அந்த சீடன் துறவியிடம் வந்து, ‘‘என்னால் தியானத்தில் ஈடுபட முடியவில்லை. தியானத்துக்காக உட்கார்ந்திருக்கும் நேரங்களில் எனது கால்களில் ஏற்படும் வலியைத் தாங்க முடியவில்லை’’ என்றான். துறவி சிரித்துக் கொண்டே, ‘‘கவலைப்படாதே! விரைவில் இந்த நிலை மாறிவிடும்’’ என்றார். சில நாட்கள் கழித்து அதே சீடன் அவரிடம் வந்து, ‘‘என்னால் இப்போது நல்லபடியாக தியானம் செய்ய முடிகிறது. தியானத்துக்காக அமர்ந்திருக்கும்போது எனது கால்கள் வலிக்கவில்லை’’ என்றான். அப்போதும் துறவி சிரித்துக்கொண்டே, ‘‘மிகவும் மகிழ்ந்து விடாதே! விரைவில் இந்த நிலை மாறிவிடும்’’ என்றாராம்.
அந்தத் துறவி சொல்லியபடியே அரசியல் நிகழ்வுகள் மகிழ்ச்சி அடையும்படியும் கவலை கொள்ளும்படியும் மாறி மாறி நடைபெறுகின்றன. அமெரிக்க இந்திய அணுசக்தி ஒப்பந்தம், நட்வர்சிங் விவகாரம், தீவிரவாததுக்கு எதிரான நடவடிக்கைகள் போன்ற பல்வேறு விவகாரங்கள் குறித்து பிரதமர் மன்மோகன் சிங் கேள்விக் கணைகளால் துளைக்கப்படுகிறார்.
இப்படிப் பலவிதமான அழுத்தங்களுக்கு இடையே சிக்கித்தவிக்கும் பிரதமர் குறித்து, அண்மையில் வேறு ஒரு செய்தியும் வந்தது. கடந்தவாரம் டெல்லியில் நடந்த ‘சர்வதேச மனித உரிமைக் கருத்தரங்கு’ ஒன்றில் பங்கேற்பதற்காக வந்திருந்த பாகிஸ்தானைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் அஸ்மா ஜஹாங்கீர் என்ற பெண்மணியிடம் நம் பிரதமர் மன்னிப்புக் கேட்டார் என்பதே அந்தச் செய்தி. பிரதமர் அப்படி என்ன தவறு செய்து விட்டார்? அவர் எதற்காக மன்னிப்புக் கேட்க வேண்டும்?
டெல்லியில் அஸ்மா தங்கியிருந்த அறையில் நம் காவல் துறை ரெய்டு நடத்தி, அஸ்மாவின் உடைமைகளைச் சோதனை செய்தது. கருத்தரங்குக்காக வந்த பலரிடமும் இத்தகைய சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன. இவையெல்லாம் ஆகஸ்ட் 15 சுதந்திர தினக் கொண்டாட்டத்துக்கு பயங்கரவாதிகளால் எந்த இடையூறும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக நடத்தப்பட்ட ‘வழக்கமான’ சோதனைதான்!
அஸ்மா ஜஹாங்கீர், புகழ்பெற்ற மனித உரிமை ஆர்வலர்களில் ஒருவர். கடந்த காலத்தில் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்குமாறு அவருக்கு சிறப்பு பொறுப்புகளையெல்லாம் கொடுத்திருக்கிறது. பாகிஸ்தானுக்குள்ளும் அவர் மனித உரிமைப் போராட்டங்களைத் தொடர்ந்து நடத்துபவராகவே அறியப்பட்டிருக்கிறார். அவர் ஏற்கெனவே மன்மோகன் சிங்குக்கு அறிமுகமானவரும்கூட! காவல்துறை நடத்திய சோதனை, அவரைக் குறிவைத்து மேற்கொள்ளப்படவில்லை. இருந்தபோதிலும், இந்தியா வந்திருந்தபோது அவருக்கு டெல்லியில் ஏற்பட்ட அசௌகர்யத்துக்காகத் தொலைபேசியில் அழைத்து மன்னிப்புக் கோரியிருக்கிறார் பிரதமர்.
அதற்குள் பிரதமரின் இந்தச் செயல், மரபுகளை மீறிய செயல் என்று முணுமுணுப்புகள் கேட் கின்றன. ‘தவறே நடந்திருந்தாலும் அதற்காக பிரதமரே மன்னிப்புக் கேட்க வேண்டுமா’ என்று கேள்வி எழுப்பப்படுகிறது. அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் இந்தியா வந்தபோது, மரபுகளை மீறி மன்மோகன் சிங் அவரை விமானத் தளத்துக்கு சென்று வரவேற்கும்போது, இந்த முணு முணுப்புகள் எழவில்லை என்பது வேறுவிஷயம்! நமது நாட்டுக்கு வருகை தந்திருக்கும் விருந்தினருக்கு ஒரு கஷ்டம் நேர்கிறது எனும்போது, அவரிடம் மன்னிப்புக் கேட்பதில் என்ன தவறு இருக்கிறது? அதிலும் பிரதமரே கேட்டால் என்ன குடிமுழுகிப் போய்விடப்போகிறது? மரபு, மரியாதை, அதிகார அடுக்கு என்ற பெயர்களில் அடிப்படையான மனிதப் பண்புகளை நாம் தொலைத்துவிட வேண்டுமா?
ஏற்கெனவே அநீதி இழைக்கப்பட்ட ஒருவரிடம் வெறும் சம்பிரதாய மன்னிப்பு கோரல்கள் எந்த விளைவையும் ஏற்படுத்தப் போவதில்லைதான். மன்னிப்பு கேட்பதோ, வருத்தம் தெரிவிப்பதோ கடந்தகால கசப்பான சம்பவத்தை இல்லாமல் அழித்துவிடப் போவதில்லைதான். இருந்தாலும், உண்மையை உணர்ந்து உளப்பூர்வமாக மன்னிப்பு கோரும்போது அல்லது வருத்தம் தெரிவிக்கும்போது, அந்த மனிதன் உயர்ந்து நிற்கிறான். அவனது அன்பான சொற்கள் கசப்பை கட்டுப்படுத்துகின்றன, காயங்களை ஆற்றுகின்றன. மனித உறவுகள் மிகப் பெரிய தத்துவங்களின் அடித்தளத்தில் எழுப்பப்படுவதில்லை. இதுபோன்ற சின்னச் சின்ன செயல்களால் உருவாக்கப்படுகின்றன. ஆனால், நமது அரசியல் மற்றும் சமூகத் தளங்களில் நாம் தவறாகவே போதிக்கப்படுகிறோம். தவறுகளை ஒப்புக்கொள்தல் இங்கு பலவீனமாகக் கருதப்படுகிறது.
கடந்த காலங்களில் எடுக்கப்பட்ட தவறான நடவடிக்கைகளுக்கு அரசியல் தலைவர்கள் வருத்தம் தெரிவிப்பதால், தன்னைப்பற்றி மக்கள் கொண்டிருக்கும் இமேஜ் கலைந்துவிடும் என்று கவலைப்படுகிறார்கள். எனவே தவறுகளுக்கு வருத்தம் தெரிவிக்காமலே, ‘‘நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்; இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்’’ என்று பொத்தாம்பொதுவாகக் கூறு கிறார்கள். ஆட்சியில் இருப்பவர்கள் இவ்வாறு நடந்து கொள்வதால், நிர்வாகத்தில் இருக்கும் அதிகாரிகளும் இதையே பின்பற்றுகிறார்கள். அதிகாரிகளைப் பார்த்து அலுவலர் களும் இப்படியே நடந்து கொள் கிறார்கள். இதைப்போலவே கட்சித் தலைவர்களைப் பின்பற்றி இரண்டாம் கட்டத் தலைவர்களும் தொண் டர்களும் வாழ்க்கை நடத்துகிறார்கள். அவர்களைப் பார்த்துப் பாடம் கற்று, வாக்காளர்களும் மாறிவிடுகிறார்கள். இதனால் மேலிருந்து கீழ்வரை தவறுகளை ஒப்புக்கொள்ளும் பக்குவம் இல்லாமலே போய்விடுகிறது.
மன்னிப்பு கேட்பதும் மன்னிப்பதும் அபூர்வமான குணங்களாகி விடு கின்றன. இதுவே ‘மன்னிப்பு... தமி ழில் எனக்குப் பிடிக்காத வார்த்தை’ என்ற பயங்கரவாத மனநிலையில் மனிதனைத் தள்ளுகிறது. ஊழல் குற்றச்சாட்டுகளுக்கும் சாதாரண சாலைவிதி மீறல்களுக்கும் மரண தண்டனை விதிக்குமாறு சினிமாக்களைப் படைக்கச் செய்கிறது. போலி மரபுகளும் போலி மரியாதைகளும் கொண்டாடப்படுகின்றன.
இத்தகைய அரசியல் சூழ்நிலையில் மன்மோகன் சிங் வித்தியாசமானவராக இருக்கிறார். ஏற்கெனவே 1984&ம் ஆண்டு டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரத்தைக் காங்கிரஸ் அரசு கட்டுப்படுத்த முடியாமல் போனதற்காக, மன்மோகன் சிங் மன்னிப்புக் கோரியிருந்தார். அந்தக் கலவரம் நடந்தபோது அவர், காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கூட இல்லை என்பது வேறுவிஷயம்! இப்போது அஸ்மாவிடம் வருத்தம் தெரிவித்து நம் அனைவரது சிந்தனையையும் தூண்டியிருக்கிறார். போலி மரபுகளைவிட மனிதாபிமானம் உயர்ந்தது என்று எண்ணச் செய்திருக்கிறார்.
கெட்டிதட்டிப் போன உணர்வுகளுடன் தடித்த தோலுடன் இருப்பதைக் காட்டிலும், மன்னிப்பு கேட்பது சிறந்த பண்புதான் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், மன்னிப்பு கேட்பதற்கான சூழ்நிலையே உருவாகாத மாதிரி அரசும் நிர்வாகமும் நடந்துகொள்வதே மிகச் சிறந்த நிலையாக இருக்க முடியும். அடிக்கடி தவறுகள் நடப்பதும், அடிக்கடி மன்னிப்பு கோருவதும் மன்னிப்பின் பொருளை மலினப்படுத்திவிடும். இவையெல்லாம் நிச்சயம் பிரதமர் அறியாததல்ல! பிரதமர் இத்துடன் நின்றுவிடக் கூடாது. இந்திய மக்கள் அனைவருக்குமே அஸ்மாவுக்கு நேர்ந்த அசௌகர்யம் நேராமல் காக்க வேண்டும்!

ஜென்ராம்-ஜூனியர் விகடன்

13 comments:

Sivabalan said...

மகேந்திரன்,

இங்கே கொடுத்தமைக்கு நன்றி.

ஆனால் Protocol என்று ஒன்று வேண்டாம் என்கிறதா, இக்கட்டுரை.

Unknown said...

//போலி மரபுகளைவிட மனிதாபிமானம் உயர்ந்தது என்று எண்ணச் செய்திருக்கிறார்.
கெட்டிதட்டிப் போன உணர்வுகளுடன் தடித்த தோலுடன் இருப்பதைக் காட்டிலும், மன்னிப்பு கேட்பது சிறந்த பண்புதான்//

ப்ரொடொகால் வேண்டாம் எனச் சொல்லவில்லை ப்ரொடொகாலுக்காக மனிதத் தன்மையை இழந்துவிட வேண்டாம் என்கிறது.

Unknown said...

நன்றி. Sivabalan

Sivabalan said...

மகேந்திரன்

இல்லைமகேந்திரன், தனி மனிதன் வேறு. நாட்டின் பிரதிநிதி என்பது வேறு. அனைத்து தரப் பட்ட மனிதர்களும் இருப்பது நாடு.

அப்படிக்யிருக்க Protocol மீறுவது எனக்கு உடன் பாடில்லை. குறைந்தபச்ச Protocolயாவது Maintain பண்னலாம் எனபது என் எண்ணம்.

Unknown said...

மரபுகள் என்பது மீறப்படும் வரைதான் . போலி மரபுகளை கடைபிடிப்பது நம்மை ஒரு வட்டத்துக்குள் ஒளித்துக்கொள்வது ஆகும் தேவையான இடத்தில் மரபுகளை அவர் தனி நபராக இல்லாத பட்சத்தில் கூட மீறுவது தவறாக தோன்றவில்லை... நாடு எப்போதும் எதையும் மீறுவது இல்லை. நாம் தான் சில தேவயற்ற மரபுகளை மீறவேண்டி இருக்கிறது. அந்த நாம் தான் பிரதமர் என்பது எனது எண்ணம். நல்ல ஒழுக்கம் கொண்ட ஒரு தலைவனால் நாடும் நலம்பெற்றால் நல்லது தானே?

Sivabalan said...

மகேந்திரன்

நல்ல சுவரசியமான விசயத்தை எடுத்துள்ளீர்கள்.

மற்றவர்களுடைய கருத்தையும் அறிய ஆவலாக உள்ளேன்.

பல கேள்விகள் உள்ளன..

மீன்டும் வருகிறேன்.

Nakkiran said...

முதலில் நடந்தது தவறே அல்ல...
அஸ்மா வந்தது கருத்தரங்குக்கு... அவர் ஒரு அரசின் விருந்தினராக வரவில்லை...

நாட்டின் பாதுகாப்பிற்காக சோதனை நடைபெற்றது...யாராக இருந்தால் என்ன...இந்த சோதனையில் அவரிடம் யாரும் மரியாதையில்லாமல் நடக்கவில்லையே... எதற்க்கு மன்னிப்பு...

அவர் ஒரு தனி மனிதராக இருந்தால் யாரும் கவலைப்பட போவதில்லை.. 110 கோடி மக்களை ரெப்ரசண்ட் செய்யும் போது கொஞ்சம் கவன்மாகத்தான் இருக்க வேண்டும்...

//போலி மரபுகளைவிட மனிதாபிமானம் உயர்ந்தது என்று எண்ணச் செய்திருக்கிறார்.// மனிதாபிமானம் குறித்து பேசும் வகையில் அங்கு ஒன்னும் கொடுமை நிகழ்ந்து விட வில்லை.. வர வர ந்ம்ம PMக்கு எதொ கழண்டு விட்டதோ என எண்ணத் தோன்றுகிறது

Unknown said...

110 கோடி ஜனத்தொகை என்று யாரைச் சொல்கிறீர்கள்? தவறுகள் திருத்தப் படவேண்டும் என்பதே மன்மோகனின் கொள்கை. அஸ்மாவுக்கு நிகழ்ந்தது தவறு அதை திருத்தியதில் மன்மோகன் தவறேதும் செய்துவிடவில்லை. பம்பாயிலும் கோவையிலும் குண்டுவைத்தவனையும், அயோத்தியில் பாபர் மசூதியை இடித்தவனையும் நீங்கள் 110 கோடியில் சேர்த்துக்கொண்டால் அது மன்மோகனின் குற்றமல்ல .

Unknown said...

நன்றி நக்கீரன் அவர்களே

நன்மனம் said...

மகேந்திரன்,

இங்கே கொடுத்தமைக்கு நன்றி.

நக்கீரன் சொல்லி இருப்பது போல் ""மரியாதை குறைவாக நடந்து கொள்ளாத போது"", பிரதமர் இவ்வாறு மன்னிப்பு கேட்பது நாட்டு மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் நோக்குடன் செயல் படும் சில நல்ல அதிகாரிகளை சங்கடத்தில் ஆழ்த்தும் இல்லையா?

Unknown said...

நன்மனம் உங்களின் கருத்தில் எனக்கும் உடன்பாடே ஆனாலும். மக்களின் மனதில் சில சம்பிரதாயங்களுக்கு விடை தெரியாத போது நாட்டின் தலைவர்கள் நல்ல உதாரணமாக இருக்க இதுபோல சம்பவங்கள் இருப்பதும் நல்லதே. அதிகாரிகள் என்றும் நிரந்தரமானவர்கள் அவர்களின் நிலை மக்களுக்கு அறிமுகமானது ஆனால் ஒரு நாட்டின் தலைவர் எனும் முறையில் அவர் மன்னிப்பு கேட்பது என்பது அஸ்மாவுக்கும் அவர் சார்ந்தவர்களுக்கும் எத்தனை நம்பிக்கை தரும் என்பதை நினைத்துப் பாருங்கள்

நன்மனம் said...

//நாட்டின் தலைவர் எனும் முறையில் அவர் மன்னிப்பு கேட்பது என்பது அஸ்மாவுக்கும் அவர் சார்ந்தவர்களுக்கும் எத்தனை நம்பிக்கை தரும் என்பதை நினைத்துப் பாருங்கள் //

உண்மை தான்.

பிரதமர் இப்படி பொருள் பட சொல்லி இருந்தா நல்லா இருக்கும் இல்ல "அவர்கள் தங்களுக்கிட்ட பணிகளையே செய்தனர் அதனால் உங்களுக்கு ஏற்பட்ட அசௌகர்யத்துக்கு வருந்துகிறேன்". இப்படி தான் சொல்லி இருப்பாருனு நம்புவோம்.

Unknown said...

//இப்படி தான் சொல்லி இருப்பாருனு நம்புவோம். //
அப்படியும் நம்புவோம் :))