ராஜ்யசபா எம்.பி.யாக பதவியேற்ற பின்பு மாநில அரசு நிகழ்ச்சிகள் தொடங்கி, அறக்கட்டளை நிகழ்ச்சிகள் வரை தினசரி ஏதோ ஒரு மேடையில் கனிமொழியைப் பார்க்க முடிகிறது. கலைஞருக்கு எதிராக உச்சநீதிமன்றமோ, தனிநபர்களோ, யார் விமர்சனம் செய்தாலும், அதை, தான் சார்ந்த இலக்கிய மற்றும் நட்பு வட்டங்களைப் பயன்படுத்தி பதிலடி தருகிறார் கனிமொழி. இந்த நிலையில், அவரைச் சந்தித்துப் பேசினோம். அதிலிருந்து.......

டெல்லி அனுபவங்கள் எப்படி இருக்கின்றன?

“நான் கலந்து கொண்ட முதல் கூட்டத்தொடர் கூச்சலும், குழப்பமுமாகத்தான் நடந்தது. உரையாற்றும் வாய்ப்பு எனக்கு இன்னும் கிடைக்கவில்லை. மற்றபடி டெல்லி அனுபவங்கள் நன்றாகவே இருக்கின்றன. செய்திகளில் மட்டுமே பார்த்தும், கேள்விப்பட்டும் வந்த மூத்த அரசியல் தலைவர்களை நேரில் சந்தித்துப் பேசும் வாய்ப்புக் கிடைக்கிறது. தவிர, இளம் அரசியல் தலைவர்களுடன் கலந்துரையாடி, ஒட்டுமொத்த இந்தியாவில் நிலவும் முக்கியமான பிரச்னைகள் பற்றி விவாதிக்கவும், அதுபற்றி மேலும் தெரிந்து கொள்ளவும் நல்ல வாய்ப்பு அமைந்திருக்கிறது. ‘டெல்லி அரசியலில் கவனமாக இருங்கள்’ என்று சில நண்பர்கள் அறிவுறுத்தினார்கள். அதை நானும் மனதில் இருத்தி இருக்கிறேன்.’’

சேது சமுத்திரத் திட்ட விவகாரத்தில் தமிழக அரசு மீது உச்சநீதிமன்றம் விமர்சனம் செய்த உடனேயே வெகுண்டெழுந்து, அதுகுறித்து தனியாக கருத்தரங்கு நடத்தினீர்கள். ஏன்.. அப்பா மீது அல்லது உங்கள் தலைவர் மீது வைக்கப்பட்ட விமர்சனம் என்பதாலா?

“இன்றைய காலகட்டத்தில் யாருமே கேள்வி கேட்கமுடியாத இடத்தில் எவர் ஒருவரும், எந்த அமைப்பும் இல்லை. இந்த அடிப்படையில்தான் உச்சநீதிமன்றம் செய்த விமர்சனங்கள் பற்றி கேள்வி எழுப்ப விரும்பினேன். அப்பாவைப் பற்றி ஆயிரக்கணக்கானவர்கள் தினசரி விமர்சனம் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். அதையே தொழிலாகவும் சிலர் செய்து வருகிறார்கள். அதைப்பற்றி அப்பாவும் கவலைப்படவில்லை. நானும் கவலை கொள்ளவில்லை. உச்சநீதிமன்றத்தின் இந்த விமர்சனம் நிச்சயமாக வரம்பு மீறிய ஒன்று. மக்களின் உணர்வுகளுக்கு எதிரானதும்கூட. இந்த உணர்வுகளைத்தான் உரிய முறையில் வெளிப்படுத்த நினைத்தேன். இத்தோடு நில்லாமல் பல தளங்களிலும் இந்த விஷயம் விவாதிக்கப்பட வேண்டிய ஒன்று. நீதிமன்ற அவமதிப்பு என்ற ஒன்றே அவசியம் இல்லாதது என்பதை இப்போது மட்டுமல்ல; எப்போதும் நான் சொல்லி வந்திருக்கிறேன். இப்போது அதைச் சொல்லவும் ஒரு சந்தர்ப்பம் அமைந்தது. அவ்வளவுதான்.’’

சேது சமுத்திரத் திட்டத்தைப் பற்றி மட்டும் விவாதம் நடத்தாமல், ராமர் உள்பட வேறு விஷயங்களைப் பற்றியும் விமர்சனம் செய்ததால்தான் பிரச்னை திசை திரும்பிவிட்டதா?

