‘‘இந்த விழாவுக்கு யாரெல்லாம் வரவில்லை என்று எனக்குத் தெரியாது. வராதவர்கள் பட்டியலை நீங்கள் எடுத்து உங்கள் அறையின் சுவரில் தொங்க விட்டுக் கொள்ளுங்கள்!’’ &மேற்கு வங்க முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யா, செய்தியாளர் களிடம் அளித்த பதில் இது. மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள நந்திகிராமில் நடைபெற்ற வன்செயல்களுக்குக் கண்டனம் தெரிவித்துப் பல திரைக் கலைஞர்கள் கொல்கத்தாவில் நடைபெற்ற திரைப்பட விழாவைப் புறக்கணித்தார்கள். இந்த விழா முதலமைச்சரின் தலைமையில் நடந்தது. இந்த விழாவில் பல கலைஞர்கள் பங்கேற்காதது குறித்து முதல்வரிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்டார்கள். அப்போது அவர் இவ்வாறு பதில் சொல்லி யிருக்கிறார்.
இந்தப் பதில் எந்தவிதமான உணர்வை வெளிப்படுத்துகிறது? நந்திகிராம் தொடர்பான சிக்கலில் மாநிலத்தில் நடைபெறும் ஆட்சிக்கு யாரும் எதிர்ப்பு தெரிவிப்பதை முதல்வர் விரும்பவில்லை. அதிலும் இந்தப் பிரச்னையை முன்னிட்டு எழுத் தாளர்கள், நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் அறிஞர்கள் ஒரு விழாவைப் புறக்கணிப்பதை முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சகிப்புத்தன்மை இல்லாத இந்தப் பதிலின் விளைவாக என்ன நடந்தது தெரியுமா? அடுத்த நாள் திரைப்பட விழா நடந்த அரங்கத்துக்கு அருகில் உள்ள இன்னொரு இடத்தில் அமைதியாக ஆர்ப்பாட்டம் நடத்திய கலைஞர்கள் மற்றும் அறிஞர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியது.
ஒருபுறம் இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டு அமைதியான முறையில் எதிர்ப்பு தெரிவித்த கலைஞர்கள், காவல்துறையால் தாக் கப்பட்டிருக்கிறார்கள். இன்னொரு புறம் அதே காவல்துறை நந்திகிராமில் ஆயுதம் தாங்கிய ஆளும் கட்சியினர் தங்கள் விருப்பப்படி செயல் படும்போது கைகட்டி வேடிக்கை
பார்த்திருக்கிறது. அல்லது அந்த இடத்தை விட்டு அகன்றிருக்கிறது. அதாவது, ஆளும் கட்சியினர் கைகளில் ஆயுதங்களுடன் வன்செயல்களில் ஈடுபடும்போது காவல்துறை அனுமதிக்கிறது. மற்றவர்கள் சட்டத்துக்கு உட்பட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினால்கூட சட்டம்-&ஒழுங்குக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தடுக்கிறது. வேறு வார்த்தைகளில் சொல்வதாக இருந்தால், அனுமதிக்க வேண்டிய ஜனநாயகரீதியான எதிர்ப்பை காவல்துறை அனுமதிக்க மறுத்திருக்கிறது. ஆனால், ஈவு இரக்கமின்றி ஒடுக்கப்பட வேண்டிய வன்செயல்களை அது அனுமதித்திருக்கிறது.
கடந்த ஜனவரியில் இருந்து பத்து மாதங்களுக்கு மேலாக நந்திகிராம் பகுதியில் மார்க்சிஸ்ட் கட்சியினரும் அதன் ஆதரவாளர்களும் பலவிதமான துன்பங்களுக்கு ஆளாகி இருக்கிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை.
‘‘இதுவரை மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 27 பேர் ‘நிலப்பாதுகாப்புக் குழு’வினரால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 1500 பேருக்கும் அதிகமானோர் பத்து மாதங்களாக நிவாரண முகாம்களில் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களால் தங்களுடைய வீடுகளுக்குத் திரும்ப முடியவில்லை. அந்தப் பகுதியில் காவல்துறையோ மற்ற நிர்வாகமோ செயல்பட முடியவில்லை. இப்படி ஒரு பகுதி மட்டும் ‘விடுவிக்கப்பட்ட’ பகுதியாக இருக்கும் நிலையை எந்த ஒரு மாநில அரசாலும் ஏற்றுக்கொள்ள முடியாது. மீண்டும் அங்கு சட்டத்தின் ஆட்சியை ஏற்படுத்துவதற்குத் தேவை யான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்தப் பகுதியை விட்டு வெளியேற்றப்பட்டவர்கள் வீடு திரும்பினார்கள்.’’ &இதுவே நந்திகிராம் குறித்து மார்க்சிஸ்ட் கட்சி தரும் விளக்கம்.
நந்திகிராம் பகுதியில் சிறப்புப் பொருளாதார மண்டலம் உருவாக்கி அதை ஒரு விடுவிக்கப்பட்ட பகுதியாக வைத்திருக்கவே முதலில் புத்ததேவ் விரும்பினார். மாநிலத்தின் பிற பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்படும் சில சட்டங்களில் இருந்து அந்தப் பகுதி விலக்களிக்கப்படும் என்ற நிலையே தொடக்கத்தில் இருந்தது. மக்களிடம் இருந்து வந்த எதிர்ப்பு காரணமாக அந்த முயற்சியை அவர் கைவிட்டார். ஆனால், அந்த எதிர்ப்பே வேறொரு வகையில் அந்தப் பகுதியை விடுவிக்கப்பட்ட பகுதியாக மாற்றிவிட்டது. நந்திகிராம் மக்களுக்கு இப்படி ஒரு வீரம் செறிந்த போராட்டத்தை நடத்துவதற்கான சக்தியை யார் கொடுத்திருப்பார்கள்? ‘பெருமுதலாளிகளுக்கும் நிலப்பிரபுக்களுக்கும் சேவை செய்யும் ஓர் அரசு, மக்களுடைய போராட்டத்தை எப்படி ஒடுக்க முயலும்’ என்ற பாடத்தை அவர்களுக்கு யார் கற்றுக் கொடுத்திருக்க முடியும்? அப்படிப்பட்ட ஒடுக்குமுறையை எப்படி எதிர்கொள்வது என்று யார் அரசியல் வகுப்புகளில் சொல்லிக் கொடுத்திருப்பார்கள்? தெலுங்கானா, ஸ்ரீகாகுளம், புன்னப்புரா, வயலார் விவசாயிகளின் போராட்ட வரலாறு குறித்துப் பேசி மக்களை யார் அரசியல்படுத்தி இருக்க முடியும்? அன்று மக்களுக்குப் போர்க்குணத்தை ஊட்டியவர்களே இன்று அவர்களுக்கு எதிராக ஆயுதங்களைத் தூக்கி இருக்கிறார்கள்!
மாநிலத்தில் ஆட்சியில் இருப்பதால் இப்போது அந்தப் போராட்டத்தை ஒடுக்கும் பொறுப்பு மார்க்சிஸ்ட் கட்சிக்கு வந்துவிட்டது. விடுவிக்கப்பட்ட பகுதியை மீட்கும் பணியில் நிர்வாகத்துக்குப் பதிலாக கட்சியே இறங்கிவிட்டது. காவல்துறையும் மத்திய ரிசர்வ் காவல் படையும் செய்ய வேண்டிய வேலையை ஆயுதம் தாங்கிய மார்க்சிஸ்ட் கட்சியினர் செய்து முடித்து விட்டார்கள். ‘நிலப் பாதுகாப்புக் குழு’வின் ஆதரவாளர்களைக் கேடயங்களாகப் பயன்படுத்தி, அவர்களுக்குப் பின்னால் இருந்து துப்பாக்கிகளால் சுட்டுக்கொண்டே மீண்டும் நந்திகிராம் பகுதிகளில் மார்க்சிஸ்ட்கள் நுழைந்தனர். நிலப் பாதுகாப்புக் குழு தன்னுடைய எதிர்ப்பைக் கைவிட்டுப் பின்வாங்கியது. அதன்பிறகு முழுப்பகுதியிலும் கட்சிக் கொடியைப் பறக்க விட்டிருக்கிறார்கள். மோட்டார் சைக்கிளில் செங்கொடியுடன் முகத்தை மூடிக்கொண்டு நகர்வலம் வந்து தங்கள் வெற்றியை உறுதிசெய்து இருக்கிறார்கள். அதுவரை மத்திய ரிசர்வ் காவல் படையை தேசிய நெடுஞ்சாலை 41&ல் நிறுத்தி வைத்திருக்கிறார்கள். அதாவது மார்க்சிஸ்ட்களின் செயல்திட்டம் நிறைவேறிய பிறகே மத்திய ரிசர்வ் படை நந்திகிராம் பகுதிக்குள் நுழைய முடிந்திருக்கிறது.
