தமிழுக்கு இன்னொரு அணிகலன் தமிழ்ஓசை - இதுவெறும் விளம்பரமன்று, உண்மை.

மண் பயனுறச் செய்கிறது மக்கள் தொலைக்காட்சி - இதுவும் வெறும் பாராட்டன்று. தமிழ் மக்களின் ஒருமித்த கருத்து.

ஒரு நாளேடு, ஒரு தொலைக்காட்சி என இரண்டு துறைகளிலும் பெரும் சாதனை படைத்திருப்பவர். ஒரு ஆங்கிலச் சொல்கூடக் கலக்காமல், இலக்கணம் என்று ஒரு தமிழ்த் திரைப்படம் உருவாவதற்குப் பெரும் பின்னணியாக இருந்தவரும் நீங்கள். உங்களின் தமிழ் உணர்வு, தமிழ் இனப்பற்று ஆகியன வெறும் உதட்டசைவன்று, உள்ளத்திலிருந்து பீறிடும் உணர்ச்சி என்பதைப் பல நேரம் உங்கள் பக்கத்தில் இருந்து பார்த்தவன் நான். தமிழ் உணர்வும், சமூகநீதியும் உங்களின் இருபெரும் கொள்கைகள், இரண்டுமே இன்றைய தமிழ்ச் சமூகத்திற்கு மிகத்தேவையான கோட்பாடுகள் என்பதை அனைவரும் அறிவோம்.

1980களில் சாதாரண வன்னியர் சங்கமாக வெளிப்பட்டு, பிறகு பாட்டாளி மக்கள் கட்சியாக மலர்ந்து இன்று தமிழ்நாட்டில் மட்டுமின்றி, தில்லியிலும் கூட, ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும். உங்களின் வளர்ச்சி எவரையும் மலைக்க வைக்கும். இனியும் பல கிளைகள் விரிந்து வானுயர வளரும் வல்லமை உங்களுக்கு உண்டு என்று நம்புகிறவன் நான்.

தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியான தி.மு.க. வோடு கூட்டணி அமைத்திருந்தாலும் உங்கள் போக்கு சற்று வேறுபட்டதாகவே உள்ளது. எதிரிக் கட்சியைப் போல இல்லாமல், நல்லதோர் எதிர்க்கட்சியைப் போல நாங்கள் செயல்படுவோம் என்னும் உங்களின் அறிவிப்பு ஆரோக்கியமானதுதான். எந்தவொரு கட்சியோடு நாம் கூட்டணி வைத்திருந்தாலும், மக்களோடு கூட்டணி வைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் முகாமையானது. மக்களின் குறைகளை அரசுக்கு எடுத்துச் சொல்லும் நண்பனாகவும், அரசின் குறைகளைச் சுட்டிக் காட்டும் தோழனாகவும் நீங்கள் செயல்பட முனைவதில் எல்லோருக்கும் மகிழ்ச்சிதான்.

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும்

என்பதுதானே நம் வள்ளுவப் பேராசானின் வாக்கு.

இடித்துரைக்காத அரசு கெடும் என்பது உண்மைதான். அதேவேளையில், இடித்துக் கொண்டே இருந்தாலும் அது கெடும் என்பதை நீங்கள் உறுதியாய் அறிந்திருப்பீர்கள். என்ன காரணத்தினாலோ, தமிழக அரசை இப்போது நீங்கள் தொடர்ந்து இடித்துக்கொண்டு இருக்கிறீர்கள். இப்போக்கு இன்றைய அரசுக்கும், எதிர்காலத் தமிழ்நாட்டிற்கும் கேடுவிளைவித்து விடுமோ என்னும் அச்சம் காரணமாகவே இம்மடல் எழுத நேர்ந்தது.

இந்த ஆட்சிக்காலம் முடியும் வரையில், கண்டிப்பாக நாங்கள் இந்த அரசுக்குத் துணை இருப்போம் என்று நீங்கள் பலமுறை சொல்லிக் கொண்டே இருக்கின்றீர்கள். அதற்கு நீங்கள் அடிக்கடி அழுத்தம் கொடுப்பதே சில நேரங்களில் அச்சப்படுவதற்கும் காரணமாகின்றது. வெளிப்படையான உண்மைக்கு யாரும் அழுத்தம் தருவதில்லை, ஐயம் வரும்போதுதான் அழுத்தமும் வருகிறது.

