இல்லையே இந்த அளவுக்கு. உங்களுக்கு ராமன் மேல் ஏன் இத்தனை பற்று?.

தமிழகத்தில் எந்த காலமும் உங்களால் காலடி வைக்க முடியாது என உண்மை தெரிந்து போனதால் இந்த கோபமா? ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் திராவிடம் இல்லாத அரசியலை தமிழகத்தில் விதைக்க முடியாது என்பதால்தானே மடையர்களே இன்றைக்கு வந்த விசயகாந்து கூட திராவிடத்தை சேர்த்தார் பெயரில் மட்டுமாவது?.

தனது மதசார்பின்மை முகத்தை காவிக் கோவனம் மறைக்க "திருவள்ளுவர் எந்த கல்லூரியில் படித்தார் என்ற கேள்வியை கேட்டு நானும் இந்துதான் பிஜேபியோடு கூட்டு வைக்க எந்த தடையும் இல்லை என்பதை சொல்லாமல் சொல்லும் விசயகாந்துக்கு ஒரு கேள்வி. நீ தமிழனா? எந்த காலேஜில் தமிழ் படித்தாய். மொழி சார்ந்த விசயங்களையும் நம்பிக்கை சார்ந்த விசயங்களையும் எந்த வித்யாசமும் இல்லாமல் கேள்வி கேட்கும் விசயகாந்துக்கு ஆட்சியை அள்ளிக் கொடுத்தால் அடக் கண்றாவியே.... என்றல்லவா இருக்கும்?. இதில் வளர்கிறாரம். கட்சிக்கு என்ன காம்ப்ளான் சப்ளையா செய்கிறார்?

தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அதற்க்கோர் குணமுண்டு என்பதை வாளெடுத்துதான் மெய்ப்பிக்க வேண்டும் என்றால் நாங்கள் அதற்கும் தயார்தான் வரிசையாக வாருங்கள் முண்டங்களே.... உங்களின் ராமக் குறிகள் எங்கள் குறிகளாய் இருக்கும்.

ராமன் இருந்ததை வரலாற்று ரீதியாக தொல்லியல் ரீதியாக விஞ்ஞான ரீதியாக நிரூபிக்க முடியாத கோழைகள் நீங்கள் என்பது உலகத்தமிழனுக்கு தெரியும் என்பதாலேயே அவரின் சொற்கள் உங்கள் மனசை காயப் படுத்திவிட்டதாக "பத்துவா" தருகிறீர்கள் உங்களுக்கு மனசு எங்கேயடா இருக்கிறது? பாதிரியார் ஸ்டெய்ன்ஸ் கொலைசெய்யப் பட்டபோது எங்கே போனது உங்கள் மனசு? குஜராத்தில் கிழிக்கப் பட்ட முஸ்லிம்களின் குடல் தொங்கியபோது எங்கே போனது உங்கள் மனசு?, பாபர் மசூதி இடிக்கப் பட்ட போது எங்கே போனது உங்கள் மனசு? ராமனின் பேரையும் சீதையின் பேரையும் சொல்லி கொலைகள் செய்யும் உங்களுக்கு மனசு இருக்கிரதா என்றே எங்களுக்கு சந்தேகம் இருக்கிறதே?

முதலில் உங்களுக்கு மனசு இருக்கிறதா இல்லையா என்று ஒரு மருத்துவ சான்றிதழ் கொண்டு வாருங்கள் பிறகு பார்க்கலாம் ராமன் இருந்தானா இல்லையா என்று. ஃபத்வா யாருக்கு வழங்கப் பட வேண்டும் என்று..

தமிழுக்கு இன்னொரு அணிகலன் தமிழ்ஓசை - இதுவெறும் விளம்பரமன்று, உண்மை.

மண் பயனுறச் செய்கிறது மக்கள் தொலைக்காட்சி - இதுவும் வெறும் பாராட்டன்று. தமிழ் மக்களின் ஒருமித்த கருத்து.

ஒரு நாளேடு, ஒரு தொலைக்காட்சி என இரண்டு துறைகளிலும் பெரும் சாதனை படைத்திருப்பவர். ஒரு ஆங்கிலச் சொல்கூடக் கலக்காமல், இலக்கணம் என்று ஒரு தமிழ்த் திரைப்படம் உருவாவதற்குப் பெரும் பின்னணியாக இருந்தவரும் நீங்கள். உங்களின் தமிழ் உணர்வு, தமிழ் இனப்பற்று ஆகியன வெறும் உதட்டசைவன்று, உள்ளத்திலிருந்து பீறிடும் உணர்ச்சி என்பதைப் பல நேரம் உங்கள் பக்கத்தில் இருந்து பார்த்தவன் நான். தமிழ் உணர்வும், சமூகநீதியும் உங்களின் இருபெரும் கொள்கைகள், இரண்டுமே இன்றைய தமிழ்ச் சமூகத்திற்கு மிகத்தேவையான கோட்பாடுகள் என்பதை அனைவரும் அறிவோம்.

1980களில் சாதாரண வன்னியர் சங்கமாக வெளிப்பட்டு, பிறகு பாட்டாளி மக்கள் கட்சியாக மலர்ந்து இன்று தமிழ்நாட்டில் மட்டுமின்றி, தில்லியிலும் கூட, ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும். உங்களின் வளர்ச்சி எவரையும் மலைக்க வைக்கும். இனியும் பல கிளைகள் விரிந்து வானுயர வளரும் வல்லமை உங்களுக்கு உண்டு என்று நம்புகிறவன் நான்.

தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியான தி.மு.க. வோடு கூட்டணி அமைத்திருந்தாலும் உங்கள் போக்கு சற்று வேறுபட்டதாகவே உள்ளது. எதிரிக் கட்சியைப் போல இல்லாமல், நல்லதோர் எதிர்க்கட்சியைப் போல நாங்கள் செயல்படுவோம் என்னும் உங்களின் அறிவிப்பு ஆரோக்கியமானதுதான். எந்தவொரு கட்சியோடு நாம் கூட்டணி வைத்திருந்தாலும், மக்களோடு கூட்டணி வைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் முகாமையானது. மக்களின் குறைகளை அரசுக்கு எடுத்துச் சொல்லும் நண்பனாகவும், அரசின் குறைகளைச் சுட்டிக் காட்டும் தோழனாகவும் நீங்கள் செயல்பட முனைவதில் எல்லோருக்கும் மகிழ்ச்சிதான்.

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும்

என்பதுதானே நம் வள்ளுவப் பேராசானின் வாக்கு.

இடித்துரைக்காத அரசு கெடும் என்பது உண்மைதான். அதேவேளையில், இடித்துக் கொண்டே இருந்தாலும் அது கெடும் என்பதை நீங்கள் உறுதியாய் அறிந்திருப்பீர்கள். என்ன காரணத்தினாலோ, தமிழக அரசை இப்போது நீங்கள் தொடர்ந்து இடித்துக்கொண்டு இருக்கிறீர்கள். இப்போக்கு இன்றைய அரசுக்கும், எதிர்காலத் தமிழ்நாட்டிற்கும் கேடுவிளைவித்து விடுமோ என்னும் அச்சம் காரணமாகவே இம்மடல் எழுத நேர்ந்தது.

இந்த ஆட்சிக்காலம் முடியும் வரையில், கண்டிப்பாக நாங்கள் இந்த அரசுக்குத் துணை இருப்போம் என்று நீங்கள் பலமுறை சொல்லிக் கொண்டே இருக்கின்றீர்கள். அதற்கு நீங்கள் அடிக்கடி அழுத்தம் கொடுப்பதே சில நேரங்களில் அச்சப்படுவதற்கும் காரணமாகின்றது. வெளிப்படையான உண்மைக்கு யாரும் அழுத்தம் தருவதில்லை, ஐயம் வரும்போதுதான் அழுத்தமும் வருகிறது.

தி.மு.க.விற்கும், பா.ம.க.விற்கும் இடையில் முற்றிக் கொண்டிருக்கும் அறிக்கைப் போர்கள், இரண்டுக்கும் இடையில் பிளவு வலுத்துக் கொண்டிருக்கிறதோ என்னும் எண்ணத்தையே உருவாக்குகிறது, பிளவு ஏற்படுமானால், உங்கள் இருவரில் யாருக்கு இலாபம், யாருக்கு நட்டம் என்னும் கணக்கை இப்போதே சில ஏடுகள் பார்க்கத் தொடங்கிவிட்டன. என்னைப் பொறுத்தளவு, உங்களுக்குள் ஏற்படுகிற பிரிவு, ஜெயலலிதாவிற்கு இலாபமாகவும், தமிழ் மக்களுக்கு நட்டமாகவும் முடியும் என்றுதான் கருதுகிறேன்.

