சமீபத்தில் வடசென்னையில் ஒரு பள்ளியின்
20 ஆசிரியர்களைச் சந்தித்து அவர்களோடு உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. எத்தனையோ மேல்தட்டுப் பள்ளிகளின் ஆசிரியர்களை விட அவர்கள் மாணவர்களிடமும் சமூகத்திடமும் கரிசனம் அதிகம் உடையவர்களாக இருந்தார்கள்.
அதிலும் அங்கு இருந்த ஆசிரியைகளிடமிருந்த தன்னம்பிக்கையும் சுயமரியாதையும் அவர்களை நிமிர்ந்து பார்க்கவைத்தன.
இத்தனை இருந்தும் அவர்கள் அனைவரும் சமூக நீதி என்று வரும்போது ஒருமித்த கருத்தினைக் கொண்டிருந்தனர்: இந்தியா சுதந்திரம் அடைந்து
50 ஆண்டுக் காலம் ஆகியும் இன்னும் ஏன் இந்த இட ஒதுக்கீடு? சட்டத்தின் முன் எல்லோருக்கும் சம உரிமையும் சம வாய்ப்பும் தரப்பட வேண்டும். அப்படி இருக்கும்போது சிலருக்கு மட்டும் சில சலுகைகள் அளிக்கப்படுவது எப்படி நியாயமாகும்? முன் ஒரு காலத்தில் ஒடுக்கப்பட்டவர்கள் என்பதால் தாழ்த்தப்பட்ட மக்கள் இன்று எங்களது வாய்ப்புகளைத் தட்டிப் பறிப்பது எப்படி நியாயமாகும்? இப்படி இட ஒதுக்கீடு செய்து அந்தச் சலுகையின் மூலம் வாய்ப்பு பெறும் ஒரு மாணவனிடம், அல்லது வேலையாளிடம் எப்படித் தகுதியை எதிர்பார்க்க முடியும்?
இவர்களை மட்டுமின்றி படித்த மத்திய தர மற்றும் மேட்டுக் குடியினரை அலைக்கழிக்கும் இந்தக் கேள்விகள் அவர்களை அறியாமல் அவர்களுக்குள் கோபத்தையும் காழ்ப்புணர்ச்சியையும் உருவாக்கியிருக்கின்றன.
நான் சந்திக்கும் பல கல்லூரி மாணவர்களிடம் இதே கோபத்தைக் காண முடிகிறது. இந்த மாணவர்களில் பலருக்கு இந்தியா ஓர் ஏழை நாடு என்பதைத் தவிர தங்களைச் சுற்றியுள்ள சமூகத்தின் நிதர்சனங்கள் எதுவும் தெரியாது. ஆனால் தங்கள் வாய்ப்பும் எதிர்காலமும் தட்டிப் பறிக்கப்படுவதாக அவர்களுக்குள் ஊட்டப்பட்டிருக்கும் தீ கவலைக்குரியது.
உண்மையில் விசாரித்துப் பார்த்தால் மேல் ஜாதியினருக்கும் பிற்படுத்தப்பட்ட ஜாதி, தலித் மாணவர்களுக்கும் அதிகம் மதிப்பெண்களிலோ தகுதிகளிலோ வித்தியாசம் இருப்பதில்லை. ஆனால் அப்படிப்பட்ட பிரமை மக்களிடையே மிக சாமர்த்தியமாக உருவாக்கப்பட்டிருக்குகிறது.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் செலுத்தப்பட்டுவரும் ஒரு ஆதிக்கத்தை
50 ஆண்டுகள், அதுவும் இந்தியா போன்ற ஒரு நாட்டில் சீர்செய்துவிட முடியும் என்பது அதீத எதிர்பார்ப்பு. அதுவும் அடித்தட்டு மக்களுக்கு அடிப்படை வாழும் வசதிகளையும் தரமான கல்வி வாய்ப்புகளையும் உருவாக்காத சூழ்நிலையில் இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகளில் எந்தவித நியாயமும் இருக்க முடியாது. எல்லாவற்றையும் விட இட ஒதுக்கீட்டால் பயன்பெறும் பிற்படுத்தப்பட்ட ஜாதியினர் கூட ஏதோ தங்களது வாய்ப்புகள் தலித் மக்களால் தட்டிப் பறிக்கப்படுவதாகப் புலம்புகிறார்கள்.
சினிமா, பத்திரிகைகள் போன்ற வெகுஜன ஊடகங்கள் இட ஒதுக்கீட்டிற்கு எதிரான கருத்துகளை மிக சாமர்த்தியமாகப் பரப்பிவருகின்றன.
'ஓரே ஒரு கிராமத்திலே' என்ற படம் பத்திரிகைகளில், அதுவும் பொதுவாகத் தமிழைக் கண்டுகொள்ளாத ஆங்கிலப் பத்திரிகைகளால் கொண்டாடப்பட்டதை நாம் மறந்துவிட முடியாது. சங்கரின் 'ஜென்டில்மேன்' என்ற வெற்றி விழாப் படம் இட ஒதுக்கீட்டிற்கு எதிரான கோஷத்தோடுதான் தொடங்குகிறது.
தாழ்த்தப்பட்ட மக்கள்மீது சமூகம் கட்டவிழ்த்துவிடும் அடக்குமுறையும் வன்முறையும் எப்பொழுதாவது நடைபெறும் அத்துமீறல்களாகவே பார்க்கப்படுகின்றன. இப்படிச் சமூகத்தின் ஒரு முக்கியமான சிக்கலை விடுவிக்கவோ தெளிவுபடுத்திச் சீர்செய்யவோ ஊடகங்களும் அரசியல் இயக்கங்களும் முன் வராதது வியப்பளிக்கிறது. சமூகச் சீர்திருத்தங்களில் உள்ள ஓட்டைகளை அடைக்காமல் அவற்றைப் பெரிதாக்குவதா அறிவுஜீவித்தனம்?
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
-------------------
உண்மையில் விசாரித்துப் பார்த்தால் மேல் ஜாதியினருக்கும் பிற்படுத்தப்பட்ட ஜாதி, தலித் மாணவர்களுக்கும் அதிகம் மதிப்பெண்களிலோ தகுதிகளிலோ வித்தியாசம் இருப்பதில்லை. ஆனால் அப்படிப்பட்ட பிரமை மக்களிடையே மிக சாமர்த்தியமாக உருவாக்கப்பட்டிருக்குகிறது.
-----------------------
சரியே.
உண்மை என்னவென்றால் நகர்புற மாணவர்கள் கிராமப்புற மாணவர்கள் என்ற வித்தியாசம் பார்த்தால் கண்டிப்பாக வித்தியாசம் உண்டு. ஜாதி அடிப்படையில் வேறுபடுத்துவது கண்டிப்பாகத் தவறு. நகர்ப்புரம் கிராமப்புறம் என்று பார்ப்பது சரியாக அமையும். அதிலும் வேலைவாய்ப்பு, மேற்படிப்பு போன்றவற்றில் இடஒதுக்கீடு என்பது ஒருவரிடமிருந்து பிடுங்கி இன்னொருத்தரிடம் கொடுப்பதே. அது தவறாகத் தெரிபவர்களுக்குத் தவறு. சரியெனத் தெரிபவர்களுக்குச் சரி.
//இடஒதுக்கீடு என்பது ஒருவரிடமிருந்து பிடுங்கி இன்னொருத்தரிடம் கொடுப்பதே//
இது எப்படி ? ஒருவனிடமே அதிகமாக இருக்கிறது என்பதுதானே விவகாரமே? மேலும் நகர்புற பேதமெதுவும் அவர்களிடம் இருப்பதாக தெரியவில்லை சாதிபேதமே தெரிகிறது இதுகுறித்து நான் எழுதியுள்ள இன்னொரு தீண்டாமை ஒழிப்பை காணுங்கள் http://kilumathur.blogspot.com
கனிமொழி கருத்துக்கு வாழ்த்து...
அடுத்த மேயர்/மினிஸ்டர் ரெடி...
அடி தூள் ..
அனானிமஸ்//மேயர் மினிஸ்டர் ரெடி//
தகுதி இருக்கிறது வந்தால் என்ன தவறு?
Post a Comment