தி.மு.க.விற்கும், பா.ம.க.விற்கும் இடையில் முற்றிக் கொண்டிருக்கும் அறிக்கைப் போர்கள், இரண்டுக்கும் இடையில் பிளவு வலுத்துக் கொண்டிருக்கிறதோ என்னும் எண்ணத்தையே உருவாக்குகிறது, பிளவு ஏற்படுமானால், உங்கள் இருவரில் யாருக்கு இலாபம், யாருக்கு நட்டம் என்னும் கணக்கை இப்போதே சில ஏடுகள் பார்க்கத் தொடங்கிவிட்டன. என்னைப் பொறுத்தளவு, உங்களுக்குள் ஏற்படுகிற பிரிவு, ஜெயலலிதாவிற்கு இலாபமாகவும், தமிழ் மக்களுக்கு நட்டமாகவும் முடியும் என்றுதான் கருதுகிறேன்.

மக்கள் தொலைக் காட்சியில் ஒளிபரப்பாகும் நீதியின் குரல் போன்ற ஒருசில நிகழ்ச்சிகளைப் பார்க்கும்போது ஜெயா தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கிறோமோ என்று எண்ணத் தோன்றுகிறது. உங்கள் கோபத்தில், ஜெயலலிதாவின் புன்னகையைப் பார்க்க நேர்கிறது.

ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், தி.மு.க.விற்கும், ஜெயலலிதாவுக்கும் இடையில் உள்ள வேற்றுமைகளை நீங்கள் நன்றாக அறிவீர்கள். இரண்டும் ஒன்றுதான் என்று குறிப்பிடும் சில தலைவர்களின் கருத்தில் உங்களுக்கு உடன்பாடு இருக்க முடியாது என்று நான் நம்புகிறேன். சமமற்றவர்களைச் சமமாக்கிக் காட்டுவது மறைமுகமாக மோசமானவர்களுக்குத் துணை போவதுதான் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

எங்கள் கூட்டணிக்கு வந்தால் மரு.இராமதாசை மரியாதையோடு நடத்துவோம் என்று ஜெயலலிதா சொல்லியிருப்பதைப் படித்த போது என்னால் சிரிக்காமல் இருக்கமுடியவில்லை. அவர்கள் ஊர் அகராதியில் மரியாதை என்ற ஒரு சொல்லே கிடையாது என்பதை என்னைக் காட்டிலும் நீங்கள் நன்றாக அறிவீர்கள் ஒருமுறை உங்கள் துணைவியாரின் வேண்டுகோளைக் கொச்சைப்படுத்தி ஒரு நாள் கூடச் சிறையில் இருக்கும் துணிவில்லாதவர் என்று உங்களை இழிவுபடுத்த அந்த அம்மையார் முயன்ற அநாகரிகம் இன்னும் என் நினைவில் இருக்கிறது.

தனிப்பட்ட முறையில் உங்களுக்கு மதிப்பு தரப்படுமா இல்லையா என்பதைக் காட்டிலும், நீங்கள் எந்தக் கூட்டணியில் இருப்பது தமிழகத்திற்கு நல்லது என்பதுதான் நாம் கவனிக்க வேண்டிய ஒன்று.

குறையில்லாத மனிதன், குறையில்லாத கட்சி, குறையில்லாத ஆட்சி உலகில் எங்கும் இருக்க முடியாது. தி.மு.க. ஆட்சியிலும் குறைகள் இருக்கலாம். ஆனாலும் இன்றைய ஆட்சி மக்களுக்கு நன்மை செய்து கொண்டிருக்கிற ஒரு ஜனநாயக ஆட்சி என்பதையும், நேற்றைய ஆட்சி மக்களை அடக்கி ஒடுக்கி அதிகாரம் செலுத்திய சர்வதிகார ஆட்சி என்பதையும் யார்தான் மறுக்க முடியும்.

