கலைஞர் கவிதை



பதவி பெறும் வாய்ப்பு கிடைக்காத ஆத்திரத்தில்
பதற்றமுற்று; பால் குடித்த மார்பை அறுப்பதுபோல்;
பதுங்கியிருந்து பச்சைத்துரோகம் செய்பவர்கள்
பணமலைக்குள் மூச்சு முட்ட சிக்கியவர்கள்;
நல்லவர் போல நடித்து நஞ்சு கக்கும் நாகப் பாம்புகள்; எத்துணை
வல்லவராயிருப்பினும் வெளியேற்றப்பட வேண்டியவரே ஆவர்!
எவனாயினும் அவன் எட்டப்பன் எடுத்த மறு உருவம் எனில்;
``எமனா’’வான் நம்மியக்கத்திற்கெனத் தெளிவடைந்திடுக!
எத்தனையோ லட்சம் என் உடன்பிறப்புகள் என்புதோலுடன்
ரத்தம் சதை அனைத்தும் வழங்கி இயக்கம் காத்திடும்போது;
பித்தர்களாய் அவர்களை நினைத்து, எத்தர்களாய் வாழ்வு நடாத்திட
புத்தரைப் போல் தம்மைப் பாவித்துக் கொண்டோர்
பத்தரை மாற்றுத் தங்கமெனப் பாராட்டப்படுவரோ; இனி மேலும்?
பட்ட பின்பும் புத்தி வரவில்லையென்றால் கெட்டொழிந்து போய்விடுமே;
நடவடிக்கை யெனும் கணை தொடுத்தால் தான்;
சடசடவென முறியும் சதிகாரர் திட்டங்கள்!
முடமாகிப் போக விடமாட்டோம்; முன்னேற்றக் கழகத்தை!
முன்னர் நமையழிக்க முற்பட்டோர்தான் மூளியாகிப் போனார் காண்!
அதனாலே சதி வேலை கண்ட இடத்து அதனைச் சாய்ப்போம்
துரோகத்தை அது தொடங்கும் போதே துடைத்தெறிவோம்!
உடன்பிறப்புகள் நாமெல்லோரும் ஒரு தாய் வயிற்றில் பிறக்க
இடம் தராது தாயின் வயிறு என்ற காரணத்தால்தான்;
தனித் தனி தாய்களின் வயிற்றில் உதித்துப் பிறந்தோம் - என்று
கனிச்சாறு கலந்த மொழியில் சொன்னாரே அண்ணா; அன்று!
விஷம் ஒரு துளி தானே என்று, அது பாலில் கலப்பதை
வேடிக்கை பார்க்க முடியுமா நம்மால்?
கலந்து விடாமல் கவனமாய்க் கண்காணிப்போம் -
கலந்துவிட்டாலோ; கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுவோம்!

0 comments: