கண் முன்னே நடக்கும் ஒரு போரைத் தடுத்து நிறுத்த வக்கற்ற பான் கி மூன் வேறு எதற்குத்தான் இருக்கிறார்?

கைப்புள்ள என்று ஒருவர். ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ என்று ஒரு அமைப்பை நடத்தி வருகிறார். சங்கத்து ஆளை எவனாவது அடிச்சா போய் தட்டிக் கேட்க வேண்டியது அவர் வேலை. ஆனால், நடப்பதோ தலைகீழ். நியாயம் கேட்கப்போற கைப்புள்ளயே உதை வாங்கி, சட்டை டார் டாரா கிழிஞ்சு... ரணகளமா திரும்பி வருவாரு.

பான் கி மூன் ஒரு கைப்புள்ள. அவர் தலைமையேற்று நடத்தும் ஐ.நா.சபையோ ஒரு லொள்ளு சபா (விஜய் டி.வி.யில வருதே... அதுதான்).

பார்த்துச் சிரிக்கலாம், சீரியசா எடுத்துக்கக் கூடாது.

ராஜபக்சே போர் நிறுத்தம் செய்யாத போதும் உண்ணாவிரதத்தை கருணாநிதி பாதியில் முடித்துக் கொண்டது ஏன்?

மறைந்த நடிகர் சுருளிராஜன் பிச்சையெடுப்பதற்காக தள்ளுவண்டியில் (சக்கர நாற்காலியில் அல்ல) சென்று கொண்டிருப்பார் (படத்தில்தான்). அப்போது எதிர்படும் ஒருவன் “அண்ணே, ஏ.வி.எம். ராஜேஸ்வரியில் ‘ஸ்கார்ச்சி’ படம் (அப்போதைய ஆபாசக் குப்பை) ஓடுதுண்ணே” என்று சொல்ல, பிச்சையெடுப்பதை பாதியில் நிறுத்திவிட்டு டாக்சி பிடித்து தியேட்டருக்கு ஓடுவார் சுருளிராஜன்.

சுருளியைப் போல் ஆபாசப் படம் பார்க்க பாதியில் எழுந்து ஓடினாரென்று அவதூறு சொல்லவில்லை. ‘மானாட மயிலாட’ ஷூட்டிங், டப்பிங், ஏதோவொரு படவிழாவில் ஏதோவொரு நடிகையின் குத்தாட்டம்... போன்ற முதல்வரின் அன்றாட நிகழ்ச்சி நிரல் உண்ணாவிரதப் பந்தலில் அவருக்கு நினைவூட்டப்பட்டிருக்கக்கூடும். கடமையை நிறைவேற்ற கிளம்பியிருப்பார்.

ஆரம்பித்தது ஈழப் பிரச்சனையென்பதால் நிறுத்தப்பட்டதற்கும் அதுதான் காரணமாயிருக்கும் என கருணாநிதியின் ரசனை தெரியாத ஜென்மங்கள் (வேறு யார்... நிருபர்கள்தான்) தவறாகச் செய்தி கொடுத்து ‘போரை நிறுத்தி விட்டார்கள்’.

இந்தக் கற்பனை கொஞ்சம் அதிகம் என முகம் சுழித்தால் உங்களுக்கு மேலும் ஒரு தகவல்:

அம்மா ஆட்சியில் அய்யா ஒரு நள்ளிரவு நேரத்தில் ‘கும்மாங்குத்து’ வாங்கிய பிறகு, இனி காவல் துறையினரின் காட்டுமிராண்டித்தனத்தை எப்படி எதிர்கொள்வது என கவலையோடு கட்சியின் செயற்குழு விவாதித்துக் கொண்டிருந்த வேளையில், டெண்டுல்கர் பூஜ்யத்தில் அவுட்டான சேதி துண்டுக் காகிதத்தில் வந்ததாம். சேதி கண்ட கலைஞர் கர்ச்சீப்பால் கண்கள் துடைக்க, சாடையறிந்த செயற்குழு ‘அம்மா’வை அந்தரத்தில் போட்டு விட்டு இந்தியக் கிரிக்கெட் அணியின் எதிர்காலம் பற்றிய கவலையைக் கையிலெடுத்து விவாதித்ததாம்.

‘இலங்கைக்கு உதவவில்லை’ என்று சொல்லி வந்த இந்தியா இறுதிக் கட்டத் தாக்குதலில் 25,000 தமிழர்களைக் கொன்றொழித்த ராஜபக்சேவுக்கு ஐ.நா.வில் பகிரங்க ஆதரவு தெரிவித்து விட்டதே?

யாருக்கும் தெரியாமல் சோரம் போகும் பெண்ணுக்குத்தான் பத்தினி வேசம் தேவை. புருஷனே கூட்டிக் கொடுக்கத் தயாராகி விட்ட பிறகு வெட்டியா அது எதுக்கு?

தன் தொப்புள் கொடி உறவுக்காக தமிழன் துடித்தெழுவான் என ஈழத்தமிழன் எதிர்பார்த்தான். தங்களுக்கு இதுதான் கடைசித் தேர்தலோ என கதர்சட்டைக்காரன் பயந்து செத்தான்.

ஆனால், நூறோ, இருநூறோ வீசியெறிஞ்சா பொறுக்கிக்கிட்டு சொந்தச் சகோதரனை, சகோதரியை துடித்துச் சாக அனுமதிக்கும் ஈனத் தமிழன் இவன் என்ற உண்மையை தேர்தலுக்குப் பின் புரிந்து கொண்ட அன்னை முகமூடி விலக்கி, சொந்த முகம் காட்டி விட்டார்.

‘தனி ஈழம் கிடைக்குமென்றால் ஆதரிக்கத் தயார்’ என்கிறாரே கருணாநிதி?

அவர் ஆதரிக்காவிட்டாலும் கிடைக்கும் ஈழம்.

‘அடைந்தால் திராவிட நாடு, இல்லையேல் சுடுகாடு’ என இவருடைய அறிவு ஆசான் அண்ணா சூளுரைத்தபோது “கிடைத்து விடுமா ஆசானே...?” என கேள்வியெழுப்பாமல் வழிமொழிந்ததோடு, மேடைதோறும் அதை வாந்தி எடுத்தவருக்கு ஈழம் என்றவுடன் பொத்துக்கொண்டு வருகிறது. கருணாநிதியின் இந்த எள்ளலில் கரைந்திருப்பது அய்யப்பாடல்ல, கையாலாகாத்தனம்.

புத்திர பாக்கியத்திற்கு உத்தரவாதம் கொடுத்தால் கோவணத்தை அவிழ்க்கத் தயார் என்பவன் மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்லப்பட வேண்டியவன்.

‘இந்தியாவின் உதவியின்றி புலிகளை நாங்கள் வென்றிருக்க முடியாது’ என சரத் பொன்சேகா அறிவித்த பிறகும் ஈழத் தமிழரைக் காக்க சோனியாவுக்கு கருணாநிதி கடிதம் எழுதியது ஏன்?

வலை விரித்தாள் வசந்தசேனை. அதில் மாட்டி சீரழிந்து போனான் ஷோக்குப் பேர்வழி புருசோத்தமன்.

‘மனோகரா’ கதை இது.

‘ஸ்பெக்ட்ரம்’ என்ற பெயரில் அன்னையும் விரித்தார் ஒரு வலை. அப்பன் புருசோத்தமன் என்ன... மகன் மனோகரனே மாட்டிக் கொள்ளும் அளவுக்கு சிக்கலான, ‘அறுபதாயிரம் கோடி’ கண்ணிகளைக் கொண்ட வலை அது. விடுவாரா புருசோத்தமன்! ஒரு காலத்தில் புறங்கையை நக்கியவர் வேறு. புகுந்து விளையாடிவிட்டார்.

‘சொக்கத்தங்கம்’ என்று கொஞ்சுவதும், மடிப்பிச்சை ஏந்தி கெஞ்சுவதும் தனக்காகத்தானே தவிர, தமிழருக்காக இல்லை.

தகவல் தொழில் நுட்பம் நம்ப முடியாத அளவுக்கு வளர்ந்து விட்ட இன்றைய காலக்கட்டத்தில் இனி புலிகளின் கொரில்லா

யுத்த முறைக்கு சாத்தியமே இல்லையென எழுத்தாளர் சாருநிவேதிதா சொல்கிறாரே...

எதையும் அரைகுறையா தெரிஞ்சுக்கிட்டு அவுத்துவிடக்கூடிய ஆளில்லை சாரு.

தகவல் தொழில் நுட்ப விசயத்தில் மைக்ரோ சாப்ஃடு, இன்போசிஸ் முதலாளிகளுக்கே வகுப்பெடுக்கும் அளவு ரொம்ப வெவரமானவரு. பெரிய தில்லாலங்கிடி! அப்படிப்பட்டவரே இவ்வளவு தூரம் அடிச்சுப் பேசினதுக்கப்புறம் கொரில்லா யுத்தம் தொடங்குவது பத்தி கண்டிப்பா புலிகள் மறு பரிசீலனை செய்யத்தான் வேண்டும். இந்தப் பாழாய்ப்போன தகவல் தொழில் நுட்பம் போராளிகளுக்குத்தான் ஆப்பு அடித்தது. வேற சிலருக்கோ பெரிய ஜாக்பாட்டா மாறிவிட்டது. அச்சடிக்குறது எப்படி? போலீசு கண்ணுல மண்ணைத் தூவி விக்குறது எப்படி?ன்னு ரொம்ப நாளா தவியாய் தவிச்சுக்கிட்டிருந்தது ஒரு கூட்டம். ‘சரோஜாதேவி புக்கு போடுறவங்க’ என்று அவர்களை அடையாளப்படுத்துவார்கள். சாரு வியந்து பார்க்கும் புதிய தகவல் தொழில் நுட்பம் அவர்களில் சிலரை இப்போது ‘ஹைடெக்’ புத்தக தயாரிப்பாளர்களாக தரம் உயர்த்தியிருக்கிறது. போலீஸ் தொல்லையில்லை, மாமூல் பிரச்சனையில்லை; ஏஜென்சி கமிஷனுமில்லை. தேவை ஒரேயொரு கணினி. ‘ஒரு பெண் சொல்லும் பாலியல் கதைகள்’... அது இதுன்னு ஆணின் வக்கிரத்தையெல்லாம் ஒரு பெண்ணின் பெயரில் பதிவேற்றி விட்டால் போதும். ‘எங்கே கிளுகிளுப்பு’ என அலையும் வாலிப, வயோதிக அன்பர்களின் அடிமடியில் கை வைத்து விடலாம்.

இப்படியாகத்தான் ஆபாசத்தை புத்தகமாகப் போட்டபோது ‘டாஸ்மாக்கில்’ ஒரு கட்டிங் அடிக்கவே கஷ்டப்பட்டவர், பிரமிக்க வைக்கும் இந்தத் தகவல் தொழில்நுட்பத்தால் லீ மெரிடீன் என்ன... அடையாறு பார்க் என்ன... என்று காரில் பறந்து பறந்து சரக்கடிக்கிறார்.

புலிகளுக்குப் போர் தந்திரம் கற்றுக் கொடுப்பவர், கஷ்டத்திலிருக்கும் சக எழுத்து வியாபாரிகளுக்கும் தான் கடைப்பிடிக்கும் இந்த வித்தையை கொஞ்சம் சொல்லிக் கொடுக்கலாம்.

உலகம் முழுக்க பிரிந்த நாடுகளெல்லாம் சேர முயற்சிக்கையில் இலங்கையிலிருந்து ஈழம் பிரிவது சாத்தியமாகாது என்கிறாரே ஞானி?

இறையாண்மையைச் சொல்லி ஈழத்தை எதிர்க்கிறான் காங்கிரசுக்கார ன்.
ஆர்.எஸ்.எஸ்.சின் அகண்ட பாரதக் கனவை மனசுக்குள் பூட்டி வைத்துக்கொண்டு ‘சாத்தியமில்லை’ என்கிறார் ஞானி.
இருவேறு அலைவரிசைகளில் சிந்தித்தாலும் பேராயக் கட்சியோடு ஒரே திசையில் பயணிக்கிறார் ஞானி.
இந்தியாவோடு சேர பாகிஸ்தானும், பாகிஸ்தானோடு சேர பங்களா தேசமும், இந்தோனேசியாவோடு சேர கிழக்கு திமோரும் துடியாய் துடிப்பதை தகுந்த ஆதாரங்களுடன் முன்பே இவர் விளக்கியிருந்தால் தனி ஈழக் கோரிக்கையை அப்போதே கடலில் தூக்கி வீசியிருப்பார்கள் புலிகள்.
காலம் கடந்த போதனை. சரி, அது போய் தொலையட்டும்; பல்வேறு சமூகங்கள் பிரிந்து போவது ஒரு தேசத்துக்கு, தேசத்தின் மக்களுக்கு நல்லதில்லையென்றால், தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளை இருக்கையில் “இனி நான் புருசனுமில்லை, நீ என் பொண்டாட்டியுமில்லை” என ஒன்றாய் இருந்த குடும்பத்தை இரண்டாக்கி (அல்லது மூன்றாக்கி), ஆளுக்கொரு திசையில் பிய்த்துக் கொண்டு போவது மட்டும் எப்படி சரி?
பல குடும்பங்களை உள்ளடக்கியதுதானே ஒரு தேசம்!
ஒரு நாளில் அதிகபட்சம் வீட்டுக்குள் இருப்பது பத்து மணி நேரமே. அந்தச் சொற்ப நேரத்திலும் சம்சாரத்தின் ரோதனையை (அல்லது இந்த ஆளு சேட்டைகளை அந்தம்மா) தாங்க முடியாம அறுத்துக்கிட்டு ஓடலாம்! ஆனா, பல நூறு ஆண்டுகளாய் அடித்து உதைத்து கறிக்கடையிலே ஆட்டிறைச்சிக்குப் பதில் தமிழ் பெண்களின் மார்புகளை வெட்டித் தொங்க விட்டு ‘இங்கே தமிழச்சியின் கறி கிடைக்கும்’ என எழுதிப் போட்ட சிங்களக் காடையனுடன் தமிழன் ஒண்டுக் குடித்தனம் இருக்க வேண்டும்!
என்ன நெஞ்சுரமடா இவனுங்களுக்கு!
சிங்களனுக்கு ஞானி செய்யும் இந்தப் பாத பூஜைக்கு குமுதம் காசு கொடுக்குதோ இல்லையோ... ராஜபக்சே கண்டிப்பாகக் கொடுப்பார் ‘சிங்களஸ்ரீ’ விருது.

அகிம்சை வழியில் போராடினால்தான் விடுதலை கிடைக்குமென்கிறார்களே.... ஜெயமோகனும், சாரு நிவேதிதாவும்?

அப்படிக் கிடைத்திருந்தால் சுதந்திர இந்தியாவில் இராணுவம், போலீசு கைகளில் காந்தியின் சத்திய சோதனையைக் கொடுத்திருப்பார் நேரு! துப்பாக்கியையும், குண்டாந்தடியையும் கொடுத்திருக்க மாட்டார்.

பிரபாகரனுக்கு அகிம்சை போதிக்கும் இவர்கள் ராஜபக்சேவுக்கு எதுவும் சொல்வதில்லையே... ஏன்?

போராடுபவனுக்கு அகிம்சையும், அவனை ஒடுக்குபவனுக்கு ஆயுதமும் பரிந்துரைப்பதுதான் காந்தியம் என்பதாலா?

போராளிகள் கிடக்கிறார்கள்... இரத்த வெறி பிடித்தவர்கள்! இலக்கியவாதிகள் காந்தியின் கொள்ளுப் பேரன்களாயிற்றே! ஜிப்பா கிழியாமல், வேட்டி அவிழாமல் அகிம்சை வழியில் ஒரேயொரு இலக்கியச் சந்திப்பை நடத்திக் காட்டச் சொல்லுங்கள்.

ஆறாவது சம்பளக் கமிஷனை அமல்படுத்த, அரியர்சை ஒரே தவணையில் வாங்கி சரவணா செல்வரத்தினத்திற்குக் கொண்டு ஓட அரசு ஊழியர்களுக்கு காந்தி விட்டுச் சென்றிருக்கும் சொத்து அகிம்சை. சத்தியாக்கிரகம், தர்ணா, மறியல், தட்டேந்துவது, மொட்டையடிப்பது... போன்ற ‘புரட்சிகர’ வடிவங்களைக் கொண்டது அது. போராளிகளுக்கு சரிப்படாது.

ஈழத் தமிழர்களின் எதிர்காலம் இனி என்ன ஆகும்?

பார்ப்பன ஊடகங்கள் பீதியைக் கிளப்புவதைப்போல் அதோகதி ஆகிவிடாது. அதற்காக சாம்பலிலிருந்து சிலிர்த்தெழும் பீனிக்ஸ் பறவைபோல புலிகள் மீண்டு வருவர் என்ற பகுத்தறிவுக்குப் பொருந்தாத நம்பிக்கைகளையும் ஊட்டத் தேவையில்லை.

எதுவுமற்ற வெற்றிடமே ஒரு புயலை கருக்கொள்ள வைக்கிறது எனும் விஞ்ஞானத்தை நம்பிக்கையாக்கிச் சொல்கிறோம்.

புறநானூறு காட்டும் தமிழனின் வீரம் கொஞ்சம் மிகைப்படுத்தப்பட்டதோ என்ற அய்யத்தைப் புரட்டிப் போட்ட ஈழத் தமிழரின் போர்த்திறம், சாவு சிலநூறு மீட்டர் தொலைவிலிருந்த போதும் புரிந்த வீரச்சமர் நமக்கு இப்படி உரத்துச் சொல்கிறது: ‘தங்களின் எதிர்காலம் குறித்து இனி கவலைகொள்ள வேண்டியவர்கள் சிங்களர்கள் மட்டுமே’.

-தீசுமாசு டி சில்வா




1 comments:

Anonymous said...

Great Writing. I appreciate it. I was in same thought to write down against some these people. But restrained. U did it right