இரண்டுமே வேண்டாம், மூன்றாவது அணியை முகிழ்க்க வைப்பதுதான் சரி என்று சிலர் கருதுகின்றனர். ஒரு ஜனநாயக நாட்டில் மூன்று என்ன, முப்பது அணிகள் கூடத் தோன்றலாம். ஆனால் அதற்கான ஒரு சிறிய வாய்ப்புக் கூட இன்று இல்லை என்பதுதானே நடைமுறை உண்மை. அப்படியே இருந்தாலும், அந்த மூன்றாவது இடத்தில் நடிகர் விஜயகாந்த் நின்று கொண்டிருப்பதாக ஏடுகள் சில கணிக்கும் போது, நாம் எவ்வளவு பெரிய ஆபத்தை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறோம் என்ற அச்சம் நம்மைத் தாக்குகிறது.

இந்தச் சூழலில், கலைஞர் தலைமையிலான தமிழக அரசைத் தொடர்ந்து எதிர்ப்பது ஜெயலலிதாவிற்கும், விஜயகாந்த் போன்றவர்களுக்கும் நம்மையறியமால் நாம் செய்யும் உதவியாக அல்லவா முடிந்துவிடும்.

இவ்வாறெல்லாம் நான் எழுதுவதன் மூலம், தி.மு.கழக ஆட்சியை எந்தவித விமர்சனமும் இல்லாமல் ஆதரிக்க வேண்டும் என்று நான் கூறுவதாக நீங்கள் எண்ணிவிடக் கூடாது. உங்கள் எதிர்ப்பின் அளவும், கலைஞர் மீது நீங்கள் காட்டும் கசப்பின் அளவும் கூடிக்கொண்டே போவதாக என் போன்றவர்கள் கருதுகின்றோம். அது தி.மு.க.விற்குக் கேடுவிளைவிக்கும் என்பதற்காக அன்று, இந்நாட்டு மக்களுக்குக் கேடுவிளைவிக்கும் என்பதற்காக நீங்கள் இருவரும் என்றும் இணைந்திருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

இறுதியாக இரண்டு செய்திகளை நினைவுபடுத்தி என் மடலை நான் முடிக்கிறேன்.

அ.தி.மு.க ஆளும் கட்சியாக இருந்த நேரத்தில் பா.ம.க. அதன் கூட்டணிக் கட்சியாக இருந்திருக்கிறது. அந்த வேளைகளில் அ.தி.மு.க. ஆட்சியின் குறைகள், தவறுகள் குறித்து உங்களிடம் கேட்கப்பட்ட போதெல்லாம், எல்லாவற்றையும் அன்புச் சகோதரி பார்த்துக் கொள்வார் என்றுதான் விடையளித்திருக்கிறீர்கள். ஆளுங்கட்சியை எதிர்த்து அப்போது நீங்கள் பெரும் போராட்டம் எதையும் நடத்தியதாக எனக்கு நினைவில்லை.

இப்போதும் கூட, மத்திய அரசின் ஆட்சியில் குறைகளே இல்லை என்று சொல்ல முடியாது. நீங்களே ஒன்றிரண்டைச் சுட்டிக் காட்டியும் இருக்கிறீர்கள். ஆனால் மத்திய அரசை எதிர்த்துப் பெரும் போராட்டம் எதிலும் நீங்கள் ஈடுபடவில்லை. அன்று அந்த அன்புச் சகோதரியிடம் காட்டிய பரிவை, இன்று இந்த அன்புச் சகோதரரிடம் காட்டக் கூடாதா?

இன்றும் தில்லி அரசிடம் காட்டும் நிதானத்தை, தமிழக அரசிடமும் காட்டக்கூடாதா?

என் இரண்டு வினாக்களிலும் இருக்கும் நியாயத்தை நீங்கள் கோபப்படாமல் ஏற்றுக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

அன்புடன்
சுப.வீரபாண்டியன்

1 comments:

சாலிசம்பர் said...

பகிர்ந்து கொண்டதற்கு நன்றி மகி.