“ஆமாம்.. ஆதம் பாலம் என்று சொல்லப்பட்டு வந்ததை திடீரென்று ராமர் பாலம் என்று சொல்ல ஆரம்பித்ததால்தான் பிரச்னை வேறு வடிவம் பெற்றது. சுற்றுச்சூழல், பொருளாதார நன்மை தீமைகள் பற்றி கருத்துக்களை எடுத்துச் சொல்லி விவாதம் செய்திருந்தால் அதில் நேர்மை, உண்மை உண்டு என்று ஒப்புக் கொள்ளலாம். எல்லாவற்றையும் அரசியல் ஆதாயத்திற்காக மாற்ற நினைப்பதை ஏற்க முடியாது இல்லையா? தவிர, வால்மீகி ராமாயணம் எழுதிய காலத்தில் ராமர் தென்னிந்தியாவிற்கே வரவில்லை. வட இந்தியாவில் அவர் இருந்திருக்கத்தான் வாய்ப்பு உண்டு என்று ரொமீலா தாப்பர் என்ற வரலாற்று ஆய்வாளரும்கூட எழுதியிருக்கிறார். இவர் போன்றவர்கள் சொல்லும் கருத்துக்களுக்கு உரிய பதிலைத் தராமல், வால்மீகி எழுதிய சில விஷயங்களை மேற்கோள் காட்டினார் என்பதற்காக, தலைவரை(கலைஞர்) மட்டும் ஏன் குறிவைக்கவேண்டும். அறிவுபூர்வமான வாதங்களை முன் வைக்க வேண்டியதுதானே?’’

ராமர் பாலம் என்ற ஒன்று இருந்ததா, இல்லையா? என்பதே சர்ச்சையாக இருக்கும்போது, அந்தப் பாலத்தில் ஆதம் நடந்து போனார் என்று சொல்லி புதிய சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறீர்களே?

“ராமர் பாலம் என்பது இந்துக்களின் நம்பிக்கை என்பதுபோல, ஆதம் அந்தப் பாலத்தில் நடந்துபோனதாகவும் இன்னொரு மதத்தினர் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்றொரு தகவல் உண்டு. கலைஞரின் விமர்சனத்தை, குறிப்பிட்ட ஒரு மதத்திற்கு எதிரானதாக சிலர் மாற்ற முயன்றபோது, எந்த உள்நோக்கமும் இல்லாமல் அவர் சில வாதங்களை முன் வைத்தார் என்பதற்காக இதைச் சொன்னேன். இதுபற்றி என்னிடம் கேள்வி கேட்கப்பட்டதால்தான் இதையும் சொன்னேன். வரலாறுகளை எடுத்துப் பார்த்தால் அறிவியல் உண்மைகளை மதங்கள் ஆரம்பத்தில் ஏற்க மறுத்தபோதும், பிற்காலத்தில் உண்மையை உணர்ந்து, மதங்கள் தங்கள் கருத்துக்களை மாற்றிக் கொண்டதைக் காண முடியும். அறிவியல் ரீதியான காரணங்களை முன்வைத்து தங்கள் கருத்துக்களைச் சொல்லாமல், மத நம்பிக்கைகளை முன்வைத்து நாட்டு முன்னேற்றத்திற்குத் தடை ஏற்படுத்துபவர்களுக்கு எதிர்ப்புகள் வரத்தான் செய்யும்.’’

கலைஞரின் தலையை வாங்குவோம்.. நாக்கை அறுப்போம் என்றெல்லாம் வேதாந்தி செய்த விமர்சனம் உங்கள் கவனத்திற்கு வந்தபோது, அதை எப்படி எடுத்துக் கொண்டீர்கள்?

“வேதாந்தி போன்றவர்கள் இருக்கும் கலாசாரத்திற்குள் இருந்து இதுமாதிரியான வார்த்தைகளைத் தவிர, வேறு நாகரிகமான விஷயங்களை எதிர்பார்க்க முடியாது. இதை நான் அப்பாவின் மீதான விமர்சனமாகப் பார்க்கவில்லை. திராவிட இயக்கக் கொள்கைகளுக்கு, சுயமரியாதைக் கருத்துக்களுக்கு, பகுத்தறிவுக்கு எதிரான ஒன்றாகவும், அச்சுறுத்தும் முயற்சியாகவும்தான் அதைப் பார்த்தேன். இதைச் சாதாரணமாக விட்டுவிடக்கூடாது என்ற இயல்பான கோபம் எனக்கு வந்தது. மற்றபடி இந்த வயதிலும் மதவாதிகளுக்கு ஒரு சிம்ம சொப்பனமாக இருக்கும் கலைஞருக்கு நான் மகளாக இருப்பதிலும், அப்படிப்பட்டவரை என் தலைவராக ஏற்றுக் கொண்டிருப்பதிலும் நான் பெருமைப்படுகிறேன்.’’

