அறிவற்றவர்களை அதிகாரத்துக்குள்ளாக்குவது உண்மையான அறிவின் செயல்பாடல்ல. மாறாக, மற்றவர்களையும் அறிவாளியாக மாற்றுவதுதான்!

-கார்ல் மார்க்ஸ்

அம்பேத்கருக்குள் புது கிளர்ச்சியை உண்டாக்கியது அமெரிக்காவின் நியூயார்க் நகரம்.

காரணம், இங்கே அவர் மகர் இல்லை. சாலையில் எதிரே அவரைக் கடந்து செல்பவரிடம் 'இவன் என்ன சாதியாக இருப்பான்' என்கிற சந்தேகப் பார்வைகள் இல்லை. முகச் சுளிப்புகள் இல்லை. விலகி நடந்து, சக மனிதனை அற்பப் பிராணி போன்று நடத்தும் அசிங்கங்கள் இல்லை. இதனாலேயே அவரது நெஞ்சு நிமிர்ந்தது. நடையிலும் மனதிலும் உற்சாகம் பிறந்தது. கைகள் சற்று அகலமாகவே நகரத்தின் வீதிகளை வீசி அளந்தன. என்றாலும், தனது தாய்நாடான இந்திய மண்ணில் இந்த அக சுதந்திரத்தைத் தன்னால் பூரணமாக அனுபவிக்க முடியவில்லையே எனும் ஏக்கம் ஒரு புண்ணாக அவரது நினைவில் வலி ஏற்படுத்திக்கொண்டு இருந் தது. இந்தக் குறைகளிலிருந்து தன் தேசத்தையும் தன் மக்களையும் விடுவிப்பதுதான் எதிர்காலத்தில் தான் செய்யவேண்டிய மிக முக்கியமான காரியம் என்பதை அச்சமயத்தில் முழுமையாக உணர்ந்தார் அம்பேத்கர். 22 வயதில் விரும்பி தன் முதுகில் ஏற்றிக்கொண்ட இந்தச் சுமையுடன், அம்பேத்கர் கொலம்பிய பல்கலைக்கழகத்தினுள் அடியெடுத்து வைத்தார்.கல்லூரிப் பருவத்துக்கே உண்டான சக மாணவர்களின் கேளிக்கைகளைக் கண்டும் காணாதவராக விலகி நடந்தார். வராந்தாக்களில் அவர்கள் விடுக்கும் உற்சாகக் கூக்குரல்கள், எங்கோ கிணற்றுக்குள்ளிருந்து ஒலிப்பது போலத்தான் இவருக்குக் கேட்டது. அந்த அளவுக்கு வேறு எது பற்றிய சிந்தனையுமே இல்லாதவராக, எந்நேரமும் கல்வி ஒரு காந்தம் போல இழுத்துக்கொண்டு இருந்தது. இதனாலேயே அவரது கால்கள் கல்லூரிக்கும் அவர் தங்கியிருந்த காஸ்மோபாலிட்டன் கிளப்புக்கும் இடைப்பட்ட தூரத்தை மட்டுமே அளந்துகொண்டு இருந்தன.

அமெரிக்கர்களின் நடை, உடை, பாவனை, பழக்கவழக்கங்கள் அம்பேத்கரைக் கவர்ந்தன. குறித்த நேரத்தில் உணவு மேசைக்கு வரும் ஒழுங்கு, சிந்தாமல் சிதறாமல் உணவு அருந்தும் பாங்கு, அணியும் உடைகளின் நேர்த்தி, தன்னையும் இழக்காமல் பிறரையும் மதிக்கும் அவர்களது பண்பு போன்ற குணங்களை மெள்ள மெள்ள அவர் தனதாக மாற்றிக்கொண்டார். இரண்டு ரொட்டித் துண்டு, ஒரு மீன் துண்டு, ஒரு குவளை காபி... இவ்வளவுதான் அங்கு அவர் மேற்கொண்ட உணவு முறை. இதற்கே ஒரு நாளைக்கு ஒரு டாலரும் பத்து சென்ட்டும் அவர் செலவு செய்ய வேண்டியிருந்தது. அவருக்கு அளிக்கப்பட்ட உதவித்தொகையில் பாதிப் பணம் இதற்கே செலவழிந்ததால், சில சமயம் உணவு விடுதிக்குள் நுழையாமலே கடந்துசென்றுவிடுவார்.

1915ல், கொலம்பிய பல்கலைக்கழகத்தில் எம்.ஏ., பட்டம் வென்ற அம்பேத்கர், அடுத்த ஆண்டிலேயே 'இந்தியாவில் சாதியம்' மற்றும் 'பண்டைய இந்தியாவில் வாணிபம்' என்னும் தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்து, டாக்டர் பட் டங்களைத் தன் பெயரின் அடைமொழியாக இழுத்துக்கொண்டார். அமெரிக்காவில் ஒருவழியாக அவர் வந்த காரியம் பூர்த்தியானது என்றாலும், தான் காண விரும்பும் லட்சிய உலகுக் கான போராட்டத்துக்கு இந்தப் படிப்பெல்லாம் போதாது என உணர்ந்தார். அறிவுத் தேடல் நெருப் பெனக் கொழுந்துவிட்டு எரிய, அடுத்து லண்ட னுக்குப் பயணமானார். லண்டன் நகரத்தின் 'கிரேஸ் இன்' சட்டக் கல்லூரி, பொருளாதாரம் படிக்க அவரை அனுமதித்துக்கொண்டது. 'என்னதான் ஒருவனுக்கு அறிவு நெருப்பு இத்தனை பிரகாசமாக எரிந்தாலும், இப்படியா வெறியுடன் நாடு நாடாக அலைவது' என, அதுவரை அம்பேத்கரின் கல்விக்கு உதவிய மன்னர் சாயாஜி ராவ் கெய்க்வாட்டுக்குத் தோன்றியதோ என்னவோ... 'இனி என்னால் தம்பிடி காசுகூடச் செலவு செய்ய முடியாது' எனக் கையை விரித்துவிட்டார். அதோடு மட்டுமின்றி, இது வரை படிக்க வைத்த செல வுக்குப் பிரதியாக உடனே அம்பேத்கர் அரண்மனை வந்து சேவகம் செய்ய வேண்டும் எனும் கண்டிப்பான உத்தரவு வேறு!

பட்டம் பாதியில் அறுந்து தொங்கியது. அம்பேத்கரின் மனச் சோர்வைப் புரிந்துகொண்ட 'கிரேஸ் இன்' கல்லூரி நிர்வாகம், 'எப்போது வேண்டுமானாலும் நீங்கள் இங்கே வந்து உங்களின் படிப்பைத் தொடரலாம்' என அனுமதி வழங்கி விடை கொடுக்க, அம்பேத்கர் அரை மனதோடு பெட்டி படுக்கைகளை மூட்டை கட்டிக்கொண்டு ஊருக்குப் புறப்படத் தயாரானார். 1917 ஜூலையில், மார்ஷல் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட எஸ்.எஸ்.கெய்ஸர் எனும் கப்பல், அம்பேத்கரை சமாதானம் செய்யும் விதமாகக் கூவியபடி, இந்தியா நோக்கிப் புறப்பட்டது.

இந்தியா திரும்பியதும், அம்பேத்கரின் புகழ் பம்பாய் மாகாணத்தில் சரசரவெனப் பற்றிப் பரவத் தொடங்கியது. அமெரிக்கா சென்று படிப்பது என்பது, இந்தியாவில் அன்றைக்குச் சாதாரண காரியமல்ல.வசதிமிக்க உயர் சாதியினருக்கேகூட அன்றைய நிலையில் ஆகாத காரியம் அது. இச்சூழலில், மகர் இனத்தைச் சேர்ந்த ஒரு மாணவன் அமெரிக்கா சென்று டாக்டர் பட்டம் பெற்றுத் திரும்பியது, பலரையும் பிரமிப்பில் ஆழ்த்தியது. கண்டிப்பாக இதற்கு விழா எடுத்தே தீர வேண்டும் எனஅனைவரும் விரும்பினர். மாகாண முதன்மை நீதிபதி தலைமையில் பாராட்டு விழாவும் சிறப்பாக நடந்தேறியது. விழா முடிந்த பின், பெரும் கூட்டம் வீடு தேடி வந்து முற்றுகையிட்டுப் பாராட்டைக் குவித்தது. ஆனால், அத்தனைப் பாராட்டுக்களும் ஒரே வாரத்தில் அம்பேத்கரின் கண் முன் சரிந்து விழுந்தன.படிப்பு எப்படியும் தன் கௌரவத்தையும் அந்தஸ்தையும் உயர்த்திவிடும் என நினைத்திருந்த அம்பேத்கரின் எண்ணத்தில் மண் அள்ளிப் போடுவதற்கென்றே பரோடா அரண்மனையில் காத்திருந்தனர் சாதி வெறியர்கள் சிலர். ஆனால், இது தெரியாத பரோடா மன்னரோ, அம்பேத்கரின் உயர்ந்த படிப்பைக் கௌரவப்படுத்தும் வகையில் ராணுவச் செயலாளராக நியமித்துப் பத்தாண்டுகள் பணிபுரியுமாறு கனிவான கட்டளை விடுத்திருந்தார். துவக்கத்தில் அம்பேத்கரும் அந்தப் பதவியை உவப்புடன் ஏற்றுக்கொண்டு, அதற்கான வேலைகளில் மூழ்கினார். ஆனால், அரண்மனையே அவரைக் கண்டதும் ஓடி ஒளிய ஆரம்பித்தது. ஒரு நாள் தனக்குச் சேவகம் செய்ய நியமிக்கப்பட்ட ஒரு கடைநிலை ஊழியனிடம் அம்பேத்கர் தண்ணீர் கொணருமாறு சொன்னார். வெகு நேரம் அந்தப் பணியாளன் சிலை போல நின்றுவிட்டு, பின்பு தயங்கித் தயங்கி அவரையே எடுத்துக் குடித்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டான். படிப்பறிவு இல்லாத அந்தப் பாமரனிடம் இருந்த சாதிவெறியை நினைத்து வருந்தியபடியே, அம்பேத்கர் அருகில் இருந்த பாத்திரத்திலிருந்து தண்ணீர் எடுக்கப் போக, சட்டென அங்கு வந்த இன்னொரு பணிப் பெண் பதற்றத்துடன், அம்பேத்கருக்கெனப் பிரத்யேகமாக வேறொரு பானை வைத்திருப்பதாகவும், அதிலிருந்து தண்ணீர் எடுத்துப் பருகுமாறும் கூறினாள். சாதி வெறி எந்த அளவுக்கு ஒரு நோயாக அவர்களுள் ஊறிப்போயிருக்கிறது என்பதை அறிந்து அம்பேத்கர் அடைந்த துயரத்துக்கு அளவில்லை. கூடவே, இந்த நோயிலிருந்து இவர்களை மீட்டாக வேண்டுமே என்கிற கவலையும் சேர்ந்து, அம்பேத்கரின் மனதில் தாங்க முடியாத பாரத்தை ஏற்றிவிட்டது. இந்த வேதனையுடன், தான் தங்கியிருந்த விடுதிக்குச் சென்றார். அங்கோ இதை எல்லாம்விடப் பெரும் வேதனை காத்திருந்தது.

சற்றுத் தொலைவிலேயே பார்த்துவிட்டார்... விடுதிக்கு வெளியே பத்துப் பதினைந்து பேர் கைகளில் தடியோடு, கண்களில் வெறியோடு காத்திருந்தனர்.-சரித்திரம் தொடரும்

2 comments:

Thamizhan said...

மிகவும் அருமையாக எழுதி வருகிறீர்கள்.
வாழ்த்துக்கள்.
இந்தத் தொடர் முடிந்ததும் சில முக்கிய நிகழ்ச்சிகளை விரிவாக எழுத வேண்டுகிறேன்.
பள்ளியில் வெளியிலேயே நாள் முழுதும் நின்று படித்தது,தண்ணீர் குடிக்க ஒரு ஆள் ஊத்த வேண்டிய நிலை,படித்தபின் இந்தியாவில் கடைசி வரை சாதீயம் அவரை அவமானப் படுத்திய நிகழ்ச்சிகள் இது போன்றவை.

நன்றி.

மகேந்திரன்.பெ said...

thamizan Your Greets will go to MR. AJAYAN BALA From Vikatan.com because its just a Cut and paste Post by mee im not a good writer im just a spectator of all the happenings :)