திடீரென்று, அடைமொழிகள் அதிலும் குறிப்பாகத் தமிழக அரசியலின் அடைமொழிக் கலாச்சாரம் தினமணிக்கு ஒருவித ஒவ்வாமையை ஏற்படுத்தியிருக்கிறது. அதனால் தினமணிக்கு ஏற்பட்டுள்ள வயிற்றுக் குமட்டல் அதன் தலையங்கத்தில் (04.08.2010) கொட்டிக் கிடக்கிறது.
பார்ப்பனியத்திற்கு எப்போதும் ஒரு ‘சிறப்புப் பண்பு’ உண்டு. எந்தவொன்றும் அதற்கு மட்டுமே ஏகபோக சொத்தாக, உரிமையாக இருக்கும் வரை அது புனிதத் தன்மையுடையது, தனித்தன்மையானது, தெய்வீகமானது, (மநு)நியாயமானது. அதுவே, காலச்சூழலினால் மற்றவர்களுக்கும் உரியதாகும் நிலை ஏற்படும்போது தேவையற்றதா(க்)கிவிடும், மதிப்பில்லாததா(க்)கிவிடும். அதுதான் பார்ப்பனியம்.
அப்படித்தான் அடைமொழிகள் அவாள்களுக்கு மட்டுமே உரியதாக இருந்தவரை, சொல்லச்சொல்ல இனித்தது. இப்போது அடுத்தவர்களுக்கும் அடைமொழிகள் கொடுக்கப்படுகின்ற மாற்றத்தைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை அவர்களால்.
அடைமொழிகள் அர்த்தமில்லாதவையாம்!
அப்படியானால், ‘மகா பெரியவா’, ‘லோக குரு’, ‘ஜெகத் குரு’ போன்ற அடைமொழிகளும் கூட அர்த்தமில்லாதவைகள்தானே? முதலில் லோக குருவையும், ஜெகத் குருவையும் (அடைமொழிகளையாவது) தூக்கிவீசட்டும்.
இன்றும் அவர்கள் ராஜகோபாலச்சாரியாரைப் பற்றிப் பேசும் போதும், எழுதும்போதும் ‘சக்கரவர்த்தி’ ராஜகோபாலாச்சாரியார், ‘மூதறிஞர்’ ராஜாஜி என்றுதானே குறிப்பிடுகிறார்கள். சக்கரவர்த்தியும், மூதறிஞரும் தினமணிகளுக்கு அருவருப்பைத் தரவில்லையே? ஏன்?
மேலே சொன்னதுதான் காரணம். அவாளுக்கு என்றால் அமுதம் அடுத்தவர்களுக்கு என்றால் அசிங்கம்.
“பொதுவாழ்வில் ஈடுபட்டவர்களும் பொறுப்பான பதவிகளில் இருப்பவர்களும் தங்களைப் பெயர் சொல்லி அழைப்பது மரியாதைக் குறைவு என்று கருதும் திராவிடக் கலாச்சார எதிர்பார்ப்பு எந்த பகுத்தறிவுவாதத்தைச் சேர்ந்தது என்பதைப் பெரியாரிடம் தான் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்” என்கிறது தினமணி.
தன்னைவிட வயதில் சிறியவர்களையும், சிறு குழந்தைகளையும்கூட வாங்க, சொல்லுங்க என்று மரியாதையுடன் அழைத்தவர் தந்தைபெரியார் - இது திராவிடக் கலாச்சாரம்.
60 வயது முதியவர்களையும் 6 வயது மழலை, ‘அடே’ என்று முகத்தில் அறைந்தாற் போல பெயர் சொல்லி அழைக்க வைத்தது பார்பனியம். அழைப்பது மனைவியையா, மகளையா, சகோதரியையா, மூத்தவரையா, இளையவரையா என்று தெரிந்துகொள்ள முடியாதபடி விளிச் சொற்களைக் கொண்டது அவாளின் பேச்சுவழக்கு - இது ஆரியக் கலாச்சாரம்.
பகுத்தறிவுக்குப் பனியாக்களிடம் விளக்கம் கேட்கவேண்டிய நிலைமை இங்கே இல்லை.
ஒரு முழத் துண்டுத் துணியைக்கூட அடிமைத்தனத்தின் அடையாளமாக்கியது ஆரியம். அதை உடைத்தது திராவிட இயக்கம். அறிஞர் அண்ணா அவர்கள் தி.மு.க.வைத் தொடங்கியபோது அனைவரும் தோளில் துண்டு அணிந்து மேடையில் தோன்றினர். அதிலும் அண்ணா அவர்கள் அணிந்திருக்கும் துண்டு தரையில் புரளும். பிறகு கழகத் தோழர்களைத் ‘துண்டுக்காரன்’ என்று கேலிபேசினர். காரணம் அவாளின் கழுத்தை மட்டுமே சுற்றியிருந்த அங்கவஸ்திரம், அனைவரின் தோளிலும் துண்டாக ஆடியதைச் சகித்துக்கொள்ள முடியவில்லை அவர்களால்.
சென்னை வழக்கறிஞர்கள் சங்கக் கூட்டத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வை இங்கே சொல்வது மிகப்பொருத்தமானதாக இருக்கும். அக்கூட்டத்தில் ஒரு தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. அதாவது ‘இனிமேல் வழக்காடத் தொடங்கும் போது நீதிபதிகளைப் பார்த்து என் பிரபுவே என்று பொருள்படும்படியாக, மை லார்டு என்று அழைக்க வேண்டியதில்லை. அது ஆங்கிலேயன் காலத்தில் கொண்டுவரப்பட்டது. எனவே இனிமேல் நீதிபதிகளைப் பார்த்து சார் என்று அழைத்தாலே போதும்’ என்றொரு கருத்து முன்வைக்கப்படுகிறது. அனைவரும் அதனை ஏற்றுக்கொள்கின்றனர். அப்போது அக்கூட்டத்தில் கலந்து கொண்ட வழக்கறிஞர் அருள்மொழி எழுந்து, “ஒரு சின்ன திருத்தம். மை லார்டு என்று அழைப்பதை உடனே நிறுத்த வேண்டாம். இன்னும் கொஞ்ச காலத்திற்கு நீதிபதிகளை மை லார்டு என்றே அழைக்கலாம்” என்று சொல்ல, அதைக் கேட்ட மற்றவர்கள் ஆச்சரியத்துடன், “சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்த நீங்கள் எப்படி அந்த அடிமை முறை தொடரவேண்டும் என்று சொல்கிறீர்கள்?” என்று கேட்டனர். அதற்கு வழக்கறிஞர் அருள்மொழி அவர்கள் சொன்ன விடை பார்ப்பனீய சூழ்ச்சியின் உச்சத்தைத் தொட்டுக்காட்டியது. “வேறொன்றுமில்லை, விடுதலைக்கு முன்பு ஆங்கிலேயர்கள் மட்டுமே நீதிபதிகளாக இருந்தார்கள். அப்போது அவர்களை ‘மை லார்டு’ என்று வழக்கறிஞர்கள் அழைத்தனர். அதற்குப்பிறகு ஒரு குறிப்பிட்ட மேல்தட்டு வகுப்பினர் மட்டுமே நீதிபதிகளாக இருந்துவந்தனர். அவர்களையும் ‘மை லார்டு’ என்று அழைத்தோம். அப்போதெல்லாம் உறுத்தாத அடிமைத்தனம், பிற்படுத்தப்பட்டவர்களும், தாழ்த்தப்பட்டவர்களும் நீதிபதிகள் ஆகியுள்ள இக்காலத்தில் மட்டும் ஏன் உறுத்துகிறது? இந்த நீதிபதிகளையும், சிலகாலம் ‘மை லார்டு’ என்று அழைக்கலாம். தங்களை மேல்சாதியினர் என்று கருதிக் கொண்டிருக்கும் வழக்குரைஞர்கள், வெள்ளைக்காரர்களை மை லார்டு என்று அழைத்த நாவால், நம்மவர்களையும் சில காலம் அழைக்கட்டுமே!” என்று விளக்கமாக விடைசொன்னபோது, மெல்ல மெல்லக் கரவொலி, கூட்ட அரங்கை நிறைத்தது.
பார்ப்பன விசமம் எப்படியயல்லாம் விளையாடுகிறது பார்த்தீர்களா?
அப்படித்தான் சூத்திரத் தலைவர்கள் அடைமொழிகளோடு அழைக்கப்படுவதைக் கண்டு குமுறியிருக்கிறது தினமணி. நம்முடைய முதல்வர் அவர்கள் ‘கலைஞர்’ என்று அழைக்கப்படுவது கட்டாயத்தினால் அல்ல, கலைத் துறையிலும், சமுதாயத்திலும் அவருடைய எழுதுகோல் ஏற்படுத்திய மாற்றங்களுக்காக, சுயமரியாதைமிக்க ஒரு சக கலைஞனால் வழங்கப்பட்டதுதான் கலைஞர் என்னும் அடைமொழியே தவிர, வலியப்போய் ஒட்டிக்கொண்டு வந்த புரட்சிப்பட்டமல்ல.
தன்னுடைய மாணாக்கர்களேயானாலும், அண்ணாவையும், கலைஞரையும் அவர்கள் வகித்த பதவிக்கு மதிப்புக் கொடுத்து, நமது முதலமைச்சர் அண்ணா என்றும், கலைஞர் என்றும் மரியாதையோடு அழைத்தவர் தந்தை பெரியார். மறைந்த அ.தி.மு.க. நிறுவனர் எம்.ஜி.ஆர். அவர்கள் எந்த இடத்திலும் எப்போதும் கலைஞரை பெயர் சொல்லி அழைத்ததில்லை. கலைஞர் என்றுதான் குறிப்பிடுவார். இன்று இருக்கும் தலைமை, அ.தி.மு.க. தலைமை மட்டுமல்ல பார்ப்பனீயத்தின் அதிகாரப்பூர்வ பிரதிநிதி. அங்கிருந்து சுயமரியாதையை எதிர்பார்க்க முடியாது.
மனிதர்களையே மதிக்கத் தெரியாதவர்களுக்கு, மக்கள் கொடுத்த பதவியை மதிக்கத் தெரியாததில் வியப்பில்லைதான்.
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
nice blog
visit my blog
tamil web library
Post a Comment