கடவுள் மறுப்பு, பகுத்தறிவு போன்ற சிறுவயதில் கேட்ட கோஷங்களை இப்போது மீண்டும் கேட்கிறீர்கள். இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

“பெரியாரின் கொள்கைகள், வார்த்தைகள் இன்றைக்கும் விட்டுவிட முடியாத விஷயங்கள் என்பதை உணர்த்துகின்றன. ‘அந்தக் கருத்துக்களுக்கு எல்லாம் அவசியம் இல்லை. அதற்கான காலம் முடிந்துவிட்டது’ என்று சிலர் சொல்வது உண்மையல்ல. எனவே, பகுத்தறிவுக் கொள்கை என்ற ஆயுதத்தைக் கீழே போட முடியாத நிலை இன்றும் தொடர்கிறது. மீண்டும் மீண்டும் வலிமை சேர்க்க வேண்டிய அரண்களாக அவை இருக்கின்றன என்பதும் புரிகிறது.’’

கொஞ்சம் இடைவெளிக்குப் பிறகு தயாநிதிமாறன் பற்றி விமர்சிக்க ஆரம்பித்திருக்கிறீர்கள்.. அந்தச் சம்பவத்தால் கலைஞர் வேதனை அடைந்தார் என்று சொல்லியிருக்கிறீர்கள்.. மாறன் குடும்பத்துடன் விரிசல் வந்ததால் கலைஞர் வேதனை அடைந்தாரா? இல்லை.. அவர்களால் கலைஞர் வேதனையை அனுபவித்ததால் விரிசல் வந்ததா?

“இரண்டுமே காரணமாக அமைந்தது என்றுதான் நினைக்கிறேன். உடலில் ஒரு பாகத்தில் பிரச்னை.. அதனால் வேதனை என்றால் அதற்காக அறுவை சிகிச்சை செய்வோம். இந்த சிகிச்சையால் சிலகாலம் வேதனையை அனுபவிப்பது உண்டு. இப்போது வேதனைக்குக் காரணம், அந்த நோயா? அல்லது அறுவை சிகிச்சையா? என்று பிரித்துப் பார்க்க முடியாது அல்லவா? அதுபோலத்தான் இதுவும்.’’

புதிய கட்சிகள் வரவுக்குப் பிறகு தி.மு.கவில் இளைஞர்களின் வரவும், இருப்பும் குறைந்திருக்கிறது என்பதை ஒப்புக் கொள்வீர்களா?

“அரசியல் கட்சிகளில் முழுமையாக இணைந்து இளைஞர்கள் செயல்படுவது என்பது எல்லாக் கட்சியிலுமே குறைந்து வருகிறது என்பதுதான் உண்மை. ஒரு கட்சியில் இருந்து இன்னொரு கட்சிக்கு மாறுவது என்பது வழக்கமான ஒரு விஷயம்தான். ஆனால், தி.மு.க.வில் இருந்து பெருமளவு இளைஞர்கள் வெளியே போகிறார்கள் என்பது உண்மையல்ல. அண்ணன் ஸ்டாலின் கலந்து கொள்ளும் கூட்டங்களுக்குப் பெருந்திரளாகக் கூடும் இளைஞர்களைப் பார்ப்பவர்கள் இத்தகைய விமர்சனங்களைச் செய்யமாட்டார்கள்.’’

தே.மு.தி.க., அ.இ.ச.ம.க. போன்ற புதிய கட்சிகளின் வளர்ச்சி தி.மு.க.வை எந்தவகையிலும் பாதிக்காது என்று நம்புகிறீர்களா?

“தி.மு.கழகம் தோன்றிய பிறகு எத்தனையோ கட்சிகள் தோன்றி மறைந்திருக்கின்றன. அவை எதுவுமே தி.மு.க.வை பாதித்ததாக வரலாறு கிடையாது. அ.தி.மு.க.வைத் தவிர வேறு எந்த இயக்கமும் பலமான எதிர்க்கட்சியாகக்கூட வரவில்லை. அந்தக் கட்சியாலும்கூட தி.மு.க.வை அழிக்க முடியவில்லை. தி.மு.க.வின் பலத்தைக் குறைக்க முடியவில்லை. மற்றபடி எந்த இயக்கத்தின் வளர்ச்சியையும், முடிவையும் காலம்தான் முடிவு செய்யும்.’’

நாடறிந்த நடிகர்களுக்கு அந்தளவுக்கு செல்வாக்கு இருக்காது என்று சொல்ல வருகிறீர்களா?

