உடல்மொழி அரசியல்



ஒரு பெண் ஏன் எழுத வருகிறாள்? வன்முறையை மறுக்க, சகலவிதமான ஒடுக்குமுறையை எதிர்க்க,விடுதலையைக் கொண்டாட, தன் உடலை-மனதை வியக்க, சமூக மதிப்பீடுகளை மீட்டுருவாக்கம் செய்ய,சுய விமர்சனம் செய்துக் கொள்ள, மாற்று அழகியலுக்கு களம் அமைக்க, பன்மையை நிறுவ என்று பெண் எழுத்தின் செயல்பாடுகள் கூர்மையானது.

வெட்டிவிட்ட பாதையில் செல்வது கலையின் வேலையல்ல. ஆணோ, பெண்ணோ, படைப்புக்கு படைப்பாளி வகுக்கிற கரை தான் அணையாக முடியும். ஆதிக்க கலாசாரத்தின் களனாக பெண் உடல் கட்டமைக்கப்படும் போது, பெண் கவிதை அதை வெளிப்படுத்துகிறது, தர்க்கத்திற்கு உட்படுத்துகிறது, மூர்க்கமாக எதிர்க்கிறது. அதிகாரத்தை கலைத்துப் போடுவது தான் கவிதையின் தலையாய வேலை என்ற முடிவுக்கு உடன்படும் ஆணும், பெண் கவிதையையே எழுதுகிறார். புனிதம்Xதீட்டு என்ற லிங்கமைய இணைமுரண் கலாச்சாரம்,ஆணை பெண்ணுக்கு எதிராக வைத்து, பெண் உடலை உடமையாக்கும், கண்காணிக்கும், ஒடுக்கும் வேலையை செய்கிறது.

ஆணுக்கு பெண் கீழானவள் அல்ல, மேலானவளும் அல்ல, சமமானவள் கூட அல்ல, வேறானவள் என்ற புள்ளியிலிருந்து தான், பெண் எழுத்தின் எதிர் கலாச்சார நடவடிக்கையாக உடல்மொழி இயங்குகிறது. எழுதி எழுதி பெண்ணுடல், கலாச்சார காவலிலிருந்து தன்னை விடுவித்திக் கொள்ளும், வெளியேறும், பின் திளைக்கும்.

ஆம் நான்தான்
உலகின் அழகிய முதல் பெண்

ஒரு நாள்
என் தோலைக் கழற்றி வீசினேன்
கூந்தலை உரித்து எறிந்தேன்
துவாரங்களில் ரத்தம் ஒழுகும்
மொழுக்கைப் பெண்ணென
காதல் கொள்ள அழைத்தேன்
காதலர்கள் வந்தார்கள்
கரிய விழிகள் கொணட அவர்கள்
நெய்தலின் நுட்பம் கூடிய சிலந்திகள்
குருதியை நூலாக்கித் திரித்து
செந்நிறத்தின் ஊடுபாவிய வலையை
எட்டுக் கால்களில் விரித்தார்கள்
அந்தியில் வந்த சூரியன் சிவப்பில் விழுந்தான்

அப்பொழுதும் சொன்னேன்
நான் பூரணமாய் காதலிக்கப்பட்டவள்
மறுபடி நானே
உலகின் அழகிய முதல் பெண்

-லீனா மணிமேகலையின் வலைத்தளத்தில் இருந்து