மக்கள் தொலைக் காட்சியில் ஒளிபரப்பாகும் நீதியின் குரல் போன்ற ஒருசில நிகழ்ச்சிகளைப் பார்க்கும்போது ஜெயா தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கிறோமோ என்று எண்ணத் தோன்றுகிறது. உங்கள் கோபத்தில், ஜெயலலிதாவின் புன்னகையைப் பார்க்க நேர்கிறது.

ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், தி.மு.க.விற்கும், ஜெயலலிதாவுக்கும் இடையில் உள்ள வேற்றுமைகளை நீங்கள் நன்றாக அறிவீர்கள். இரண்டும் ஒன்றுதான் என்று குறிப்பிடும் சில தலைவர்களின் கருத்தில் உங்களுக்கு உடன்பாடு இருக்க முடியாது என்று நான் நம்புகிறேன். சமமற்றவர்களைச் சமமாக்கிக் காட்டுவது மறைமுகமாக மோசமானவர்களுக்குத் துணை போவதுதான் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

எங்கள் கூட்டணிக்கு வந்தால் மரு.இராமதாசை மரியாதையோடு நடத்துவோம் என்று ஜெயலலிதா சொல்லியிருப்பதைப் படித்த போது என்னால் சிரிக்காமல் இருக்கமுடியவில்லை. அவர்கள் ஊர் அகராதியில் மரியாதை என்ற ஒரு சொல்லே கிடையாது என்பதை என்னைக் காட்டிலும் நீங்கள் நன்றாக அறிவீர்கள் ஒருமுறை உங்கள் துணைவியாரின் வேண்டுகோளைக் கொச்சைப்படுத்தி ஒரு நாள் கூடச் சிறையில் இருக்கும் துணிவில்லாதவர் என்று உங்களை இழிவுபடுத்த அந்த அம்மையார் முயன்ற அநாகரிகம் இன்னும் என் நினைவில் இருக்கிறது.

தனிப்பட்ட முறையில் உங்களுக்கு மதிப்பு தரப்படுமா இல்லையா என்பதைக் காட்டிலும், நீங்கள் எந்தக் கூட்டணியில் இருப்பது தமிழகத்திற்கு நல்லது என்பதுதான் நாம் கவனிக்க வேண்டிய ஒன்று.

குறையில்லாத மனிதன், குறையில்லாத கட்சி, குறையில்லாத ஆட்சி உலகில் எங்கும் இருக்க முடியாது. தி.மு.க. ஆட்சியிலும் குறைகள் இருக்கலாம். ஆனாலும் இன்றைய ஆட்சி மக்களுக்கு நன்மை செய்து கொண்டிருக்கிற ஒரு ஜனநாயக ஆட்சி என்பதையும், நேற்றைய ஆட்சி மக்களை அடக்கி ஒடுக்கி அதிகாரம் செலுத்திய சர்வதிகார ஆட்சி என்பதையும் யார்தான் மறுக்க முடியும்.

இரண்டுமே வேண்டாம், மூன்றாவது அணியை முகிழ்க்க வைப்பதுதான் சரி என்று சிலர் கருதுகின்றனர். ஒரு ஜனநாயக நாட்டில் மூன்று என்ன, முப்பது அணிகள் கூடத் தோன்றலாம். ஆனால் அதற்கான ஒரு சிறிய வாய்ப்புக் கூட இன்று இல்லை என்பதுதானே நடைமுறை உண்மை. அப்படியே இருந்தாலும், அந்த மூன்றாவது இடத்தில் நடிகர் விஜயகாந்த் நின்று கொண்டிருப்பதாக ஏடுகள் சில கணிக்கும் போது, நாம் எவ்வளவு பெரிய ஆபத்தை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறோம் என்ற அச்சம் நம்மைத் தாக்குகிறது.

இந்தச் சூழலில், கலைஞர் தலைமையிலான தமிழக அரசைத் தொடர்ந்து எதிர்ப்பது ஜெயலலிதாவிற்கும், விஜயகாந்த் போன்றவர்களுக்கும் நம்மையறியமால் நாம் செய்யும் உதவியாக அல்லவா முடிந்துவிடும்.

இவ்வாறெல்லாம் நான் எழுதுவதன் மூலம், தி.மு.கழக ஆட்சியை எந்தவித விமர்சனமும் இல்லாமல் ஆதரிக்க வேண்டும் என்று நான் கூறுவதாக நீங்கள் எண்ணிவிடக் கூடாது. உங்கள் எதிர்ப்பின் அளவும், கலைஞர் மீது நீங்கள் காட்டும் கசப்பின் அளவும் கூடிக்கொண்டே போவதாக என் போன்றவர்கள் கருதுகின்றோம். அது தி.மு.க.விற்குக் கேடுவிளைவிக்கும் என்பதற்காக அன்று, இந்நாட்டு மக்களுக்குக் கேடுவிளைவிக்கும் என்பதற்காக நீங்கள் இருவரும் என்றும் இணைந்திருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

இறுதியாக இரண்டு செய்திகளை நினைவுபடுத்தி என் மடலை நான் முடிக்கிறேன்.

அ.தி.மு.க ஆளும் கட்சியாக இருந்த நேரத்தில் பா.ம.க. அதன் கூட்டணிக் கட்சியாக இருந்திருக்கிறது. அந்த வேளைகளில் அ.தி.மு.க. ஆட்சியின் குறைகள், தவறுகள் குறித்து உங்களிடம் கேட்கப்பட்ட போதெல்லாம், எல்லாவற்றையும் அன்புச் சகோதரி பார்த்துக் கொள்வார் என்றுதான் விடையளித்திருக்கிறீர்கள். ஆளுங்கட்சியை எதிர்த்து அப்போது நீங்கள் பெரும் போராட்டம் எதையும் நடத்தியதாக எனக்கு நினைவில்லை.

இப்போதும் கூட, மத்திய அரசின் ஆட்சியில் குறைகளே இல்லை என்று சொல்ல முடியாது. நீங்களே ஒன்றிரண்டைச் சுட்டிக் காட்டியும் இருக்கிறீர்கள். ஆனால் மத்திய அரசை எதிர்த்துப் பெரும் போராட்டம் எதிலும் நீங்கள் ஈடுபடவில்லை. அன்று அந்த அன்புச் சகோதரியிடம் காட்டிய பரிவை, இன்று இந்த அன்புச் சகோதரரிடம் காட்டக் கூடாதா?

இன்றும் தில்லி அரசிடம் காட்டும் நிதானத்தை, தமிழக அரசிடமும் காட்டக்கூடாதா?

என் இரண்டு வினாக்களிலும் இருக்கும் நியாயத்தை நீங்கள் கோபப்படாமல் ஏற்றுக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

அன்புடன்
சுப.வீரபாண்டியன்


வேறு ஒரு கதை விவாதத்தில் பிறந்த கிளைக் கதை இது. இது கிளைகூட இல்லை; வேறு, வேறு விதை.

‘‘விவசாயிகளின் தளம் போல வானம் பார்த்த பூமி இல்லை நமது விளைநிலம்’’ என்றார் கதை விவாதிக்க வந்த ஒரு நண்பர்.

‘‘ஆம்! இது பூமி பார்த்த பூமி’’ என்றேன்.

‘‘சில சமயம் வானமும் பார்க்குமே?” என்று சிரித்தார்.

‘‘பார்க்கும், எங்கேயும் பார்க்கும். பார்வைதானே கதையே! என் கோணம், என் கதை.’’

‘‘சரி, கதைக்கு ஒரு துப்பு கொடுங்க, துலக்கறேன்’’ என்றேன்.

‘‘துப்பு என்ன... தலைப்பே தர்றேன்.’’

‘‘ம்...?’’

நான் சற்றும் எதிர்பாராத தலைப்பு தந்தார்.

‘‘நான் கற்பிழந்த நாள்.’’

‘‘ஓ! கதையின் நீளம்?’’

‘‘சிறுசு’’ என்றார்.

‘‘கதாநாயகனா? நாயகியா?’’

‘‘நாயகிதான் யதார்த்தமாய் இருக்குமோ?’’

‘‘உண்மைதான். காலம்?’’

‘‘பகலா, இரவான்னு கேக்கறீங்களா?’’

‘‘இல்லை. நேற்றா, இன்றா, நாளையான்னு கேக்கறேன்?’’