“நீங்கள் எந்த நடிகர்களைப் பற்றிப் பேசுகிறீர்கள் என்பதைப் பொறுத்தது அது. எதிர்பார்ப்புகளை மட்டும் தேடி அலைந்து கொண்டிருப்பவர்கள் பற்றி மக்கள் தெரிந்தும், புரிந்தும் வைத்திருக்கிறார்கள் என்பதை மட்டும் என்னால் சொல்ல முடியும்.’’

கலைஞர் ஓய்வெடுக்க வேண்டும் என்ற கோஷம் ஒலிக்க ஆரம்பித்திருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

“சிலருக்கு ஐம்பது, அறுபது வயதுக்குள்ளாக மனரீதியான பிரச்னைகள் வந்து அவர்கள் மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய நிலைக்கு ஆளாகிறார்கள். அப்படிப்பட்ட சிலர் செய்யும் வாதங்களையும், கோஷங்களையும் விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கருதுகிறேன்.’’ (இது சூப்பரா இருக்கே )

விரைவில் மத்திய அமைச்சரவையில் மாற்றம் இருக்கும். அதில் இளைய தலைமுறைக்கு வாய்ப்பளிக்கப்படும் என்று தகவல்கள் வருகின்றன. நீங்கள் மத்திய அமைச்சராகும் வாய்ப்பு இருக்கிறதா?

“மத்திய அமைச்சரவையில் மாற்றம் வரலாம். அது என்னையும் சேர்த்த மாற்றமாக இருக்குமா என்று எனக்குத் தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரை அப்படி எதுவும் இல்லை.’’

கர்ப்பப்பை பாதுகாப்பு கருத்தரங்கு முதல் காவலர் குடியிருப்பு திறப்பு வரை, இசை நிகழ்ச்சி தொடங்கி, இஃப்தார் விருந்து வரை எல்லா இடங்களிலும் உங்களைப் பார்க்க முடிகிறது. இதற்குக் காரணம், அன்புத் தொல்லையா? இல்லை ஓய்வு நேரம் அதிகம் கிடைக்கிறதா?

“இரண்டும் இல்லை. நான் கலந்து கொள்ள வேண்டும் என்று விரும்பி அழைக்கிறார்கள். தேர்ந்தெடுத்து சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறேன். எல்லோரையும் போலவேதான் நானும் இதைச் செய்கிறேன்.’’

ஸ்டாலின் தன்னைக் கொலை செய்ய நினைத்தார் என்று ஜெயலலிதா கூறியுள்ள குற்றச்சாட்டு பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

“இதேதொனியில் அபத்தமான ஒரு குற்றச்சாட்டை ஜெயலலிதா முன்பு கூறியபோது, ‘ஜெயலலிதா அவர் வீட்டு மாடிப்படியில் ஏறும்போது இடறிவிழுந்தால்கூட, கருணாநிதிதான் படிக்கட்டில் எண்ணெய் ஊற்றிவிட்டார் என்று சொல்லும் அளவுக்கு எதற்கெடுத்தாலும் நானே காரணம் என்று சொல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்’ என்று தலைவர் ஒருமுறை முரசொலியில் எழுதியதுதான் நினைவுக்கு வருகிறது. அண்ணன் ஸ்டாலினைப் பொறுத்தவரை அவருக்கு இருக்கும் வேலைப் பளுவுக்கு இடையில் இவரைப் பற்றிய நினைவுகூட வருமா என்று தெரியவில்லை. எதிரிகளை களத்தில் சந்தித்துப் பழக்கப்பட்ட பாரம்பரியத்தில் வந்தவர் அண்ணன் ஸ்டாலின். இப்படிப்பட்ட தரக்குறைவான சிந்தனை அவருக்கு இருப்பதாக எவர் சொன்னாலும் அது அபத்தமான ஒன்றாகும். பொதுவாகவே, அரசியலை அரசியலால்தான் எதிர்கொள்ள வேண்டுமே தவிர, இப்படித் தரக்குறைவான குற்றச்சாட்டுகள் கூறுவதை அரசியல் தலைவர்கள் தவிர்க்க வேண்டும்.’’

-குமுதம் ரிப்போர்ட்டர்

2 comments:

மாசிலா said...

நன்றி மகேந்திரன்.

அருமையான பதிவு.

கனிமொழி அவர்கள் தான் தொடும் அனைத்து துறைகளிலும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

Anonymous said...

dhideerena ANNAN paasam adhigariththarpolirukku.
Vazhga Annan Namam