2011-ன் நிச்சய முதல்வர்


'வருங்கால முதல்வர் கார்த்திக்... 2011-ன் நிச்சய முதல்வர் கார்த்திக்... நாளைய பிரதமர் கார்த்திக்..!' என்னும் வகைதொகையில்லாத கோஷங்களுக்கு நடுவே, வாய் நிறைய சிரிப்போடு மைக் பிடிக்கிறார் நடிகரும் ஃபார்வர்ட் பிளாக் கட்சியின் முன்னாள் தமிழகத் தலைவருமான கார்த்திக்.

''கடவுள் இல்லை என்று சொல்பவன் முட்டாள். கடவுள் இருக்கிறார்... இருக்கிறார்... இருக்கிறார்..! கண்ணால் கண்டால் மட்டுமே கடவுள் என்று சொன்னால், கண் இல்லாதவர்களுக்கு அவர் கடவுள் இல்லையா..! நமக்கு ஏற்படும் சோதனைகளுக்குக் கடவுளை நம்ப வேண்டும்!'' என்று அதிரடி ஆத்திகம் பேசுகிறார் கார்த்திகானந்தா! குழுமி நின்ற ரசிகர்களைக் கொஞ்ச நேரம் குழப்பியடித்துவிட்டு, பேட்டிக்குத் தயாரானார்.''பிஸ்வாஸோட நீண்ட நாள் ஆசை நிறைவேறிடுச்சு! அரசியல்ல என்னோட ஃபாஸ்ட் குரோத் அவருக்குப் புடிக்கலை. அதனாலதான் கட்சியோட தமிழகத் தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து என்னை நீக்கியிருக்கார். இதுக்கு மேல ஒரு கட்சியை யார் பொறுப்பா பார்த்துக்குவாங்க? இனி நான் ஃபார்வர்ட் பிளாக்ல இல்லை. நான் இல்லாதது இன்னும் கொஞ்சம் நாள்ல அவங்களுக்குத் தெரியும்! ஆக்சுவலி, இப்போ எனக்கு 'மூடு' சரியில்லை. இருந்தாலும், பேட்டி தரேன். கேள்விகளைக் கேளுங்க..!'' என்று சுறுசுறுப்பானவரிடம், ''முதல்ல... உங்களுக்கு என்னதான் சார் பிரச்னை..?'' என்றோம்.

''எந்தப் பிரச்னையைன்னு சொல்றது? நான் ஒப்புக்கிறேன் சார், எனக்கு அரசியல் தெரியலை, தெரியலை, தெரியலை! அரசியலுக்கு வந்த புதுசுல, அப்பாவியா யார் என்ன சொன்னாலும் தலையாட்டினேன். கொஞ்சம் லேட்டா னாலும், என்னைச் சுத்தி சதி வலை பின்றாங்கன்னு கண்டு பிடிச்சுட்டேன். நான் நம்பின எல்லாரும் என்கூட இருந்தே குழி பறிச்சாங்க சார்! ஐ நெவர் லைக் திஸ், யூ ஸீ! அப்பவும் ரொம்பப் பொறுமையா எல்லாரையும் கூப்பிட்டு வெச்சு, 'ஒத்துமையா நல்லபடியா இருங்க'ன்னு அட்வைஸ் பண்ணிக் கை குலுக்கினேன். அப்படியும் யாரும் என் பேச்சை கேட்கலே. இப்ப கடைசியில பாதிக்கப்பட்டது நான்தான்!''

''அடுத்ததா என்ன செய்யப் போறீங்க..?''

''யூ ஸீ... நான் சும்மா விட்டுடுவேன்னு நினைக்கிறீங்களா..? சான்ஸே இல்லை! தமிழ்நாட்டு மக்களுக்கு இப்பதான் நான் ரொம்ப அவசியம்(!!!). ஒண்ணு சொல்லட்டுமா... தமிழகத்து மக்கள், குறிப்பா தென் மாவட்டங்களில் இருக்கிற என் இன மக்கள் ரொம்பப் பாசம் வெச்சிருக்காங்க! இப்ப கொஞ்ச நாளா நான் சினிமாவிலும் நடிக்கிறதில்லை. ஆனாலும், என் மேல இத்தனைப் பிரியமா இருக்கிற அந்தப் பாசக்கார மக்களுக்கு நான் ஏதாவது செஞ்சே ஆகணும். ஆனா, உடனடியா என்ன செய்யறதுனு ரொம்பக் குழப்பமா இருக்கு! ஆனா, பெருசா ஏதாவது செய்யணும்னு மட்டும் முடிவு பண்ணிட்டேன்!''

''அப்ப புதுக்கட்சி துவக்குறதுனு முடிவே பண்ணிட்டீங்களா?''

''ம்ம்ம்... சீக்கிரமே புதுக் கட்சி பத்தி அறிவிப்பேன். அந்தக் கட்சி தேவர் ஐயா பேர்ல இருக்கும். இத்தனை வருஷ தீவிர அரசியல்ல(!) இருந்ததால, இன்னொண்ணும் நான் தெரிஞ்சுக்கிட்டேன். தனியா கட்சி நடத்துறது ரொம்ப ரொம்பக் கஷ்டம். அதனால கட்டாயம் கூட்டணி வைப்பேன். அது அ.தி.மு.க-வா இருக்கலாம். அல்லது, தி.மு.க-வா இருக்கலாம். அல்லது... ம்... வேற என்ன பெரிய கட்சிங்க இருக்கு... நிச்சயம் அவங்களோட கூட்டணி வைப்பேன். வர்ற பார்லிமென்ட் எலெக்ஷன்ல எப்படியும் என் கட்சிக்கு ஒரு எம்.பி. சீட்டு இருக்குங்க!''

''உலக அரசியலைக் கவனிக்கிறீங்களா?''

''இங்கே ஒரு கார்த்திக் - பிஸ்வாஸ் மாதிரி, உலகம் பூரா அப்பாவி அரசியல்வாதிகளும் மோச மான அரசியல்வாதிகளும் நிறையப் பேர் இருக்காங்க. அந்த புஷ்ஷைப் பாருங்க... இரான் வழியா நாம கேஸ் பைப் லைன் கொண்டு வந்தா அந்தாளுக்கு என்னங்க வந்துச்சு? இண்டியாக்காரன் நெறைய சாப்பிடுறதாலதான் உணவுப் பஞ்சம்னு அந்தாளு சொல்றது சுத்தப் பைத்தியக்காரத்தனம்.

கார்த்திக் சும்மா இருக்கான்னு நிறையப் பேர் நினைச்சுட்டு இருக்காங்க. நான் ஒண்ணும் சும்மா இல்லீங்க பிரதர்! என்னோட 'லேப்-டாப்' மூலமா எல்லாத்தையும் வாட்ச் பண்ணிட் டுதான் இருக்கேன். உலகத்துல எங்கே, எது நடந்தாலும், அது என் கவனத்துக்கு வந்துடும். எல் லாத்துக்கும் ஒரு நாள் வெச்சுக் கிறேன்!''

''அரசியல் இருக்கட்டும்... சினிமா என்னாச்சு?''

''சினிமாவுல கொஞ்சம் பெரிய 'கேப்' விழுந்துருச்சு இல்ல... ஆனா, இந்த 'கேப்'புல படு பிரமாண்டமா மூணு கதை எழுதியிருக்கேன். அப்புறம், சீக்கிரமே பெரிய டைரக்டர் ஒருத்தர்கிட்ட படம் பண்ணப்போறேன். அது சினிமாவுல என்னோட மிகப் பெரிய இரண்டாவது இன்னிங்ஸா இருக்கும். தமிழ் சினிமா இதுவரைக்கும் பார்க்காத ஒரு பெரிய படமா அது இருக்கும்!''