‘‘முந்தானேத்து’’ என்றார் வீம்புக்காக.

சிரித்துவிட்டு, முன்பு ஒரு காலத்துல?’’ என்றார் விட்டுக் கொடுப்புடன்.

‘‘உங்க தலைப்புக்கு ஏத்த மாதிரி ஒரு கதைச் சுருக்கம்... ‘சீதையின் வாழ்வில் ஒரு நாள்’ & எப்படி?’’

‘‘அம்மாடியோவ்!’’

‘‘ஏன்?’’

‘‘கலவரம் வர ஒரு கதை காரணமா இருக்கணுமா?’’

‘‘கலவரம் வர நம்மூர்ல காரணம் வேணுமா என்ன?’’ என்றேன்.

சீதை என்ன சொல்றா? ஏன் அப்படிச் சொல்றா? அவ அப்படிச் சொன்னதுக்கு என்ன ஆதாரம்?’’

‘‘ஓ! கதையின் கால், ரிஷியின் மூலம் எங்கேன்னு கேக்கறீங்க? சொல்றேன்.ஆதாரம் கேட்டீங்கன்னா, கையில ஒண்ணுமில்ல. ஆனா, இது அக்னி சாட்சியா உண்மை.’’

‘‘அப்பிடின்னா?’’

‘‘இது எனக்கு அக்னிதேவன் சொன்ன கதை.’’

‘‘ஓ! சீதை சொல்லவில்லையா?’’ என்றார் சுவாரஸ்யம் இழந்தவராக.

‘‘இல்ல... சீதை எனக்குப் பழக்கமில்லை. ஆனால், அக்னி வேறு விஷயம்.’’

‘‘ஓஹோ! அக்னிதேவன் உங்க நண்பரா?’’

‘‘ஆமாம்! ஆனா, ரொம்ப நெருக்கமில்ல. தூரத்து உறவு. அந்தரங்க ரகசியங்களைப் பகிர்ந்துக்கற அளவுக்கு நட்பு. ஒரு தலைக் காதலர்கள் சங்கத்துல என்னைப் போல் அவரும் சில காலம் உறுப்பினரா இருந்தாரு.’’

என்றேன்.

துவங்கினேன்... ‘‘அக்னி தேவன் சொன்னபடி அதிக புனைவில்லாமல் சொல்றேன்.’’

‘‘ராமன், சீதையின் கற்பைச் சோதிக்க முடிவு செய்த நாள். ராவணன் போரில் செத்துப்போனான். என் போன்ற ஒருதலைக் காதல் ராவணனுக்கும் இருந்தது சீதையின் மேல்’’ என்று கதை சொல்லத் தொடங்கினான் அக்னிதேவன்.

‘‘இரவெல்லாம் அசோக வனத்தில் குளிருக்காக ராவண சேவகிகள் என்னை எண்ணெயூட்டி, மட்டை விறகூட்டி வளர்ப்பர். என் கதகதப்பில் காவலாளிகள் உறங்கினாலும் சீதை உறங்க மாட்டாள். நானும்தான்.சில சமயம் அனைவரும் உறங்கிய பின் என்னையே வெறித்துப் பார்ப்பாள் சீதை. நான் படபடத்துப் போவேன். சங்கோஜத்தில் நெளிவேன், உறக்கம் இன்றி.
விடிந்ததும் காமுற்ற என் மனதை நனைத்து அவிக்கும் பகலும், காற்றும்!

ஒரு முறை ராவணன் மேல் பொறாமையில், ராவணனின் அரண்மனைக்குத் தூது வந்த ராமதூதன் வாலைப் பிடித்துக்கொண்டு இலங்கையையும் ராவணனையும் அழிக்கக் கூடத் துணிந்தேன். கைகூடவில்லை. வீணாக நிறைய அரக்கு உருகியதுதான் மிச்சம்...’’

‘‘சரி! கதையின் தலைப்புக்குக் காரணமான காரியமென்ன? இது சிறுகதை, ஞாபகமிருக் கட்டும்’’ என்று ஞாபகப் படுத்தினார் நண்பர்.

தடங்கலின் எரிச் சலைக் காட்டாமல் அக்னிதேவன் தொடர்ந்து பேசலானான்...

‘‘காரண காரியம் காதல் தான். சீதையின் கற்புக்கு நானே சாட்சி! ராவணன் அவளைச் சந்தித்த இரவுகளில், நானும் கூடவே இருந்தேன். அந்தத் தூதுவன் கணையாழி கொண்டு வந்து நீட்டியபோது அடி வயிறு பற்றிக் கொழுந்துவிட்டு எரிந்தேன். என்ன பிரயோஜனம்? சீதை கணையாழியை இன்னும் தெளிவாகப் பார்த்தாள்... என் வெளிச்சத்தில்.
சீதை ராவணனோடு மட்டுமல்ல, என்னுடனும் பேச மறுத்தாள். அவள் நல்லவள். ஒரு வார்த்தைகூட என்னுடன் பேசாதவள்.

அன்று ராமன் அவளை ஊரறியச் சோதிக்க முற்பட்டபோதுதான் என்னுடன் முதன்முதலாகப் பேசினாள்.

‘‘ராமனன்றி யாருடனும் சேராதவள், நினையாதவள் இன்று மனமொடிந்தேன்! நிதம் பார்த்து ஏங்கினாயே! காத்துவைத்த இந்தக் கற்பு உனதாகட்டும். எனை ஆட்கொள்’’ என்றாள்.

காதல் ஓர் விநோத நோய். தேரைக்கும் பாறைக்கும் ஏற்பட்ட காதல் போல யாரும் அறியாது நிகழ்ந்த இந்தக் காதல் சங்கமத்தில், என் காமச் சூட்டைவிட காதல் வண்ணம் மேலோங் கியது.

என் முதல் காதல் நாசமாய்ப் போனதே... அதுபோல் இதுவும் ஆகும் என்று தோன்றியது.
அவளை எனதாக்கிக் கொள்ளும் அவசரத்தில், அவளையே கரிக்கிச் சாம்பலாக்கிவிடுவேன் நான். தெரியும் எனக்கு. தோற்ற என் முதல் காதல் தந்த அனுபவம் இது.

‘முதல் காதல் யாருடன்?’ என்று நண்பர் கேள்வியைக் கேட்கும் முன், சுடச்சுட வந்தது பதில்.

‘‘முதல் காதல் காட்டுடன், வனமோகினியுடன். நான் அப்போது மலைமகன். விடலை. என் காதலைச் சொன்னவுடன் வெகுண்டு வெடித்தார் தந்தையார். என்னை வீட்டைவிட்டு வெளியேற்றினார். குழம்பிப் போனேன்.
காதலியைத் தேடிப் போனேன். பல நாள் கனவிலே செய்ததை அன்று நினைவில் செய்தபோது, காதலி கரிந்துபோனாள். என் காதலும்தான்! என் காதல் தோற்ற கோபத்தில் காதல், காமம் என்ற வார்த்தை களைக் கேட்டாலே எரிந்து விழுந்தேன். சிவனின் மகன் மாறன் கரிந்ததும் என்னால் தான். அந்நிலை இன்று இவளுக்கும் ஆகும். தெரியும் எனக்கு. இவளுடன் ஒன்று சேருவதை விட இவளைக் காப்பதே என் கடமை என்றது காதல்.
என் கைக்குள்ளே வந்த சீதையிடமோ குரோதமும் ஆதங்கமுமே தெரிந்தது. மோதியழ ஒரு தோள் நான்.

அவ்வளவே!

அவள் என் மேல் அன்று பொழிந்தது காதல் மழையல்ல, கருணை மழை! உதட்டளவில் தானமாகக் கொடுத்தாள் காதலை.

‘‘உன்னுடன் வருகிறேன் என்றவளை ஏன் வேண்டாம் என ஒதுக்குகிறாய். ஏற்க என்னை!’’ என்றாள்.

‘‘சீதா! காதல் ஒன்று சேருவதில் மட்டுமே வருமெனில், ராமனின் காதல் இந்நேரம் வெகுவாகக் கூடி இருக்க வேண்டுமே! கூடியபின் குறையும் குணம் உள்ளது காதல்.
என்னருமை சீதா! காமத்தில் நான் குளித்து நனைந்தால், யாருக்கும் இன்றி அவிந்தேபோவேன். நீ அயோனிஜா, மீண்டும் உன் தாய் வீட்டுக்கே போவாய். மற்றவர்போல், கடைசியிலேனும் என் கைவசப்படுவாய் என்ற நம்பிக்கையும் இல்லை எனக்கு.

என்னைப் போல் நீயும் நியதிகளுக்கு அப்பாற்பட்டவள். உன் கற்பும் கலையாமல், நம் காதலும் கரையாமல் இருக்க, நாம் கூடவே கூடாது.
என்னைக் கடந்து செல், உன் சுயநல ராமனிடம்! இந்தக் கூடாத கூடலில், நியதிகளுக்குள் அடங்காத நானே கருத்தரிப்பேன்! நம் காதலின் நினைவாக உன் வடிவில் ஒரு குமாரத்தி யைப் பிரசவிப்பேன்! அவளுக்கு திரௌபதை என்று பெயரிடுவேன். சம்மதமா?’’ என்றேன்.

சீதை என் காதல் கேட்டுக் கண்கலங்கினாள். ‘இத்தகைய காதலை நான் அனுபவித்ததே இல்லை. இத்தகைய ஆணையும் நான் சந்தித்தது இல்லை. இனியும் அது நிகழாது.
உன் இந்த அன்புச் சூட்டில் உன் கை தவழ்ந்து வெளியேறிய பின், உன் நினைவாகவே இருப்பேன். என் கற்பு, ராமன் போன்றவர் வாழும் பிரதேசத்தில் அழுகித்தான் போகும். என் கற்பு உன்னிடமே இருக்கட்டும். அதை, பிறக்கப்போகும் நம் மகள் திரௌபதைக்கு திருமணச் சீராக விட்டுச் செல்கிறேன்’’ எனக் கூறி விடைபெற்றாள்.

அவள் கண்ணீரும் காதலும் என்னை நனைக்க, என் கைகள் தளர்ந்து போயின.
அன்று கைவிட்டுப் போனவள்தான், பிறகு பார்க்கவில்லை. என் மகள் திரௌபதையின் வாழ்வில் இத்தகைய சந்தேகக் கணவர் யாரும் வாய்க்காமல் காப்பேன். கற்பு என்ற சிறையில் சீதைபோல் அவள் சாகாமல் காப்பேன். என் மேல் ஆணை!’’

தன் தலையையே சத்தியத்தின் சாட்சியாக்கினான் அக்னி என்று முடித்து, என் குரலை மாற்றிக்கொண்டு நானானேன்.

விவாதம் தொடர்ந்தது.

ராவணன் பிராமணன்

ராமர் என்பது கற்பனைக் கதாபாத்திரம். ராமர் பாலம் என்று ஒன்று இல்லை’ என்பது தொல்லியல் துறையின் கருத்து என்று ராமர் பாலம் தொடர்பாக ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தொடுத்த வழக்குக்கு பதில் மனு தாக்கல் செய்தது மத்திய அரசு. இதைக் கண்டித்து நாடு முழுவதும் பாரதிய ஜனதா கட்சியும் பிற இந்து அமைப்புகளும் இந்துக்களை மத்திய அரசு இழிவுபடுத்தி விட்டதாகப் போராட்டங்களை நடத்தியது. எதிர்ப்பின் வலுகண்டு மறுநாளே, மனுவைத் திரும்பப் பெற்றுக்கொண்ட மத்திய அரசு, மாற்றுப்பாதையில் சேதுசமுத்திரத் திட்டத்தை செயல்படுத்துவதாகவும் சொல்லியிருக்கிறது.

இந்நிலையில் முதல்வர் கருணாநிதி, ஈரோடு முப்பெரும் விழாவில் பேசும்போது, ‘‘யார் ராமன்? அவன் எந்தப் பொறியியல் கல்லூரியிலே படித்து பொறியாளராக ஆனவன்? எப்போது அந்தப் பாலத்தைக் கட்டினான்? ஆதாரம் உண்டா?’’ என்றெல்லாம் கேள்விகள் எழுப்பியிருந்தார்.


முதல்வரின் இந்தப் பேச்சைக் கண்டித்து அவர் மீது வழக்கு தொடுக்கப் போவதாக அறிவித்-திருக்கும் சுப்பிரமணியன் சுவாமி, ‘ராவணன் பிராமணன், ராமன் சத்திரியன்’ என்று இன்னொரு திரியையும் பற்றவைத்திருக்கிறார்.

சுவாமியை சந்தித்தோம். ‘‘கருணாநிதி ஆவேசப்படவும், ஆத்திரப்படவும் காரணம் இருக்கிறது. மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் சொன்ன பொய்யை மறுநாளே வாபஸ் பெற்றுவிட்டதால், அதிர்ச்சியடைந்திருக்கும் கருணாநிதிக்கு என்ன பேசுகிறோம் என்றே புரியவில்லை. இனிமேல் பகுத்தறிவுக் கதைகள் பேசி அரசியல் செய்ய முடியுமா? கவலை வந்துவிட்டது. ‘ராமர் எந்தக் கல்லூரியில் பொறியியல் படித்தார்?’ என்று கேட்கும் இவரால், ‘கன்னிமேரிக்கு கர்த்தர் எப்படிப் பிறந்தார்’ என்று கேட்க முடியுமா? கருணாநிதி, இந்துக்களை இழிவுபடுத்துவதை இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது. அதனால், கவர்னரிடம் அனுமதி வாங்கி அவர்மேல் வழக்கு தொடரப் போகிறேன்’’ என்றவரிடம், ‘ராவணன் பிராமணன் என்று சொல்லியிருக்கிறீர்களே?’ என்றோம்.

‘‘ராமாயணத்திலேயே ராமன் சத்திரியன் என்பது தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது. ராம சேது பாலத்தை அமைத்த ராமன் தன் குருவான வசிஷ்டரிடம், ‘யாரைக்கொண்டு ராம சேதுவைத் திறக்க யாகம் நடத்தலாம்?’ என்று கேட்டிருக்கிறார். அதற்கு ‘அந்தப் பகுதியில் யாகம் செய்யத் தகுதியான பிராமணன், ராவணன் மட்டுமே. அவனை அழைத்து யாகம் நடத்துங்கள்’ என்று வசிஷ்டர் அறி-வுறுத்த, ராமனும் ராவணனை அழைத்திருக்கிறான். ராவணனும் யாக பூஜையில் கலந்துகொண்டான். அதனால் இனி, திராவிடக் கட்சிகள் சத்திரியனான ராமனுக்கு விழா எடுக்குமா?’’ என்றார்.

‘கீதாச்சார்யன்’ பத்திரிகையின் ஆசிரியர் டாக்டர் எம்.ஏ.வேங்கடகிருஷ்ணன் நம்மிடம், ‘‘ராவணன் பிராமணன்தான். அவன் சாம வேதத்தில் நிபுணன். ஏகப்பட்ட யாகங்கள் செய்தவன். தேவ குலத்தில் பிறந்து தீய செயல்களில் ஈடுபடுபவனை அசுரன் என்றும், மற்ற இனத்தில் பிறந்து தீமைகள் செய்பவர்களை ராட்சதன் என்றும் சொல்வார்கள். அப்படித் தீமை செய்தவன்தான் ராவணன். மற்றபடி வால்மீகி ராமாயணத்திலோ, கம்ப ராமாயணத்திலோ ராமர் பாலத்துக்கான யாகத்துக்கு ராவணன் வந்ததாகத் தகவல் இல்லை. அதேநேரம், ஆனந்த ராமாயணம், அற்புத ராமாயணம் என்று நிறைய ராமாயணங்கள் உண்டு. சுவாமி குறிப்பிடும் சம்பவம் எதில் இருக்கிறது என்று தெரியவில்லை’’ என்றார்.

தி.மு.க. அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ் இளங்கோவனிடம் இந்த விவகாரம் தொடர்பாகப் பேசினோம். ‘‘ராவணன் பிராமணன் என்று சுப்பிரமணியன் சுவாமி சொல்வது சரியென்றால் வர்ணாசிரம தத்துவப்படி அவன் எப்படி ஆட்சி நடத்தியிருக்க முடியும்? சத்திரியன்தானே ஆட்சி நடத்த முடியும்? எங்களைப் பொறுத்தவரை ராமனை ஆரிய இனத்தின் அடையாளமாகவே பார்க்கிறோம். இப்போது பிரச்னை ராமன் சத்திரியனா, ராவணன் பிராமணனா என்பதல்ல. தமிழ்நாட்டுக்கு நன்மை தரக்கூடிய சேதுசமுத்திரத் திட்டம் முழுமையாக நிறைவேற வேண்டும் என்பதுதான்’’ என்றார்.

நன்றி: ஜூனியர் விகடன்