சென்னை: நடிகர் ரஜினியின், "சிவாஜி' பட "சிடி' "அவுட்'டாகி விட்டது என்ற பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு ஏற்றார்போல்,சென்னையிலுள்ள இரண்டு "பிரின்டிங் பிரஸ்'களில் இருந்து "சிவாஜி, பெரியார்' படங்கள் மற்றும் ஆபாச பட ஸ்டில்கள் அடங்கிய "சிடி' கவர்கள் பண்டல், பண்டலாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சென்னை திருவல்லிக்கேணி, பார்டர் தோட்டம் பேகம் சாகிப் தெருவில் "அன்னை ஆப்செட் பிரின்டிங் பிரஸ்' செயல்பட்டு வருகிறது. அதில், புதுப்பட மற்றும் ஆபாச "சிடி'க்களின் கவர்கள் ரகசியமாக பிரின்டிங் செய்யப்படுவதாக, வீடியோ பைரசி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. வீடியோ பைரசி உதவி கமிஷனர் மாடசாமி தலைமையில் போலீசார் சோதனை நடத்தினர்.பிரின்டிங் பிரசிற்குள் பண்டல், பண்டலாக "சிவாஜி, பெரியார்' மற்றும் ஆபாச பட "சிடி'க்களின் பட கவர்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அதனை பார்த்த போலீசார் அதிர்ச்சியடைந்தனர். துரைப்பாக்கத்தைச் சேர்ந்த பிரின்டிங் பிரஸ் உரிமையாளர் ஜோசப் செல்வன்(38), போலீசாரை பார்த்ததும் தப்பியோடினார். அவரது சகோதரர் சகாயராஜன்(33), டிசைனர் தமிழரசன், "மிஷின் ஆபரேட்டர்' ஜான்சன் ஆகியோரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் விசாரணை நடத்தினர். திருவல்லிக்கேணி முனியப்பன் தெருவிலுள்ள மற்றொரு பிரின்டிங் பிரசிலும் இதே பாணியில் பிரின்டிங் செய்து வந்தனர். இதையும் போலீசார் கண்டுபிடித்தனர். இரண்டு "பிரின்டிங் பிரஸ்'களில் இருந்து இரண்டு லட்சம் கவர்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.11.60 லட்சம். பின்னர், இரண்டு "பிரின்டிங் பிரஸ்'களுக்கும் சீல் வைத்தனர்.
வீடியோ பைரசி போலீசார் பறிமுதல் செய்த கம்ப்யூட்டர் மற்றும் ரேப்பர் சீட்டுகளை போலீஸ் கூடுதல் கமிஷனர் ஜாங்கிட் பார்வையிட்டு, சோதனை நடத்திய போலீசாரை பாராட்டினார். பெரியார் படம் ஏற்கனவே திரையிடப்பட்டு, தற்போது தமிழகம் முழுவதும் ஓடி வருகிறது. ஆனால், ரஜினியின் "சிவாஜி' படம் வரும் 31ம் தேதி தான் வெளியிடப்பட உள்ளது. ஆனால், அதற்குள் அந்த படத்தின் "சிடி' கவர்கள் பண்டல், பண்டலாக பிரின்ட் செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதால், அந்த படத்தின் போலி "சிடி' வெளியாகி விட்டதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து, போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

1 comments:

மகேந்திரன்.பெ said...

டெஸ்ட்டு கண்ணா டெஸ்ட்டு