‘‘அக்கம்பக்கம்
வசந்தம் இல்லை.
துக்கத்தோடுஅமர்ந்திருக்கிறது
சவத்தின் மீது ஒரு பட்டாம்பூச்சி!’’
வியட்நாம் போரில் மனிதர்களோடு மனித உரிமைகளும் குண்டுகளாலும், ஏவுகணைகளாலும் காவு வாங்கப்பட்ட துயரத்தைப் பதிவு செய்த வரிகள் இவை.
‘‘வந்துட்டாங்கய்யா மனித உரிமை பேச..!’’ எனக் கேலி பேசுகிறவர்களுக்குத் தெரியுமா, மனித உரிமை என்கிற சொல்லின் வரலாற்றுக்குப் பின்னால்

15 கோடி உயிர்கள் விலை பேசப்பட்ட உண்மை?
நாடு பிடிக்கும் ராஜாக்களின் இரண்டாம் உலகப் போர் சூதாட்டத்தில் மனித உரிமைகளும், உயிர்களும்தான் பந்தயப் பொருட்கள். அதைக் கண்டித்து, மனிதர்களின் வாழ்வுரிமையை நிலைநாட்ட ஐ.நா. சபை,
1948 ம் ஆண்டு டிசம்பர் பத்தாம் தேதி மனித உரிமைப் பிரகடனத்தை வெளியிட்டது. மனிதனின் நாகரிக வாழ்வுக்கும், சுதந்திர உணர்வுக்கும் உறுதி தருகிற பிரகடனம் அது.
விலங்குகளைக்கூட மனித நேயத்தோடு நடத்த வேண்டும் என்கிற நவயுகத்தில், மனிதர்களை மனிதர்களாக நடத்துங்கள் என்று கேட்டுக்கொண்டால் கேலியாகப் பார்ப்பவர்களை என்னவென்று சொல்வது! புழுவைவிடக் கேவலமாக நடத்தப்பட்டவர்களுக்குதான், நசுக்கப்பட்டவர்களுக்குதான் மனித உரிமைக் குரல்களின் அர்த்தம் புரியும்!
சந்தேகத்தின்பேரில் உங்கள் வீட்டுக்குள் நுழைந்த போலீஸ், தெருவே வேடிக்கை பார்க்க உங்கள் கன்னத்தில் அறைந்து, பூட்ஸ் கால்களால் எட்டி உதைத்து ஜீப்பில் ஏற்றிய தருணங்களை நீங்கள் கடந்து வந்திருக் கிறீர்களா?
வீரப்பன் என்கிற குற்றவாளியைப் பிடிப்பதற்காகப் போன அதிரடிப்படையின் அத்துமீறல்களால் பிறப்பு உறுப்பில் மின்சாரம் பாய்ச்சப்படும் மரண வலியை அனுபவிக்க வேண்டாம்... அந்த வலி தாளாது கதறும் குரல்களையாவது கேட்டிருக்கிறீர்களா?
‘இந்தச் சாதியில் பிறந்த உனக்கு இவ்ளோ திமிராடா?’’ என்று சக மனிதன் வாயில் சிறுநீர், மலம் ஊட்டிய நாகரிக(!) மனிதர்களைச் சந்தித்தது உண்டா?
‘‘போலீஸாரின் லத்திகளுக்கு மட்டும் விந்து பாய்ச்சுகிற சக்தி இருக்குமானால், இந்நேரம் நான் 13 குழந்தைகளுக்குத் தாயாகி இருப்பேன்’’ என்று அஜிதா என்கிற பெண் நீதிமன்றத்தில் தந்த வாக்குமூலத்தில் வெறும் வார்த்தைகளே பதிவாகி இருக்கின்றன. வலிகளைப் பதிவு செய்யும் ஆற்றல் வார்த்தைகளுக்கு இல்லை.
எல்லா மனிதர்களுக்கும் சுய மரியாதையுடனான அவர்களின் வாழ்வுரிமைகளை வலியுறுத்துவதும், அந்த உரிமைகள் கேள்விக்குள்ளாக்கப்படும்போது குரல் எழுப்புவதும், மக்களிடம் மனித உரிமைகள் பற்றிய விழிப்பு உணர்வைக் கொண்டுசெல்வதும்தான் மனித உரிமை அமைப்புகள் செய்கிற வேலை.
கற்பழிப்புக் குற்றம்சாட்டப்பட்ட கார்பரல் சோமரத்னே என்கிற சிங்கள ராணுவ சிப்பாய், ராணுவ நீதிமன்றத்தில் தந்த வாக்குமூலம் மனித உரிமை ஆர்வலர்களை உலுக்கிப்போட்டது. ‘‘கற்பழிப்பது குற்றம் என்றால், அதற்காக என்னை நீதிமன்றம் தண்டிக்கும் என்றால், ஒட்டுமொத்த சிங்கள ராணுவத்தையும் தண்டிக்க வேண்டும். காரணம், நூற்றுக்கணக்கான தமிழ்ப் பெண்களைக் கற்பழித்துக் கொன்று, ஒரே குழியில் போட்டுப் புதைத்திருக்கிறோம். அதற்கு நானே சாட்சி!’’ என்று தன்னைக் காப்பாற்றிக்கொள்ளும் முயற்சியில் அவர் தந்த வாக்குமூலம், ஒட்டுமொத்த சிங்கள ராணுவத்தின் கேவலத்தையும் பகிரங்கப்படுத்தியது.
இது ஏதோ இலங்கையில் நடக்கிற அத்துமீறல் என்று அலட்சியமாக இருக்க முடியாது. தங்கள் மானத்தை அனுதினமும் கேள்விக்குள்ளாக்கும் இந்திய ராணுவத்தை எதிர்த்து அஸ்ஸாம் பெண்கள் நிர்வாணப் போராட்டம் நடத்தியதைப் பார்த்து நம் நாடே தலை குனிந்ததே! மானத்தைக் காப்பாற்ற உரிமை கேட்டு நிர்வாணமாகிற சோகத்தைப் புரிந்துகொண்டால், மனித உரிமையின் அவசியமும், அவசரமும் புரியும்.
போலீஸ§ம், ராணுவமும் சமூக விரோத சக்திகள் மூலமும் நிகழ்த்தப்படும் மனித உரிமை மீறல்களைத்தான் தினம் தினம் நாம் செய்திகளில் பார்க்கிறோம். அன்றாடம் நம் வாழ்வில் மீறப்படும் உரிமைகள் பற்றிய கவனமோ, அக்கறையோ பாதிக்கப்பட்டவர்களுக்கே இல்லை. அதனால் வெளிச்சத்துக்கு வராமல் போகும் சம்பவங்கள் உங்கள் வீட்டுக்கு அருகிலேயே நடந்து கொண்டு இருக்கின்றன.
மக்களின் வரிப் பணத்தில் இயங்கும் மருத்துவமனையில், ஏழை என்பதாலேயே புறக் கணிக்கப்படுதலும், ரேஷன் கடைகளில், ‘எப்படி ரேஷன் அரிசி அதுக்குள்ள தீர்ந்து போகும்?’ என்று கேட்டால், ‘போய் கோர்ட்ல கேஸ் போடு’ என்று அலட்சியமாக வரும் அதிகாரத்தின் குரலும், ‘லஞ்சம் தராவிட்டால் உனக்கு எந்த வேலையும் செய்ய முடியாது’ என்று அவமானப்படுத்தும் அரசு இயந்திரமும், ‘கறுப்பாக இருக்கிறாய்; அது எவ்வளவு அசிங்கம் தெரியுமா? எங்கள் அழகு கிரீமைப் பயன்படுத்தி வெள்ளையாக மாறிவிடு’ என்று சொல்லி ஒட்டுமொத்த மக்களின் நிறத்தையே கேவலப்படுத்து கிற விளம்பரமும்கூட மனித உரிமை மீறல்கள்தான். சாதி வேற்றுமை பார்க்கிற யாருமே மனித உரிமைகளை மீறுகிறவர் கள்தான். மதப் பிரிவினை செய்கிற யாருமே மனித உரிமைக்கு விரோதமானவர் கள்தான். பெண் என்பதால் மனைவியை, மகளை அடிமைகளாக நடத்துகிறவர்கள் எல்லோரும் மனித உரிமையை மீறுகிற குற்றத்தையே செய்கிறார்கள்.
சட்டங்களின் மூலம் மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்க வேண்டிய அரசுகள் அதைச் செய்யத் தவறுகின்றன. பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காகத் தடா சட்டம் கொண்டுவருவதாகச் சொன்னது அரசு. நான்கு மாநிலங்களில் மட்டுமே பயன்படுத்தப்படும் என்ற வாக்குறுதியோடு நிறைவேற்றப்பட்ட தடா சட்டம் 23 மாநிலங்களில் நடை முறைப்படுத்தப்பட்டது. நாடு முழுவதும் 67,509 பேர் தடாவின் கீழ் கைது செய்யப் பட்டதாகச் சொல்கிறது புள்ளிவிவரம். ஆனால், அவர்களில் குற்றம் நிரூபிக் கப்பட்டவர்கள் ஐந்நூறுக்கும் குறைவான வர்களே! 60 நாட்கள் போலீஸ் காவலில் இருந்து சித்ரவதை அனுபவித்த மற்ற அப்பாவிகளுக்கு எந்தத் தீர்வும் இல்லை. கடுமையான சட்டங்கள் மூலம் திறமையான குற்றவாளிகள் உருவானதுதான் மிச்சம்.
தஞ்சாவூரில் ஒரு பெண், சாராய கும்பலால் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப் பட்டுக் கொலை செய்யப்பட்டார். பெண்கள் அமைப்பு இந்தப் பிரச்னை யைக் கையில் எடுத்தது. அச்சுறுத்தல் இருப்பதாக சாராய வியாபாரிகளுக்குப் போலீஸ் பாதுகாப்பு கிடைத்தது. கள்ளச் சாராய கும்பல் மீது புகார் கொடுத்த அப்பெண்ணின் கணவர் குற்றவாளி ஆக்கப்பட்டார். பிக்பாக்கெட் குற்றத் துக்காகக் கைது செய்யப்பட்டவரோடு அவரது வீட்டுப் பெண்களும் காவல் நிலையத்துக்கு இழுத்து வரப்பட்டனர். அந்தப் பெண்களின் தொடைகளில் ஏறி நின்று லத்திகளால் பின்புறம் அடித்து, ‘குற்றத்தை நிரூபிக்க’ போலீஸார் கடமை ஆற்றினர். ‘எங்களை அடித்தாலும் பரவாயில்லை. தொடை மீது ஏறி நிற்காதீர்கள்’ என்று கண்ணீர் மல்க வேண்டுகோள் வைத்தனர் அந்தப் பெண்கள்.
அதேபோல், ஆட்டோ டிரைவர் ஒருவரை விசாரணைக் காகக் காவல் நிலையம் அழைத்துப் போய், விசாரணை என்கிற பெயரில் அவரது கையையே உடைத்துவிட்டனர். பிறகு அவர் குற்றமற்றவர் என்று கண்டுபிடித்து, அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தது போலீஸ். ஆட்டோ ஓட்டிப் பிழைக்க முடியாமல் அவரது வாழ்க்கையே கேள்விக்குறி ஆகிப்போனது.
மீடியாவின் கண்களுக்கு உச்ச கட்ட வன்முறைகள்தான் தெரியும். ‘பேய் ஆட்சி செய்தால், பிணம் தின்னும் சாத்திரங்கள்’ என்னும் வரிகளை, ‘போலீஸ் ஆட்சி செய்தால், பிணமாகும் மனித உரிமைகள்’ என மாற்றி எழுதலாம்.
சித்ரவதை, பாலியல் பலாத் காரம், அடிதடிகள் போன்ற வற்றோடு மட்டுமே மனித உரிமையின் சம்பந்தம் முடிந்து விடுவதாக நினைக்கிறோம். குழந்தைத் தொழிலாளர் கொடுமை ஒழிந்து, அனைத்துக் குழந்தைகளுக்கும் சமமான கல்வி வழங்கப் படவேண்டும் என்கிற குழந்தைகளின் உரிமையும், தன் உடல் மீதும் வாழ்வு மீதும் அத்துமீறல் செய்வதைத் தடுக்கக்கோரும் பெண்ணுரிமையும், சாதி, மதம், இனம், மொழி, நிறம் போன்ற வேறுபாடுகளுக்கு எதிராக, ‘உன்னைப்போல நானும் மனிதன்தான். என்னை வேறுபடுத்தித் துன்புறுத்துகிற அதிகாரம் உனக்குக் கிடையாது’ என்று போராடுகிற உரிமையும்கூட மனித உரிமைக் குரல்கள்தான். மனிதனாகப் பிறந்த எவரின் அடிப்படை வாழ்வு உரிமைகள் பாதிக்கப்பட்டாலும் அது மனித உரிமை மீறலே! ‘எங்கள் மக்கள் தொகைக்கு சமூகத்தின் எல்லாத் தளங்களிலும் இட ஒதுக்கீடு வேண்டும்’ என்று கேட்பதும் மனித உரிமை சம்பந்தப்பட்டதுதான். அந்த உரிமையை மறுத்தோ, எதிர்த்தோ போராடு கிறவர்களை போலீஸ் தன் லத்திகளால் மூர்க்கத்தனமாக அடக்க நினைப்பதுகூட மனித உரிமைகளுக்கு விரோதமான செயலே!
காவல்துறை மற்றும் அதிகார வர்க்கங்களால் மனித உரிமை மீறப்பட்டால், அதை முறைப்படி எப்படி எதிர்த்துப் போராட வேண்டும் என்று பலருக்குத் தெரியவில்லை. காவல் நிலையத்தால் துன்புறுத்தப்பட்டவர்களுக்கு மாவட்ட எஸ்.பி&யிடம் புகார் சொல்ல முடியும் என்பது தெரியாத பட்டதாரிகளேகூட இருக்கிறார்கள். துன்புறுத்தல் நடந்த நாள், நேரம், இடம் போன்ற சரியான தகவல்களை ஆவணப் படுத்தி ஒரு புகார் மனு எழுதத் தெரியாமல் தவிக்கிறோம். இதையெல்லாம் பள்ளி, கல்லூரிகளில் சொல்லிக்கொடுத்து விழிப்பு உணர்வு ஏற்படுத்துவது அவசரத் தேவை. சாதி, மதம் பார்க்காமல், வேறு எந்தப் பிரிவினைக்குள்ளும் மனிதனைத் தள்ளாமல் சமமாக நடத்துகிற மனித உரிமைக் கல்வியை, கட்டாயம் பள்ளி களில் ஒரு பாடமாகக் கொண்டுவர வேண்டும்.
பாதிக்கப்பட்டவர்கள், மாநில மனித உரிமை ஆணையத்துக்குப் புகார் அனுப்பித் தீர்வு தேட முடியும். ஆனால், தனிமனிதர்களாக அரசு அமைப்புகளை எதிர்த்துப் போராடுவது இயலாத காரியம். கூட்டு முயற்சிதான் மனித உரிமைகளை மீட்டுத் தரும். நம்பிக்கை மிகுந்த மனித உரிமை அமைப்புகள், பெண் இயக்கங்கள், தொழிற் சங்கங்கள் போன்ற மக்கள் திரளான அமைப்புகளின் உதவியோடு போராட்டத்தை முன் னெடுக்க வேண்டும். ‘பக்கத்து வீட்டுக் காரரை போலீஸ் கைது செய்தால் எனக்கென்ன?’ என்று இருக்காமல், முறையான விசாரணை மேற்கொள்ளப் படுகிறதா என்பதை எல்லோரும் கவனிக்க வேண்டும். அதையும் தனி மனிதனாகச் செய்ய வாய்ப்பில்லை என்பதால், ஒவ்வொரு ஏரியாவுக்கும் ஒரு ‘விஜிலென்ஸ் குழு’ அமைக்கப் படலாம். குறிப்பாக, கிராமங்களில் இந்த முறை வழக்கத்துக்கு வர வேண்டும். இப்படி தொடர்ச்சியான முயற்சிகளின் மூலம்தான், நாம் நமது உரிமைகளை வென்றெடுக்க முடியும்.
உரிமைகளோடு வாழ்ந்தால்தான், நாம் மனிதர்கள். உரிமைகள் அற்றவர்களுக்கு வரலாறு தந்த பட்டம் அடிமைகள்!
நாம் மனிதர்களாக வாழப் போகிறோமா, அல்லது அடிமைகளாகவா? Thanks to vikatan .com

3 comments:

மகேந்திரன்.பெ said...

test comment

வெற்றி said...

மகேந்திரன்,
நெஞ்சைத் தொடும் நல்ல பதிவு.

நன்றிகள்.

அன்புடன்
வெற்றி

வசந்தன்(Vasanthan) said...

வாசித்தேன்.