பெரியார்

''பெரியாரிடம் இருந்து இன்றைய தமிழக அரசியல்வாதிகள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்?''

''நிறைய இருக்கிறது. 'குழந்தைகளும் குடும் பமும் இருப்பதாலேயே ஒருவன் ஒழுக்கக் கேடு உள்ளவன் ஆகவும் அயோக்கியன் ஆகவும் மாற நேரிடுகிறது’ என்றார் பெரியார். பெரியார் தன் காதல் மனைவி நாகம்மாள் இறந்தபோது 'குடிஅரசு’ இதழில் எழுதியது இலக்கியத்தரம் வாய்ந்தது. 'பெண்கள் சுதந்திர விஷயமாகவும் பெண்கள் பெருமை விஷயமாகவும் பிறத்தி யாருக்கு நான் எவ்வளவு பேசுகிறேனோ, போதிக் கிறேனோ, அதில் நூற்றில் ஒரு பங்கு வீதமாவது என்னருமை நாகம்மாள் விஷயத்தில் நடந்து கொண்டேன் என்று சொல்லிக்கொள்ள எனக்கு முழு யோக்கியதை இல்லை. ஆனால், நாகம்மாளோ பெண் அடிமை விஷயமாகவும் ஆண் உயர்வு விஷயமாகவும் சாஸ்திர புராணங் களில் எவ்வளவு கொடுமையாகவும் மூர்க்க மாகவும் குறிப்பிட்டு இருந்ததோ அவற்றுள் ஒன்றுக்குப் பத்தாக நடந்துகொண்டு இருந்தார் என்பதையும் அதை நான் ஏற்றுக்கொண்டு இருந்தேன் என்பதையும் மிகுந்த வெட்கத்துடன் வெளியிடுகிறேன்’ என்று தன்னைத்தானே சுய விமர்சனம் செய்தவர். அது மட்டும் இல்லாமல், நாகம்மாள் மறைவால் 'தனக்குப் பொதுவாழ்வில் இருந்த ஒரே தடையும் நீங்கியது’ என்றும் ஆன்ம தைரியத்துடன் தெரிவித்து, 'நாகம்மாள் மறைவு நன்மையைத் தருவதாகுக!’ என்று அந்தக் குறிப்பை முடிக்கிறார். இன்றைக்குப் பொது வாழ்வில் இருப்பவர்களில் எத்தனை பேரிடம் இந்த நேர்மையை எதிர்பார்க்க முடியும்!''

- ஆ.சாக்ரடீஸ், சென்னை-18.
நன்றி: ஆனந்த விகடன்
பெரியார்