தொலைக்காட்சி, பத்திரிகைகள் ஆகியவற்றில் வந்திருக்கும் பல செய்திகளில் இருந்து இதுவே அங்கு நடந்திருப்பதாக அறிய முடிகிறது. இந்த விடுவிக்கப்பட்ட பகுதியை மீட்பதற்கு கட்சியினர் செய்த செயலை புத்ததேவ் எப்படிப் பார்க்கிறார்?
‘‘எதிர்க்கட்சிகளுக்கும் நிலப் பாதுகாப்பு குழுவினருக்கும் அவர்களுடைய பாணியிலேயே தகுந்த பாடம் புகட்டப் பட்டுள்ளது’’ என்கிறார். ‘‘இப்போது நந்திகிராமில் நிலவுவது மயான அமைதி என்கிறீர்கள். அப்படியென்றால் இந்த 11 மாதங்களும் அங்கு சொர்க்கத்தின் அமைதி நிலவியதா?’’ என்றும் அவர் கேட்டிருக்கிறார்.
அரசமைப்புச் சட்டரீதியாக ஓர் ஆட்சி செய்ய வேண்டிய ஒரு வேலையை சட்டவிரோதமாக தன்னுடைய கட்சியினர் செய்து விட்டார்களே என்று அவர் கவலைப் படவில்லை. நிர்வாகம் சீர்குலைந்து விட்டதே என்று அவர் வருந்தவில்லை. ஒரு நிலப்பரப்பில் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதற்கு ஆளும் கட்சியினர் ஆயுதங்களுடன் களத்தில் இறங்கலாம் என்ற ‘முன்மாதிரி நீதி’யை உருவாக்கி விட்டோமே என்ற வேதனை அவருக்கு இல்லை. மாறாக எதிர்த்தரப்புக்கு உரிய பாடம் புகட்டப்பட்டது என்று பெருமிதம் கொள்கிறார். மக்களாட்சி தத்துவத்தின் மீது நம்பிக்கை கொண்டிருப்போர்க்கு அவருடைய இந்த அணுகுமுறை ஏமாற்றம் அளிக்கிறது.
தேசிய அரசியலிலும் மாநில அரசியலிலும் ஆட்சியில் இருப்பவர்களின் தவறுகளை மற்ற கட்சியினரைவிட துணிச்சலுடன் சுட்டிக் காட்டுபவர்கள் மார்க்சிஸ்ட்கள் என்ற நம்பிக்கை பரவலாக மக்களிடம் இருக்கிறது. அந்த நம்பிக்கையே மார்க்சிஸ்ட் கட்சியினருக்குத் தொடர்ந்து போராடும் ஆற்றலை அளித்து இருக்கும். ஆனால், மேற்குவங்கத்தில் நடைபெற்றிருக்கக் கூடிய நந்திகிராம் நிகழ்வுகள், அந்தக் கட்சியினரின் தார்மீக வலிமையைக் குறைக்கும் வல்லமை பெற்றவை.
கடந்த வாரத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் என்.வரதராஜன், ‘‘சர்வாதிகாரப் போக்கை தி.மு.க. அரசு மேற்கொண்டால் நாங்கள் அனுமதிக்க மாட்டோம்’’ என்று மதுரையில் பேசியதாக செய்திகள் வந்தன. மேற்கு வங்க முதல்வராக புத்ததேவ் பட்டாச்சார்யா நீடிக்கும்வரை எந்த மாநிலத்தின் முதல்வரையும் எதிர்க்கும் அற வலிமையை முழுமையான அளவில் மார்க்சிஸ்ட்களிடம் காண முடியாது!
-ஜென்ராம்,ஜூனியர் விகடன்.
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
Oi, achei seu blog pelo google está bem interessante gostei desse post. Gostaria de falar sobre o CresceNet. O CresceNet é um provedor de internet discada que remunera seus usuários pelo tempo conectado. Exatamente isso que você leu, estão pagando para você conectar. O provedor paga 20 centavos por hora de conexão discada com ligação local para mais de 2100 cidades do Brasil. O CresceNet tem um acelerador de conexão, que deixa sua conexão até 10 vezes mais rápida. Quem utiliza banda larga pode lucrar também, basta se cadastrar no CresceNet e quando for dormir conectar por discada, é possível pagar a ADSL só com o dinheiro da discada. Nos horários de minuto único o gasto com telefone é mínimo e a remuneração do CresceNet generosa. Se você quiser linkar o Cresce.Net(www.provedorcrescenet.com) no seu blog eu ficaria agradecido, até mais e sucesso. If is possible add the CresceNet(www.provedorcrescenet.com) in your blogroll, I thank. Good bye friend.
Post a Comment