காட்டில் வருடக் கணக்காகத் தனி ஆட்சி நடத்திக் கொண்டிருந்த ஒரு சிங்கம், வழிதவறி ஒரு கிராமத்துக்குள் வந்துவிட்டது. வந்த அசதியில், ஒரு மரத்தடியில் படுத்து உறங்க... அதிகாலையில் சேவல் கூவல்தான் அதன் தூக்கத்தைக் கலைத்தது. சேவலின் குரலை இதற்கு முன் கேட்டறியாத சிங்கம், கண்விழித்த கணமே, ஏதோ ஆபத்து என்று எண்ணி தலைதெறிக்க ஓட்டம் பிடித்தது. அருகில் நின்ற ஒரு காளை, தன்னைப் பார்த்துதான் சிங்கம் பயந்து ஓடுவதாக நினைத்துக்கொண்டு, அதை விரட்ட ஆரம்பித்தது. கொஞ்ச நேரத்திலேயே காட்டு வழியைக் கண்டுபிடித்த சிங்கம், காட்டின் எல்லைக்குள் நுழைந்து, ஒரு மரத்தின் நிழலில் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தது. சற்றுத் தொலைவில் நின்ற காளை, சிங்கத்தைப் பார்த்து உறுமிக் கொண்டிருந்தது. சிங்கம் பயந்து ஓடும் என்பதுதான் காளையின் எதிர்பார்ப்பு. ஆனால், தனது அதிகார எல்லைக்குள் இருக்கும் தெம்போடு அந்தக் காளை மீது பாய்ந்து, அதை அடித்துக் கொன்றது சிங்கம்.

அந்தக் காளையைப் போல்தான் மக்களும், தேர்தல் நேரத்தில் வாக்குகள் கோரிவரும் அரசியல் தலைவர்கள் பேசுவதைத் தவறாகப் புரிந்து கொள்கிறார்கள். தனது வாக்குரிமையைக் கண்டு அரசியல்வாதிகள் அஞ்சுவதாக மயக்கம் கொள்கிறார்கள். தங்களுக்காகப் பயந்துகொண்டு பொருட்களின் விலையை ஏற்றாமல் இருப்பதாகக் கருதுகிறார்கள். ஆனால், தனது அதிகார எல்லைக்குச் சென்ற அடுத்த நிமிடம் அரசியல்வாதிகள் சாதாரண மக்கள் தலையில் பெருஞ்சுமையை ஏற்றி விடுகிறார்கள். மக்களின் சட்டைப் பையில் இருந்து சுலபமாகப் பணத்தை அரசாங்கத்தின் கஜானாவுக்கு எடுத்துச் சென்று விடுகிறார்கள்.
ஐந்து மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பே அமலுக்கு வர இருப்பதாகக் கூறப்பட்ட பெட்ரோல், டீசல் விலை உயர்வு இப்போது அமலுக்கு வந்துள்ளது. மத்திய அரசு பெட்ரோலுக்கு நான்கு ரூபாய், டீசலுக்கு இரண்டு ரூபாய் என விலையை அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வுக்கு எதிர்பார்த்தபடியே பி.ஜே.பி. உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியை வெளியில் இருந்து ஆதரிக்கும் இடதுசாரி கட்சிகளும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. இதன் உச்சகட்ட அரசியலாக பிரதமர் மன்மோகன் சிங், நிதியமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா ஆகியோரை உறுப்பினர் களாகக் கொண்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியும், விலை உயர்வைக் குறைக்க வழி உண்டா என்று பரிசீலிக்குமாறு மத்திய அரசைக் கேட்டுக் கொண்டார்!
‘காங்கிரஸ் கட்சி சாதாரண மக்கள் பிரச்னையில் சரியாகவே நடந்து கொள்கிறது. சோனியா காந்தி எப்போதும் ‘ஆம் ஆத்மி’யின் நலனில் அக்கறை கொண்ட வராகவே இருக்கிறார். ஆனால், ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ்காரர்கள் வேறுவழியில்லாமல் இந்த விலை உயர்வு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது.’ &இப்படி ஒரு பிம்பத்தை பொதுமக்களிடம் கொண்டு செல்ல காங்கிரஸ் முயற்சி செய்கிறது. கடந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின்போது, பெட்ரோல் விலை உயர்த்தப்படும் போதெல்லாம் ‘சாதாரண ஏழை மக்கள்’ வாழ்க்கையை இந்த விலை உயர்வு எவ்வா றெல்லாம் பாதிக்கும் என்று காங்கிரஸ் கட்சி விளக்கம் கொடுத்ததும், விலையேற்றத்தைக் கண்டனம் செய்ததும் வேறு விஷயம்!
பி.ஜே.பி. கட்சி பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்வதில் எந்தவிதமான நேர்மையும் இல்லை என்று ஒரு தரப்பினர் கருதுகிறார்கள். அந்தக் கட்சியின் தலைமையில் ஆட்சி நடந்தபோது, ‘‘உலகச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரிப்பதால் இங்கும் பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை’’ என்று கீறல் விழுந்த ரிக்கார்டு மாதிரி சொல்லிக் கொண்டிருந்தனர், அந்தக் கட்சி பிர முகர்கள். இப்போது அவர்கள் வீதிகளில் இறங்கிப் போராடுவது, அக்கட்சியின் நேர்மையைச் சந்தேகிக்க வைக்கிறது.
சரி... உலகச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை ஏறுவதால்தான் இந்தியாவில் நாம் இவ் வளவு விலை கொடுக்க வேண்டியுள்ளதா... உள்நாட்டு வரிவிதிப்புக் கொள்கைகளுக்கு இந்த விலை உயர்வில் எந்தப் பங்கும் இல்லையா..? இப்படிப்பட்ட கேள்விகள் மக்கள் மனதில் எழக்கூடும்.
ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு சில்லறை விற்பனை விலையாக நாம் கொடுக்கும் ரூபாய் 50&ல் ஏறத்தாழ 40 சதவிகிதமே கச்சா எண்ணெயின் விலையாக உள்ளது. மீதி இருக்கும் 60 சதவிகிதம் உற்பத்திச் செலவு, லாபம், உள்நாட்டில் விதிக்கப்படும் கலால் வரி, சுங்கவரி, விற்பனை வரி போன்றவற்றுக்கே செல்கிறது. எனவே இந்த மூன்றடுக்கு வரி முறையில் மாற்றம் கொண்டுவந்து விலை உயர்வைக் குறையுங்கள் என்று இடதுசாரி கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
வரி விதிப்பு குறித்த உண்மையான விவரங்கள் பரவலாக மக்களுக்குத் தெரிந்துவிட்ட நிலையில்தான், காங்கிரஸ் கட்சி தனது அஸ்திரத்தைக் கையில் எடுத்துள்ளது. அதாவது தவிர்க்கவே இயலாத காரணங்களால்தான் மத்திய அரசு பெட்ரோல் விலையை ஏற்றியிருக்கிறது என்பதை மக்கள் தெரிந்திருக்கிறார்கள் என நினைக்கிறது காங்கிரஸ். எனவே அதன் பாதிப்பு மக்களிடம் ஏற்படுவதைக் குறைப்பதற்கு இந்த உயர்வின் மீது மாநில அரசு விற்பனை வரியை விதிக்காமல் இருக்க வேண்டும். இந்த முடிவைக் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் நடைமுறைப்படுத்துகிறார்கள். இதன் மூலம் மற்றவர்கள் ஆளும் மாநிலங்களில் அந்தக் கட்சிகளுக்கு மக்கள் சுமையைக் குறைக்கும் அக்கறை இல்லை என்ற தோற்றத்தை மக்கள் மன்றத்தில் உருவாக்க நினைக்கிறார்கள். பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிராகக் கண்டனம் தெரிவித்தவர்களையே அந்த எதிர்ப்பு ‘பூமராங்’ ஆகித் தாக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
கூட்டணிக் கட்சியான தி.மு.க., தன் ஆளுகைக்கு உட்பட்ட தமிழகத்தில், டீசலுக்கு விற்பனை வரியை குறைத்து, காங்கிரஸ் ரூட்டில் தானும் பயணிப்பதாக காட்டிக் கொண்டிருக்கிறது. கூடவே, ÔÔசர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும் போது, இங்கே ஆளுங்கட்சியாக இருப்பவை அதற்கான காரணங்களைக் கூறுவதும், எதிர்க்கட்சியாக இருப்பவை எதிர்த்துப் போராடுவதும் ஜனநாயக அரசியலில் வாடிக்கையாகிவிட்ட, வருந்தத் தக்க நிலையென்பதில் இரு வேறு கருத்துக்கு இடமில்லைÕÕ என்று Ôபெட்ரோல் அரசியலைÕ போட்டும் உடைத்திருக்கிறார் தமிழக முதல்வர் கருணாநிதி.
பெட்ரோல் விலை உயர்வு பிரச்னைக்கான தீர்வு மத்திய அரசிடமே இருக்கிறது. மத்திய அரசு விதிக்கும் வரிகளில் மாற்றம் கொண்டு வருவதே விலை உயர்வைக் குறைக்கும். மாநிலங்களில் விற்பனை வரியைக் குறைப்பது என்பது இந்தப் பிரச்னைக்குத் தீர்வல்ல. இருந்தபோதிலும், காங்கிரஸ் அந்த முடிவையே கையில் எடுத்துள்ளது. அரசியல்ரீதியாகத் தனிமைப்பட்ட நிலையில் இருந்த காங்கிரஸ், இப்போது இதன் மூலம் தனது கையிலும் ஓர் ஆயுதத்துடன் நிற்கிறது.
அந்த ஆயுதம் பலம் சேர்க்குமா அல்லது அந்தக் கட்சியையே பதம் பார்க்குமா என்பது போகப்போகத்தான் தெரியும்! ஜென்ராம்

0 comments: