இடஒதுக்கீடு பற்றி ஜென்ராம்

சதவிகிதம் மட்டுமே சமத்துவமல்ல! இந்திய அரசியலில் சில வார்த்தைகள் மிகுந்த வல்லமை வாய்ந்தவை. அந்த வார்த்தைகள் எப்போதெல்லாம் உச்சரிக்கப்படுகிறதோ அப்போதெல்லாம் பிரச்னைகள் வெடிக்கின்றன. அப்படிப்பட்ட வார்த்தைகளில் ஒன்றுதான் ‘இடஒதுக்கீடு.’ 90&ம் ஆண்டில் இந்த வார்த்தை உச்சரிக்கப்பட்டபோது, நாடு முழுக்க கொந்தளிப்புகள் எழுந்தன. இப்போது மீண்டும் அந்த வார்த்தை உச்சரிக்கப்பட்டிருக்கிறது. கூடவே போராட்டங்களும் கொழுந்துவிட ஆரம்பித்துவிட்டன.
‘உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 27 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கப் படும்’ என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் அர்ஜுன் சிங் ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக அறிவித்தார். அதைத் தொடர்ந்து மும்பை மற்றும் டெல்லி நகரங்களில் மருத்துவக் கல்லூரியில் பயிலும் உயர்சாதி மாணவர் களும் டாக்டர்களும் போராட் டத்தில் குதித்துள்ளார்கள்.
1990&ம் வருடம் வி.பி.சிங் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை நடைமுறைப் படுத்தியபோது எழுந்த மாணவர் போராட்டங் களை இந்தப் போராட்டங்கள் நினைவூட்டுவதாகப் பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் குறிப்பிடு கின்றன. உண்மையில் இந்தப் போராட்டங்கள், 1990&ல் நடந்த நிகழ்ச்சிகள் போன்றவை அல்ல. அப்போது ஆட்சியில் இருந்த வி.பி.சிங் அரசு, அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவிகித இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்ற மண்டல் கமிஷன் பரிந்துரையை அமல்செய்யப் போவதாக அதிரடியாக அறிவித்தது. ஆனால், இன்றைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தன்னிச்சையாக எதையும் செய்யவில்லை. கடந்த 2005 டிசம்பர் 21&ம் தேதி நாடாளுமன்றத்தின் மக்களவையிலும் 22&ம் தேதி மாநிலங்களவையிலும் மிகப் பெரும்பான்மையான கட்சிகளின் ஏகோபித்த ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட சட்டத்தையே இப்போது மத்திய அரசு செயல்படுத்த முனைகிறது. இந்தச் சட்டத்துக்குக் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், கடந்த ஜனவரி மாதம் 20&ம் தேதியன்று ஒப்புதல் அளித்துக் கையப்பம் இட்டார். அரசியல் சட்டத்தின் பிரிவு 15&ல் புதிதாக ஒரு விதியைச் சேர்த்ததன் மூலம் அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டுக்கு இந்தச் சட்டம் வழி செய்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அவையில் சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு, அரசு நிர்வாகம் அதை நடைமுறைப்படுத்துவதற்கு முயற்சிகள் எடுக்கத்தானே செய்யும்?
சரி... இந்தச் சட்டத்தை இயற்ற வேண்டிய அவசியம் ஏன் வந்தது என்ற கேள்வி எழக் கூடும். வி.பி.சிங் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல்செய்தபோது அதை எதிர்த்தவர்கள் என்ன சொன்னார்கள்? ‘சமூக நீதி காக்கப்பட வேண்டுமென்றால், இட ஒதுக்கீட்டை கல்வி நிறுவனங்களில் இருந்து தொடங்க வேண்டும்’ என்றார்கள். இப்போது அவர்கள், ‘ஆரம்பப் பள்ளிகளில் அடிப்படைக் கல்வி வசதிகளை ஏற்படுத்தாமல் நேரடியாக உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு செய்வது நியாயமா?’ என்று பேசுகிறார்கள்!
அவர்கள் கூறியது போலவே கல்வியில் இடஒதுக் கீட்டுக்கான முயற்சிகள் முன்பு நடந்தன. ஆனால், சில நீதிமன்றங்கள் அரசு நடத்தும் கல்வி நிறுவனங்களில் மட்டுமே இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த முடியும் என்று தீர்ப்புகள் கூறின. இந்நிலையில் இடஒதுக்கீட்டுக்கு சட்டரீதியிலான பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எனவேதான் நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. காலகாலமாகப் பிற்பட்டுக் கிடக்கும் மாணவர்களின் நலனை முன்னிட்டே இந்த சட்டம் என்பது உண்மை!
சரி, இந்த அறிவிப்பில் அர்ஜுன் சிங் ஏன் அதிக அக்கறை காட்டுகிறார்... ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களுக்கு முன்னதாகவே இதை அறிவிக்க வேண்டிய அவசியம் என்ன... அவரின் செயல்பாட்டில் சுயநலம் இருக்கிறதா... வேறு அரசியல் காரணங்களும் இருக்கக் கூடுமா... இடஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டங்கள் 1990&ம் வருடத்தைப் போல் ஏன் தீவிரமாக நடைபெறவில்லை? இதுபோன்ற பல கேள்விகள் மக்கள் மத்தியில் எழுகின்றன.
