குமுதத்தில் கலைஞர்


குமுதத்தில் கலைஞர்:

எதிரே வேணுகோபால ஸ்வாமி திருக்கோயிலிலிருந்து வேத மந்திரங்கள் ஒலிக்க, இன்னொருபுறம் ‘அண்ணன் கலைஞர் வாழ்க’, ‘டாக்டர் கலைஞர் வாழ்க’ உணர்ச்சி முழக்கம். அந்த மாலை வேளையில் கோபாலபுரத்தில் ஆனந்த களேபரம். ஐந்தாம் முறையாக முதலமைச்சர் பொறுப்பேற்றுக் கொண்ட கலைஞரைக் காண, வெளியூர்களிலிருந்து கட்சி நிர்வாகிகள் பளபள சால்வைகளுடனும், சந்தனமாலைகளுடனும் சாரி சாரியாக அணிவகுக்கிறார்கள். கே.கே.எஸ்.எஸ்.ஆர்., தண்டராம்பட்டு வேலு, தனுஷ்கோடி ஆதித்தன் என்று கழக, காங்கிரஸ் தூண்கள் நெரிசலுக்குள் புகுந்து வருவதைப் பார்த்துவிட்டு, அவர்களது மாவட்டத் தொண்டர்கள் கைதட்டுகிறார்கள்... கூக்குரலிடுகிறார்கள்... சிலர் பேச முடியாமல் கண்கலங்குகிறார்கள். இந்தப் பொன்னான நேரத்திற்கு எத்தனை காலம் காத்திருந்தார்கள்? எவ்வளவு சோதனைகளை எதிர்கொண்டார்கள்?
இவ்வளவு தூரம் கோபாலபுரத்திலுள்ள முதல்வரின் வீடு திமிலோகப்பட்டுக் கொண்டிருக்கும்போதும், எல்லோரையும் சில நிமிடங்கள் காத்திருக்கச் சொல்லிவிட்டு நம்மை அழைக்கிறார் முதல்வரின் உதவியாளர் ஸாரி... புதிய நேர்முகச் செயலாளர் சண்முகநாதன். ‘காலம் பொன் போன்றது. கடமை கண் போன்றது’ _ மாடிப்படிகளில் ஏறும்போதே அந்தப் பொன்மொழி கண்களில் பட, உள்ளே நடுநாயகமாக கலைஞர்! வழக்கமான பளீர் சிரிப்புடன் நம்மை வரவேற்கிறார். மனதளவில் அவர் இன்னமும் அதே வேகத்துடன் இருக்கிறார் என்பது, நம் கேள்விகளை முடிப்பதற்கு முன்பே அளித்த பதில்களில் புரிந்தது. நகைச்சுவை உணர்வு இந்த மனிதருக்கு இயல்பாகவே வருகிறது. அதுதான் யாரையும், எந்தச் சோதனையையும் எதிர்கொள்ளும் மனத்திடத்தைத் தருகிறதோ என்று


தோன்றியது.
குமுதம் : இந்த வெற்றி உங்களுக்குத் திருப்தியளிக்கிறதா? இன்னும் அதிக இடங்கள் எதிர்பார்த்தீர்களா?
கலைஞர் : பெரிய பணப்புயலை எதிர்த்து நடத்திய பயணத்தில், இவ்வளவு தூரம்தான் எங்களால் பயணிக்க முடிந்தது. இதுவே எங்களுக்கு மகத்தான வெற்றிதான். ஜனநாயகத்திற்கு வெற்றி கிடைத்தது என்று கருதுகிற நேரத்தில், சர்வாதிகாரத்திற்கு விடை கொடுக்கப்பட்டது என்பது, மிகுந்த ஆறுதலை அளிக்கிறது.
குமுதம் : இந்தத் தேர்தலில் எதிர்பாராத அதிர்ச்சி என்று எதைச் சொல்வீர்கள்?
கலைஞர் : சென்னை மற்றும் கோவை மாவட்ட முடிவுகள்.
குமுதம் : எம்.ஜி.ஆர் காலத்திலேயே தி.மு.க.வின் கோட்டையாக இருந்த சென்னை, உங்களை ஏமாற்றிவிட்டதாக நினைக்கிறீர்களா?
கலைஞர் : ஏமாற்றியதாக நினைக்கவில்லை. எங்கள் தொண்டர்கள் அல்லது முன்னோடி நிர்வாகிகள் சற்று மந்தமாகப் பணியாற்றியிருக்கிறார்கள் என்பது தெளிவான உண்மையாகும்.
குமுதம் : இதமான அதிர்ச்சி?
கலைஞர் : ஈரோடு மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்கள்.
குமுதம் : மந்திரிசபையில் இல்லாததால், பாட்டாளி மக்கள் கட்சி உள்ளூர அதிருப்தியில் இருப்பதாகச் சொல்லப்படுகிறதே?
கலைஞர் : யார் சொன்னது? பா.ம.க.வின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பதவி ஏற்பு விழாவுக்கு முதல்நாள் கூட என்னைச் சந்தித்துப் பேசினார். அப்போதும்கூட மந்திரிசபையில் இடம் பெறும் கருத்தை, அவர் வெளியிடவே இல்லை.
குமுதம் : முந்தைய ஜெயலலிதா அரசுக்கு எதிராக...
(இடைமறிக்கிறார்) சட்டத்தின் ஆட்சிதான் இனி நடக்கும். அது எல்லோரும் வரவேற்கக் கூடியதாக இருக்கும். திட்டமிட்டு யாரையும் பழிவாங்க நினைக்கமாட்டோம்.
குமுதம் : முதன் முறையாகத் தோழமைக் கட்சிகளின் ஆதரவில் ஆட்சி நடத்தப்போவதால், அவ்வப்போது நிர்ப்பந்தங்களைச் சமாளிக்க வேண்டி வருமே?
கலைஞர் : ஏன் உங்களுக்கு அவசரம்? நல்லதையே நினைப்போமே!
குமுதம் : உங்களுக்கு மிகவும் பிடித்தமான உழவர் சந்தை, சமத்துவபுரம் போன்ற திட்டங்கள் மறுபடியும் உயிர் பெறுமா?
கலைஞர் : சமத்துவபுரம் என்பது, ஒரு குறிக்கோளின் அடையாளம். உயர்ந்த நோக்கத்தில் உருவாக்கப்பட்டது. உழவர் சந்தை, விவசாயிகளுக்கும், வாங்கி நுகரும் மக்களுக்கும் அதாவது, இரு சாராருக்கும் _ நன்மை பயக்கும் திட்டம். இந்த இரு திட்டங்களும் ஜெயலலிதா அரசால் நிறுத்தப்பட்டு விட்டன. அவை மீண்டும் ஊக்கப்படுத்தப்பட்டு, தொடரும்.
குமுதம் : இலவச டி.வி. சீக்கிரம் மக்களுக்குக் கிடைக்குமா? சீனாவிலிருந்து தருவிக்கப் போவதாக ஏதேதோ செய்திகள் வருகின்றனவே?
கலைஞர் : ஆயத்தப் பணிகள் இப்போதே ஆரம்பமாகிவிட்டன. அதிகாரபூர்வமாக விரைவில் எத்தகைய பணிகள் என்பது அறிவிக்கப்படும். நாங்கள் எங்கிருந்து, எப்படி வாங்கப் போகிறோம் என்று அறிவிக்கவில்லையே... இனிதான் முடிவாகும். அதற்குள் அவசரமாக செய்திகள் வந்தால் நான் என்ன செய்ய முடியும்?
குமுதம் : மத்திய, மாநில அரசுகள் இரண்டிலுமே தி.மு.க. இருப்பதால், நிறைய சாதிக்க முடியும் அல்லவா?
கலைஞர் : மத்திய அரசிடம் ஏற்கெனவே நிறைய நன்மைகளைப் பெற்றுள்ளோம். இங்கேயும் எங்களது ஆட்சி அமைந்துள்ளதால், இந்த மாநிலத்திற்கான நிறைய பலன்களைப் பெற முடியும் என எதிர்பார்க்கலாம்.
குமுதம் : வெற்றி, தோல்விகளைத் தவிர, இந்தத் தேர்தல் யார் எதிரி, யார் நண்பன் என்று புரிந்து கொள்ளவும் உங்களுக்கு ஒரு வாய்ப்பாக அமைந்ததா?
கலைஞர் : ஆமாம்... அது உண்மைதான்!. யார் யார் என்று கேட்டுவிடாதீர்கள்! (வாய்விட்டுச் சிரிக்கிறார் கலைஞர்)
குமுதம் : காட்டு மிராண்டிக் கும்பலுக்கிடையே சட்டசபைக்கு வருவது நன்றாக இருக்காது என்கிறாரே ஜெயலலிதா?
கலைஞர் : எப்போதுமே அவர், தன்னைப் போலவே பிறரையும் நினைப்பவர்.
குமுதம் : அது என்ன கலைஞரின் கைமாறு? உங்கள் பதில்?
கலைஞர் : ஓட்டு வாங்கிட ஒரு ஒட்டு வேலை!
குமுதம் : உங்கள் குடும்பத்தினர் இந்த வெற்றியை எப்படிப் பார்க்கிறார்கள்?
கலைஞர் : இந்த வெற்றியை மகிழ்ச்சியாகப் பார்க்கிறார்கள் என்பதில், எனக்கு ஏற்படும் நிம்மதியைவிட, பல நேரங்களில் தோல்விகளையும், துன்பங்களையும் என் குடும்பத்தினர் தாங்கிக் கொண்டதுதான் எனக்கு மன ஆறுதலை அளிக்கிறது. எல்லாவற்றையும் விட, என் மீதும், கழகத்தின் மீதும் உள்ள ஆத்திரத்தில் என் குடும்பத்தினர் பற்றிப் பேசப்பட்ட, எழுதப்பட்ட இழி மொழிகளை அவர்கள் தாங்கிக் கொண்டதுதான் எனக்குள்ள பெரும் ஆறுதல். (சட்டென்று சலனமின்றி நம்மை நிமிர்ந்து பார்க்கிறார். அவரால் மட்டுமே முழுமையாக உணரக்கூடிய வலி அது. அடுத்த நிமிடமே குபீர் சிரிப்புடன் விடை தருகிறார். அதுதான் கலைஞர்).


அட!

2 comments:

கார்த்திக் பிரபு said...

i like ur blog very much with ur permission i added ur blog link in my blog..im expecting ur reply in my blog thanku

Unknown said...

//karthck//ur application accepted thank u