இதை எழுதியது யார்?


கிப்பனின் ‘டிக்ளைம் அண்ட் பால் ஆஃப் த ரோமன் எம்ப்பயர்’ என்ற மாபெரும் சரித்திரப் புத்தகத்தைத் தமிழில் யாராவது மொழிபெயர்க்க வேண்டும்என்று எனக்கு ஆசை. பலமுறை நான் சொல்லிப்பார்த்தும், எனது யோசனையே விலை போக வில்லை... அப்புறம்தானே எழுத்து விலை போகும்?!
சரித்திரப் புத்தகத்தை வாரப் பத்திரிகையில் போட்டால் யார் படிப்பார்கள்? என் கிறார்கள். நடிக, நடிகையர்களின் அந்தரங்கங்கள் அம்பலமாவதை ஆவலாகப் படிக்கும் அன்பர்கள், ரோமானிய மன்னர்கள் செய்த காமக் கேளிக்கைகளையும் ஆர்வமாகப் படிக்க மாட்டார்களா?
இதோ, ஒரு xxxxl...
மாமன் டைபீரியஸ் சீசரின் செல்லப் பிள்ளை கையஸ் காலி கூலா, குழந்தையாக இருந்தபோதே போர்முனைக்கு அழைத்துச் செல்லப்பட்டான். கட்டுக் கோப்பான ரோமானியப் படை களமிறங்கும்போது, குழந்தைகளைக்கூடப் போர்முனைக்கு இட்டுச்செல்லும் பாதுகாப்பும் தன்னம்பிக்கையும் அவர்களுக்கு இருந்திருக் கிறது!
சிறுவயதிலேயே போர்வீரர்களை மகிழ்விக்க, சேராத பெரிய போர்க் காலணி களை அணிந்து நடன மாடினான் சிறுவன் காலி. அந்தக் குதூகலமான குழந்தைக்கு லிட்டில் பூட்ஸ் என்பது வீரர்கள் இட்ட செல்லப் பெயர்!
வீரன் டைபீரியஸ் சீசரின் கட்டுப்பாடான வாழ்க்கை ஒழுக்கம், அவரது வயது கூடக் கூட குறைய ஆரம்பித்தது. போர்முனையில் இருந்து திரும்பும்போது எப்போதாவது வேசிகளை நாடிய டைபீரியஸ், பிற்பாடு வேசிகள் விட்டால்தான் போருக்கே வர முடியும் என்ற அளவுக்கு விபசரிக்கலானார் (ஹை! அவர் தப்பைச் சொல்லப்போய், நல்ல வார்த்தை கிடைத்தது, பாருங்கள்!). கர்மமே கண்ணாக இருந்தவர், காமமே கண்ணானார். காலிகூலா
இளம் காலி, மாமன் டைபீரியஸிடம் அரசியலும் வீரமும் மட்டும் கற்க வில்லை... மேற்படி சமாசாரங்களிலும் தேர்ந்த மாணவனானான். உத்தமபுத் திரன் படத்தில், நம்பியார் மாமாவுடன் சேர்ந்து ஒரு சிவாஜி கெட்டுப் போவாரே... அந்தநிழலின் நிஜ உருவம் டைபீரியஸ ம் காலிகூலாவும். இளம் காலிக்குப் பாம்பின் குணாதிச யங்கள் இருந்ததாகப் பிற்பாடு பல விமரிசகர்கள் சொன்னார்கள். ஆனால், மாமாவுக்கு முன்னால் இந்தப் பாம்பும் பால் குடிக்குமா என்பது போலத்தான் இருந்தான் இளம் காலி. ஆனால், பாம்புக்குட்டி குடிக்க, லிட்டர் கணக்கில் காமத்துப்பால், டைபீரியஸ் மாமா வீட்டில் கொட்டிக் கிடந்தது!
ஒரு நாள் தன் சகோதரி அக்ரிபினா அறிய, தனது மெய்க்காப்பாளன் உதவியுடன், உடல்நலம் இல்லாமலிருந்த வயோதிக டைபீரியஸின் முகத்தில் தலையணையை வைத்து அழுத்தி, டைபீரியஸின் மரணத்தையும் ரோமானிய அரசியல் சரித்திரத்தில் புதிய யுகத்தையும் தருவித் தான் காலிகூலா.
இந்தக் கொலை நடந்த சில நாட்களிலேயே சக்கர வர்த்தியானான் காலி. அது மட்டுமல்ல... டைபீரியஸையும் விஞ்சும் காமக்கேடியுமானான். உடன் பிறந்த சகோதரியோடே அவன் உடலுறவு வைத்திருந்த ராஜ ரகசியம் ஊரறிந்த விஷயமாக இருந்தது. ஆண் பெண் (பெரும் அறிவாளிகள் நிறைந்த) மதிப்புக்குரிய செனட் என்று பாரபட்சம் இல்லாமல் அனைவரின் கற்பையும் சூறையாடினான் காலி.
தனது முடிவு நெருங்குவது தெரியாமல், தன்னை வாழும் தெய்வமாக செனட்டைவிட்டுப் பிரஸ்தாபிக்கச் செய்தான். குமைந்துகொண்டிருந்த செனட், ரோமின் அரசியல் எதிர்காலம் கருதி, ஒரு நாள் கடவுள் காலிகூலாவைக் காலி செய்ய முடிவு செய்தது. விசுவாசம் உள்ள வீரர்களை ஏவியது. சமீபத்தில் தனக்கும் தனது சகோதரிக்கும் பிறந்த குழந்தையுடன் மாமன்னர் காலிகூலா கொலோசியம் வந்தருள மனம் கொண்டிருநதார்.
கொலோசியம் பற்றி ஒரு சின்ன குறிப்பு: இன்று பாழாய்க் கிடக்கும் மாபெரும் அரங்கம், அன்று ரோமானிய மன்னர்களும் மக்களும் அடிமைகளின் மரணங்களைக் கண்டுகளிக்கும் குருதிக்களமாக இருந்தது.
மனிதரும் மிருகமும் அல்லது மனிதனும் மனிதனும் யாரேனும் ஒருவர் சாகும்வரை போராடும் வீர விளையாட்டு அது. வீரம் களத்தில் இருப்பவர்களுக்கு, விளையாட்டு வேடிக்கை பார்ப்பவர்களுக்கு. ‘சாகப்போகிறவ ருக்கு வணக்கங்கள்’ என்ற மரியாதை மந்திரத்துடன் ஆட்டம் ஆரம்பமாகும். இந்த உயிர்நீக்கும் ஆட்டம் ஆடும் வீரர்களைத் தயார் செய்ய, தனிப் பள்ளிகளை நிறுவியிருந்தது ரோம். பள்ளியின் மாணவர்கள் பெயர் கிளாடியேட்டர்ஸ்.
இந்த கிளாடியேட்டர்ஸ் தவிர, தேசத் துரோகிகள், புரட்சியாளர்கள் போன்ற உபத்திரவங்களை இல்லாமல் செய்யும் கொலைக்களமாகவும் இருந்தது சர்க்கஸ் மாக்ஸிமஸ்.
புதிதாக உருவான கிறிஸ்துவர்கள் என்ற கூட்டத்தின் அங்கத்தினர்களை அங்கம் கிளாடியேட்டர் படத்தில்...
அங்கமாக மிருகங்கள் பிய்த்துத் தின்னும் காட்சிகளும் நடந்தன. சில உற்சவ நாட்களில், ஒரே நாளில் மூன்று ஷோகூட நடக்கும். அப்படிப்பட்ட தினங்களில் களத்தின் மண், ரத்தம் கலந்து ரத்தச் சகதியாகிவிடும். போராளி கள் வழுக்கி வழுக்கி விழுந்ததால், மோதலில் வன்மம் குறைந்து, காமெடி அதிகம் ஆகிவிட்டதாக மன்னனிடம் மக்கள் குறை கூற... மாமன்னன் பகவான் காலிகூலா உடனே செவிசாய்த் தார்.
ரத்தத்தை உறிஞ்சும் சக்தி ரோமானிய ஈர மண்ணுக்குக் குறைவு. அதனால் ஈரப்பதம் குறைந்த அரேபியப் பாலை வனத்து மணலை அரங்கத்தில் தூவ லாம் என்று மனதில் ஈரமில்லாத அறிஞர்கள் அறிவுரை கூற, ஆவன செய்யக் கட்டளையிட்டார். டன் கணக்கில் மண் கப்பலில் இறக்குமதியாகி, அரேபிய மண் கொலோசியத்தின் களத்தில் தூவப்பட்டது. வழுக்காமல், கொடூரமாகப் போரிட்டு மடிவதை, மன்னனுக்கு நன்றி சொல்லியபடி பார்த்து மகிழ்ந்தார்கள் மக்கள்.
இதுவே பிற்பாடு வன்முறை குறைந்து சர்க்கஸாக, பின் சினிமாவாக உருவெடுத்தது. ‘மாட்னி ஷோ’ என்ற வழக்கு ரோமில், கொலோசியத்தில் மத்தியான ஷோவிலிருந்து துவங்கியது. காலிகூலா இப்படிப்பட்ட கேளிக்கைகளைப் பார்க்கத்தான் தன் சகோதரிக்கும் தனக்கும் பிறந்த குழந்தையுடன் வந்து கொண்டிருந்தான். திடீரென வெளிப்பட்ட வீரர்கள் காலிகூலாவைத் தாக்கினார்கள். வீசப்பட்ட வாள்களுக் குத் தப்ப, காலிகூலா தலையைத் தாழ்த்தினாலும் கழுத்துக்கு வந்த வாள், அவன் தாடையைப் பதம் பார்த்தது.
தவடை (தாவாங்கட்டை) கழண்டு போச்சுனு கேட்டிருப்போமே... அது ஆச்சு, காலிகூலாவுக்கு! தகாத உறவில் பிறந்த அவனது குழந்தையைக் காலைப் பிடித்து, அந்தக் கொலோசியத்தின் கல்தூணில் துணி தோய்ப்பதுபோல் அடித்துக் கொன்றனர் தேச விசுவாசி வீரர்கள் (கம்சன் குழந்தைகளைக் கொன்ற பாணியில்!).
காலிகூலாவின் சகோதரி அக்ரிபினாவை மட்டும் ஏனோ கொல்லவில்லை அவர்கள். பிற்பாடு, இந்தச் சகோதரி அடுத்த சக்ரவர்த்தி க்ளாடியஸ் சீசரை மணந்தாள். மூன்று சீசர்களைத் தன் முந்தானையில் முடிந்து வைத்திருந்தாள் அக்ரிபினா. இவளது மரணமும் காலிகூலாவின் மரணம்போல் கொடூரமாகவும் அதைவிடச் சோகமானதாகவும் இருந்தது. இவள் பெற்ற பிள்ளை மன்னன் நீரோ (ஆமாம்! ரோம் எரிகையில் பிடில் வாசித்தாரே... அவர்தான்!) தன் தாயைக் கொல்ல ஆளை ஏவினான்.
இதெல்லாம் எதுக்குச் சொல்ல வரேன்னா, ஆயிரமாயிரம் ஆண்டுகளாகக் கொஞ்சம்கூடக் கொடூரம் குறையாமல் இன்னும் ரொவாண்டாவில், அயோத்தியாவில், கோத்ராவில், நியூயார்க்கில், ஏன்... காஞ்சிபுரத்தில்கூட வன்முறை பழகி வருகிறோம் நாம்.
கலிங்கத்துப் பரணி படித்தால், நாமும் ரத்தச் சேற்றில் விளையாடிய பிள்ளைகள்தாம் என்பது விளங்கும்.
இந்த வாரம் காதல்... அப்படிங்கிறீங்களா? அதான், காலிகூலாவுக்கும் அவன் சகோதரிக்கும் இருந்ததே... அதுவும் காதல்தானே?
உமக்கும் எனக்கும் பிடிக்கவில்லை என்பதால், அது காதல் இல்லை என்றால், காலிகூலா ஒப்புக்கொள்ள மாட்டார். கடவுள் ஸ்தானத்துக்கு உயர்ந்த மனிதன் இப்படியெல்லாம் எப்படிச் செய்தான்? என்றால்...
இன்றைய செய்திகளைப் படியுங்கள்... சந்திரசாமியைக்கூட CBI விசாரிக்கப் போகிறதாம்!
இன்னொரு கடவுள் கம்பி எண்ண வாய்ப்பிருக்கு.
என்னத்தைச் சொல்ல... போங்கோ! கலி முத்திடுத்து!

7 comments:

சிறில் அலெக்ஸ் said...

நல்ல பதிவுகள்...ஒரு ரவுண்டு வரப்போறீங்க..வாழ்த்துக்கள்.

மகேந்திரன்.பெ said...

நன்றி அலக்ஸ்

பெத்த ராயுடு said...

சரி, இதை எழுதியது யாருங்கோ?

மகேந்திரன்.பெ said...

திரு.கமலஹாசன் அவர்கள் எழுதியது

பரஞ்சோதி said...

வாழ்த்துகள்.

எக்கசக்கமான விசயங்கள் கைவசம் வைச்சிருக்கீங்க.

மகேந்திரன்.பெ said...

நன்றி பரஞ்சோதி கற்றது கணினி யளவு

(துபாய்) ராஜா said...

மகி!!அருமையான கட்டுரை!நேரில்
பார்ப்பது போன்று விவரிக்கும் எழுத்து
நடை!எங்கிருந்து பிடிக்கிறீர்கள் இதுபோன்று வித்தியாசமானவற்றை??