அர்ஜுன் சிங், அடிப்படையில் நேரு குடும்ப விசுவாசி. 1991 மே மாதம் 21&ம் தேதி ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட அந்த நாளின் நள்ளிரவிலேயே ‘தேசத்தைக் காப்பாற்ற சோனியா காந்தி அரசியலுக்கு வர வேண்டும்’ என்ற கருத்தைத் தொண்டர்கள் மத்தியில் விதைத்தவர். மிகவும் சோகம் தரக்கூடிய ஒரு துக்க நிகழ்வின் தாக்கத்தில் இருந்து நாட்டு மக்கள் விடுபடுவதற்கு முன்னதாகவே காங்கிரஸ் கட்சியைக் காப்பாற்ற அடுத்து எது சரியாக இருக்கும் என்ற முடிவுக்கு உடனடியாக வந்தவர். இப்போதும் காங்கிரஸைப் பலப்படுத்தவே அவர் முயல்கிறார். இந்தியா முழுவதும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீடுக்காகப் போராடிய வி.பி.சிங்கின் ஜனதா தளம் சிதறுண்டு கிடக்கிறது. பீகாரில் லாலு பிரசாத் யாதவ் ஒருபுறமும், நிதிஷ்குமார், சரத் யாதவ் ஆகியோர் மறுபுறமுமாகப் பிரிந்து கிடக்கிறார்கள். உத்தர பிரதேசத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களின் நாயகனாக முலாயம்சிங் யாதவ் இருந்து வருகிறார். ஒரு காலத்தில் உ.பி&யில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளித்த பிராமணர்கள் பி.ஜே.பி&யை ஆதரிக்கப் போய் விட்டார்கள். தலித் மக்கள் மாயாவதியிட மும், சிறுபான்மையினர் முலாயம்சிங் யாதவிடமும் நம்பிக்கை வைத்துள்ளார்கள். அதனால், இந்த மாநிலங்களில் இழந்த செல்வாக்கை மீட்க வேண்டும் என்ற கட்டாயம் காங்கிரஸ் கட்சிக்கு இருக்கிறது. அதற்குப் பின்னரே மத்தியில் காங்கிரஸ் கட்சியால் தனித்து ஆட்சி நடத் தும் நிலைக்குப் போகமுடியும். முலாயமுக்குப் பரவலாக இருக்கும் ‘பிற் படுத்தப்பட்ட மக்களின் நாயகன்’ என்ற பிம்பம் கலைய வேண்டும். உ.பி&யில் காங்கிரஸ் ஆட்சியைக் கொண்டுவருவதற்கு ராகுல் காந்திக்கு உதவும் விதத்தில்கூட அர்ஜுன் சிங் செய்திருக்கக் கூடும்.
அல்லது, பொருளாதாரச் சீர்திருத்தங்கள் விஷயத்தில் இடது சாரிகளுக்கும் மன்மோகன் சிங் அரசுக்கும் இடையில் எதிர்காலத்தில் முரண்பாடுகள் முற்றலாம். அப்படி ஒரு நிலை வந்தால், மாற்றுப் பிரதமராகத் தன்னை இடதுசாரிகளோ சோனியா காந்தியோ பரிந்துரைப்பதற்கு உதவி யாக ‘சமூக நீதி’ என்ற அஸ்திரத்தை அவர் கையில் எடுத்திருக்கலாம். ஒருவேளை, பிரதமராக வருவதற்குத் தனக்கு வாய்ப்பே கிடைக்கா விட்டாலும், அடுத்த குடியரசுத் தலைவர் பதவி மீது அவருக்குக் கண் இருக்கலாம். அரசியல்வாதிகள் மக்கள் நலனை மட்டுமே மனதில் கொண்டு செயல்படுவார்கள் என்று முழுமையாக நம்புவதற்கில்லை.
அர்ஜுன் சிங் என்ன நோக்கத்தில் இந்த இடஒதுக்கீடு விவகாரத்தைக் கையில் எடுத்திருந்தாலும்& கல்வித் துறையில் செயல்படுத்தப்போகும் இடஒதுக்கீடு, சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளைச் சமப்படுத்தும் ஒரு முயற்சி என்பதில் சந்தேகம் இல்லை. கல்வியில் சமத்துவத்துக்காகப் பாடுபடுவதாகக் கூறும் மத்திய அரசு, தரமான உயர்கல்வி நிறுவனங்களை அதிகரிப்பதற்கும் பாடுபட வேண்டும். அதேசமயம் அனைவருக்கும் கல்வி கிடைப்பதற்கும், அந்தக் கல்வி தரமானதாக இருப்பதற்கும் உத்தரவாதம் அளிக்க வேண்டும்.
கல்வியில் சமத்துவம், தரம் மற்றும் பரவலான படிக்கும் வசதி ஆகிய மூன்றிலும் சமச்சீரான வளர்ச்சி இருந்தால் மட்டுமே, அரசு எதிர்பார்க்கும் திசையில் சமூக வளர்ச்சி வேகமாக இருக்கும். மற்றபடி வெறும் சதவிகித கணக்கு மட்டுமே எல்லாவற்றையும் கொண்டுவந்து சேர்த்துவிடாது!
(நன்றி- ஜீனியர் விகடன்)

0 comments: