‘உணர்ச்சிகள்’ படத்துக்கு ஆர்.சி.சக்தி அவர்களுக்கு உதவிக் கதாசிரியனாகவும் படத்தின் கதாநாயக னாகவும் நான் டபுள் ட்யூட்டி செய்து கொண்டிருந்த நேரம்.
படத்தில், ஒரு பெரிய கிணற்றுக்குள் அமர்ந்து இரு காதலர்கள் பேசுவது போன்ற காட்சி. எங்களின் அன்றைய பட்ஜெட், நல்ல கமலைக்கிணற்றில் காட்சியை எடுக்க அனுமதிக்கவில்லை. கிணற்றுக்குள் என்றது கிணற்றடியாக மாறி, பின் எங்கோ ஒரு மரத்தடியில் படமானது. கமலைக் கிணறு இல்லாமல் கமலை (என்னை) மட்டும் வைத்து எடுத்தார் ஆர்.சி.சக்தி. (அந்த ஏக்கம்தானோ என்னவோ, என் கிராமத்துத் திரைக்கதைக் காதலர்கள் அவ்வப்போது கிணற்றுக்குள் அமர்ந்திருப்பார்கள். உதாரணம்... தேவர்மகன் ‘இஞ்சி இடுப்பழகா’ பாட்டு, விருமாண்டியில் ஒரு காதல் காட்சி!)
நிற்க. சமாசாரம் என்னன்னா, அதுல ஒரு டயலாக் வரும். அதை நான் சொன்னபோது ஆர்.சி.சக்தியண்ணன் ரொம்ப ரசிச்சாரு.
காட்சி சுருக்கம்: பணக்கார இளம் விதவை .
வேலைக்காரப் பையன் உஷ்ண காலம். வீட்டில் யாருமில்லாத நேரம்.
பூவுக்குள் பூகம்பம்னு வைரமுத்து சொல்வாரே, அந்த மாதிரி இருபதுக்கு ஓர் அதிர்வு வர, விவரம் சரியாகத் தெரியா விட்டாலும் உடம்பு ஒத்துழைத்ததால் பதினெட்டும் உடன்படுகிறான். உடற்திரவங்களின் பரிமாற்றம் நடந்துவிடுகிறது.
அந்தக் காலத்துக்கு மகா கி-\த்தனமான ஐடியா அது. ஜீரணிப்பதே சந்தேகமாக இருந்த நேரம். இன்னிக்கி அது சும்மா பிஸ்கோத்து.
வசனம் இப்படிப் போகும் அந்தக் காட்சியில்... பையன் பேரு முத்துனு வச்சுக்குவோம். பொண்ணு அகல்யானு வச்சுக்குவோம். ஒரிஜினல் பேரு ஞாபகமில்லை.
உடலுறவுக்குபின், அடுத்தநாள் கிணற்றுக்குள் அமர்ந்தபடி அந்த வெளியுலகம் தெரியாத காதல் நுணல்கள் பேசுகின்றன.
அகல்: ‘‘முத்து! நாம எங்கயாவது ஓடிப் போயிடலாமா?’’
முத்து: ‘‘ஏன் சின்னம்மா?’’
அகல்: ‘‘ஒண்ணா இருக்கலாமே!’’
முத்து: ‘‘இங்கனக்குள்ளயே இருந்துக்கிறலாமே? வெளிய எங்கிட்டாச்சும் போனா சங்கடமில்ல? இங்க நல்ல சாப்பாடு, தங்க எடமெல்லாம் இருக்கே! வெளிய இது மாதிரி வருமா?’’
அகல்: ‘‘ஒனக்குப் புரியலயா? நான் ஒன்னக் காதலிக்கிறேன்.’’
முத்து (சற்றே அதிர்ந்து): ‘‘எதுங்கம்மா?’’
அகல்: ‘‘நீ என்னக் காதலிக்கலியா?’’
முத்து: ‘‘அப்பிடின்னா என்னங்கம்மா?’’ (மேலும் அதிர்ந்து, முத்துவை வெறித்துப் பார்க்கிறாள் அகல்).
முத்து அடுத்து என்ன செய்வதென்று புரியாமல் கிணற்றில் ஒரு கல்லை வீசுகிறான். வட்ட வட்டமாகப் பிரிகிறது தண்ணீர் கிணற்றினுள்ளே! காதலர்களும் தான்.
இந்தக் காட்சியின் ஆதார ஸ்ருதியை எனக்குத் தந்தது, எங்கள் வீட்டில் சிறு வயது முதலே வேலை செய்த புலியேறு என்ற வேலைக்காரன்... ஸாரி, வேலைக்காரர். அப்போது புலியேறுக்கு
40 வயதிருக்கும். எனக்கு
7, 8 வயதிருக்கும்.
எல்லோரும் புலியேறை நீ... வா... போ... என்றே அழைத்ததால், நானும் ஏக வசனம்தான். பிற்பாடு ‘மனிதனுக்கு மரியாதை’ என்ற தத்துவம் புரிந்து, பழக்கத்தை நான் மாற்ற முற்பட, மறுத்துவிட்டார் புலியேறு.
7&க்கும்
40&க்கும் உரையாடல் இப்படி நடந்தது.
நான்: ‘‘புலியேறு... ஒனக்கு புள்ள, பொண்ணெல்லாம் இருக்கில்ல?’’
புலி: ‘‘ஏகப்பட்டது இருக்குங்கய்யா!’’
நான்: ‘‘ஒன் சம்சாரத்தை லவ் பண்றியா?’’
புலி: ‘‘சேச்சே! அதெல்லாம் செய்ய மாட்டேங்கய்யா! சந்தோச மாத்தான் வச்சிருக்கேன் அவளை.’’
நான்: ‘‘லவ் பண்ணா மலா? எப்பிடி?’’
புலி: ‘‘லவ்வுன்னா என்னங்கய்யா?’’
நான்: ‘‘அய்யய்ய! இது கூடத் தெரியாதா? பொண்டாட்டிய புருஷன் பண்ணியே ஆகவேண்டிய விஷயம்.’’
புலி (வெட்கி): ‘‘சின்னய்யா! அப்படி எல்லாம் பேசக்கூடாது. நீங்க ரொம்ப சின்னப்புள்ள. தப்பு! அய்யாவுக்குத் தெரிஞ்சா என்னயத்தான் வைவாக!’’
நான்: ‘‘ஏன்?’’
புலி: ‘‘அதெல்லாம் பெரியாளா ஆனதுந்தேன் பேச, கொள்ளச் செய்யலாம். இப்பப்பிடாதுங்க அய்யா!’’
நான்: ‘‘சினிமாவிலெல்லாம் காட்றாளே?’’
புலி: ‘‘அத்த எங்க காட்றாங்க? அதுக்கு முன்னாடியே முடிச்சு பாட்டுப் பாடிப்புட்டு, கதைக்குப் போயிருவாகள்ல..?’’
நான்: ‘‘சீ! அய்யய்யே... லவ்வுன்னா அது இல்ல! காதல்! எம்.ஜி.ஆர். சரோஜாதேவிய, பானுமதியையெல் லாம் பண்ணுவாரே... அது!’’
புலி: ‘‘அப்படியா! பயந்தே போனேன்! அதெல்லாம் சினிமாவுல செய்யறதுங்க அய்யா! வீட்டுல செய்ய முடியுங்களா?’’
நான்: ‘‘அப்ப, ஒன் சம்சாரம் சந்தோசமா இருக்காளானு எப்பிடித் தெரியும் ஒனக்கு?’’
புலி: ‘‘நாலு புள்ளயப் பெத்துக்கிட்டு கூடவே இருக்காளே... சரி, அத விடுங்கய்யா! நீங்க சைக்கிளை மிதிங்க அய்யா! சைக்கிள் பளகுவோம்.’’
புலியேறு சீட்டின் பின்னால் கையை வைத்து தாங்கிப் பிடித்து ஓடிவர, சைக்கிளும் கிராமியக் காதலும் பழகலானேன். அதற்குப் பிறகு... நன்றி ஜெயகாந்தனுக்கு, மலையாளப் படங்களுக்கு, ஐரோப்பிய, ஜப்பானிய சினிமாக்களுக்கு!
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
மகேந்திரன். உங்களின் பல பதிவுகளை இன்றுதான் படித்தேன். எதையுமே நீங்க சொல்ற ஸ்டைல் ரொம்ப நல்லா இருக்குங்க. திரைக்கதாசிரியருக்கு தேவையானதும் அதானே. ஆனால் என்ன செய்கிறீர்கள் துபாயில் ?!
//துபாயில் என்ன// வேறென்ன கருத்து சொல்றதுதான் இந்த கருத்த ஊருல சொன்னா பின்னி பெடெலெடுக்க மாட்டாங்க?:))
இங்கேபணிபுரிகிறேன் அன்பரே!
//ஆனால் என்ன செய்கிறீர்கள் துபாயில் ?! // இவ்வளவு அழகாக எழுதக்கற்ற நீங்கள், சினிமா துறையில் ஆர்வமும் அனுபவமுமுள்ள நீங்கள் அங்கே ஏன் போய் வேலை செய்கிறீர்கள் என்ற தொனியில் கேட்டேன் மகேந்திரன் :)
அய்யோ இது நான் எழுதியது அல்ல ... எனக்கு சினிமா துறையில் அனுபவமெல்லாம் பார்ப்பதோடு சரி. இது கமல் எழுதியது. நான் சின்ன பையங்க. ஏதாவது காமெடி பார்ட் இல்ல கருத்து சொல்ற வேலை மட்டும் நல்லா வரும் சினிமா சும்மா பாக்கறதோட சரி நீங்க வேற என்ன முள்ளும் மலரும் மகேந்திரன்னு தப்பா கணக்கு போட்றாதீங்க. இது வெறும் முள் மகேந்திரன் மலர் இல்ல
Post a Comment